Friday, August 31, 2018

The Final Solution: இறுதித் தீர்வு






உடல்களில் மேலே புத்தகத் தலைகள் முளைத்திருந்தன.  உடல்களின் தலைகளாய் கிடக்கும் புத்தகங்கள் மேல் என் பார்வை குவிந்திருந்தது. என் சிந்தனை, சுருள் சுருளாய் எதிலும் நிலைக்காமல் அலைந்துகொண்டிருந்தது , என்னால் மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றையும் சிந்திக்க முடியவில்லை. சில தருணங்களில் தெளிவாக முடிவெடுத்து வாழ்வைப் பக்குவமாகக் கொண்டு செல்லும் திறமை என்னிடமிருக்கின்றது என்ற நம்பிக்கை எழும், மறுகணம் மனம் சோர்வுற்று எனக்குப் பக்குவம் போதவில்லைவாழ்வில் அடிபட்டு வளர்க்கப்படாத இளைஞனாய் தடுமாறுகின்றேன் என்று தோன்றும். என் மனம் சோர்வு காண்கின்றதாஅப்பா எதற்காக என்னைச் சந்திக்க வருகின்றார்?

நானிருந்த மேசைக்கு நாலாவது மேசையில் ஒரு புத்தமும் கையுமாக அப்பா இருந்தார். அவர் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. அவர் என்னைக் கடந்து எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். நான் புன்னகைத்தேன். அப்பா தூசிப் புகாராகி மறைந்து போனார்.

கனடாவின் மிகப்பெரிய நுாலகத்தின் ஐந்தாம் மாடியில் மௌனமாக அமர்ந்திருக்கின்றேன். இந்த மாடியை தெரிவு செய்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று சிறுவயதில் அப்பாவுடன் அடிக்கடி வந்து போயிருக்கின்றேன், அடுத்தது என் வாழ்வின் மையமான மைதிலியை முதல் முதலில் சந்தித்த இடமும் இதுதான்

என் கையில் ஒரு தமிழ் நாவல்எப்போது எடுத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் அது கையில் கிடந்தது. நாவலின் முன் அட்டையில் துப்பாக்கி ஏந்திய சிறுவர்கள் முகத்தில் வெறுமையோடு நின்றுகொண்டிருந்தார்கள். எழுத்தாளர் யாரென்று தெரியவில்லைபின் அட்டையில் சிரித்த முகத்துடன் ஒரு இளைஞன். அவன்தான் இந்த நாவலை எழுதிய எழுத்தாளனாக இருக்க வேண்டும். நாவலைப் புரட்டிப் பார்க்கின்றேன்சிறிய புழுக்கள் நெளிவதைப் போல் தமிழ் எழுத்துக்கள் சுருண்டுசுருண்டு கிடந்தன.  என்னால் வாசிக்க முடியாத அந்த உயிர்ச்சுருள்களை  ஒற்றை விரலால் தடவிக்கொண்டேன்.


நான் பெரியவனான போது அப்பா மற்றவர்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதரில்லையென்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி எழத் தொடங்கியது. உள்ளே எதுவுமற்ற நடமாடும் உடல் எனது அப்பா. பல துாசுகளால் உருவாக்கப்பட்டவர் அவர். விரல் நுனியால் தட்டிவிட்டால் அந்தத் துாசு சிதறுண்டு காற்றோடு கலந்து, சுழன்று மேலெழுந்துபோய் என் கண்களிலிருந்து மறைந்து விடும். அதனால் எனது விரல்கள் அப்பாவைத் தட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்.

அப்பா கனடாவின் பிரபல்யமான வங்கியொன்றில் பகல்நேர பாதுகாவலராக வேலை செய்கின்றார், வேலைபற்றி ஒரு போதும் அவர் வீட்டில் கதைப்பதில்லை, வேலை அவருக்குப் பிடித்திருக்கின்றதா என்று கூட எமக்குத் தெரியாது. இரவு நேரங்களில் அப்பாவிற்கு கால்களில் நோ எடுப்பதால், அம்மா அப்பாவின் கால்களை அமுக்கி தைலம் பூசி விடுவார். அப்பாவிற்கு நண்பர்கள் என்று ஒருவரும் கனடாவில் இல்லை. அவர் நண்பர்களை உருவாக்க விரும்பவில்லை. வேலை, குடும்பம் என்று தனது வாழ்வைச் சுருக்கிக் கொண்டுவிட்டார். உனது அப்பா பற்றி சொல்லென்று யாராவது என்னைக் கேட்டால், மிகவும் அன்பானவர், அப்பாவிற்கு  புத்தகங்கள் வாசிக்கப் பிடிக்கும்,என்பதைத் தவிர எனக்கு அவர் பற்றி வேறு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அப்பா சோர்வாக இருந்து ஒரு போதும் நான் பார்த்ததில்லை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், வீட்டு வேலை எதையாவது செய்வார், சமைப்பது, வீடு துப்பரவாக்குவது, உடுப்புத் துவைப்பது, பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பது என்று இரவு படுக்கைக்குப் போகும்வரை எதையாவது செய்துகொண்டேயிருப்பார். இல்லாவிட்டால் தனது வாசிக்கும் அறைக்குள்ளிருந்து வாசித்துக் கொண்டிருப்பார். ஒன்றும் செய்யாவிட்டால் அப்பா சிதறுண்ட துாசியாகிக் கலைந்து மேலே எழுந்து போய் விடக் கூடும்

அம்மா தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர் நிர்வாகப் பகுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்கின்றார். அம்மாதான் எப்போதும் வீட்டைக் கலகலப்பாக வைத்திருப்பார். அம்மாவின் குரலும், எமது குரல்களும்தான் வீட்டை நிறைத்திருக்கும். நாங்கள் வசதியாகவும், சந்தோஷமாகவும், அன்பாகவும் வளர்க்கப்பட்டோம்.. எப்போதாவதுதான் அம்மாவும், அப்பாவும் சேர்ந்து சில மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பார்கள்,  அப்போது அப்பா, அம்மாவோடு சந்தோஷமாகச் சிரித்துக் கதைத்து நான் பார்த்திருக்கின்றேன். இருந்தாலும் அப்பாவின் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் மறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்பாவின் அந்த சோகத்தை முழுமையான அறிந்த அம்மா, அவர் அதற்குள் அமிழ்ந்து போய்விடாமல் காப்பதற்காகத்தான் எப்போதும் கலகலப்பாக இருக்கின்றாரோ என்று சந்தேகமாக இருந்தது.

ஒருநாள் அப்பாவின் வாசிப்பு அறைக்குள் அப்பா வாசித்துக் கொண்டிருக்கும் தடித்த நுால் ஒன்று பக்க அடையாளப் பட்டியோடு மேசைமேல் கிடந்தது என் கண்ணில் பட,  ஆர்வத்தோடு எடுத்துப் பார்த்தேன், வழமைபோல் போர் சார்ந்த நுால்தான் அது. தலைப்பு “The Final Solution” என்றிருந்தது. அட்டையில் கும்பல், கும்பலாக மனித உடல்கள் குவிந்திருக்க, இராணுவ வீரர்கள் உடல்களைச் சுற்றி நின்று உரையாடிக்கொண்டிருந்தார்கள். நுாலின் அட்டையே எனக்கு மிகவும் மனஅழுத்தத்தை தருவதாகவிருந்தது, அப்பா எதற்காக இப்படியான புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கின்றார்?,  அப்பா எதனைத் தேடுகின்றார்? மனம் குழப்பமடைந்தது. நுாலில் சிலபக்கங்களைப் வாசித்துப் பார்த்தேன்,

அடேல் எண்ட்ரிச்சமண்ட், ஒரு நாட்சி போர்க் குற்றவாளி. ஜேர்மன் போர் தொடங்கி சிறிது காலத்தில்  குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் அதிகமான மனிதர்களைக் கொல்வதற்கான சிறந்த திட்டத்தைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை இராணுவத் தலைமையகம்  எண்ட்ரிச்மண்ட் இடம் கையளித்திருந்தது. பதினொரு மில்லியல் யூத மக்களைக் கொன்று அழிப்பதற்காக விசவாயுவைக் கண்டு பிடித்தவர் இவர். போர்க்குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இவர், குற்றவாளிக் கூண்டில் நின்று தலைமையகம் தனக்களித்திருந்த பொறுப்பைத் தான் சிரத்தையோடும், திறமையோடும்  செய்து முடிந்திருந்ததாகக் கூறினார். குற்றவாளியாகக் காணப்பட்ட இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி இஸ்ரேலில் வைத்து துாக்கிலிடப்பட்டார்.”

புத்தகத்தை மூடி விட்டு அப்பாவின் புத்தக அலுமாரியை நோட்டம் விட்டேன். எல்லாமே போர் தழுவிய எழுத்துக்கள், போராட்டம், திட்டமிடல், கொலை, சித்திரவதை வகைகள், என்றிருந்தன. எனக்கு அந்த அறையினுள் நிற்பதற்குப் பிடிக்காமல்  உடனேயே வெளியேறினேன். என்மேல் எனக்கே தெரியாமல் பெரிய பொறுப்பொன்று  ஒப்படைக்கப்பட்டிருப்பதாய் பட்டது. என்னைச் சுற்றியிருக்கும் பகட்டான பாதுகாப்பு வேலியை உடைக்க விரும்பாமல் மிகவும் சுயநலமாகவும், மென்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எனத் தோன்றியது.

நான் கனடாவின் சிறந்த  பல்கலைக்கழகமான கிங் கொலிஜ்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைப் பட்டப்படிப்பை முடித்து ரொறொண்டோவின் முன்னணிப் பத்திரிகையொன்றில் இதழியல் பிரிவின் உதவியாளராக  வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அன்பான குடும்பம், காதலிக்க மைதிலி என்று வாழ்வு மிகவும் சுமூகமாகவும், சந்தோஷமாகவும் கழிந்துகொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மனம் கலவரப்படும் வகையில் எதையும் நினைக்க எனக்குப் பயமாக இருந்தது.. அண்ணாவும், தங்கையும் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கின்றார்கள், அப்பாவும், அம்மாவும் எதிர்பார்ப்பதும் அதைத்தான், அவர்களுக்காக நானும் அதைத்தான் செய்யவேண்டும் என்று சுயநலமாக என்னைச் சாந்தப்படுத்திக் கொண்டேன்.


அப்பா மைதிலியினுடான எனது காதலை எதிர்க்க மாட்டார். திருமணம் பற்றிய எண்ணம் எனக்குள் எழுந்த போது மைதிலியின் குடும்பத்திலிருந்துதான் மறுப்பு வரும் என்று எனக்குத் தோன்றியது, ”நான் ஒரு தமிழ் பெடியனை லவ் பண்ணிறது என்னுடைய அம்மாவுக்கு நல்ல சந்தோஷம், உன்ர குடும்பம் எவ்வளவு அன்பானது, என்ன, உனக்குத் தமிழ் கதைக்க வராது எண்டதுதான் கொஞ்சம் இடிக்குது பரவாயில்லை சமாளிச்சிடலாம்என்றாள் மைதிலி, ”அப்ப உன்ர அப்பா?” என்று நான் கேட்ட போது, ” ஒரு படித்த, வடிவான, நல்ல குணமுள்ள, ஈழத்துத் தமிழ் பெடியன், உதுக்கு மேல அப்பா ஒன்றையுமே கேட்ட மாட்டார்,” சிரித்தாள்.

நேரத்தைப் பார்த்தேன். அப்பா வரும் நேரம்தான். முள்ளந்தண்டில்  நடுக்கம் தாக்க என் உள்ளங்கை வியர்த்துக் கொண்டது. அப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்த போது நான் ரொறொன்டோவின் மத்தியில் அமைந்திருக்கும் உல்லாசப்பிரயாணிகளுக்குப் பெயர் போன ஹார்பர் ஃபுரண்ட்” வாவியின் முன்னிருக்கும், கோப்பிக் கடையொன்றில் மைதிலியுடன் அமர்ந்திருந்தேன். மைதிலியின் ஒன்றைக் கை எனது கைகளுக்குளிருந்தது. அப்பா என்னோடு அதிகம் கதைக்கவில்லைஉன்னை சந்தித்துக் கதைக்க வேண்டும் நேரமிருக்கா என்று கேட்டார்என்னோடு மைதிலி இருப்பதை நான் கூறவில்லை. நுாலத்தில்தானிருக்கின்றேன் கதைக்கலாம் என்றேன்சரி அங்கேயே இரு நான் வருகின்றேன் என்று தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். அப்பா என்னோடு கதைப்பதற்கு ஸ்புரோவிலிருந்து ரொறொன்டோவின் மத்தியிலிருக்கும் நுாலகத்திற்கு வருகின்றார். இங்கு வாகனத்தில் வந்து சேர முற்கால் மணிநேரமாவது ஆகும். அப்படி என்ன அவசரம்? வீட்டிலிருக்கும் போது கதைக்கவிரும்பவில்லைஎன்னோடு தனிமையில் கதைக்கவிரும்புகின்றார். நிச்சயமாக இது மைதிலி பற்றியதுதான். போன கிழமைதான் மைதிலியினுடனான எனது காதல் பற்றி அம்மாவிற்குக் கூறியிருந்தேன்.
மைதிலி பல தடவைகள் எனது வீட்டிற்கு வந்திருக்கின்றாள். மைதிலி மட்டுமல்ல பல பெண் நண்பர்களை நான் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றேன். மைதிலியும் எனது நண்பியாக இருந்து காதலியானவள்தான். ஒரு வருட காதலின் பின்னர் தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவிற்கு வந்த போது நான் அம்மாவிடம் இது பற்றிக் கூறினேன். அம்மா சந்தோஷப்பட்டாள். காதல் திருமணத்திற்கு எனது குடும்பதில் தடையில்லை. எனது அண்ணாவும் பிரேசில் நாட்டுப்  பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன். தங்கையும் ஒரு தமிழ் இளைஞனைக் காதலிக்கின்றாள், எனவே எனது காதலுக்கும் நிச்சயம் தடையிருக்காது.

அப்பாவின் குரல் அமைதியாகத்தானிருந்ததுஇருப்பினும் அவரின் குரலில் ஏதோ ஒரு மாற்றத்தை நான் உணர்ந்தேன். எனது முடிவில் அப்பாவோ அம்மாவோ தலையிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லைஆனால் அப்பாவின் தொலைபேசி அழைப்பின் பின்னர் ஏதோ தலையீடு இருக்கப் போவதாக எனது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தது.

என் முடிவில் சுயநலம் இருக்கக் கூடாதுஎன் முடிவால் யாரும் நோகவும் கூடாது (நான் உட்பட)என் முடிவு எனது முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்யாரினது துாண்டுதலோயாருக்குமான அனுதாபமோ அதில் இருக்கக் கூடாது. என்னால் அந்தளவிற்குத் தெளிவாக முடிவெடுக்க முடியுமாஅப்பாவின் தன்னம்பிக்கைதெளிவு என்னிடமில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்கும் போது இப்போதும் அடங்காத காதல் அவர்களிடையே அமிழ்ந்திருப்பதை நான் காண்கின்றேன். அந்தத் தெளிவு,நம்பிக்கை எனது காதலிலும் இருப்பதாக நான் நம்பினேன். நான் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். அடுத்த மேசையிலிருந்த சைனீஸ் பெண்ணொருத்திதலையை நிமிர்த்தி எனைப் பார்த்தாள்.  அவள் வாய் எதையோ மென்றுகொண்டிருந்தது. நான் தமிழ் நாவலில் எனது பார்வையை ஓட விட்டேன். காற்சட்டைப் பையிலிருந்து கறுவா சுவையுடைய மெல்லும் இனிப்பை எடுத்து எனது வாயினுள் போட்டுக் கொண்டேன்.

மைதிலி நண்பி ஒருத்தியைப் பார்க்கவென்று சென்றுவிட்டாள். அப்பா என்னை தனியாகக் கதைப்பதற்கு வரச்சொல்கின்றார் என்ற அவளிடம் நான் சொன்ன போது, அவளின் முகத்தில் எழுந்த ஏக்கத்தோடு கூடிய தடுமாற்றம் இன்னும் என் மனக்கண்ணை விடாது சுற்றிக்கொண்டிருந்தது. காதலின் மர்மம்.  

அப்பா மைதிலியை  மறுப்பதற்கு எந்த ஒரு காரணமும் இருக்கப் போவதில்லை. பின்னர் எதற்காக நான் இப்படித் தவிக்கின்றேன். உள்மனது அப்பா மைதிலியினுடனான எனது திருமணத்திற்கு மறுப்பு சொல்லப்  போகின்றார் என்று  உழன்றுகொண்டிருந்தது. அவள் உடலின் மனம் எனக்குள் ஒரு நன்புகையாய் சுழல்கின்றது. தீராத முத்தங்கைளைப் பகிர்ந்தவர்கள் நாங்கள்போன கிழமை நயாகரா நீர்வீழ்ச்சி சாட்சியாக வைரக்கற்கள் பதித்த மோதிரம் ஒன்றைக் கொடுத்து திருமணத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் முதல் முதலாக உடலுறவு கொண்டோம். காதலின் அடுத்த படியில் தற்போது நாங்கள்.

அம்மா
அண்ணாதங்கைகள் அனைவரும் மைதிலியுடனான எனது காதல்திருமண ஒப்பந்தம் எல்லாமே தெரிந்திருந்தது. அம்மா, அப்பாவிற்கும் சொல்லியிருப்பார்இதுவரை காலமும் அது பற்றி அவர் ஒன்றும் கூறாததால் எல்லாமே சுமூகமாகச் செல்கின்றது என்று நம்பியிருந்தேன். ஆனால் இரண்டு நாட்களாக அம்மாவின் முகத்தில் சந்தோஷமில்லைமைதிலி பற்றியும்எமது திருமணம் பற்றியும் நான் கதையை எடுக்கும் போது அவர் வேறு எதையாவது கதைத்துத் திசை திருப்பினார். அப்போது எனக்கு அது பெரிதாகப் படவில்லைஆனால் இப்போது எல்லாமே என் நினைவில் வந்து சித்திரவதை செய்கின்றது.
அப்பாவின் பின்புலம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இலங்கையில் உரும்பிராய் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு, கொழும்பில் வேலை. பின்னர் அம்மாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். அம்மா கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்.

அப்பாவிற்கு அக்கா ஒருவர் குடும்பத்துடன் ஹலெண்டில் வாழ்க்கின்றார், அப்பாவை விட அதிகம் வயதில் மூத்தவர். நாங்கள் பல தடவைகள் விடுமுறைக்கு அவரிடம் சென்று வந்திருக்கின்றோம், அவர்களும் வந்து போவார்கள். ஒருமுறை அக்காவிற்கு உடல் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கவென்று குடும்பமாகச் சென்றிருந்தோம்,  அப்போது நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கிழமை அங்கு நின்று அவர்களுடன் சந்தோஷமாகக் கழித்துவிட்டுக் கனடா புறப்பட்டோம், அப்போது பெரியம்மா என்னைத் தனியே அழைத்து என் கைகளைப் பிடித்து ” என்ர தம்பி” என்றுவிட்டு விசும்பினார், பின்னர் கண்களைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார்,  ”அவன் சரியான நல்லவன், பாவம், அவன் வாழ்க்கையில அனுபவிச்ச துன்பத்தைப் போல ஒருத்தரும் அனுபவிச்சிருக்கேலாது, அவன்ர நேர்மைக்குக் கிடைச்ச கூலி அது, அவனைப் பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ” என்றார். என் கண்களும் கலங்கின, ஆனால் காரணம் தெளிவாகப் புரியவில்லை. அதற்குள் அப்பா அங்கு வந்துவிட நாங்கள் விடை பெற்றோம்.

அம்மாவும், அப்பாவும் பெரிதாக எதையோ மறைக்கின்றார்கள். நாங்கள் ஊரைவிட்டுக் கனடா வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது, ஒருமுறையேனும் ஊருக்குப் போக வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதில்லை. ஊரைப்பற்றி எங்களுடன் கதைத்ததுமில்லை. என்னுள்  கனவு போல ஊரின் சிலநினைவுகள் மிச்சமிருந்தன, தெளிவற்ற நினைவுகள்.

பெரியம்மாவின் வார்த்தைகள் என்னோடு தங்கிவிட்டது. அதன் பின்னர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் நான் அப்பாவின் பின்புலம் பற்றித் தேடத் தொடங்கினேன். அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் மூலம் எனக்குச் சில தகவல்கள் கிடைத்தன. அப்பாவிற்கு இரண்டு அண்ணன்கள் இருந்திருக்கின்றார்கள், இருவரும் இயக்கப் போராளிகள், இருவருமே விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

எங்கள் வீட்டில் எந்த மதச் சம்பிரதாயங்களோ, தமிழர்களுக்கான திருநாள்களோ கொண்டாடப்படுவதில்லை. நாங்கள் முற்றிலும் கனேடியர்களாகவே வளர்க்கப்பட்டோம். மதமற்று, ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட நல்ல மனிதர்களாக நாங்கள் வளர்க்கப் பட்டோம். தனது நாடு, தனது மொழி, தனது மதம் அனைத்தையும் துறந்து அப்பா மறுப்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

 மைதிலி என் அருகே வந்திருந்து கைகளைக் கோர்த்துக் கொண்டாள். ”ஏன் பதட்டமாயிருக்கின்றாய்?, அப்பா எங்களைப் பிரித்துவிடுவார் என்று கவலைப்படுகின்றாயா?” என்று கேட்டாள். அவள் விரலின் நான் அணிவித்த மோதிரம் மினுங்கிக்கொண்டிருந்தது. அவள் கையை எடுத்து முத்தமிட்டேன். சைனீஸ் பெண் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் பார்வையை கையில் கவனமின்றித் திறந்திருந்த பக்கத்தில் ஓடவிட்டேன். புரியாத அந்த மொழியின் நளினங்களில் என் பார்வை இலயித்திருந்தது. சிறிய ஒரு இருமல் என் தொண்டையை வந்தடைக்க, பக்கத்தைப் பிடித்திருந்த கைவிரல்கள் விடுபட்டு, வாயைப் பொத்தியது. நான் நிமிர்ந்து அந்த சைனீஸ் பெண்ணைப் பார்த்தேன். அவள் மிகக் கவனத்தோடு படித்துக் கொண்டிருந்தாள். பல்கலைக்கழ மாணவியாக இருக்க வேண்டும். மனதை ஒன்றிக் கல்வி கற்பதற்கு மிகவும் ஏற்ற இடம் இந்த நூலகம். நான் சிறிய ஒலிகளை எழுப்பி அவளுக்கு இடைஞ்சலைக் கொடுக்க விரும்பாது அப்பா வரும்வரை முதல் தளத்திலிருக்கும் கோப்பிக் கடையில் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்துகையிலிருந்த நாவலை மூடும் போது, எனது பார்வையை அந்த நாவலின் திறந்திருந்த பக்கத்திலிருந்த படமொன்று ஈர்த்தது.

மனித உடல்கள் அடுக்கடுக்காகக் குவிக்கப்பட்டிருந்தன,  அந்த உடல்களின்  நடுவில் திறந்த கண்களோடு தனது ஒற்கைக் கையை நீட்டி காப்பாற்றுமாறு என்னை ஒருவர் அழைத்தார். நான் திடுக்கிட்டு உற்றுப் பார்த்தேன், அவர் அப்பாவின் சாடையில் இருந்தார்அருகில் கையில் துப்பாக்கியோடு மைதிலியின் தந்தை சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார். அவர் அருகில் கையில் துப்பாக்கியோடும், விறைத்த முகத்தோடும் அப்பா நின்றுகொண்டிருந்தார். அப்பாவின் கையிலிருந்த துப்பாக்கி அப்பாவின் சாடையில் இருந்தவரின் தலையைக் குறிபார்த்திருந்தது.

கையிலிருந்த நாவல் நழுவி கீழே விழ நான் எழுந்துகொண்டேன். சைனீஸ் பெண் ஓடிவந்து நாவலை எடுத்து என்னிடம் நீட்டினாள்நான் அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். அப்பா நுாலகத்தின் கீழே எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

ஓகஸ்ட் -18 அம்ருதா



Monday, March 5, 2018

Demons in Paradise








அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜூட் ரட்ணத்தின் இயக்கத்தில் உருவான "Demons in Paradise"  பார்க்க கிடைத்தது. இயக்குனர் இலங்கையில், கொழும்பில் வாழ்ந்த ஒரு தமிழனாய் அவரைப் பாதித்த விடையங்களை ஒரு narrator ஆகவும்போராட்ட சூழலில் தனக்கு அதிகம் தகவல்களை தரக்கூடிய தனது மாமா மூலமும் கதையை நகர்த்தி சென்றுள்ளார்
திரைப்பட ஆரம்பத்தில் கறுப்பு வெள்ளையில் இலங்கை ஆதிக்குடிகள், காலனித்துவகாலம் என்பன சிலவினாடிகள்  காட்சிப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து, கைவிப்பட்ட புகையிரதம் அதன் இடையில் ஊடுருவி வளர்ந்து நிற்கும் ஆலமரம் ஒன்றின் அடியிலிருந்து திரைப்படம் ஆரம்பித்தது ஒரு தரமான படைப்பின் குறியீடாக நம்பிக்கையை வரவழைத்தது.

Demons in Paradise இல் நான் மூன்று விடையங்களை முக்கியமாக பார்க்கின்றேன்.
ஒன்று - 83 ஆம் ஆண்டுக் கலவரத்தின் போது கொழும்பில் சிங்கள காடையர்களினால், அல்லது இளைஞர்களினால் தமிழ் இளைஞன் ஒருவன் நிர்வாணமாக்கப்பட்டு பெட்ரோல் ஊத்தித் கொழுத்தப் படுவதற்கு முன்னால், எடுக்கப்பட்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தை எடுத்து உலகிற்கு காட்டிய புகைப்பட கலைஞனுடனான அனுபகப் பகிர்வு, சம்பவம் நடந்த இடத்தில் வைத்துக் காட்சிப் படுத்தப் பட்டிருந்ததும், தற்போது புகைப்படக் கலைஞனாக இருக்கும் அந்த சிங்களக் கலைஞர் அப்போது ஒரு  பத்திரிகை நிருபராக இருந்து நடந்த கோரச் சம்பவத்தை, அந்தக் கோரத்தின் சுவடு மறையாமல் வழங்கியிருப்பதும் அவரின் மனதில் அந்தக் காட்சி இன்றும் பதிவாயிருக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்திருக்கின்றது.
சம்பவத்தைப் படம் பிடித்திருக்கின்றீர்கள், ஆனால் அந்தக்  கோரச் சம்பவத்தை தடுக்க நீங்கள் ஏன் முயலவில்லை என்ற கேள்விக்கு, அப்போது அந்த இடத்தில் அப்படியான பல சம்பவங்கள் நிகழ்ந்தன, தன்னால் புகைப்படத்தை எடுத்துத் தமிழ் மக்கள் மேல் நடாத்தப்பட்ட வன்முறையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதை தவிர வேறு எதும் அந்தச் சந்தர்ப்பத்தில் முடியவில்லை என்ற தனது கையறு நிலையை வருத்தத்தோடு தெரிவித்திருந்தார். இயக்குனருடன் இந்த ஊடகவியலாளர் பற்றி நான் கேட்ட போது, தனக்கு அவரைக் கண்டுபிடித்து அவரோடு ஒரு சுமூகமான நட்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள சம்மதிக்க வைப்பதற்குத் தனக்கு இரண்டு வருடங்கள் பிடித்தன என்று கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் இயக்குனரின் நம்பிக்கையையும், உழைப்பையும் பாராட்டாமல் என்னால்  இருக்க முடியவில்லை.

அடுத்து கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரதத்தில் கடந்த நாற்பது வருடங்களாக சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் இயக்குனருக்குக் கொடுத்த வாக்குமூலம். அவர் விரிவாக எதையும் கூறவில்லை, இருப்பினும் அவர் கூறிய சில சொற்களே அங்கே இடம்பெற்ற கொடூரத்தை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது. "நான் அனைத்தையும் பார்த்தேன், வன்முறைத் தாக்குதல், கொலை, இரயிலிருந்து இராணுவத்தினரால் எடுத்து வெளியே எறியப்பட்ட தமிழர்கள்". இந்திய, பாக்கிஸ்தான் போரின் போது இரயில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களை திரைப்படங்கள் மூலம் பார்த்திருக்கின்றேன். அப்போது என் மனக்கண்ணில் அந்தக் காட்சிகள்தான் படம் போல் ஓடியது.

இறுதியாக மிகமுக்கியமாக நான் பார்த்தது, முக்கிய சில இயக்கங்களில் இணைந்திருந்த பல இளைஞர்கள் (தற்போது தமது 50, 60களில் உள்ளர்கள்) ஒன்று கூடி தம்மைத் தாமே மறுவிசாரிப்புக்கு உள்ளாக்கியது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று நேரடி வர்ணனை செய்தார். இரவு வேளை அவர் அந்த வீதியில் வேகமாக அங்குமிங்கும் பார்த்தபடி சென்று அவர்கள் ரெலோ அமைப்பின் மேல் மேற்கொண்ட தாக்குதலை விவரித்தார். அந்த வேளை தடுமாற்றத்தோடு "800, 900 பயிற்சிபெற்ற இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டார்கள், அவர்களும் எங்களைப் போல் எமது மக்களுக்காகப் போராட வந்தவர்கள் தானே என்று உணர்சி பொங்கக் கூறினார். அவ்வேளை கண்கலங்காத பார்வையாளர இருந்திருக்க மாட்டார்கள்.  தொடர்ந்து பல கொலைகளுக்கு உடைந்தையாக இருந்த, கொலைகளைச் செய்த பலர் தற்போது புலம்பெயர்ந்து (குறிப்பாக அவர் கனடாவைக் குறிப்பிட்டிருந்தார்) திருமணம் செய்து குடும்பமாக வாழ்கின்றார்கள், இவர்கள் எல்லோரும் மௌனம் காக்காமல் பேச வேண்டும் என்றார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்திருந்து உரையாடியது மனிதத்தில் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது.

“Demon’s In Paradise” 83ல் ஆரம்பித்த இனப்படுகொலையில் தொடங்கிப் பின்னர், அனைத்து இயக்கங்களும் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட காலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இதில் பலருக்குக்கு முரண்பாடு உள்ளது, அது இயக்குனரின் தெரிவு. அது அவர் சார்ந்த அரசியல், இயக்குனர் தவறான தகவல்களைத் தராதவரையில் திரைப்படத்தை ஒரு நேர்மையான விமர்சகனால் மறுக்க முடியாது.

Tatiana de Rosnay “Sarah’s Key” எழுதியபோது, பிரெஞ்சு மக்கள் பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. யூத மக்களை அதிகம் கொன்ற ஜேர்மெனியர்களைப் பற்றிய படைப்புகள் வெளிவந்த போது அதை ஏற்றுக்கொண்டவர்களால், பிரெஞ்சு நாட்டிலும் கணிசமாக அளவு யூதமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த ரகசியம் வெளியில் வந்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “Demon’s In Paradise” மேல் எதிர்மறை விமர்சனம் வைக்கும் தமிழ் மக்களின் பார்வையையும் அப்படித்தான் என்னால் பார்க்க முடிகின்றது

முதல் இலங்கைத் தமிழரின் ஒரு படைப்பு “கான்ஸ்” திரைப்படவிழாவில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது என்று அறிகின்றேன். யூட் ரட்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.