Wednesday, June 28, 2017

நிலா



இந்த சம்பவத்தைக் கதையாக்க வேண்டுமென்று பலநாட்களாக நினைத்ததுண்டு. என்னுடைய வாழ்க்கை ஓட்டத்தில், எனது சில, பல ஆசைகள்  கைதவிறிப் போயிருந்தது போல் இதுவும் என்றிருந்த  நேரம் ஒன்றில்தான் நிலா எனது வீட்டுக்கதவை தட்டினாள்.
கிட்டத் தட்டப் இருபது வருடங்களாக அவளுடனான எனது தொடர்பு விட்டுப் போயிருந்தது. அவளை நான் மறந்தும் போயிருந்தேன். வீடு கூற மாறியிருந்தேன். கதவைத் திறந்த போது உடனே எனக்கு அவளை அடையாளம் காணமுடியவில்லை.”அக்கா நான் நிலா உள்ளுக்க வரலாமா?” எனது பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்தாள். நான் மௌனமாக அவளைத் தொடர்ந்தேன். இருக்கை அறைக்குள் வந்ததும் தயங்கியபடி நின்றாள். நான் அவளை இருக்குமாறு சொல்லிவிட்டு நானும் இருந்து கொண்டேன். தனது கைப் பையிலிருந்து ஒரு கலியாண அழைப்பிதழை எடுத்து என்னிடம் நீட்டி மகளுக்கு கலியாணம் கட்டாயம் வரவேண்டுமென்றாள். மகள். நிலாவிற்கு இரண்டு மகன்கள் இருப்பது எனக்குத் தெரியும். உடனே பெயர்கள் நினைவில் வர மறுத்தன. அருண், நவீன். அருண் என்னுடன் நல்ல நெருக்கமாக இருந்தவன். படிப்பில் நல்ல சுட்டி. இப்ப என்ன செய்கின்றான்? கலியாணம் கட்டிவிட்டானா? மனதுக்குள் எழுந்த ஆர்வத்தை அடக்கிக் கொண்டு அழைப்பிதழை வாங்கிக் கொண்டேன். மகளுக்குக் கலியாணம் அப்படியானால் கடைசியில் பிறந்தது மகள். அவளுக்கு இப்ப கலியாணம். என் முகத்தில் செயற்கையாகப் புன்னகை எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவள் குற்றஉணர்வோடு தடுமாறிக்கொண்டிருந்தாள். “இதுதான் வீட்டில நடக்கிற முதல் கலியாணம் உங்களைக் கட்டாயம் கூப்பிடவேணும் எண்டு உங்களைத் தேடிப்பிடிச்சு வந்தனான் நீங்கள் கட்டாயம் வரவேணுமக்காஎன்றாள் குரல் தழுதழுக்க. நான் அழைப்பிதழைப் பிரிச்சுப் பார்த்தேன். திருமணத்திற்கு இன்னும் ஒருமாதமிருந்தது.

கடைசி நாள்:

நான் நிலாவைச் சந்தித்த கடைசிநாளை மீட்டுப் பார்க்கின்றேன். அது ஒருபனிக்காலம். அன்று ஞாயிற்றுக்கிழமை. வாரஇறுதி நாட்கள் என்றால் நான் முக்கியமாகச் செய்ய விரும்புவது ஒன்றை மட்டும்தான். சூரியன்வந்து முகத்தில் குத்தி எழும்பென்று சூடுவைக்கும் வரை திரும்பித் திரும்பிப் படுத்திருப்பது. அதுவும் அது ஒரு பனிக்காலமாக இருந்தால் கம்பளி இரவுடையும் போர்வையுமாக கிடப்பதில் இருக்கின்றன சுகம் வேறு ஒன்றிலுமில்லை. அன்றும் அப்படித்தான் மின்கணனியில் இளையராஜா பாடலை மெதுவாக ஓடவிட்டு பலதையும் பத்தையும் யோசித்தபடியே போர்வைக்குள் என்னைச் சிறை வைத்துப் படுத்திருந்தேன். இப்படியான வேளைகளில் தொலைபேசியைக் கூட செயலிழக்கச் செய்துவிடுவேன். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் அவர்களுக்கு அம்மா எதற்கும் தேவையில்லை. கணவனை விட்டுப் பிரிந்தபின்னர் தனியாகப் பிள்ளைகளை வளர்த்ததால் அம்மாவை இனிமேல் தொல்லைப்படுத்தக் கூடாது என்று அவர்களே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ..” பாடல் தொடங்குமுன்னர் ராஜா ஒரு மெட்டுப் போட்டிருப்பார் அப்பப்பா கேட்பதற்கு என்ன சுகம். பாடலுக்கு நடித்தவர் சூப்பர்ஸ்டார், நடிகை யார்? அதிகம் பிரபல்யம் இல்லாதவர்தான் நினைவிற்கு வரவில்லை. பாடல் இடம்பெற்ற படம்? அதுவும் நினைவிற்கு வரவில்லை. இந்தப் படத்தை எங்கே பார்த்தேன்? தியேட்டர்? யாருடன் போயிருந்தேன்? அல்லது டீ.வீ யில் பார்த்தேனா? ஒரு தலையணையைக் கட்டிப்பிடித்து பாடலை முணுமுணுத்தபடியே சிந்தனை எங்கெல்லாமோ ஓடி 80களில் எங்கள் நாடு, எமது வீடு, எனது குடும்பம் எல்லாமே ஒரு கனவுபோல் என் சிந்தனையில் வந்து கொண்டிருக்கும் போது மகள் வந்து கதைவைத் தட்டினாள். கதவு தட்டலும் ஒரு கனவு போல்தான் எனக்குப் பட்டது, நான் பாடலைத் தொடர்ந்து முணுமுணுத்தபடியே பேசாமல் கிடந்தேன். அவள் கத்தினாள்மாம் எமேர்ஜென்சிக் கோல். ப்ளீஸ் ஓபிண் டோர்

தொலைபேசியில் நிலாவின் 8வயது மகன் அருண்ஆண்டி மாம் இஸ் சிக்என்றான் அழுதபடியே. “வேயர் இஸ் யுவர் மாம்? கான் ட்ரோக் ரு கேர்? நான் கேட்டேன். அம்மா வோஸ் ரூமைக்க கதவு பூட்டியிருக்கு, பயமாக இருக்கிறது என்றது குழந்தை. நான் உடனே வருகின்றேன் என்று தொலைபேசித்தொடர்பைத் துண்டித்துவிட்டு நிலாவின் வீட்டிற்கு விரைந்தேன். பனிகால ஞாயிறுகாலை, எனது சுகமான நேரம் எல்லாமே ஒரு பொழுதில் மறைந்துவிட்டனவழிமுழுக்க புலம்பெயர்ந்து மொழி,கலாச்சாரம், காலநிலை என்று அனைத்திலும் வேறுபட்ட ஒரு நாட்டில் எங்கள் பெண்களில் பலர் படும் அவலங்களை நினைக்க பதைபதைப்பும் கோவமும் கையறுநிலையாக மாறி மனம் கனத்தது. எப்போதும் இன்னொருவரின் உதவியை எதிர்பாராது தன் காலில் நிற்க முதலில் நிலாவை தயார் படுத்தவேண்டும். இரண்டு குழந்தைகளோடு அவள் படும்பாட்டை நேரில் பார்த்தவள் நான். இயந்திரமயப்படுத்தப்பட்ட புலம்பெயர் வாழ்வில் ஒருவரின் உதவியை எதிர்பார்த்து வாழ்தல் என்பது இயலாத காரியம். கணவனால் பல துன்பங்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகியவள் நிலா. வன்முறை ஒருகட்டத்திற்கு மேல் சென்றபோது காவல்துறை தலையிட்டு அவளைக் காப்பாற்றி, அரசாங்கவீட்டில் குடியமர்த்தி, அவளது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பணஉதவியையும் வழங்கிக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் பொருளாதார வசதி அதிகமின்மையால் மிகக் கீழ்மட்ட நிலை வாழ்வைத்தான் அவளால் வாழமுடிகின்றது. கனடாவின் உறை குளிருக்குள் ஒரு வாகனம் இல்லாது வாழ்வதென்பது முடியாத காரியம், அதுவும் அவளுக்கு இரண்டு சிறுபிள்ளைகள் இருக்கின்றார்கள், அவர்களையும் இந்தக் குளிருக்குள் இழுத்துக்கொண்டு வாழ்வை நகர்த்துவதென்பது மிகவும் சவாலானது. நிலா மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். அவளை முதலில் அதிலிருந்து விடுவிக்க உகந்தன செய்யவேண்டும். படர்ந்து கிடந்த பனிப்படலங்களுக்கு மத்தியிலும் வாகனங்கள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தன. காலையில் ஒரு கோப்பி கூடக் குடிக்காது இந்தக் குளிருக்குள் வெளியில் செல்லவேண்டிய எனது கட்டாயத்தை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொண்டேன். இவற்றையெல்லாம் மனம் உவந்துதான் செய்கின்றேனா? பலமுறை நிலாவின் நடவடிக்கைகள் எனக்குள் சினத்தைத் தந்திருக்கின்றன. சாப்பாட்டுப் பொருட்கள் வாங்கவென்று அழைத்துச் சென்றால் உடுப்புக் கடையைக் கணடதும் அங்கலாத்துக் கடைக்குள் நுழைந்து பல மணி நேரங்களை அங்கே வீணாகச் செலவழிப்பாள்கையில் காசு இருக்காது, சிலவேளைகளில் நானாக அவளுக்கும் குழந்தைகளுக்கும் உடுப்புக்களை வாங்கிக் கொடுத்திருக்கின்றேன், ஆனல் அவளது ஆசை அளவுக்கு மீறியிருந்தது. எப்போதும் ஒரு தவிப்பு ஏக்கம். சிலவேளைகளில் சினமாக இருப்பினும் அவளுக்கு நான் உதவவேண்டும் என்பது ஏனோ எனது கடமை என்பதாய் என் ஆழ்மனதில் பதிந்துபோயிருந்தது, அதற்கான பிரத்தியேக காரணம் என்றால் நானும் கணவனைப் பிரிந்து எனது பிள்ளைகளோடு தனியாக வாழ்ந்துகொண்டிருப்பவள். ஆனால் ஒருபோதும் இன்னொருவரின் உதவியை நான் நாடியதில்லை. அதில் எனக்கொரு கர்வமிருந்தது. அந்தக் கர்வந்தான் உதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு நான் உதவிசெய்ய வேண்டும் என்ற மனநிலையை எனக்குள் உருவாக்கித்தந்திருக்கின்றது. போகும் வழியில் ஒரு பால், ஒருமுட்டைப் பெட்டி, இரண்டு பாண் பைகள் நிலாவிற்காகவும், ஒருகோப்பி, ஒரு சிகரெட்பெட்டி எனக்காகவும் வாங்கிக் கொண்டேன். எப்போதாவது மனம் தளர்ந்து போகையில், அதிகம் குளிராக இருக்கும் வேளையில், நண்பர்களுடன் இணைந்து புகைப்பிடிக்கும் வழக்கமும் எனக்குண்டு.

நான் கதவைத் தட்டியபோது அருண் ஓடிவந்து கதவைத் திறந்தான், ”ஹாய் ஆண்டிஎன்றவனின் பார்வை  எனது கையிலிருந்த பைக்குத் தாவியது. அவனிடம் பொருட்களைக் கொடுக்க அதைக் கவனமாக வாங்கித் திறந்து பார்த்தபடியே குசினிக்குள் சென்றான். அவன் பின்னால் தத்தி தத்தி நடந்தபடி அவன் தம்பி நவீன்உம் குசினிக்குள் போக முயல நான் அவனைத் தூக்கி அணைத்துஆன்டிக்கு க்கிஸ்தாடாஎன்றேன், அவன் திமிறித் தன்னை விடுவித்துக்கொண்டு தடுமாறி ஓடினான். . நிலா சோபாவில் படுத்திருந்தாள். அவள் முகம் வெளுத்து வாடிப்போயிருந்தது. என்னைக் கண்டதும்வாங்கோக்காஎன்று எழுந்து இருந்து கொண்டாள். அவள் சொண்டு பனிக்குளிரால் வரண்டு வெடித்திருந்தது. முகத்தில் பதட்டம். “இருங்கோஎன்று தனக்குப் பக்கத்தில் இடம் தந்தாள். “எனக்கு ஒண்டுமில்லை இவன் சும்மா உங்களைக் கஸ்டப்படுத்தீட்டான்என்றாள் தடுமாறியபடியே. பரவாயில்லை, பிள்ளைகள் காலமை சாப்பிட்டீனமா? என்றேன். “இல்லை இனிமேல்தான்”. என்று சொன்னபடியே அவள் எழ முயல, “பரவாயில்லை நீர் ரெஸ்ட் எடும் நான் பாக்கிறன்”. என்று குசிக்குள் சென்றேன்.
வெறும் பாண் துண்டொன்றை கையில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தான் நவீன். அருண் பொருட்களை கவனமாகக் குளிர்சாதனப்பெட்டிக்குள் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான். அவன் கையிலும் அரைவாசி கடிக்கப்பட்ட பாண் துண்டொன்றிருந்தது. பிள்ளைகளுக்குப் பசி போல. நினைத்தபடியே அவர்களை ரிவி பார்க்கும் படி அனுப்பி விட்டு முட்டையை எடுத்து ஆம்லெட் போட்டு பாணோடு சாப்பிடக் கொடுத்தேன். எனக்கும் நிலவிற்கும் பால் காய்ச்சி ரீ போட்டு ஆம்லெட்டுடன் பாணும் போட்டுக்கொண்டு இருக்கை அறைக்கு வந்தேன்.
அருண் சோபாவிலிருந்தபடியே சாப்பாட்டுத் தட்டைத் தனது மடியில் கவனமாக வைத்துப் பாண் துண்டைக் கவனமாகக் கைகளால் எடுத்துக் கடித்தபடியே கண்களைத் தொலைக்காட்சியில் பதியவிட்டிருந்தான். நவீன் அவனைப் போலவே தானும் இருக்க முயன்று கொண்டிருந்தான், இருப்பினும் அவன் மடியிலிருந்து சாப்பாட்டுத் தட்டு எப்போது விழுந்து விடுமோ என்ற பயத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு உதவலாம் என்று அருகில் போகப் பிடிக்காமல் என்னைத் தள்ளி விட்டுச் சிணுங்கினான். நான் அவள் கையில் செல்லமாக ஒரு அடியை வைத்துவிட்டு நிலாவிற்குப் பக்கத்தில் போய் இருந்து கொண்டேன். தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்வொன்று ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். நிலா எதையோ மறைக்கின்றாள், தயங்குகின்றாள் என்று எனக்குப் பட்டது, நான் எதையும் அவளிடம் கேட்க விரும்பவில்லை அவளாகச் சொன்னால் சரியென்பதுபோல் நானும் மௌனமாகப் பார்வையைத் தொலைக்காட்சியில் பதியவிட்டிருந்தேன்.
சாப்பாட்டு ஷொப்பிங் ஏதாவது போக வேணுமா? ப்ரிஜ்ற்குள் ஒன்றையும் காணேலைஎன்றேன். “ஓமக்காஎன்றாள். பின்னர் மீண்டும் மௌனமாகிப் போனாள். வுழமையைவிட இன்று நிலாவில் நடவடிக்கையில் ஏதோ மாற்றமிருப்பதை நான் அவதானித்தேன். எதையோ சொல்ல நினைக்கின்றாள் ஆனால் தயங்குகின்றாள்.
நவீன் சாப்பிட்டு முடித்து தட்டை என்னிடம் நீட்டினான். நான் பால் சூடாக்கி போத்தலுக்குள் விட்டு அவனுக்குக் கொடுக்க அதைக் குடித்தபடியே நித்திரையாகிப் போனான். நான் அவனைத் தூக்கிச் அறையில் படுக்க வைக்கச் சென்றேன். அவனது படுக்கையில் ஒரு சிறிய தமிழ் கடை பையொன்று இருந்தது, அதனையெடுத்து நிலாவில் கட்டிலில் போட அது சரிந்து கீழே விழுந்தது, நான் நவீனைப் படுக்க வைத்துவிட்டு நிலத்தில் கிடந்த பையை எடுத்தேன், உள்ளேயிருந்து ஒரு புதிய சல்வார் வெளியில் விழுந்தது. நான் அதை எடுத்துப் பார்த்தேன் அதனோடிருந்த ரிசீது தள்ளிக்கொண்டு வெளியே எட்டிப் பார்த்தது. ஏனோ நான் அதனைத் திறந்து பார்த்தேன், இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் கடையில் அந்த சல்வார் வாங்கப்பட்டிருந்தது. நான் அனைத்தையும் மீண்டும் பையிற்குள் வைத்துவிட்டு வெளியே வந்தேன் அருண் ஓடிவந்து தனது பாடசாலை வீட்டுவேலைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கணக்குப் புத்தகத்தை என்னிடம் நீட்டினான். நிலா மௌனமாக சோபாவில் படுத்திருந்தாள். அருணுக்குக் கணக்கைச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்க நிலா ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள். நான் எழுந்து சென்று குசினிக்குள் எஞ்சிக் கிடந்த உணவுப் பொருட்களை வெளியே எடுத்துப் போட்டு அதில் எதைச் சமைக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். போனகிழமை வந்து அவளோடு சேர்ந்து வாங்கிக் கொடுத்த இறைச்சி, மீன் மரக்கறிகள் எல்லாவற்றையும் எப்படி ஒருகிழமையில் சமைத்து முடித்தாள்? இரண்டு குழந்தைகளும், அவளும் பெரிதாகச் சாப்பிடுவதுமில்லை. அவளிடம் கேட்கவிரும்பவில்லை. எதையாவது சமைத்து வைத்துவிட்டு அவளைச் சிரமப்படுத்தாமல் நான் கடைக்குப் போய் கொஞ்சமாக உணவுப் பொருட்கள் வாங்கி வரலாமென்று முடிவெடுத்தேன். அப்போது நிலா விசும்பும் சத்தம் கேட்டது
நான் திடுக்கிட்டு அவளிடம் போனேன். அவள் தனது கால்களில் தலையை சாய்த்து வைத்து அழுதுகொண்டிருந்தாள். அருண் அவளைப் பார்ப்பதும், என்னைப் பார்ப்பதும் பின்னர் தனது கணக்கில் கவனம் செலுத்துவதுமாக இருந்தான். எனக்கு சிலவேளைகளில் அருணைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இந்தச் சின்னவயதிலும் தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தன்னைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள அவனால் முடிந்தது. படிப்பில் அவன் மிகவும் சுட்டி. பாடசாலையில் ஆசிரியர்களின் பாராட்டை அவன் எப்போதும் பெற்றுவந்தான்.
நான் நிலாவின் அருகில் போயிருந்து என்ன பிரச்சனையென்று கேட்டேன். அவள் விக்கி விக்கி அழுதாள். நான் அருணை அவன் அறைக்குள் போகுமாறு கேட்டு விட்டு நிலாவின் முகத்தைப் பார்த்தபடியிருந்தேன். சிறிது நேரம் அழுது முடித்தவள் என்னைத் தயக்கத்தோடு பார்த்துச் சொன்னாள்அக்கா நான் ப்ரெக்னென்ட்என்று. நான் மௌனமாக இருந்தேன். அவளிடம் நான் என்ன கேட்பது? எப்படிக் கேட்பது ஒன்றும் விளங்கவில்லை. சிலநொடிகள் மௌனத்தின் பின்னர் எழுந்து வோஷ் ரூம் சென்று கதவை பூட்டிவிட்டு உள்ளே நின்றேன். பின்னர் வெளியில் வந்து கூட்டம் ஒன்றிருக்குது நான் அதற்குப் போக வேண்டும் பின்னர் கதைக்கின்றேன் என்று விட்டு வெளியில் வந்தேன். அருணிற்குக் கூட சொல்லிக் கொள்ளாமல் வெளியில் வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். அதன் பின்னர் அவள் என்னைத் தொலைபேசியில் ஒருபோதும் அழைத்ததில்லை, நானும் அவளை அழைத்ததில்லை.

முதல்நாள்:

முகில்கள் கீழே இறங்கிவிட்டதோ என்று சந்தேகிக்கும் படி ஊளைக்காற்றோடு கூடிய பனிப்புகார் ரொறொன்டோ நகரையே மூடிக்கிடந்தது. மாசிக் கடைசி. குளிர் உச்சத்திற்குப் போய்ப் பின்னர் குறையத் தொடங்கும் காலமிது. ஊடகச் செய்திகள் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டன. ரொறொன்டோ தமிழ் இலக்கியவாதிகள் காலநிலை பற்றிக் கவலைப்படுவிதில்லை
அவர்களுக்கு இலவசமாக மண்டபம் தேவை, கிடைத்தால் கூட்டம் நடக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள சில சீவன்கள் காலநிலைப்பற்றிக் கலைப்படாது கலந்து கொள்வார்கள். வீட்டில் அடைந்து கிடக்கப் பிடிக்காமல் நானும் கூட்டத்திற்குக் கிளம்பினேன். வீட்டோடு அமைந்திருந்த வாகனம் நிறுத்தும் பகுதியில் நிற்கும் எனது வாகனத்தை. நான்  தயாரானதும் ஆரம்பக் குமிழியை அழுத்தி வாகனத்தை சூடேறச் செய்துவிட்டு உள்ளே ஏறிக்கொண்டேன். எவ்வளவு வசதி, வெளியில் நடுங்கும் குளிரானாலும் சிறிதும் குளிர் தாக்காமல் வெளியில் போய்வரலாம். மெதுவாக பனிக்குவியலுக்குள் வாகனத்தின் சில்லுப் புதையாமல் கவனமாக வாகனத்தை ஓட்டத் தொடங்கினேன். பாதையெங்கும் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. கிழமையில் ஐந்து நாட்களும் வேலை, சனிக்கிழமைகளில் வீட்டு வேலையோடு நேரம் போய் விடும், ஞாயிறு இப்படி ஏதாவது கூட்டம் என்றால்தான் வெளியில் போய் நண்பர்களைச் சந்தித்து பலதையும், பத்தையும் கதைத்து மகிழ்ந்து வரமுடியும். பார்வையை வேறெங்கும் அலைய விடாமல் வீதியிலேயே ஓடவிட்டேன். சிறிது பிசகினால் கூட வானத்தின் சில்லு சறுக்கி விபத்து நடந்து விடும். மண்டபத்திற்கு மிக அருகில் வந்து வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம் தேடிப் பார்வையை வீதியோரம் ஓடவிட்ட போதுதான்  எதிர்திசையிலிருந்த பேருந்து நிலையத்தில் அவள் பேருந்திற்காகக் காத்திருப்பதை அவதானித்தேன். முதலில் ஒரு சீனாக்காறக் கிழவி போல் தோன்றியவள், பின்னர் என் பக்கம் முகத்தைத் திருப்பிய போதுதான் அவள் தமிழ்ப்பெண்ணென்பது தெரிந்தது. சிறிய ஒடுங்கி உடலமைப்பு, அதனை மூடி நீண்ட ஒரு பனிக்கான மேலாடை, தலையைச் சுற்றி அவள் அணிந்திருந்த தொப்பி அவளை ஒரு ரஷ்ய இராணுவம் போலவும் காட்டியது. அவள் ஒன்றைக் கையைப் பிடித்த படி ஒரு குழந்தை, ஆணா பெண்ணா தெரியவில்லை, குழந்தையும் தன்னிலும் விடப் பல மடங்கு பாரமுள்ள பொதியை உடையாக அணிந்திருந்தது. அவளது அடுத்த கை ஒரு குழந்தை தள்ளுவண்டியைப் பிடித்திருந்தது. தாய்குப் பக்கதில் நின்ற குழந்தையின் வாய் அசையில் அது அழுகின்றதென்று தெரிந்தது. குழந்தையை வண்டிக்குள் இருக்க வைக்காமல் ஏன் பனிக்குள் நிலத்தில் நிற்க வைத்திருக்கின்றாள்? அவள் மேல் எனக்குக் கோவம் வந்தது. வாகனத்தை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டேன். ”ராசா அழாதையப்பு பஸ் வந்திடும் என்ர குஞ்செல்லேஅவள் தழுதழுக்கும் குரலில் ஆறுதல் சொல்வது எதிர்திசையில் நின்ற எனக்கும் கேட்டது. நான் வீதியின் இரு பக்கங்களும் நோட்டமிட்டேன், பேருந்து வருவதற்கான எந்த அறிகுறியுமில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிறிய வீதிகளில் அதிகம் பேருந்துகள் வருவதில்லை. பாவம் எவ்வளவு நேரம் நிற்கின்றாளோ? விறைத்திருப்பாள். ச்சீ எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்தக் குளிருக்குள் வெளியில் போக வேண்டிய அவசியமென்ன? அதுவும் குழந்தையோடு தனியாக. இவளது புருசன் வேலைக்குப் போயிருப்பான், வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வெளியில் கிளம்பிவிட்டாள் போலும். நினைத்தபடியே வீதியின் மறுப்பகத்திலிருக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு குழந்தை வீல் என்று கத்தும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன், அவள் பிடித்திருந்த தள்ளுவண்டிக்குள்ளிருந்து ஒரு சிறு குழந்தையின் அழுகையொலி. எனக்குத் திக் என்றது. ஒரு குழந்தையில்லை இரண்டு குழந்தைகள். அவள் உஸ், உஸ் என்று உரத்த குரலில்சொல்லிய படியே வண்டிலை முன்னும் பின்னும் தள்ளினாள். நான் ஒரு நிமிடம் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன், அவள் என்னைக் கவனிக்கவில்லை குனிந்து குழந்தைக்கு உஸ், உஸ் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் அவளை நோக்கி நடந்தேன்.

இடையில் பல நாட்கள்

இரண்டு பெண்கள் என்பதைத் தாண்டி எனக்கும் அவளுக்கும் எந்த ஒன்றுமையுமில்லை, ஆனால் நண்பிகளாவதற்கு அது ஒன்றே போதுமானயிருந்தது. இருவரும் இரண்டு வேறுபட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருந்தோம், நான் எனது உலகை வியாபித்து விபரிக்கும் போதும், அவள் தனது உலகை வியாபித்து விபரிக்கும் போதும் கண்களை அலக விரித்து முகத்தில் வேண்டாத சுருக்கங்களின்றி இருவருமே உள்வாங்கிக் கொண்டோம். அதன் பின்னால் கிழமையில் ஒருநாள், சிலவேளைகளில் இரண்டு மூன்று நாட்களென்று சந்தித்துக் கொண்டோம். என்னிடம் வாகனம் இருந்ததால் அவளது அனைத்து நியமனங்களுக்கும் நானே அழைத்துச் செல்வது எழுதாத சட்டமாகியது. என்னைத் தொலைபேசியில் அழைத்து எனது ஓய்வு நேரத்தைத் தெரிந்து கொண்டே அவள் தனது நாளை தீர்மானிக்கத் தொடங்கினாள். நான் அவளை சில கூட்டங்களுக்குக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன். ஆங்கில, மினகணனி வகுப்புகள் என்று கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தேன். மறுத்தால் என்னால் கிடைக்கும் நன்மைகள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் எந்த சுவாரய்யமுமின்றி நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டாள். வீடு, கார், கணவன் குழந்தைகள் என்று தான் கண்ட கனவு எல்லாம் கலைந்து போன சோகம் அவள் முகத்தில் அப்பிக் கிடந்தது. ஏதோ ஒரு வகையில் அவளது குடும்பம் எனது குடும்பத்தின் ஒரு பகுதிபோல் ஆன பொழுதொன்றில் தான் நான் அவளைச் சந்தித்த கடைசி நாளும் வந்து சேர்ந்தது.


இருபது வருடங்களின் பின்னர்

நான் நிலாவின் மகள் திருமணத்திற்குப் போவதென்று முடிவெடுத்ததற்கு  முக்கிய காரணம், அவள் கற்பமாக இருக்கின்றாள் என்று தெரிந்தவுடன் அவள் மேல் கோபம் கொண்டு முற்றாக அவளுடனான தொடர்பை முடித்துக் கொண்டது தவறென்று பல வருடங்களின் பின்னால் என் மனச்சாட்சி என்னைக் குடைந்து கொண்டிருந்தது தான். தமிழ் பெண்ணொருத்தி தனது குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்திகள் மூன்றோ, நான்கோ  ரொறொன்டோ ஊடகங்களில் வந்திருக்கின்றன, ஒவ்வொரு தடவையும் கடவுளே அது நிலாவாக இருந்துவிடக் கூடாதென்று நான் மனம் பதறியதுண்டு. அவளின் தொலைபேசி எண் மாற்றப்பட்டிருந்தது. எங்கோ அவள் நன்றாக இருக்கக் கூடும் என்று மனதைச் சமாதானப்படுத்திவிட்டு நான் என் வாழ்கையின் சிக்கல்களை இழைபிரிக்கத் தொடங்கிவிட்டேன். அதன் பின்னர் அவளை முற்றாக மறந்தும் போய்விட்டேன்.
திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தேறியது. நிலா தனது கணவன், மகன் அருண், நவீன், மகள் நிஷா எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். என்னோடு நின்று அவர்கள் படமும் எடுத்துக் கொண்டார்கள். நிலா கணவனுடனும்பிள்ளைகளுடனும் வசதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கின்றாள்  என்பது எனக்கு நிம்மதியாகவிருந்தது. நடுவில் காணாமல் போன சில பக்கங்களைப் பற்றி நான் சிந்திக்கவோ, கிளறிப் பார்க்கவோ விரும்பவில்லை. அவளுக்கும், எனக்கும் இடையில் சில வருடங்கள் தோன்றிய நட்பு இனிமேல் புதுப்பிக்கவோ, இல்லாவிட்டால் முற்றிலுமாக அழிக்கவோ முடியாதது. திருமணம் முடிந்து நான் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, மணமக்களுக்குப் பரிசைக் கொடுத்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வரும் போது நிலா ஓடிவந்து அக்கா என்று என்னைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டு நான் தன்னை மதித்துக் கலியாணத்திற்கு வந்ததற்கு மீண்டும் நன்றி சொன்னாள். பிறகு என் கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு தான் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதாக என் கண்களைப் பார்த்துச் சொன்னாள். மகள் பிறந்த பிறகு தனது கணவன் நிறம்பவே மாறிவிட்டதாகவும் சொன்னாள். நான் புன்னகைத்துக் கொண்டு நின்றேன். என்னால் ஏனோ முன்பு போல் அவளோடு ஒட்ட முடியவில்லை. அதிகம் பழகாத ஒருவருக்குச் சாட்டுக்குச் சிரிப்பது போல் எனது சிரிப்பு நேர்மையற்றிருந்தது. நிலா உடல் பருத்திருந்தாள். வெத்தலை போட்ட அவள் வாய் ஒழுங்கற்றுச் சிவந்திருந்தது. கண்களை அடிக்கும் நிறத்தில் பட்டுச் சேலையும், உடல் முழுக்க நகைகளுமாக அவள் நின்ற விதம் எனக்கு அருவருப்பைத் தந்தது. அக்காவென்று அவள் என்னை அழைப்பது பொருத்தமற்றிருந்தது. நான் சரியென்று சிரித்து விலக, ”அக்கா உங்களுக்குச் சூச்சுமம் காணாது, கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போயிருந்தால் நீங்களும் என்னை மாதிரிச் சந்தோஷமா இருந்திருக்கலாம், தனிச்சிருக்கத் தேவையில்லை, இப்ப பாருங்கோ என்னை வேலைக்கும் போறேலை, பெரிய கார், வீடு பிள்ளைகளெண்டு எவ்வளவு வசதியாவும் சந்தோஷமாவுமிருக்கிறன், நீங்கள் இப்பவும் ஒரு சின்ன வீட்டிலஅவள் முடிக்க முன்பே, நான் புன்னகைத்து கைகளை விடுவித்து எனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்,  என் கன்னத்தில் ஒட்டியிருந்த அவள் வெத்தலைச் சாயத்தைத்தை துடைத்தது விட்டது என் ஒற்றைக் கை.

அம்ருதா 130, ஜூன் 2017 இதழ்