Friday, December 21, 2012

தாமரைப்பாதங்கள்

உள்ளங்காலுக்கும் மொளிக்குமிடையில்தான் அந்த நோவிருந்தது. காலையூண்டி நடக்கும் பொழுது சுள்ளென்ற அந்த நோ, வரவரக் கூடிக்கொண்டு போனதே தவிர குறைகிறமாதிரி தெரியவில்லை. விடிய எழும்பி கட்டிலால் காலை நிலத்தில் வைக்கவே பயமாகவிருந்தது வனிதாவுக்கு. நாளுக்குநாள் நோ கூடுவதும் குறையுறதுமாயிருக்கும். சிலநாட்கள் உயிர் போவதுமாதிரியிருக்கும், சிலநாட்கள் இந்தக்காலா நேற்று அப்பிடி நொந்தது என்றுமிருக்கும். இருந்தாலும் ஏதோ நோயொண்டு காலுக்க வந்துவிட்டது என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது. வலதுகால் வேறு. இனிமேலும் இழுத்தடிக்காமல் டொக்டரிட்டம் காட்டவேணும் என்று முடிவெடுத்து மூன்று மாதங்களாகிவிட்டன.




வேலை முடிந்தவுடன் நடப்பதற்கு வசதியாகத் தன் அலுவலக மேசையில் கீழ் வைத்திருக்கும் சப்பாத்தை போட்டுக்கொண்டு அவசர அவசரமாக மின்சார ரயில் நிலையத்தை நோக்கி நடந்தவளுக்கு, சப்பாத்து வலக்கால் பெருவிரலை இடித்துக்கொண்டு நிற்பதுபோல் உணர்வைக் கொடுத்தது. காலமை நடக்கேக்க ஒழுங்காத்தானேயிருந்தது, அடுக்கிடையில பெரிய விரல் என்ன வளந்திட்டுதா? என்று நினைத்த படியே ஒரு ஓரமாக நின்று சப்பாத்தைக் கழற்றி உள்ளே ஏதாவது அடைந்து கிடக்கின்றதா என்று பார்த்து, ஒன்றுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் போட்டு ஒருமுறை பாதத்தை சுழற்றிச் சுழற்றிப் பார்த்து, காலுக்கு வசதியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினாள். இப்படியாகத் திடீரென ஆரம்பித்ததுதான் அவள் கால் நோ. இப்போ தட்டையான கால்களுக்கு இதமான விலையுயர்ந்த சப்பாத்துக்களைத் தவிர அவளால் வேறு எதையும் அணியமுடிவதில்லை.

அவள் கனவுகளில் கால்களைத்தவிர வேறெதும் வருவதில்லை இப்போதெல்லாம். அழகான மெல்லி நீண்ட வாழைத்தண்டு என்று சொல்வார்களே அதே போன்ற வழுவழுப்பான கால்கள், நோய்ப்பட்ட யானைக்கால்கள், நொண்டிக்கால்கள், சூம்பியகால்களென்றும் கனவெல்லாம் கால்களாய் நிறைந்திருந்தன. வேலைத்தளத்திலும் அவள் கால்களைப் பற்றியே கதைத்துக்கொண்டிருந்தாள். சப்பேக்குள்ளும், வீதியோரங்களிலும் அவர் பார்வை மற்றைய பெண்களில் கால்களின் மேலேயே எப்போதும் பதிந்திருக்கும். அவள் பார்வை தமது கால்களை ஊடுருவதை உணர்ந்த பெண்கள் கால்களை தம் பக்கம் இழுத்துக்கொண்டோ, அல்லது உடையைச்சரிசெய்து கால்களை மறைத்துக்கொள்வதோ உண்டு. சிலர் சினத்தோடு முகத்தைத் திருப்பியும் கொள்வார்கள். கால்கள் எவ்வளவு அழகானவை. நிகங்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட சுத்தமான கால்களுக்கு நிகரான உடலுறுப்பு பெண்களுக்கில்லை என்பதில் அவள் உறுதியாயிருந்தாள். கால்களைச் சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் மேல் அவளுக்கு அலாதி மரியாதையிருந்தது. கால்களை அவர்களின் பொறுப்பில் தூக்கி;க்கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு அலாதியாகவிருக்கும் பெண்களைப் பார்க்கையில் பெருமையாகவிருக்கும். பெண்கள் தமது கால்களைத்தான் மிகவும் நேசிக்கின்றார்கள். கால்கள் இல்லாதவர்கள் பாவம். எம்நாட்டுப் போரினால் எத்தனை மக்கள் தமது கால்களை இழந்திருக்கின்றார்கள்.

கைகளில் அணிவது போல் ஏன் கால்களிலும் காப்புக்களைப் பெண்கள் அணிவதில்லை என்பதை ஆராய அவள் விரும்பினாள். கைகளில் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய தடித்த பொற்காப்புக்களை அணியும் பெண்கள் ஏன் கால்களிலும் அதுபோல் அணிவதில்லை. காற்சங்கிலி மிகவும் மெல்லியது, கால்களுக்கு அது போதாது. காற்சதங்கை அது நாட்டிய மங்கைகள் மாத்திரமே அணிந்து கொள்ளும் அணிகலன். கண்ணகியை அவள் குலதெய்வமாகக் கருதினாள். அவள் காற்சிலம்பு ஒரு காவியத்தையே படைத்துவிட்டதல்லவா? கண்ணகியின் கால்கள் எப்படியிருந்திருக்கும். அழகிய சின்னக் கால்களில் அந்தச் சிலம்பு எப்படி ஜொலித்திருக்கும். ஏன் பெண்கள் சிலம்பணிவதில்லை என்ற கேள்வியையும் தனது ஆராய்வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். மனித உறுப்பில் கால்களின் முக்கியத்துவம் வேறெந்த உடலுறுப்புக்குமில்லை என்பதை எந்தச் சபையிலும் ஆதாரங்களுடன் வாதாட அவளால் முடியும். அதிலும் பெண்களுக்கு கால்கள் மிகமிக முக்கியமானது. இரண்டு கால்களும் இருக்கும் போதே அவர்களைத் தமது அசையாச் சொத்துக்கள் போல் அடைத்து வைக்க முயலும் ஆண் சமுதாயத்தில் கால்கள் இல்லாவிடின் பெண்களின் நிலை எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அவள் இரத்தம் கொதித்தது. குதி உயர்ந்த சப்பாத்தணியும் பெண்களை அவள் வெறுத்தாள். அவர்கள் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வன்முறையாளர்கள். ஆண்களைக் கவர்வதற்காய் தமது கால்களைக் காயப்படுத்திக்கொள்ளத் துணியும் மோசக்காரிகள். தம்மை வியாபாரப்பொருளாய் மாற்றிக்கொள்ளும் கோழைகள்.



வேலை முடிந்தவுடன் அவசர அவசரமாக சப்பே பிடித்து பஸ் பிடித்து வீட்டுக்கு வந்தவளுக்கு கோபம் தலை உச்சி மட்டும் சுள்ளென்று ஏறியது. வீட்டுக்கு முன்னால் காரில்லை. வேலையில இருந்து நாலைந்து தரம் ரவிக்கு போன் பண்ணி தனக்கு இன்றைக்கு டொக்டர் அப்பொயின்மெண்டிருக்கு வீட்டுக்குவந்து குளித்துவிட்டு உடனேயே போக வேண்டும், கார் தனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தாள். இது முதல் தடவையில்லை, எத்தனையோ தரம் தனக்கு அலுவலிருக்கு இண்டைக்கு கார் வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாலும் அவளுக்கு கார் கிடைப்பது மிகவும் அரிதாகவேயிருந்தது. எப்ப பார்த்தாலும் பிள்ளைகள் கைவசமாகவிருந்தது கார். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத்தான் கஸ்டத்தோட கஸ்டமாகவென்றாலும் குறைந்தவிலையில் ஒரு பாவித்த காரை வாங்கினாள் வனிதா. ரவிக்கு இதில் உடன்பாடில்லை. தேவையில்லாத செலவு. காரைச் சமாளிக்கலாம், ஆனால் காருக்கான இன்சூரன்ஸை எப்படிச் சமாளிப்பது. உமக்குத்தானே கால்கள் இருக்கிறனவே கார் எதற்கு?

ச்சீ பேசமால் வேலையால் நேராக டொக்டரிடம் போயிருக்கலாம். குளித்து விட்டுக் கொஞ்சம் துப்பராகப் போவம் என்று நினைத்ததால் வந்த வினை. இனி ரக்ஸியில் போனால் கூட பூட்டும் நேரத்திற்கு முன்பு போய்விட முடியாது. பிள்ளைகளில் யாரோதான் தனக்குக் கார் வேண்டுமென்பது தெரியாமல் கொண்டுபோய் வி;ட்டார்கள் என்று கோவம் கோவமாக வந்தது. என்ன இனி, ஆளுக்கு ஒரு கார் வாங்க வேண்டுமா? நினைத்த படியே உடுப்பை மாற்றிக்கொண்டு ஒரு தேத்தண்ணி போட்டுக் குடிக்கலாம் என்று குசினிக்குள் நுழைந்தவளுக்கு “சிங்”கிற்குள் காய்ந்த சாப்பாடு ஒட்டிய பாத்திரங்கள் நிறம்பி வழிந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் “ஐயோ” என்று கத்தலாம் போலிருந்தது. பேசாமல் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு கொஞ்ச மிக்சரையும் எடுத்துக் கொண்டு ரீவிக்கு முன்னாலிருந்து டொக்டருக்கு போன் செய்து தவிர்க்க முடியாத காணத்தால் தனக்கு இன்றைக்கும் வரமுடியாது என்று மன்னிப்புக் கேட்டுத் தொடர்பைத் துண்டித்தாள்.





ஓப்பரா வின்ஃபி கணவரால் வன்முறைக்குள்ளான பெண்ணொருவருடம் பேசிக்கொண்டிருந்தாள். ரவி ஏன் இன்னும் வேலையால் வரவில்லை? அவனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். தான் ஒரு முக்கியவேலையாக காரில் வெளியில் வந்துவிட்டதாகவும் “ஃப்ளீஸ் நீர் ஒரு ரக்ஸி பிடித்து டொக்டரிடம் போம்”; என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தான். வனிதாவுக்கு கைகள் நடுங்கியது. ஒன்றுக்கு மூன்று தரம் அவள் போன் பண்ணித் தனக்கு இன்றைக்கு டொக்டர் அப்பொன்மெண்ட் இருக்கென்று ரவியிடம் சொல்லிருந்தாள். சொல்லும் போது நானும் உம்மோட வாறன் என்று அவன் சொல்ல மாட்டனாவென்று ஏங்கியிருக்கின்றாள். “சரி, நீர் கொண்டு போம், எனக்கு ஒரு அலுவலுமில்லை நான் வீட்டைதான் நிற்பன்”. அப்ப சொன்னான், இப்ப அப்படியென்ன அவசரம்?. அவளுக்குத் தெரியும் அவனது சமூகசேவைகளில் ஒன்றாகத்தானிருக்கும். ரவி ஏதோ அமைப்பொன்றுடன் இணைந்து வேலைசெய்கின்றான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. அவனும் அதுபற்றி அவளுக்குச் சொன்னதில்லை. தன்னோடு அவன் போதுமான நேரம் செலவழிக்கின்றானே அதுவே போதும் என்று அவள் இருந்துவிட்டாள். ஆனால் வரவர அவன் கூட்டம் அது இதுவென்று அதிக நேரம் வெளியில் செலவிடுகின்றான் என்பதை அவள் உணரத்தொடங்கினாள். இனி இதுபற்றிக் கதைத்தோ சண்டை பிடித்தோ ஒன்றுமாகப்போவதில்லை. தனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் நல்ல ஒரு நியாயம் வைத்திருப்பான் அவன், கடைசியாக உம்மோட ஒண்டும் கதைக்கேலாது என்பதாய் அவன் விவாதம் முடிவடையும். எப்போதுமே தோற்றுப் போவாள் அவள். மனதுக்குள் தன்பக்கம் நியாயம் இருக்கிறது என்பது தெளிவாத் தெரிந்தாலும் தனது பக்க நியாயத்தை வார்த்தைக்குள் அடக்கி அவன் போல் நிதானமாக வாதட அவளுக்குத் தெரிவதில்லை. கண்கள் கலங்கிவிடும். குரல் உயரும். அவன் ஏதோ அன்பாக தனது வாதத்தை வைப்பது போலவும் இவள் விதண்டாவாதம் பண்ணுகின்றாள் போலவும் ஒரு பிரம்மையை ஏற்படுத்தும்; பிள்ளைகள் கூட ஏனம்மா சும்மா எல்லாத்துக்கும் கத்துறீங்கள் என்பார்கள். கடைசியி;ல் அவளே மன்னிப்புக்கேட்குமளவிற்குத் தாழ்ந்து போவாள்.

இரண்டு “அட்வில்” எடுத்துப் போட்டுவிட்டு அறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள். மனம் அழுந்தி அழுந்தி அழச்சொன்னது. அழுவதைத் தனக்கு அவமானமாய் உணர்ந்து கண்களை மூடி நல்ல விஷயங்களை மனதுக்குள் ஓடச் செய்து தனது தளர்விற்கு மாற்றுத் தேடினாள். மனம் அடம்பிடித்தது, எழுந்து நோவுக்கு பூசும் கிறீமை எடுத்துக் காலில் நோ தரும் பகுதிக்கு அழுத்திப் பூசிவிட்டபடியே தனது கால்களைப் பார்த்தாள். கவனமாக மயிர்களை அகற்றிக் கிறீம் பூசிவந்தாலும் அவள் கால்கள் அழகில்லாமலிருந்தன. ஆண்களின் கால்கள் போல் பெரிதாக விரல்கள் அகன்று காணப்பட்டன. அப்பாவின் சாயல் அவளுக்கு, அதுதான் அப்பாவின் கால்களைப் போலவே அவள் கால்களும் இருக்கின்றதோ என்னவோ. தொடர்ந்தும் தன் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்குத் தன் கால்கள் மீதே இரக்கம் வந்தது. பாவம் உள்ளுக்க என்ன வருத்தத்தை வைச்சுக்கொண்டு அவதிப்படுகுதுகளோ. “கவலைப் படாதை இனி நான் ஒருத்தரையும் நம்பப் போறதில்லை, அடு;;த்தகிழமையே நான் உன்னை டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போய் மருந்தெடுத்து உன்ர நோவை இல்லாமல் பண்ணுறன்” சொல்லிவிட்டுச் குசினிகுள் போய் பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கி விட்டு சமைப்பதற்கு ப்ரிட்ஜிக்குள்ளிருந்து மீனை எடுத்து சுடுதண்ணிக்குள் போட்டாள். மீன் என்றால் மூத்தவன் மூஞ்சையை நீட்டுவான் என்று ஒரு கோழிக்காலையும் எடுத்து அந்தத் தண்ணிக்குள் போட்டாள். அரிசியைக் கழுவி “ரைஸ்குக்கரில்” போட்டு விட்டு வெண்காயம், உள்ளி, இஞ்சி, பீன்ஸ் எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்துக்குள் போட்டுக்கொண்டு வந்து ரீவிக்கு முன்னாலிருந்து வெட்டத்தொடங்கினாள். ரீவியில் வடஅமெரிக்க பூர்வீக மக்களின் கால்கள் “மற்றவர்”களின் கால்கள் போலல்லாது “வழமை” அற்றுக்காணப்படுவதாயும், அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக “எயார் நேரிவ் என்7” எனும் சப்பாத்து வகையைத் தாம் உருவாக்கியுள்ளார்கள் என்றும் “நைகி” சப்பாத்தின் விற்பனை முகவர் ஒருவர் அதற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் வழங்கிக்கொண்டிருந்தார்.



கடைசி மகள் 8ம் வகுப்புப் படிக்கின்றாள், சப்பாத்தைக் கூடக் கழற்றாமல் குசினிக்குள் சென்று ஒரு நோட்டம்விட்டு வனிதா சிட்டிங் ரூமுக்குளிருப்பதைக் பார்த்துவிட்டு “ஹாய் மாம் வாட்ஸ் ஃபோர் டினர்”; என்றாள், மீன்கறியும் சோறும் என்ற வனிதாவின் பதிலுக்கு முகத்தைச் சுளித்தபடியே தனது அறையை நோக்கிப் போனாள். அவளி;ன் சப்பாத்து முன்னும் பின்னும் கிழிந்து போயிருந்தது. புதுச்சப்பாத்தை பெட்டிக்குள் பத்திரமாக வைத்துவிட்டு எதற்காக இந்தக் கிழிந்து போன சப்பாத்தைப் போட்டபடி திரிகின்றாள் என்பது வனிதாவுக்குப் புரியவில்லை. இதனால் அவள் கால்களுக்கு எவ்வளவு பாதிப்பு. கேட்டால் எல்லாவற்றிற்கும் ஒரு தோள் குலுக்கல்தான் பதிலாக வரும். வனிதாவின் கண்கள் தொலைக்காட்சியில் பதிந்து போயிருந்தன. மனம் எங்கெல்லாமோ சுழன்றுகொண்டிருந்தது.



பத்துமணிவரை ரவியிற்காகக் காத்திருந்துவிட்டுப் படுக்கைக்குப் போய்விட்டாள் அவள். தனது தலையை யாரோ வருடுவதுபோலிக்கத் திடுக்கிட்டெழும்பியவளின் தலையை வருடியபடியே “டொக்டர் என்ன சொன்னவர்” என்றான் ரவி. நேரம் ஒருமணியாகியிருந்தது. “நான் போகேலை” திரும்பிப் படுத்தவளை கட்டிப்பிடித்த ரவி “ஏனம்மா ரக்ஸிக்கு அடிச்சுப் போயிருக்கலாமே” என்ற படியே தனது பிடியை இறுக்கினான். இது ரவியின் இன்னுமொரு யுக்தி. வனிதா களைத்துப் போனாள். வாக்குவாதப்பட்டு அழுது கடைசியில் அவன் சரி அவள் பிழையென்ற முடிவோடு அவன் அவளை கட்டியணைத்து உடலுறவு கொள்வதோடு எல்லாமுமே சரியாகிப் போகும். அவளுக்குத் திராணியில்லை. “நாளைக்கு நான் வெள்ளணை வேலைக்குப் போகவேணும் பேசாமல் படுங்கோ” என்று போர்வையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள். “அப்ப கால் நோ” அவன் குரல் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

இப்பவெல்லாம் எதற்கெடுத்தாலும் கோபம் வருகின்றது வனிதாவுக்கு. கோபம் இறுதியில் அழுகையாகமாறிச் சுயபச்சாதாபத்தில் போய் முடியும். ரவி சொன்னான் “நீர் முந்தினமாதிரியில்லை எதுக்கெடுத்தாலும் கோவிக்கிறீர், செக்ஸ்இற்குக் கேட்டாலும் ஏதாவது சாட்டுச்சொல்லிக்கொண்டிருக்கிறீர், என்ன நடந்தது?” எதை எப்படிச்சொல்வதென்று வனிதாவிற்கு விளங்கவில்லை. குடும்பவாழ்க்கை சந்தோஷமாகவில்லை என்பது அவளுக்கும் விளங்கியது காரணம்தான் விளங்கவில்லை. வெளியிலிருப்பவர்கள் நல்ல சந்தோஷமான வடிவான குடும்பமாகத்தான் அவள் வாழ்க்கையைப் பார்த்தார்கள். பிள்ளைகள் நன்றாகப் படிக்கின்றார்கள். ரவி ஒரு நல்ல தமிழ் மகன் என்ற சட்டத்திற்குள் நச்சென்ற அடங்கியிருந்தான். இருவருக்கும் நிரந்தரமான வேலையிருக்கின்றது. விடுமுறைக்கும் குடும்பமாக வேறுநாடுகளுக்குச் சென்று வருகின்றார்கள். பலருக்குக் கிடைக்காத வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருப்பதாகத்தான் பலரும் சொல்கின்றார்கள். இரவில் ரவி அவளை அணைத்து உடலை அளையத் தொடங்கிவிட்டாலே அவளுக்கு பூச்சி உடம்பில் ஊர்வதுபோலிருக்கும். கையைத் தட்டிவிட்டு விலத்திப் படுத்துக்கொள்வாள். அடுத்தநாள் முழுநாளும் ஏதாவது ஒரு சாட்டைச் சொல்லி ரவி எரிந்து விழுந்துகொண்டிருப்பான். தொடக்கத்தில் அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் காலப்போக்கில் உடலுறவுக்குத் தான் மறுப்புத்தெரிவித்த அடுத்தநாள் வீட்டில் ஏதாவது காரணத்தால் ரவிக்கும் தனக்கும் விவாதம் ஏற்படுவது புரியத் தொடங்கியது, அவளுக்கு மனவேதனையைதந்தது. பலநாட்கள் இதுபற்றி மனதுக்குள் ஓடவிட்டு தன்னைப் பற்றியே ஆய்வுசெய்யத் தொடங்கினாள்.

ரவியை அவள் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டாள். தனக்கு வரும் கணவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாளோ அதற்கு மேலேயே ரவியிருந்தான். காதலித்த நாட்களின் இருவரும் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ரவியின் பரிசுகள் எப்போதும் விலை உயர்ததாகவேயிருக்கும். பல தடவைகள் விடுமுறையைக் களிக்க வேறு நாடுகளுக்குச் சென்று வந்திருக்கின்றார்கள். அப்போதும் செலவெல்லாம் அவனே ஏற்றுக்கொண்டிருக்கின்றான். வனிதா இது முறையில்லை என்று வாதிட்டால், “ஏன் நான் நீ என்று பிரிச்சுப் பார்க்கிறீர்” என்பதோடு அவள் அடங்கிக்கொள்வாள். தன்னைப் போல் அதிஷ்டசாலி ஒருவருமில்லை என்று எப்போதுமே அவள் பெருமைப்பட்டதுண்டு. பின்னர் பிள்ளைகள் பிறந்து, இப்போது வளர்ந்து பெரியவர்களான பின்பும், ரவி அவளோடும் பிள்ளைகளோடும் மிகவும் அன்பாகத்தானிருக்கின்றான். வனிதாவிற்குத் தன்னில்தான் ஏதோ பிரச்சனை என்பதாய்ப்பட்டது. தனக்கு எப்போதெல்லாம் அவன் மேல் எரிச்சலாகவருகின்றது என்று தன் வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப ஓட்டிப்பார்த்தாள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு புள்ளியை அவளால் அடையாளப்படுத்த முடியவில்லை. தனக்கு வேறுயாரும் ஆண்மேல் கவர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ என்று கூட அவளுக்குச் சதேகமேற்பட்டது. தன் வாழ்வில் சந்தித்த, சந்திக்கும் ஆண்களை மனக்கண் முன்னே கொண்டுவந்து இவர்களில் யாரையாவது நினைக்கும் போது தன்மனதில் கிளர்சி ஏற்படுகின்றதாவென்று தன்னையே சோதித்;துப் பார்த்தாள். எல்லாமே வெறுமையாகவிருந்தது. ரவியின் குரலைத் தொலைபேசியில் கேட்கும்போதோ, இல்லாவிட்டால் அவன் அவளோடு காதலோடு கதைக்கும் போது எழும் கிளர்ச்சி வேறு எந்த ஆண் பேச்சிலும் அவளுக்குக் கிடைத்ததில்லையென்பது உறுதியாகிவிட அவளுக்கு நிம்மதியாகவிருந்தது. இருந்தும் எதனால் அவன் தொடுகை அவளுக்குப் பிடிக்காமல் போனது. எப்போது அவள் ஒதுங்கத் தொடங்கினாள். புரியவில்லை. டொக்டரிடம் செல்லும் பொது இதைப் பற்றியும் பேசிப் பார்க்கலாமோ என்று யோசித்தாள், பின்னர் இதுபற்றி எப்படிக் கதைப்பது என்பது தெரியவில்லை. வயது போய்விட்டதா? தன் உடலின் ஹோர்மோன்கள் வற்றிப் போய்விட்டதா?

அடுத்தநாள் காலை எழுந்தவுடன் டொக்டரிட்ட அப்பொன்மெண்ட் வையும் நானே உம்மைக் கூட்டிக்கொண்டு போறன் என்ற ரவி. தான் இரவு ஒழுங்காக நித்திரை கொள்ளாததால் தனக்கு தலையிடிக்குது அதனால் கொஞ்சம் வேலைக்குப் பிந்திப் போகப் போகிறேன் என்று அவள் நெத்தியில் கொஞ்சி அவளை வேலைக்கு அனுப்பிவிட்டுத் திரும்பவும் படுத்துக்கொண்டான். அவள் நெஞ்சை எதுவோ நெருடியது. இனிமேல் சும்மா அவனோடு சண்டைபிடிக்காமல் சந்தோஷமாயிருக்க வேணும். வருகிற கோடை விடுமுறைக்கு “ஜமேக்கா” போகலாம் என்றிருக்கின்றார்கள். “ஹனிமூன்” சென்றபோது எப்படியெல்லாம் அனுபவித்தார்களோ அதே போல் திரும்பவும் எல்லாம் அனுபவிக்கவேண்டும் என்று அவள் மனதுக்குள் பட்டியல் போட கால் நோ குறைந்தமாதிரியிருந்தது. மனம் சந்தோஷமாகவிருந்தது. பஸ்தரிப்பில் வந்து நின்றபோது தானும் ஏதாவது சாட்டைச் சொல்லிவிட்டு வேலைக்குப் பிந்திப் போகலாமா என்று யோசித்தாள். இன்று அவனோடு உடலுறவு கொள்ளலாம் போல் அவள் உணர்வுகள் மனதை சஞ்சலத்திற்குள்ளாக்கியது. மனது கிளுகிளுப்பாக வீட்டை நோக்கித்திரும்பியவளை எதுவோ தடுத்தது. பஸ் வந்தது அவள் ஏறிக்கொண்டாள். தன் மனப் பதட்டம் மனமாற்றத்திற்கான காரணம் அவளுக்கே குழப்பமாகவிருந்தது.

“ராத்திரி ஒழுங்கா நித்திரை கொள்ளேலை தலையிடிக்குது நான் படுக்கப்போறன்” அவனது குரல் திரும்பத் திரும்ப வனிதாவின் காதுகளில் வந்து மோதிக்கொண்டிருந்தது.

கலியாணம் கட்டிய புதிதில் உமக்கு ஒரு ஆம்பிள எப்பிடி நடந்தாப் பிடிக்கும் என்ற அவன் கேள்விக்கு, சமைக்கேக்க குசினிக்க உதவிசெய்தா எனக்கு மூட் வரும் என்றாள் அதன் பின்னர் ரவிக்கு “மூட்” வரும் போதெல்லாம் அவன் வனிதாவுக்கு உதவிசெய்யத் தொடங்கினான். அது நன்றாக அப்போது வேர்க் அவுட் ஆகியது. ஆனால் காலப்போக்கில் குழந்தைகள் பிறந்து அவர்களுக்குத் தனிமை கிடைப்பது அரிதாகிப் போக, ரவியும் அடிக்கடி சமூகசேவை செய்கின்றேன், கூட்டம் அதுஇதுவென்று வெளியில் போய்விடுவதால் வீட்டு வேலை முழுக்க அவள் தலையில் விழுந்தது. பிள்ளைகளும் படிக்கிறேன் படிக்கிறேன் என்று எப்போதும் அறைக்குள் அடங்கிக் கிடந்தார்கள். அன்றைக்கு ஒருநாள் வனிதா வேலையால் வந்து சமைத்துக்கொண்டிருக்கும் போது தானாக வந்து ரவி உதவிசெய்தான். சமையல் முடிந்து சாப்பிட்ட பின்னர் ரவி சில மணிநேரங்கள் கொம்பியூட்டரில் சிலவிடுவது வழமையான ஒன்று. வனிதா படுத்துவிடுவாள். அன்றும் ரவி கொம்பியூட்டரில் இருந்து விட்டான். வனிதா படுத்துவிட்டாள். நன்றாக அவள் அயர்ந்து நித்திரையாகவிருக்கும் போது ரவி வந்து அவளை எழுப்பினான். அவள் அரைகுறை நித்திரையில் என்னவென்று கேட்டபோது நான் உமக்கு இண்டைக்கு சமைக்க உதவினனானெல்லே என்றான். அவள் விளங்காதவளாய் அதுக்கென்ன என்றுவிட்டுத் திரும்பிக்கொண்டாள். அவன் விடுவதாயில்லை, அவளின் உடலில் கையை மேயவிட்டான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டாள். அவன்; திரும்பிப் படுத்துக்கொண்டான்.

அடுத்தநாள் வனிதா வேலைக்குப் போகும் அவசரத்தில் எழும்பி ரவியை எழுப்ப அவன் தான் சரியாக நித்திரை கொள்ளேலை அதனால் இண்டைக்கு நான் வேலைக்குப் போகேலை என்றான். “ஏன் வெள்ளணத்தானே படுத்தனீங்கள் ஏன் நித்திரை கொள்ளேலை என்றதற்கு, செக்ஸ் செய்தால் நல்லா நித்திரை வரும். மனுசனுக்கு வேணுமெண்டமாதிரியிருக்கேக்க செய்யாமல் மரக்கட்டை மாதிரிக்கிடந்தா பிறகு என்னத்துக்குப் பொஞ்சாதியெண்டு கொண்டு. நான் என்ன உம்மில லவ்விலையே கேட்டனான் உடம்புக்குத் தேவைப்படுது அதுதான் கேட்டனான். செய்தாத்தான் ஒழுங்கா நித்திரை வருகுது, சும்மா அலம்பாமல் போம்” அவன் கத்தினான். அவள் போய்விட்டாள். அதன் பிறகு அவள் எவ்வளவு முயன்றும் அவள் உடம்பு அவனோடு ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டது. அவள் மனதில் ஆசையெழுந்தால் கூட அவள் உடம்பு பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மறுத்தது அவளுக்கே ஆச்சரியமாகவிருந்தது. அதன் பிறகு அவள் ஆசையாய் அவனோடு இணைந்ததென்ற நாளே இல்லாமல் போய்விட்டது. காதல் வற்றியது. அவள் உடலின் ஒவ்வொரு பாகங்களும் அவள் சொற்கேட்க மறுத்தன. அவள் மனதிலிருந்து விலகி வேறொரு உலகிற்கு உடல் இடம்மாறிக் கொண்டது. தன் உடலும் உணர்வுகளும் தன்னைவிட்டுப் போய்விட்டன. ஐயோ ஐயோ இனி ஏலாது ஏதாவது செய்தாக வேண்டும், இது நிரந்தரமோ என்ற அச்சம் அவளை ஆட்கொள்ளத்தொடங்கியது. யாரிடம் இதுபற்றிக் கேட்பது என்று தெரியாத நிலையில் மின்கணனியில் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று ஆராயத்தொடங்கினாள்.

மின்கணனியில் கூகுள் செய்து பார்த்தாள். மழிக்கப்பட்ட நீண்ட பெண்களின் கால்கள் பலவகை நிறங்களில். உன்னிப்பாகப் பார்க்க சிலகால்களில் இன்னும் பொன்தூவல்போல் பூனைமயிர்கள் படிந்து கிடந்தன. முலைகள் கனங்கொள்ள, தொடைகள் இறுகிக்கொண்டு யோனியை எச்சிப்படுத்தின. வனிதாவிற்கு விடை தெரியவில்லை. அகோரக் கமாம்; அவளைத்தாக்க விலங்காய் புணர ரவியைத் தேடினாள். உடல் தளர்ந்து அனைத்து அவையங்களையும் மூடிக்கொண்டு. அவளைப் பார்த்து பல்லிளித்து நகைத்தது. வெக்கங்கெட் வேசை என்றவளை வைதது.
அன்று செவ்வாய்கிழமை ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி. வனிதாவின் அம்மாவின் நினைவு நாள். அம்மா இறந்து பலவருடங்களாகிவிட்டதால் வெறும் நினைவுகளில் மட்டும் அவள் வந்து போய்க்கொண்டிருப்பாள். ஆனால் இந்த வருடம் வனிதாவின் மனநிலை வழமையிலிருந்து மாறுபட்டடிருந்தது. துக்கம் ஏனோ நெஞ்சை அடைத்தது. கால் நோ கூட வழமையை விட தாங்க முடியாமல் இருந்ததால் அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். அவள் வீட்டினுள் நுழைந்தபோது ரவியும் இன்னும் மூன்று ஆண்களும் அவர்களது இருக்கையறையிலிருந்து ஏதோ முக்கியமான விடையம் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தான். அவள் திடீரென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் வேண்டாத விருந்தாளியைப் போல் அவர்கள் பார்வை அவள் மேல் விழுந்தது. ஒரு பெண்ணோடு கட்டிலிலிருக்கும் போது அகப்பட்டுக்கொண்ட கணவன் போல் முழித்தான் ரவி. மற்றைய ஆண்களின் பார்வையில் இறுக்கத்துடன் கூடிய வெறுப்புத் தெரிந்தது. ஒரு வெளியை நோக்குவதுபோல் அவளைக் கடந்து அவர்கள் பார்வை எங்கோ தெறித்துக்கொண்டது. ரவியின் பார்வையும் அவர்கள் பார்வையை ஒத்திருக்க, அவள் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்று விட்டாள். ரவி ஏதோ வேண்டாத வேலையில், அல்லது சட்டவிரோதமான செயல் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றான் என்று அவள் மனம் அடித்துக்கொண்டது.

கனடாவில் தமிழர்கள் சட்டவிரோதமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் செயல்கள் என்ன என்பதை வரிசைப்படுத்தி யோசித்தபடியே உடையை மாற்றி நோகும் காலுக்கு கிரீமைப் பூசினாள்.



1. குடும்பமாக இருந்து கொண்டு ஒற்றைத்தாய் என்று கூறி அரசஉதவிப்பணம் பெற்றுக்கொள்ளல். - இது ரவிக்குப் பொருந்தாது. அவன் ஒற்றைத்தாய் இல்லை.
2. சமூகநலஉதவிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு வேறு ஒருவரின் அட்டையில் வேலைசெய்தல், அல்லது அட்டையில்லாமல் வேலைசெய்தல் - இதுவும் ரவிக்குப் பொருந்தாது. அவன் தனது அட்டையில் பலவருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கின்றான்.

3. வேறுஒருவரின் வங்கி அட்டையைப் பிரதியெடுத்து அவர் வங்கிப் பணத்தைக் கையாடல். – ம்

4. வேறு ஒருவரின் கிரடிட்கார்டை எடுத்து பொருட்களை வாங்கி விற்றல், அல்லது பணம் கையாடல் - ம்

5. புலிகளில் அமைப்பில் இணைந்து பணம் சேர்த்தல். அதில் ஒருபகுதியை தனது வங்கியில் இடுதல் - ம்

இதற்கு மேல் யோசித்துப் பார்த்தும் வேறு ஒன்றும் வனிதாவின் மனதில் எழுவில்லை. ஐந்தில் மூன்றுக்கான சாத்தியங்கள் இருந்தன. ஆனால் பணவிஷயத்தில் ரவியின் நேர்மைமேல் அவள் சந்தேகம் கொள்வது தனது மனச்சாட்சிக்கே பிடிக்காமல் இருந்தது. அவள் அதிகம் புலிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காதலித்த தொடக்கத்தில் புலிகள், புலிகள் என்று ரவி கதைக்கும் போதெல்லாம். ஏன் ரவி புலிகள் மேல் இவ்வளவு பாசமும் விசுவாசமுமாக இருக்கின்றான் என்று அவளுக்குச் சந்தேகமெழுந்தது என்னவோ உண்மைதான். அவளுக்கு எப்போதும் சாந்தமாகவும், அழகாகவும் இருக்கும் மான்கள், முயல்களைத்தான் பிடித்திருந்தது. காலப்போக்கில் ரவியோடு சேர்ந்து அவள் தனது தாய்நாட்டைப் பற்றிப் பலதும் அறிந்து கொண்டாள். இருந்தாலும் ‘இஞ்ச இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்” என்று ஒருமுறை கேட்டு அவனின் கோவத்திற்குள்ளாகியதால் அப்படியான கேள்விகளை அவள் முற்றாகத் தவிர்த்துக் கொண்டாள்.

கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது. ரவி அறைக்குள் வந்தான். அவள் கால்களை அவசரமாகத் தேய்த்;துவிட்டுக்கொண்டிருந்தாள். தான் நாளைக்கு அவசர அலுவலாக அமெரிக்கா போகஉள்ளதாகச் சொல்லிவிட்டு வனிதாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். ஏன் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. அவன் ஏன் இன்று வேலைக்குப் போகவில்லை என்று அவள் கேட்கவில்லை. அவள் ஏன் வேலையால் கெதியாக வந்தாள் என்று அவனும் கேட்கவில்லை. நாளைக்கு டொக்டர் அப்பொன்மென்ட் வனிதா கார்திறப்பை எடுத்து வைத்துக்கொண்டாள். இரண்டு அட்விலை போட்டு, பான்டேஜ்ஆல் காலை இறுக்கிச் சுற்றிக்கட்டிவிட்டுப் படுத்துக்கொண்டாள். நோ அதிகமாகிக்கொண்டிருந்தது.

அப்போது வனிதாவுக்கு மூன்று வயதிருக்கும் வீட்டிற்கு அவளின் சொந்தங்கள் பலர் வந்திருந்தார்கள். வீட்டில் பெரிய சமையல் நடந்தது. எல்லோரும் வனிதாவின் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பா அவளைத் தூக்கி மடியில் வைத்து அவள் கால்களுக்கு எண்ணெய் ப+சி மசாஜ் செய்தார். அவளுக்குக் கூசியது. இழுத்துக்கொண்டாள். சாப்பாட்டுப் பந்தி முடிந்ததும், பெரிய செம்பு அண்டாக்குள் மெல்லிய சூட்டில் தண்ணீரை நிரப்பி அதற்குள் வாசனைத் திரவியங்கள், தாமரை இதழ்கள் என்பனவற்றைப் கொட்டி வனிதாவை ஒரு சிறிய மரக்கதிரையில் இருத்தி அவள் கால்களை அந்தத் தண்ணீருக்குள் வைத்தார்கள். வனிதாவுக்குப் பயமாகவும், சந்தோஷமாகவுமிருந்தது. தன்னை எல்லோரும் கவனிக்கின்றார்கள் என்ற சந்தோஷம் ஒருபக்கம், தான் ஏன் பிரத்தியேகமாகக் கவனிக்கப்படுகின்றேன் என்ற சந்தேகத்துடன் கூடிய பயமும் அவளை ஆட்கொண்டது. பெண்கள் எல்லோரும் கைதட்டிப் பாட்டுப் பாடினார்கள். சிறிது நேரத்தின் பின்னர் அம்மா வந்து அவளைத் தூக்கி; கால்களை ஒருவரிடம் காட்டினாள். அவர் கால்களைத் தொட்டுப்பார்த்து விட்டுத் தலையசைக்க அம்மா அவளைத் தனது மார்போடு அணைத்துக்கொண்டு நிலத்தில் இருந்தாள். அம்மாவின் முதுகுப்புறத்தில் அப்பா இருந்துகொண்டு அவளைத் தடவி விட்டுக்கொண்டிருந்தார். அவள் திரும்பிப்பார்க்க முனைகையில் அம்மா அவள் தலையை இறுகப் பிடித்துக்கொண்டாள். அவள் ஒரு காலை ஒரு முரட்டுக்கை பிடிப்பதை அவளால் உணர முடிந்தபோது அவள் திமிறினாள். முரட்டுவிரல்களால் அழுத்தி அவள் கால் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்டதை உணர்ந்த அடுத்த நிமிடம் அவள் விரல்கள் உடைக்கப்பட்டன. ஐயோ கத்திக்கொண்டு மயக்கமானாள் வனிதா.

கதவை உடைப்பது போல் கத்தம் கேட்டுத் திடுக்கிட்டெழுந்த வனிதா முதலில் தனது கால்களைப் பார்த்தாள். அவை ஒழுங்காக இருப்பது கண்டு அமைதியானாள். இருந்தும் வலக்கால் அசைக்கமுடியாதபடி விண்விண்னென்று நோவாய்க் கிடந்தது. வெளியில் மழை பலமாகப் பொழிந்து கொண்டிருந்த சத்தத்திற்கு மேலால் கதவு தட்டும் சத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. யாராக இருக்கும்? வீட்டில் தன்னைத் தவிர ஒருவருமில்லையா? பிள்ளைகள் எங்கே?, நோவும், நித்திரைக் கலக்கமும், கனவும் கலந்து ஒற்றைக் காலை இழுத்தபடியே மயக்கநிலையாய் எழுந்து தாண்டித்தாண்டி மெதுவாக நடந்து சென்று முன்கதவைத் திறந்தவளைத் தள்ளிக்கொண்டு மூத்தவன் உள்ளே வந்தான். மழையில் முழுதாக நனைந்திருந்தான். I am all wet, what the fuck are you doing upstairs nonsense” கத்தி விட்டு அவளைக் கடந்து போனான். வனிதாவுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. “உன்ர திறப்பு எங்கை? வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டாள். அம்மா, அம்மா என்று புலம்பியபடியே வலக்காலை இழுத்து இழுத்து நொண்டியபடியே தனது அறையை நோக்கி நடந்து போனாள்.


காலம் - 40வது இதழில் வெளியான கதை இது

Sunday, November 11, 2012

Free Angela & All Political Prisoners:


37வது ரொறொன்டோ சர்வதேச படவிழாவில் இடம்பெற்ற இன்னுமொரு முழுநீள விவரணத்திரைப்படம் “Free Angela & All Political Prisoners”.
தற்போதைய எமது நாட்டு நிலமைக்கும் இ;வ்விரணப்படத்திற்கும் நிறம்பவே ஒற்றுமைகளுள்ளன. அரசியல் மறுப்புரூபவ் எதிர்ப்புக் காரணமாகக் குரல் எழுப்புவோருக்கு வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்லரூபவ் மேற்கத்தேய நாடுகளிலும் ஆபத்து இருக்கின்றது என்பதற்கு அன்ஜலாவின் வாழ்க்கை நல்லொரு உதாரணம். இவர் அமெரிக்காவின் சிறை முறைமையை ""  எனவும் "prison-industrial complex"அடையாளப்படுத்துகின்றார். கைதிகள் என்பவர்களே உலகில் இருக்கக் கூடாது என்று கூறும் இவர் கைதிகள் என்பது அடிமைகள் என்பதின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறுகின்றா
கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அன்ஜலா டேவிஸ் 1944ஆம் ஆண்டு அமெரிக்காவில் அலபாமா நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பாலர்பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றியதோடு   இலும் அங்கத்தவராக இருந்ததால் Southern Negro Congress கொம்ய+னிஸ்ட் கட்சியில் பாதிப்பு இவ்வமைப்புக்கு நிறம்பவேயிருந்தது. சிறுவயதிலிருந்தே இப்பாதிப்புகளோடு வளர்ந்தவர் அன்ஜலா. தனது மேற்படிப்பிற்காக நீய+யோர் நகரத்திற்கு சென்ற அன்ஜலாவுக்கு அங்கு இயங்கிக்கொண்டிருந்த கொம்ய+னிஸ் கட்சிகளின் வாரிசுளோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டதால் அவருக்கு சோசலிசம்ரூபவ் கொம்ய+னிஸத்தின் அறிமுகம் முழுமையாக அங்கே கிடைத்தது. தொடர்ந்து தனது மேற்படிப்பை மேற்கொண்ட அன்ஜலா ஒரு தீவிர பெண்ணியவாதியாகவும்ரூபவ் சமூகநலன்விரும்பியாகவும் கொம்ய+னிஸ்ட் கட்சியின் அங்கத்தவராகவும் இயங்கிவந்தார்.
1969ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வந்த அன்ஜலாவைரூபவ் அன்று கலிபோர்னியாவின் கவர்னராக இயங்கிக்கொண்டிருந்த ரொனால்ட் ரேகன் பதவிநீக்கம் செய்தார். கொம்ய+னிஸ்ட் கட்சியின் அங்கத்தவராக அன்ஜலா இயங்கி வந்தததே அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான காரணம் என்று கூறப்பட்டாலும் கறுப்பு இனத்தைச் சேர்ந்த மாணவர்களும்ரூபவ் சமூகநலவிரும்பிகளும் அன்ஜலா கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதே காரணம் என்கின்றார்கள். இந்நாட்களில் அன்ஜலா கொலைமிரட்டல்களுக்கு உட்பட்டதனால் அவர் தற்பாதுகாப்பு வேண்டித் துப்பாக்கி ஒன்றையும் வாங்கி வைத்திருக்க நேர்ந்தது.
அன்ஜலாவின் வேலை ஒப்பந்தத்தை ஆளுனர்குழு புதுப்பிக்க மறுத்ததால்ரூபவ் அமெரி;க்க பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கம் அவர்களுக்கெதிராகக் கண்டம் தெரிவித்து வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் கண்டது. அன்ஜலா மீண்டும் வேலையில் இணைந்து கொண்டார். இதனால் சினம் கொண்ட ஆளுனர் குழு மீண்டும் அன்ஜலாவை வேலை நீக்கம் செய்வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டது. மீண்டும 1970ஆம் ஆண்டு அன்ஜலா பணிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணங்களாக அன்ஜலா முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தனது உரைகளில் மேற்கொண்டார்ரூபவ் அதனால் தாம் தாக்கப்பட்டதாக உணர்வதாக ஆளுனர் சபை கூறியது.
ஓகஸ்ட் மாதம் 7ம் திகதிரூபவ் 1970ஆண்டு கலிபோர்னியா நீதி மன்றத்தில் வைத்து நீதிபதி ஹரோல்ட் ஹலிரூபவ் அரசாங்க வழக்கறிஞர்ரூபவ் யூரி ஒருவர்ரூபவ் மற்றும் மூன்று கறுப்பு இன ஆண்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக்கொலைகளைச் செய்த 17வயது நிரம்பிய கறுப்பு இனப்பள்ளி மாணவன் உபயோகித்த துப்பாக்கியை வாங்கியது அன்ஜலா என்றும் அவர்தான் இக்கொலைச் செய்ய அந்த இளைஞனைச் தூண்டினார் என்றும் அன்ஜலா டேவிஸ் மேல் நீதிபதி ஹரோல்டினைக் கொலை செய்யத் தூண்டினார் என்ற குற்றம் பதிவாகி தலைமறைவாகிய அவரைக் கைது செய்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஓக்டோபர் மாதம் அன்;ஜலா கைதானார். அப்போது ஆட்சியிலிருந்த ஜனாதிபதி நிக்ஷன் மிகப்பெரிய பயங்கரவாதியான அன்ஜலா டேவிட்சைக் கைப்பற்றியதற்காக அமெரிக்கப் புலனாய்வுத் துறையைப் பெரிதும் பாராட்டினார். நீதிமற்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றம் அனைத்தையும் மறுத்தார் அன்ஜலா.



அன்ஜலாவைக் குற்றமற்றவர் என்று நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அவர் விடுதலைக்காகப் போராடியதோடுரூபவ் அறுபதுக்கு மேற்பட்ட வெளிநாடுகளும் அன்ஜலாவை விடுதலை செய்யக் கோரிக் குரல் எழுப்பியதால் பதினெட்டு மாதச்சிறத்தண்டனையின் பின்னர் அனைத்து வெள்ளை இன ய+ரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.
தனது சிறை அனுபவம்தான் தன்னை அமெரிக்க சிறை முறைமைக்கு எதிராகப் போராடத் தூண்டியதின் முக்கியகாரணம் என் கூறும் இவர் சிறைத்தண்டனைகள் பற்றி ஆய்வுகளைச் மேற்கொண்டு பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.  அன்ஜலா டேவிஸ் தன்னை ஒரு சிறை முறைமைச் சீர்திருத்தவாதியாகக் அடையாளப்படுத்துவதிலும் பார்க்கத் தன்னை சிறை முறைமையை முற்றாக அழிக்க விரும்பும் ஒருவராகவே அடையாளப் படு;த்தவே விரும்புகின்றார்.
அமெரிக்காவின் சில மாநிலங்களில் இன்றும் வழக்கத்திலிருக்கும் மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். தற்போது பல பல்கலைக்கழங்களும் சிறப்புரையாற்றுவதற்கு இவரை அழைக்கின்றன. அன்ஜலா இன்றும் அனைத்து மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். பெண்கள் பெருமை படக்கூடிய ஒரு சிறந்த மனிதஉரிமையாளர் அன்ஜலா டேவிஸ். இவரது வாழ்வையும் கொள்கையையும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு வெளியானது குசநந யுபெநடய னுயஎளை ரூயஅp; யுடட Pழடவைiஉயட Pசளைழநெசள எனும் இவ்விரணப்படம். கறுப்பு இனப் பெண்ணான அன்ஜலா டேவிஸ் தன்னால் முடிந்தவரைக்கும் சிறைக்கைதிகளுக்காகக் குரல் கொடுத்தாலும்ரூபவ் அவரோடு இணைந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் சிறைத்தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை மிகமிகப் பெரிய அளவில் இருந்துகொண்டுதானிருக்கின்து. குறிப்பாக குவாண்டனாமோவின் தடுப்பு முகாமில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.




Sunday, October 28, 2012

உதவி நண்பர்களுக்கு எம்மாலான உதவி




ஒரு நல்ல விடையத்தியத்திற்கு என்னாலான உதவியைச் செய்யும் பொருட்டு இந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கலந்து கொள்கின்றேன். உதவி நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
பின்னணிக் காரணங்கள் ஏதுமின்றி, குழந்தைகளின் இலக்கியங்களை அவர்கள் பார்வையில், அவர்கள் உலகைப் புரிந்துகொண்டு அளவுகோல்களை அகற்றி, என் பார்வையில் உங்கள் முன்னே வைப்பது என்பது மிகவும் சவாலான விடையம், இருந்தும் முடிந்தவரை முயல்கின்றேன்.
குருவிகளின் கீச்சிடும் ஒலிகளும், சேவல்களின் அதிகாரக் கூவல்களும், கோயில் மணியோசையும், மெல்ல வீசும்காற்றோடு கலந்துவரும் மல்லிகையும் சாணமும் கலந்தமணங்களும், கிழக்கு வானத்தில் செந்நிறப்பந்தாய், இருண்டிருந்த இரவை ஒளியேற்றும் சூரியனும், என் சின்னவயதுக் காலைகள் இப்படித்தான் அதிகமிருந்தன.
நித்திரைகள் அற்ற இரவுகளில் விடியல்கள் எப்படி அடையாளப்படுத்தப்படும்? துப்பாக்கி வேட்டுக்களும், காற்றோடு கலந்து வீசும் பொசுங்கிய மாமிச வீச்சமும், கூரை எரியும் விடியல்களும். இவர்கள் சப்பாத்துக்களுக்குள் எப்படி என்னைப் பொருத்திப் பார்ப்பதென்று புரியவில்லை.
சின்னஞ்சிறிய ப+க்கள் - சின்னஞ்சிறிய கதைசொல்லிகளின் எழுத்தினாலான தொகுப்பு இது. இதில் 12 கவிதைகளும், மூன்று சிறுகதைகளும், ஒரு கட்டுரையும், மூன்று விமர்சனக் குறிப்புக்களும் அடங்கியுள்ளன.
இந்தத் தொகுப்பை முதல் முதலில் கையிலெடுத்துத் தட்டிப் பார்த்த போது படைப்புகளின் கீழ் எழுதியவரின் பெயரும் அவர் வாழ்ந்துவரும் இல்லங்களின் பெயர்களுமான மாணிக்கவாசகர் சிறுவர்இல்லம், விபுலானந்தர் சிறுவர்இல்லம் என்றிருந்தன. நான் படைப்புக்களைப் படித்துப் பார்த்த போது கவிதைகள் ப+க்கள், மரம், மழை, நட்பு, அம்மா, போன்றவற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. “வாழ்க்கையின் இழப்பு” என்ற ஒரு கவிதையில் மட்டும்தான் யுத்தத்தின் அடையாளத்தைக் காணக்கூடியதாகவிருந்தது. அதே போல் சிறுகதைகளிலும் ஒரு சிறுவன் மட்டும்தான் “எனது கதை” என்ற தலைப்பில், யுத்தத்தில் தான் பெற்றோரை இழந்தமையைக் கதையாச் சொல்லியிருக்கின்றான்.
இங்கேதான் என்னால் பெரியவர்களின் உலகம், குழந்தைகளின் உலகம் என்ற வேறுபாட்டைக் காண முடிகின்றது. பெரியவர் என்ற வகையில் போர்சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகளிடமிருந்து நான் எதிர்பார்த்தது இழப்புக்களையும், துன்பங்களையும், ஏமாற்றங்களையும் மட்டுமே. அதிலும் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வரும் குழந்தைகளிடம் எழுதுவதற்கு வாழ்கைபற்றிய ஏமாற்றங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக என் மனதில் பதிந்திருக்கின்றது என்பதை நான் இங்கே வெட்கத்துடன் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
போர் சூழலில் பிறந்து வளர்ந்து, அனைத்தையும் இழந்து, இல்லங்களில் வாழும் இக்குழந்தைகள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. இயற்கைமேல் இவர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். சிறுவர்களான இருந்த போது போர்ச்சூழலில் அனுபவித்த துன்பங்களையும், இழப்புகளையும் “மரணத்தின்வாசைன” சிறுகதைத் தொகுப்பில் போரின் குரூரத்தை அனுபவித்த சிறுவனின் கதைகள் பல பதியப்பட்டிருக்கின்றன. அதே போல் தீபச்செல்வனும் கவிதைகள் மூலம் பதிந்திருக்கின்றார்.
போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்த கதை சொல்லிகளான த.அகிலன், தீபச்செல்வன் போன்றோர் பெரியவர்களானதும் தமது படைப்புக்களில், சிறுவர்களின் பார்வையிலிருந்து போரின் அனர்த்தங்களைத்தான் அதிகம் சொல்லியிருக்கின்றார்கள். இங்கே குழந்தைகளின் பார்வையும், அவர்கள் பெரியவர்களானபின் கொண்டிருக்கும் பார்வையும் நிச்சயம் வேறுபட்டிருக்கின்றது. இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
தமிழில் குழந்தைகளுக்கான கலைப்படைப்புக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. குழந்தை இலக்கியங்கள் ஓரளவுக்கேனும் இருந்தாலும் திரைப்படங்கள், நாடகங்கள், போன்றவை அறவே காணமுடியாமல் உள்ளது.
குழந்தைகளுக்கான தமிழ் இலக்கியங்கள் பெரியவர்களால் அவர்கள் கட்டமைத்த உலகிற்குள் இருந்து கொண்டு, இப்படித்தான் குழந்தைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தப்பட்ட நீதிக்கதைகளாகவே அனேகம் காணக்கூடியதாக உள்ளது. குழந்தைகளுக்கான மொழியில் அவர்களைக் கவரக் கூடிய வகையில் வேற்று மொழிகளில் காணப்படும் குழந்தை இலக்கியங்கள் போன்று தமிழில் மிகக் குறைவாகவே காண்படுகின்றது.
குழந்தைகள் கதைசொல்லிகளாக இருப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. படம் வரைதல் மூலமே குழந்தைகள் கதை சொல்லப் பழக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏதாவதொரு அனர்த்தம் நடந்து விட்டால் அவர்களிடம், அவர்களின் மனதிலுள்ளதைச் சொல்லும் படி வெள்ளைப் பேப்பரும் கலர் பென்சிலுமே அதிகம் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தொகுப்பில் குழந்தைகளே தமக்கான இலக்கியத்தைப் படைத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கான முயற்சியைச் செய்த, செய்துவரும் உதவி நண்பர்கள் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.
வாழ்க்கைத் தரத்தில் உயரத்திலிருக்கும், கனடா போன்ற ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு, குழந்தை வளர்ப்பு என்பதை மிகவும் சிரமமான ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம். அவர்களை ஒழுங்காக வளர்த்தெடுக்கவேண்டும். முறையான கல்வியைக் கொடுக்க வேண்டும். முடிந்த வரை டொக்டர் அல்லது என்ஜினியர். சரிவராவிட்டால் கரேபியனுக்கு அனுப்பியாவது அவர்களை பெயர் சொல்லும்படி உருவாக்கி விட வேண்டும். பின்னர் கலியாணம் இப்படி எத்தனை தொல்லைகள். இப்படித் தொல்லைகளுக்குள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம்மால் உதவி நண்பர்களின் சப்பாத்துக்குள் எம்மை ஒருபோதும் பொருத்திப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இத்தனை வருடங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நான் போர்ச் சூழலில் வாழும் எம்மக்களுக்கான எந்த உதவியையும் செய்யவில்லை என்பதையும் வெட்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் எம்மிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெளிவாகவே தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவியைச் செய்வது எமது கட்டாய கடமையாகும்.

இந்தத் தொகுப்பை ஒரு அறிமுகம் செய்யுங்கள் என்று நண்பர்கள் கேட்டபோது போரும் குழந்தைகளும் என்ற தலைப்பில் தகவல்கள் எடுக்கலாம் என்று கூகில் பண்ணிப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள், பல்கலைக்கழகத்தள அளவுகளிலிருந்து வெளியிடப்பட்டிருக்கின்றன. முதலாம் உலகப்போரிலிருந்து, இன்று சிரியா வரையிலான ஆய்வுக்கட்டுரைகள். பார்த்த போது வெறுப்புத்தான் ஏற்பட்டது. மேற்குலகநாட்டுப் படித்தவர்களுக்கு இவ்வனர்த்தங்களும், குழந்தைகளும் ஒரு ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு மட்டும்தானா? தமக்கான டிகிறியை அவர்கள் பெற்றுக்கொள்வது மட்டும்தான் அவர்கள் நோக்கமாக உள்ளதா? தொண்டர்நிறுவனங்களும், இவற்றினால் பிழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். தம்மை நாகரீக மக்களென்று அடையாளப்படுத்தும் நாடுகளும் அம்மக்களின் பங்குகளும் இதில் என்ன? மக்கள் கையறுநிலையில் உள்ளார்கள். அனைத்து அரசுமே மக்களுக்காக இயங்காமல் தமக்காக இயங்கிக்கொண்டிருக்கின்றது. உதவி நண்பர்கள் இதற்குள் வெறும் சிறு துரும்பு மட்டுமே. அவர்கள் தூக்கமுயலும் சிறுதுரும்பின் ஒரு நுனியை நாமும் தூக்க உதவுவோம் என்று கேட்டுக்கொண்டு இனிமேல் எமது நாட்டுக்குச் செல்ல இருப்பவர்கள் வெறும் விடுமுறைக்காக மட்டும் போய்வராமல் ஒரு சிறு வேலைத்திட்டத்தை எடுத்துச்செய்ய முன்வந்தால் சிறுவர் இல்லங்களில் வாழும் குழந்தைகள் போல் பலருக்கும் இது பயனளிக்கக் கூடியதாகவிருக்கும். வெறுமனே அகராதியிருந்து மட்டும் அனாதை என்ற சொல்லை அகற்றிவிட்டால் போதாது. அதற்கான செயற்திட்டங்களில் எமக்கான பங்களிப்பு எதையாவது செய்ய வேண்டியது புலம்பெயர் மக்களின் கடமையும் கூட. விதவைகள், விபச்சாரிகள், அனாதைகள் என்ற பதங்களை மட்டும் மாற்றிவிட்டால் போதுமா அதற்காக நாம் செயற்பட வேண்டாமா?
புரட்சியாளர் அன்சலா டேவிஸ் உலகில் சிறைக்கூடங்களே இருக்கக் கூடாது என்றார். சிறுவர் இல்லங்கள் இல்லாத உலகம் ஒன்று உருவாகுமா?
சின்னஞ்சிறிய ப+க்கள் தொகுப்பில் தமது எழுத்தைப் பதிந்த குழந்தைகளுக்கும், அதனைத் தொகுக்க உதவிய உதவி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். இக்குழந்தைகள் தொடர்ந்தும் எழுத வேண்டும், அதற்கான உதவியை உதவி நண்பர்களுக்கு நாமும் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். 

Wednesday, October 17, 2012

அட்டக்கத்தி




தமிழ் சினிமாவின் வடிவத்தை மாற்றியமைத்துரூபவ் இதையெல்லாம் கூட ரசிக்க முடியுமென்று சினிமாவில் தனது காலடி பதித்தவர் இயக்குனர் பாரதிராஜாரூபவ் அதன்பின்னர் அவரைத் தொடர்ந்து கிராமங்களின் அழகையும்ரூபவ் அழுக்கையும் படம்பிடித்துக் காட்டப் பலநல்ல இயக்குனர்கள் வந்துவிட்டார்கள் என்பது வேறுகதை. இருந்தும் சினிமா என்பது சிலரால் மட்டுமே முடியக்கூடியது என்பதாய்ப் பொதுமக்களிலிருந்து மிகவும் தூரத்திலேயே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதுவும் தகர்க்கப்பட்டு தொழில்நுட்பம் இலகுவாகவும்ரூபவ் பொருளாதார ரீதியாக இயலக்கூடியதாகவும் மாறிவிட்டதனால் தமது மாறுபட்ட சிந்தனையோடும்ரூபவ் செயல்திறனோடும் பல இளைஞர்கள் சினிமாவைத் தம் வசமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆடம்பரமும்ரூபவ் அதிஜனரஞ்சகமுமின்றி குறைந்த பணச்செலவில் இயக்கப்படும் திரைப்படங்கள் தற்போது திரையரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு இளைஞர்களை இன்னும் ஊக்கத்திற்குள்ளாக்கி வருகின்றது. அந்த வகையில் அண்மையில் வெளியான இன்னொமொரு சக்கைபோடு போடும் திரைப்படம்தான் “அட்டக்கத்தி”.




அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித். நாயகனும்ரூபவ் நாயகியும் புதுமுகங்கள். இப்படிப் புதுசுகள் ஒன்று சேர்ந்து பேசப்படும்படியாக ஒரு திரைப்படத்தைத் தருவதென்பது தற்போது தமிழ்நாட்டுச் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. “போர்மிலா” திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன மக்கள் மனதிற்கு மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதை “அட்டக்கத்தி” போன்ற மிக இயல்பான திரைப்படங்கள் வெற்றி பெறுவதிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

ஒரு கிராமத்தைச் சுற்றி அதன் குணாம்சத்தை மையப்படுத்தி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சீனு ராமசாமியின் “தென்மேற்குப் பருவக்காற்று”. அதே போல் அட்டக்கத்தி திரைப்படத்தின் திரைக்கதை படத்தின் நாயனைச் சுற்றியும் அவனது குணாம்சத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டிருக்கின்றது. திரைப்படமென்றால் நாயகனின் நேர்மறையான குணாம்சங்களே வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்றொரு சினிமாக்காலமும் இருந்தது. எதிர்மறைக் குணாம்சங்களை ஒருவன் கொண்டிருந்தால் அவன் திரைப்படத்தில் வில்லனாக மட்டுமே தோன்றமுடியும். எதிர்மறைக் குணாம்சத்தைக் கொண்ட ஒருவன் திரைப்படத்தின் கதாநாயகனாகத் தோன்றும் பட்சத்தில் படத்தின் இறுதியில் அவன் இறந்து போவான்ரூபவ் இல்லை திருந்திவிடுவான். இதுதான் தமிழ் சினிமாவின் பல ஆண்டு போர்மிலாவாகவிருந்தது. இந்த போர்மிலாவைக் கடந்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் இயக்குனர் சற்குணத்தின் “களவாணி” மிக இயல்பாக ஆர்ப்பாட்டமின்றி ஒரு இளைஞனின் தனித்தன்மையை மையப்படுத்தி அவனது வாழ்வைச் சொல்லிச் சென்றது அத்திரைப்படம். அதே போன்று சதாரணமாகச் சென்னையில் சந்திக்கக் கூடிய சென்றைப்புற நகரில் வாழும் ஒரு இளைஞனின் கதையை அவன் மொழியிலேயே சொல்லி நிற்கின்றது “அட்டக்கத்தி”. அனைத்து மனிதருக்குமே ஒரு தனித்தன்மையான குணாம்சம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கலப்படமின்றிச் செதுக்கி கலைவடிவத்தில் கொண்டு வருவதென்பதுதான் ஒரு சிறந்த கலைஞனின் சிறப்பம்சம். அந்த வகையில் இயக்குனர் ரஞ்சித் மிகவும் நேர்த்தியாகப் பாத்திரங்களை வடிவமைத்திருக்கின்றார்.
ஒரு பெண் தன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டால் அவள் தன்னைக் காதலிப்பதாகக் கற்பனை பண்ணுவதும்ரூபவ் அவளுக்காக வழிவதும்ரூபவ் அவள் பின்னால் சுத்துவதும்ரூபவ் பின்னர் அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று தெரிந்த பொது அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அடுத்துத் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் பெண்ணிற்குப் பின்னால் அதே சிரிப்பும்ரூபவ் வழிதலும்ரூபவ் பெண்களோடு கதைக்க முயலும் போது தடுமாறும் அவரின் கொன்னைதட்டும் தடுமாற்றமுமென்று புதுமுக நாயகனின் நடிப்பு மிகவும் யதார்த்தம். அவன் நண்பர்கள் அனைவரும் தங்களுக்குத் தருந்தாற்போல் ஒருத்தியைக் காதலித்துக்கொண்டிருக்கும் போது தன்னை மட்டும் ஒருத்தியும் லவ் பண்ணுகின்றாள் இல்லையே என்று திடீர் ஞானம் வந்து பெண்கள் பக்கம் திரும்பியும் பார்க்கப் போவதில்லை என்ற முடிவோடு காலேட்ஜிற்குள் நுழைவதும்ரூபவ் பள்ளிக்காலத்தில் தான் காதலித்துரூபவ் அவளால் அண்ணா என்று கூறி நிராகரிக்கப்பட்ட பெண் அதே காலேட்ஜிற்கு வந்து அவனோடு சகஜமாகப் பழகத் தொடங்க விட்ட இடத்திலிருந்து தன் காதலைத் தொடராலாம் என்ற எண்ணத்தோடு அசட்டுத்தனமாக மீண்டும் தனது அதே வழிதலைத் தொடங்கிக் குப்புற விழுகின்றார் கதாநாயகன். ஒருவனின் குணாம்சம் ஒருபோதும் மாறப் போவதில்லை என்பதை “அட்டக்கத்தி” அழகாகக் காட்டியிருக்கின்றது.




சென்னைவாழ் இளைஞர்களின் நாளாந்த வாழ்க்கை முறையை மையமாகக்கொண்டும்ரூபவ் சென்னைத்தமிழ் என்றால் வெறும் கேலி மொழியாகவே இதுவரையும் தமிழ் சினிமாவின் காட்டப்பட்டிருக்கின்றதுரூபவ் ஆனால் அம்மொழிபெண்களுக்கு இப்படத்தில் அதிகம் இடமில்லையென்றாலும் அட்டக்கத்தியால் காதலிக்கப்படும் அத்தனை பெண்களும்ரூபவ் தமக்குக் கிடைத்த சொற்ப நேரங்களை முறையாகப் பயன்படுத்தி தம்மை அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள். இவற்றை விட அட்டக்கத்தியின் குடிகாறத் தகப்பன்ரூபவ் அவரை அதட்டி உருட்டி அன்பு காட்டும் அட்டக்கத்தியின் தாயார் என்று எவருமே நடிப்பில் செயற்கைத் தனமில்லாமல் திரைப்படத்தை சோர்வின்றிக் கொண்டு செல்ல உதவியிருக்கின்றார்கள். படத்;;தில் ஓரிரு சண்டைக் காட்சிகள் இருந்தாலும் கதையோடு ஒத்துப் போவதால் செயற்கைத் தனமற்றிருக்கின்றது. அதேபோல் ஆடம்பரப்பாடல் காட்சிகளற்று ஒரு தமிழ்சினிமா திரையரங்கிற்கு வந்து மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம் என்பதையும் அட்டக்கத்தி திரைப்படம் நிரூயஅp;பித்திருக்கின்றது. மொத்தத்தில் தமிழ் சினிமா என்பது மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 

Friday, September 21, 2012

இனி அவன் (இனியவன்)

இனி அவன் (இனியவன்)   சர்வதேச திரைப்பட நிறுவனங்களால் சிறந்த இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்ட கலைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சியினுள்ளும் அலசிப்பார்க்க வேண்டிய ஆழமான அர்த்தங்கள் அடங்கிக் கிடக்கும். அந்த வகையில் தற்போது சிறந்த கலைப்பட இயக்குனர் என்று உலகத்திரைப்படக் குழுவினர்களால் அடையாளம் காணப்பட்ட சிங்கள இயக்குனர் அசோகா ஹண்டகம அவர்களின் தமிழ் திரைப்படமான “இனி அவன்” உலகெங்கும் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கின்றது.



 “இனி அவன்” “இனியவன்” என்று இத்திரைப்படத்தின் தலைப்பு இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பதின்மவயதில் அனைத்தையும் துறந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தன்னை இணைத்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச்சென்ற இளைஞன் ஒருவன், இருபத்தைந்து வருடங்களின் பின்னர், போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் தனது வாழ்வை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆசையுடன் தன் சொந்தக் கிராமம் நோக்கித் திரும்புகின்றான். அவனை முதலில் வரவேற்பது முறைத்து முகம் திருப்பும் அவன் ஊர் மக்களும், பாழடைந்த அவன் வீட்டுச்சுவரில் மாலையுடன் தொங்கும் அவன் படமும்தான். மாலையுடன் அவனை மாவீரனாய் ஏற்றுக்கொள்ளும் எமது சமூகம் மறுவாழ்விற்காய் ஏங்கும் அவனது உணர்வைப் புரிந்து கொள்ள மறுக்கின்றது.  இயக்குனர் உரையாடல்களைத் தவிர்த்து, குறியீடாய் திரைமொழியை நகர்த்தியமை, இந்தியத்திரைப்பட ஞனரஞ்சகத்திரைக்கதைக்குப் பரிச்சயமாகிப் போன தமிழ்ப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.

 திரைப்படக் காட்சியின் இறுதியில் இயக்குனருடனான கேள்வி பதில் நேரத்தின் போது ஈழத்தமிழர்கள் முன்வைத்த கேள்விகளிலிருந்து அவற்றை உணரக்கூடியதாக இருந்தது. முப்பது வருடப் போராட்டத்தின் பின்னர், தமிழ்க் கிராமங்களில் மக்களின் வாழ்வு சிதைந்து போய்விட்;டது என்பதையும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து பழகிப் போன இளைஞனுக்கு, இன்றைய தமிழ் மக்களின் வாழ்வின் யாதார்த்தம் புரியாமல் தடுமாறிப் போகின்றான் என்பதனையும் இயக்குனர் காட்சிகள் மூலம் செதுக்கியிருக்கின்றார். “இனி அவன்” என்று ஒரு ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களாக பெண்களே உயர்ந்து நிற்கின்றார்கள். போரினால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள், அதே போல் அவர்கள்தான் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நம்பிக்கையோடு சோர்ந்து போகாமல் எதிர்காலத்தை முன்னின்று எடுத்துச் செல்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதனை திரைப்படம் தெளிவாகக் காட்டுகின்றது. நாடும், மக்களும் அழிந்து போனாலென்ன நான் சாதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பேன் என்று இளைஞனின் பழைய காதலியின் தந்தை ஒருபக்கம், ஓட்டுனர் பத்திரம் எடுக்கச் சென்றபோது இருபதினாயிரம் ரூபாய் கேட்கும் அலுவல ஊழியர் ஒருபக்கம், சாட்டுக்கு நகைஅடைவு கடை வைத்துக்கொண்டு கள்ளக்கடத்தல் செய்பவர் ஒருபக்கமென்று ஊர் இயங்கிக்கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலி உறுப்பினருக்குப் புனர்வாழ்வு என்று கூறி அரசாங்கம் முறையாக எதையாவது செய்ததா? தமிழர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி என்று கூறி முறையாக ஏதாவது நடக்கின்றதா? போராட்டத்தின் பின்னர் மக்களின் உண்மையான நிலை என்ன? அவர்களுக்கு தீர்வு சொல்ல யார் வரப் போகின்றார்கள்? இயக்குனர் அசோகா ஹண்டகம உலகெங்கும தனது திரைப்படத்தைத் திரையிட்டுக் கேள்வியாக முன் வைக்கின்றார்? இனி அவனின் எதிர்காலம் என்ன என்று பார்வையாளர்களிடம் கேட்டு முடிகின்றது திரைப்படம். 

இயக்குனரிடம் தமிழ் பார்வையாளர்கள் காட்சி நேரத்தின் போதும், பின்னர் நண்பர்களுடன் கலந்துகொண்ட போதும் முன்வைத்த சில கேள்விகளுக்கு இயக்குனரின் பதில்களும்

கேள்வி – ஏன் இப்படத்தை எடுத்தீர்கள்? 
பதில் -  நான் ஒரு திரைப்பட இயக்குனர் 

கேள்வி - இராணுவம் தமிழ் பிரதேசம் எங்கும் பரவியிருக்கும் போது, ஒரு ஆமியைக் கூடத் திரையில் காணவில்லையே. வேண்டுமென்றே தவிர்த்தீர்களா? காரணம் என்ன? 
பதில் - இராணுவம் திரை முழுவதும் பரவிக் கிடக்கின்றார்கள். பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். 

கேள்வி – தமிழர்களின் பிரச்சனையை அதிகம் ஆராய்சி செய்யாமல் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது போலுள்ளது? 

பதில் - நான் தமிழர்கள் பகுதியிலும், சிங்களவர் பகுதியிலும் வாழ்ந்து வருபவன் அன்றாடம் காண்பவற்றிலிருந்து தொகுத்துத் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். உங்களுக்கு உள்ளது போல் எனக்கு தமிழர்களும், அவர்கள் வாழ்வனுபவங்களும் வெறும் செய்திகளல்ல. 

கேள்வி – தமிழ் பெண்ணிற்கு உதவுவதற்கு ஒரு தமிழனும் முன்வராத போது ஒரு சிங்கள ஆண் உதவ முன்வருவது போல் காட்சி அமைத்திருப்பது பற்றி? 
பதில் - ஞனரஞ்சக தமிழ் சினிமாவிற்குப் பரிச்சயமான உங்கள் பார்வை, கலைப்படங்களின் காட்சிகளை ஆராய மறுக்கின்றது என்பதற்கு இந்தக் கேள்வி நல்ல உதாரணம். உதவ வந்த சிங்கள ஆண், என்ன வாகனத்தில் வந்தான், என்ன உடை அணிந்திருந்தான் என்பதையும், அதற்கு அந்த தமிழ்ப் பெண் என்ன பதில் சொன்னாள் என்பதனையும் நீங்கள் அவதானித்திருந்தால் இந்தக் காட்சியை நான் ஏன் அமைத்தேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
 கேள்வி – தமிழர்களுக்குள்ளான பிரச்சனையை ஒரு சிங்களவராகிய நீங்கள் திரைப்படமாக்கி, தமிழனுக்குப் பிரச்சனை தமிழனினால்தான் என்பது போல் தமிழர்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றீர்கள் என்பது என் கருத்து. இதற்கு உங்கள் பதில்? 
பதில் - (சிரித்து விட்டு) எனது மொழி சிங்களம், ஆனால் போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் நான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன். கொலை மிரட்டல்களுக்குள்ளாகியிருக்கின்றேன். எனது நாடகப்பிரதிகளுக்குத் தடை விதித்திருக்கின்றார்கள். நான் நாட்டை விட்டு ஓடவில்லை. இன்றும் நான் இலங்கையில்தான் வசிக்கின்றேன். இன்றும் நான் தமிழர்களின் உரிமைக்காகப் போராடியும் குரல் கொடுத்துக்கொண்டும்தான் இருக்கின்றேன். இருப்பேன். நீங்கள் பேசுவது மட்டும்தான் தமிழ். புலம்பெயர்ந்த மக்களுக்கு அங்கே என்ன நடக்கின்றது என்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இன்னுமொன்றையும் கூற விரும்புகின்றேன். இத்திரைப்படத்திற்கு “இனி அவன்| என்று பெயரிட்டதற்கு வேறொரு காரணமும் இருக்கின்றது. சிங்களத்தில் இத்திரைப்படத்திற்கு “இனியவன்” என்று மட்டும்தான் பெயரிட்டிருக்கின்றேன். காரணம் விடுதலைப்புலிகள் என்றாலே, பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தும் அவர்களுக்கு அவர்கள் நல்ல ஒரு நோக்கத்திற்காகப் போராடச் சென்ற சாதாரண மனிதர்கள் என்று உணர்த்துவதற்காகத்தான். 

கேள்வி – “இனி அவன்” திரைப்படத்தில் தமிழர்களின் பங்கு எந்தளவிற்கு இருந்தது? 
பதில் - பல இளைஞர்கள் என்னோடு இணைந்து வேலை செய்தார்கள். நடிகர்கள் அனைவரும் தமிழர்களே, அதிலும் கதாநாயகனைத் தவிர்த்து மற்றைய அனைவருக்கும் இதுதான் முதல் திரைஅனுபவம். எனது முழு நோக்கமும், ஈழத்தமிழ் மக்கள் இந்திய ஞனரஞ்சகத்திரைப்படங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தமக்கென்றொரு திரைமொழியை கண்டெடுத்து சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்கு நான் முன்நின்று உதவுவேன்.

 “இனி அவன்” திரைப்படம் உலகின் பல நாடுகளிலும் திரையிடப்படுகின்றது. இத்திரைப்படத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத்தமிழர்கள் தமக்கென்றொரு திரைமொழியை உருவாக்கித் தரமான திரைப்படங்களை எமக்குத் தருவார்கள் என்று நாமும் நம்புவோம்.  

Wednesday, June 13, 2012

துரத்தும் கனவுகள்


நான் திரும்பிப் போவதற்கு

என்ன இருக்கின்றது ஊரில்?

முட்டி வழியும் மாரிக் கிணற்றை
எட்டிப் பார்க்க அஞ்சுவது போல்
என் இரவுகள் அச்சங்களால்
நிறைந்து போயின.

மாரிக் கிணற்றில் நான்
ஒருபோதும் தண்ணி அள்ளுவதில்லை

புலுனிகள் இருந்த மதில்கள்
ரத்தம் காய்ந்த சுவர்களாய்
சரிந்து கிடந்தன.

மா, பிலா, தென்னை, விளா
உங்களைக் கூட விட்டு வைக்கவில்லை
இந்த துப்பாக்கி ரவைகள்.

விற்று விட்டு வருவதற்கு
வீடோ, காணியோ எனக்கில்லை.

காதலைனைக் காணவோ?
கல்யாணம் செய்யவோ?
அதற்கும் வாய்ப்பில்லை.

பேசாமல் இருக்கலாம் என்றால்
துரத்தும் கனவுகளுக்கு
யார் பதில் சொல்வது?

ஆதங்கம்



Hair cut $8.00 அறிவிப்பைக் கண்டு உள்ளே சென்றேன்.
சைனீஸ் பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன்
இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.

எட்டோடு இரண்டைச் சேர்த்து
பத்தாகக் கொடுக்கலாம் என்று
மனம் கணக்குப் போட்டது.

விரல்களால் தலையை அளைந்தவள்
”டை” அடிக்கவா எனக்கேட்டாள்,
கண்ணாடியில் தெரியும் நரையினுாடே
அவசரமாக மறுத்துக்கொண்டேன்.

நுாறில் பத்துப் போனால் தொன்னுாறு
இந்தக் கிழமை சாப்பாட்டுக்கு.
பத்துக்கு பருப்பும், அரிசியும் வாங்கியிருக்கலாம்.

”ஷம்பூ’ என்றாள், எட்டுக்குள் அடக்கமா என்றேன்
சம்மதித்தாள், சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன்.

”ப்ளோ ரை” என்றாள், கேள்வி கேட்கச் சங்கடமாயிருந்தது
ஓம், இல்லை என்பதாய்
அரைகுறையாய் ஆட்டி வைத்தேன்.

பத்தை விடக் கூடிவிடுமோவென
மனம் அல்லாடத் தொடங்கியது.
கூடினால் பாலை வெட்டலாம்
சமாதானமும் செய்து கொண்டேன்.

”ஐயோ”வென சிலவேளைகளில்
கத்தத் தோன்றும்.
எத்தனை வருடங்கள்,
எத்தனையெத்தனை வருடங்கள்
அஞ்சியக் காசு பெறா
இலக்கியமும், அரசியலும்
செய்துகொண்டிருக்கிறேன்.

விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் பலர்
கணிசமாக தொகையோடு
”செட்டில்” ஆகிவிட்டார்கள்.
வேலை வெட்டியின்றி
முழுநேரம் இலக்கியமும், அரசியலும்
செய்கின்றார்கள்.

சிலவேளைகளில்
மனம் அங்கலாய்க்கும்
நானும் ”செட்டில்” ஆகியிருக்கலாமோ என்று.

Tuesday, June 12, 2012

மரணத்தின் வாசனை




த.அகிலனின் போர் தின்ற சனங்களின் கதைளினூடே..


அண்மையில் நான் பார்த்து வியந்த அற்புமான திரைப்படம் Terrence Malick இன் . “The Tree of life”. ஒரு அன்பான குடும்பதில், குடும்ப அங்கத்தவர் ஒருவனின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கின்றது என்பதுதான் கருத்தளம். இயக்குனர் Terrence Malick ஓர் அற்புதமான இயக்குனர் பல விருதுகளைத் தனது திரைப்படங்களுக்காகப் பெற்றவர். “The Tree of life”
மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய். செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப் போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டேம் என்று தோன்றுகின்றது”. என்ற அகிலனின் கூற்று என்னுள் உழன்று கொண்டிருந்த வேளை “The Tree of life”  திரைப்படத்தின் கரு என் மனதில் பதிய மறுத்தது. வளரும் சூழ்நிலைக்கேற்ப மனித மனங்களின் வலியும் வேறுபட்டுப் போகுமோ?

நாம் வாழும் சூழல், எமது நாளாந்த வாழ்க்கைத் தளமென்பன எப்படி எமக்குள் பதிந்து எமை இயக்கிக் கொண்டிருக்கின்ற என்பதனை அண்மையில் ஊரிலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த நண்பியொருத்தி கூற்றிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ”நான் தற்போது போரற்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். துப்பாக்கி வேட்டு, குண்டு வெடிச் சத்தங்கள் இல்லாத என் தற்போதைய வாழ்க்கை முறையை நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. இதுநாள் வரையும் எனக்கு இவையெல்லாம் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பதும், இன்னும் பலருக்கு வாழ்நாள் முழுவதுமே இவை நிராகரிக்கப்படுகின்றன என்பதை நினைக்கும் போது துக்கமும், கோவமும் எழுகின்றது என்றாள்.
பிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவரைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.


வாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.
வரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும்  மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.

தனது மாறுபட்ட பல சிறுகதை வடிவங்கள் மூலம் படைப்புகளில் பன்முகச் சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றார் கதைசொல்லி. இங்கு முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டியது என்னவெனில், கதைசொல்லி முற்று முழுதான போர்சூழலில் பிறந்து வளர்ந்து தமது தனிப்பட்ட விருப்பினால் போராட்ட இயக்கத்தில் இணைந்துக்கொண்டு பின்னர் தமது தனிப்பட்ட விசனத்தினால் போராட்ட இயக்கத்திலிருந்து விடுபட்டவர்;. விடுபடலின் பின்னர் தன்னை வேறு எந்த இயக்கத்துடனோ இல்லாவிட்டால் அரசுடனோ இணைத்துக்கொள்ளாது தனித்து மிகச்சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்னும் பல இளைஞர்களும், யுவதிகளுமிருந்தாலும் அவர்கள் தம்மை ஒதுக்கிக்கொண்ட நிலையிலிருக்கும் பட்சத்தில் த.அகிலன் தன்னை விடுவித்துக்கொண்டு தமது அனைத்து அனுவங்களையும் படைப்பாக்கி வாசகர்கள் முன் கொண்டு வந்துள்ளார். இக்கதைசொல்லி எமது அரசியல் சூழலில் உண்மை கூறல் எப்படிப் பார்க்கப்படும் எத்தகைய முத்திரைக் குத்தல்களுக்குத் தாம் ஆளாக நேரிடும் என்பதனைய அறிந்திருந்த போதும் பின்வாங்கலற்று தமது அனுபவப்பகி;ர்வை முன்வைத்து ஈழஇலக்கியத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
போரற்ற வாழ்வை அறியாதவர் அகிலன். மரணத்தைத் தினம்தினம் கண்டு அழுது களைத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர்;. இன்னுமொருநாள் எனக்கு இருக்கின்றதா என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மரணித்தவர்களை எண்ணி அழவுதற்குத்தான் நினைவு வருமா?

சிறுகதையென்றால் என்ன? அதன் வடிவமென்ன? அதுவொரு வரைவிலக்கணக்கத்திற்குள் அடங்கிக்கொள்கின்றதா? என்றெல்லாம் பல கேள்விகளும், அதற்கான ஆய்வுகளும் எழுத்துலகில் இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் த.அகிலனின் “மரணத்தின் வாசனை” சிறுகதைத் தொகுதியில் உள்ளடங்கியிருக்கும் சிறுகதைகள், அதன் வடிவங்கள் பற்றிய என் எண்ணக்கருத்தோடு ஒத்துப் போவதாய் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் சிறுகதை பற்றிய இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.


“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.
அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம் -
தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரையிலிருந்து - சுந்தரராமசாமி 25.03.95

அகிலன் தட்சணாமூர்த்தியின் “மரணத்தின் வாசைன”  --- சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சிறுகதைகள் அனைத்துமே தமக்கேயான தளத்திலிருந்து மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரக்கொடுத்திருக்கின்றன. மரணம் என்பது யாருக்கு எவ்வடிவில் வந்தாலும் அது சுகித்தலுக்குகந்த சுகந்தமாக வாசனையன்று. மரணத்தின் வாசனையென்று தலைப்பையேன் கதை சொல்லி தேர்ந்தெடுத்தார்? சம்பிரதாயங்களோடான மரணவீடொன்றில் அதற்கான பிரத்தியேகமான வாசனையென்று ஒன்றுள்ளது. பூஜைப்பொருட்கள் கிருமிநாசினி, வியர்வை, கண்ணீர் என்பன ஒன்றிணைந்து மரணரவீட்டின் வாசனையாய் வீசிக்கொண்டிருக்கும். இவ்வாசனையை மீண்டும் மீட்டிப்பார்க்கும் பொது மனதில் பயம் அப்பிக்கொள்ளும். மீண்டும் மீண்டும் நுகர்விற்காய் ஆவலையெழுப்பும் வாசனையன்று இது. மரணத்திற்கான வாசனை அனைவராலும் வெறுக்கப்படும் ஒன்று. ஆனால் நகரமே பற்றியெரிந்துகொண்டிருக்க கருகி, சிதறி, நிராதரவாய் ஈமொய்க்க வீதியோரம் விடப்பட்ட உடல்களடங்கிய நகரத்தின் மரணவாசனையென்பது நிராகரிக்க முடியாதது. இந்த வாசனையிலிருந்து ஓடிஒழிதல் சாத்தியமற்றது. இது நாற்றம். இது போரின் அவலம். இது வாசனையன்று. நாற்றத்தைத் தவிர்க்க மூச்சைப்பிடித்து சுத்தக்காற்றிற்காய் ஓடிச்சென்று மூச்சை இழுத்து இதமாகவிடுவதற்கு சுத்தக்காற்றுள்ள கூ+ழலை எங்குதான் தேடிஓடுவார் கதைசொல்லி.
இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்” கதைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அகிலன் “பையன்” என்ற ஈழத்தமிழர்களின் பாவனையிலற்ற பதத்தை உபயோகப்படுத்தக் காரணம் என்ன? ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு மொழியையே அனைத்து சிறுகதைகளிலும் தனது கதை மொழியூடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் அகிலன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் புரிதலுக்கென தொகுப்பின் ஆரம்பத்தில் சொல் விளக்கக் குறிப்புக்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டு மொழிப்பாதிப்பென்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானதொன்றுதான்.
“அழுதேன் கடைசியாக அப்பாவைச் சுடலையில் கொளுத்தியபோது பட்டுவேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மஞ்சள் தீ நடமாடியபோது, அப்பா இனிமேல் வரமாட்டார் என்று எனக்குப் புரிந்து போது வீரிட்டுக் கத்தினேன்.”
அப்பா நித்திரை, அப்பா முழிப்பு அப்பா எழும்புவார் என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவனுக்கு கொழுந்து விட்டெரியும் தீயில் அப்பாவின் உடல் பற்றிக்கொள்ளும் போது மரணம் புரியாவிட்டாலும் அப்பாவின் நிரந்தரப் பிரிவு புரிந்து போகின்றது. அவன் அகவயமனது காயம் கொள்கின்றது. இது நிரந்தரக்காயம். களிம்பு பூசி மூடப்பட்ட காயாத ஆழமாக காயம். அதனால்தான் கதைசொல்லி இச்சிறுகதையை இப்படி முடிக்கின்றார். “அப்பனில்லாப் பிள்ளைகள் என்ற இலவசஇணைப்பு என்னோடு எப்பவும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவையும் தந்துகொண்டிருக்கின்றுத”
“நரைத்த கண்ணீர்” எனும் சிறுகதையில் “எப்போதும் எனது புன்னகையில் ஆயுள் குறைவாயிருக்கின்றது” என்று ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலையை கண்முன்னே கொண்டுவருகின்றார் அகிலன். துப்பாக்கி வேட்டுச் சத்தத்திற்குள்ளும், ஒப்பாரிக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதவாழ்வில் பிச்சுப் போட்ட பாண் துண்டுபோல் கிடைக்கும் ஒருசில நிமிட அல்ப சந்தோஷ கணங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடியாது, புன்னகைக்கத்தான் முடியும். அதுவும் இடையில் முறிந்து போகும் நிழல்போல் பின்தொடரும் இன்னுமொரு அவலச்செய்தி கேட்டு.
“நான் பிறக்கும் போது என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவை மீட்டுவாள்.”  இந்தப் போர்சூழல் காலங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் என்ன? பிறந்தவர்கள் எத்தனைபேர் தமது வாலிபத்தைக் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் அவயங்களை இழந்தோர் எத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டோர் எத்தினை, வன்புணர்வை எதிர்கொண்டோர் எத்தனை இவற்றிற்கெல்லாம் கணக்கு இருக்கின்றதா?
“போர்பற்றி அலைந்து கொண்டிருக்கின்ற விடுதலை வீரதீரக் கதைகளுக்குமப்பால் கீறப்பட்ட மனங்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் துயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கின்றது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளுள் தள்ளுகின்றது”  என்று தன் உள்ளக்கிடக்கைகளை பதிவாகக் கொட்டுகின்றார்

மரணத்தின் அவலங்களும் வடுக்களும் மட்டுமே கதைசொல்லியின் அவதானத்திற்குட்டவையன்று, சமுதாயவிழுமியங்களுக்குட்பட்ட பல தேக்கங்களையும் தனது சிறுகதைகள் மூலம் கூறிச்செல்ல அவர் மறக்கவில்லை, “ஒரு ஊரில் ஒரு கிழவி” எனும் சிறுகதையில் “தனியொருபெண்ணாகத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கினா. அவ தானே தன் கதையெழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்தது, அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது, ஒருகட்டத்தில் பைத்தியக்காரியாகவும் கூட ஆகவேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தா.” என்று பகுத்தறிந்துகாட்டி, பெண் என்பவள் எந்தக் காலகட்டத்திலும் தனித்தியங்குபவளாகவிருக்குமிடத்து அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பலவகை “காரி”யாக மாறவேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்படுகின்றாள் என்றும், “மந்திரக்காரன்டி அம்மான்டி” எனும் சிறுகதையில் “ச்சீ ஆம்பிளப்பிள்ளைகள் அழக்கூடாது வெக்கக்கேடு.” என்று முதல்நாள் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதன் மூலம் சிறுவன் ஒருவன் ஆண் என்ற கட்டமைப்பிற்குள் எப்படித்தள்ளப்படுகின்றான் என்பதையும்;, “ஒருத்தீ” எனும் சிறுகதையில் பெண்களினாலான குடும்பமொன்றில் ஒற்றை ஆணின் கோபத்தைத் தாண்ட முடியாதவர்களாய் அப்பெண்கள் மௌனித்து அல்லல் படுவதையும் கதைசொல்லி கூறிநிற்கின்றார்.
இந்த முற்பது ஆண்டுப் போர்சூழலில் “காணாமல் போனோர்” பட்டியல் என்றொரு நேர்மையான ஆதரங்களோடான பட்டியலொன்றைத் தயாரிக்க முடியாத நிலையில், காணாமல் போன தமது சொந்தங்களை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என்று தெரியாத நிலையில்தான் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்குவியலுக்குள் அவர்களுக்கான தடையங்கள் மூலமே தம் சொந்தங்களை அடையாளம் காணுதல் சாத்தியமாகின்றது. அதில் கூடத் தவறுகள் இருக்கலாம். தடையங்களற்ற எலும்புக்கூடுகளைத் தமது சொந்தமாக்கத் தயங்கும் இதயங்கள். இறப்பு நேர்ந்துவிட்டதாய் முற்றுப்புள்ளி வைக்கத் தயங்கும் மனம். எங்கோ உயிரோடிப்பதாய் ஆறுதல் கொண்டிருக்கின்றது இன்றும்.
“இது அவற்ர சேட்டு”
‘இது அவற்ர வெள்ளிமோதிரம்”
“இது அவன்ர சங்கிலி”
“நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கபட்டிருந்த இடத்திற்குப் போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கக் கூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள். “அண்ணா...” அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14வயதுப் பெடியனின் எலும்புக்கூடு, அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு” இவ்வரிகள் கதைசொல்லியின் கற்பனைகளல்ல. எமது நாட்டில் நாம் பிறந்து வளர்ந்த நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வனுபவங்களை தாம் கடந்துவந்த வாழ்நாட்களின் அன்றாட அனுவங்களாகக் கொண்டவர்கள்தாம் எத்தனை. குடும்பத்திலொருவர் விபத்தில் மரணித்துவிட்டால், குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் அம்மரணவலியைத் தாங்கவென்று மனஆலோசனை வழங்க எத்தனை நிறுவனங்கள் மேலை நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மரணவலி, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, ஆதரவின்மை எம்மக்களின் புறஅக உளச்சல்களுக்கான விடை எங்கேயென்றறியாது திகைக்கின்றார் கதைசொல்லி.
“ஒருத்தீ” சிறுகதையில் மரணம் எப்படி அறிவிக்கப்படுகின்றது, என்று சிறுகதையை ஆரம்பிக்கும் அகிலன். மின்அஞ்சல் மூலம், தொலைபேசியில் கிரிக்கெட் ஸ்கோர் அறிவிப்பது போல், கடையில் பொருட்கள் வாங்கும் போது சுத்தப்பட்டிருந்த பேப்பர் துண்டில், (புலம்பெயர் மக்கள் பலர் வானொலிச் செய்திகளில் இறந்தவர்கள் பெயர்ப்பட்டியல்கள் வாசிக்கப்படும் போது, தவறாகத் தகவல்கள் கிடைத்து மரணவீடு முடித்துக்கொண்டு பின்னர் தமது சொந்தங்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்).
“எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்அஞ்சல் வழியாக ஏதோவொரு இணையத்தளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்ட மின்னஞ்சலின் மீந்திருந்த கேள்வி இது அவளா?... என்று தொடங்கி அந்த “ஒருத்தீ” யுடனான தனது சொந்த அனுவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து சென்று முடிவில், “காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான்நகர் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி.. நான் பதிலெழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரியை எழுதத் தொடங்கினேன்” என்று கதையை முடிக்கின்றார் அகிலன். மரணத்தின் வாசனையில் அனைத்துச் சிறுகதைகளுமே போர்சூழல் மரணங்களால் புனையப்பட்டவை என்பதால் வேறுபட்ட கதைசொல்லும் யுக்திகளைக்  கையாண்டு வாசகர்களைத் தன்வசம் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை அவர் என்பதும் பாராட்டுக்குரியது.
மனிதமனமென்பது தன்னார்வபூர்த்திக்கான தெரிவொன்றில் தொலைந்து போகும் தன்மையைக் கொண்டது. பொழுதுபோக்கு எனும் சொற்பதத்திற்குள் தமக்கான நேரக்க(ளி)ழிப்பை மனநிறைவாய் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வில் இவற்றிற்கு அடிமையாகிப்போவதுமுண்டு. நிர்ப்பந்தத்தால் இதனிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் உளவியல் தாக்கங்களும் உள்ளாகிப் போகின்றார்கள், கடைசியல் அதுவே அவர்களது வாழ்வில் அழிவையும் கொண்டு சேர்க்கும் என்பதைத் தனது “குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்”, “தோற்ற மயக்கங்களோ” போன்ற சிறுகதைகளின் மூலம் ஆராய்ந்துள்ளார் கதைசொல்லி. தாம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றைப் போரின் நிமித்தம் இழந்தபோது ஏற்பட்ட வலியை இச்சிறுகதைகள் கூறுகின்றன.
படைப்பாளியின் அனைத்து சிறுகதைகளும் மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரச்செய்து மரணத்தின் எல்லைவரை அவர்களையும் இழுத்துச் சென்றிருக்கின்றது. தவிர மற்றைய சிறுகதைகளின் தளத்திலிருந்து வேறுபட்டு “கரைகளிற்கிடையே..” சிறுகதை, போரின் நிமித்தம் நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் ஒரு தமிழ் குடும்பம் எப்படி இன்னுமொரு தமிழனால் ஏமாற்றப்பட்டு அழிந்து போகின்றது என்பதையும் காட்டி நிற்கின்றது.
“துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கிகள், கெட்ட துப்பாக்கிகள் எனப்பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிகளுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான்” என்று போரின் பால் தான்கொண்ட மனவிசனத்தையும் சொல்லிக்கொள்கின்றார் த.அகிலன்.
மரணத்தின் வாசனையை சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்த எழுத்தாளர் இமையம் அவர்கள் இப்படி முடிக்கின்றார்கள்
“போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
 ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.”
போர் என்னை அழித்தது, என் உடன் பிறப்புக்களை அழித்தது, எனது குடும்பத்தை அழித்தது, எனது சொந்தங்களை, ஊரை, மண்ணை அழித்தது. என்னை இருக்கவிடாமல், உண்ணவிடாமல், உறங்கவிடாமல், கலைத்துக் கலைத்து அடித்தது அழித்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றோம் நாம். பணம் கிடைத்தால் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மனிதர்களை மனிதத்தை அழித்தொழிக்கும் இப்போரில் வீரம் எங்கே வந்தது? வெற்றி தோல்வி எங்கே வந்தது? அனைத்தையும் அழித்தொழித்துக் கிடைக்கும் நஞ்சூரிய நிலத்தைப் பிடிப்பதுதான் போரின் வெற்றியெனில் அது எமக்குத் தேவைதானா? என்ற கேள்வியை மரணத்தின் வாசனை எனும் சிறுகதை மூலம் விட்டுச்சென்றிருக்கின்றார் த. அகிலன். சிறுகதைத் தொகுப்பை மூடியபோது எனக்குள்ளும் இக்கேள்வியே எஞ்சி நிற்கின்றது.

வெயில் காயும் பெருவெளி - கூர் 2012