Wednesday, March 31, 2010

"சினேகிதன்”கள் மற்றும் நான். கறுப்பி

இனிமையான குளிர்கால காலை நேரம். காலை உணவிற்காக நாங்கள் ரொறொன்டோவின் மத்தியில் உணவகம் ஒன்றில் சந்தித்துக்கொண்டோம். “சினேகிதன்”கள் மற்றும் நான். கறுப்பி

சினேகிதன் அமைப்பு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்? எப்போது ஆரம்பிக்கப்பட்டது அதன் நோக்கம்?

விஜெய் - அமைப்பைப் பற்றிக் கூறு முன்பு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். Gay
(ஓரினப்பாலினர்) என்றவுடன் தமிழ்ச் சமூகம் தமிழச் சமூகம் என்றில்லை அனேக சமூகங்களின் பார்வை உடலுறவு என்ற ஒன்றை மட்டும் சார்ந்ததாகவே இருக்கின்றது. இது எனக்கு மிகவும் சினத்தையும் விசனத்தையும் தருகின்றது. எங்களுக்குள்ளும் ஆண் பெண் காதலர்களிடம் இருக்கும் அத்தனை உணர்வுகளும் இருக்கின்றன, அத்தோடு அவர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் எங்கள் காதலுக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றன, இதனை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம் என்பது எனது முதல் கருத்து.

டான்ஸ்ரன் - சினேகிதன் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு “தோஸ்தி;” என்ற வடஆசிய ஓரினப்பாலினர் அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு என்னைப் போன்ற பல தமிழ் இளைஞர்களும் சென்று கொண்டிருந்தோம். என்ன பிரச்சனை என்றால் அங்கு வருபவர்களில் அனேகர் ஹிந்திக்காறர்களாய் இருப்பதால் அவர்கள் ஹிந்தியில் ஹிந்திப்படங்கள் பற்றிய உரையாடிக்கொண்டிருப்பார்கள். தமிழ் இளைஞர்கள் நாங்கள் ஒரு மூலையில் ஒதுங்கி ஒதுக்கப்பட்டு விடுவோம். அப்பவே எனக்குள் தமிழ் ஆண் ஓரினப்பாலினர்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்த நேரம் நான் “தோஸ்தி”யில் அங்கத்திவராய் இருந்தேன்.

என்ன பெயர் தோஸ்த்தா?

டான்ஸ்ரன் - “தோஸ்தி” தோஸ்தி என்றால் நண்பன் என்று பொருள். ஒரு அமைப்பை இயக்க வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் இருக்கின்றன. முக்கியமாக பொருளாதாரப் பிரச்சனை. அவற்றை ஒழுங்கு செய்து கொண்டு இந்த சினேகிதன் என்ற அமைப்பை ஆரம்பித்தேன். விஜெய்தான் எனது முதலாவது உதவியாளரும் உறுப்பினரும்.

எப்படி நீங்கள் அங்கத்தவர்ளை சேர்த்துக்கொள்கின்றீர்கள். இப்படி ஒரு அமைப்பு இருக்கின்றது, என்று எப்படிப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றீர்கள்?

டான்ஸ்ரன் - எனக்கு ஏற்கெனவே தோஸ்திக்கு வந்துகொண்டிருந்த பல தமிழ் ஆண் ஓரினப்பாலினர்களைத் தெரியும், அத்தோட நான் கனகாலம் ரொறொன்டோ நகரில் வாழ்ந்து கொண்டிருந்தாலதும் பலரைத் தெரிந்திருந்தது. அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இந்த அமைப்பைப் பற்றிக் கூறி வரவழைத்தேன். அவர்கள் தங்களுத் தெரிந்தவர்களுக்குக் கூறி, அப்படியே வாய் வார்த்தையால் மட்டும் தெரியப்படுத்தியதுதான். முதலாவது சந்திப்பிலேயே பல புதுமுகங்கள் வந்து கலந்து கொண்டார்கள். எங்களுக்கு மின்தளம் இருக்கிறது, அதிலும் இந்த அமைப்பு பற்றித் தெரியப்படுத்தியிருந்தோம். அது மூலமாகத் தெரிந்து கொண்டு வந்தவர்களும் இருக்கின்றார்கள்.

உங்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொலைபேசியில் அழைத்தவர்களோ, இல்லாவிட்டால் நீங்கள் நடாத்தும் கூட்டங்களுக்கு வந்து கலகம் செய்தவர்களோ இருக்கின்றார்களா?

டான்ஸ்ரன் - அப்படிப் பெரிதாக நடந்ததாக நினைவில்லை. நாங்கள் பல தமிழ் அமைப்புகளுக்குச் சென்று உரைகள் நிகழ்த்தியிருக்கின்றோம். அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இருக்கின்றார்கள். கடுமையாகப் பேசியவர்களும், துப்பி விட்டுச் சென்றவர்களும் இருக்கின்றார்கள். 93இல் நாங்கள் ASAAP இற்காக

ASAAP என்றால்?

டான்ஸ்ரன் - ASAAP என்றால் Alliance for South Asian AIDS Prevention- HIV. AIDS விழிப்புணர்விர்க்காக ஆரம்பிக்கப்பட்ட சேவை. இது முக்கியமாக ஒரு தமிழ் நண்பருக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் அதற்காக தமிழில் துண்டுப் பிரசுரங்கள் அடித்து தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று கொடுத்துக்கொண்டிருக்தோம். அங்கு வந்த ஒரு வடஆசிய அமைப்பின் தமிழ் அங்கத்தவர், அவர் ஒரு முற்போக்காளரும் கூட எங்கிடம் “என்ன நீங்கள் தமிழ் ஆக்களுக்கு எட்ஸ் இருக்கிறமாதிரிப் பொது இடங்களில சொல்லுறீங்கள்” என்று கோபப்பட்டுக்கொண்டார். இது கனகாலத்திற்கு முன்பு நடந்தது ஆனால் அவரே இப்போது எங்களை தமது அமைப்பிற்கு அழைத்து தமிழ் மக்களுக்கு எட்ஸ் எச்ஐவி பற்றிய விளக்க உரையெல்லாம் நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். இது ஒரு முக்கியமாற்றம்.

தமிழ் மக்களென்றால் தமிழ் இளைஞர்கள் யுவதிகளை மட்டும் குறிப்பிடுகின்றீர்களா?

டான்ஸ்ரன் - பல தரப்பட்ட வயதுக்காரருக்கும் நாங்கள் உரைகள் நடாத்திக்கொண்டிருக்கின்றோம். பல பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தியிருக்கின்றோம்.

சினேகிதன் அமைப்பு தமிழ் ஆண்களுக்காக மட்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதா?

டான்ஸ்ரன் - தமிழ் ஆண்களக்காக என்று தான் ஆரம்பித்தோம். ஆனால் இந்த அமைப்பு வடஆசிய ஆண்களுக்கா ஒரு வெளிதான். எங்கள் அமைப்பில் சிங்கள, கன்னட, தெலுங்கு, மலேசிய தமிழ் ஆண்களும் இணைந்திருக்கின்றார்கள். எங்களால் தென்இந்தியர்;களுடன் பெரிதாக இணைய முடியவில்லை. அவர்களின் தொகை அதிகம், எனவே வடஆசியர்களில் மற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் எங்களுக்கான ஒரு அமைப்பாக “சினேகிதன்” இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இவர்கள் எல்லோரும் அங்கத்தவர்களா? உங்கள் அமைப்பில் இணைவதென்றால் என்ன செய்ய வேண்டும். எப்படித் தொடர்பு கொள்வது?

விஜெய் - அங்கத்தவர்கள் என்று இல்லை, ஆனால் சினேகிதன் அமைப்பின் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் வர விரும்பினால் எங்களுடன் மின்அஞ்கல் மூலம் தொடர்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.. எங்களிடம் ஒரு ஒப்பந்தப் பத்திரம் இருக்கின்றது அதை நிரப்பி கையப்பம் இட வேண்டும். தனி ஒருவரின் தகவல்கள் நம்பிக்கையோடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பலர் தமது வாழ்க்கை முறையை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டு வராததால் அவர்கள் தகவல்களை இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது சினேகிதன் அமைப்பின் கடமையாகும். நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்களையும் இந்த சந்திப்போடு பிரசுரிக்க முடியும்.

எப்போது சந்தித்துக் கொள்ளுவீர்கள்?

டான்ஸ்ரன் - மாதம் ஒரு முறை சந்தித்துக் கொள்ளுவோம். கோடை விடுமுறையில் பிக்னிக் செல்வதுண்டு. அதை விட இடையிடையே சந்தித்துக்கொள்வதுமுண்டு.

சிவா – விஜெய் எங்கள் அமைப்பில் தொடக்க காலத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லு, மிக சுவாரஸ்ரயமாக இருக்கும்.

விஜெய் - 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் இவர்களைச் சந்தித்தேன். எனக்கு அப்போது 21 வயது. எனது பிரச்சனை என்னவென்றால் எனக்கு அப்போது தமிழ் ஓரினப்;பாலினர் ஒருவரையும் தெரியாது நான் மின்தளங்களுக்குச் சென்று தமிழ் ஆண்கள் யாராவது
ஓரினப்;பாலினர்களாக இருக்கின்றார்களா என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை. நான் முதல் முதலாகச் சந்தித்தது இவனைத் தான். (சிவாவைக் காட்டுகின்றார்). நான் எனது நிலமையை சிவாவிற்கு எடுத்துச் சொன்னேன். அதற்கு சிவா தான் தமிழ் ஆண் ஓரினப்;பாலினர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்றிருக்கின்றேன், ஆனால் தனி ஒருவராக என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றது என்றார். நான் அப்போது எனது உயர்கல்வியை முடித்திருந்திருந்தேன். எனக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சிவாவிற்குப் பல ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களைத் தெரிந்திருந்தது. அவர்களையும் இணைந்து ஒரு சிறிய அமைப்பாக ஆரம்பிக்கலாம் என்ற ஆர்வம் இருவருக்குள்ளும் இருந்தது, ஆனால் இது சாத்தியமா என்ற சந்தேகமும் எங்களுக்குள் இருந்தது. விடை தெரியாப் பல கேள்விகள் எனது வாழ்க்கை முறை பற்றி எனக்குள்ளேயே அடங்கிப் போயிருந்தது அதற்கான விடை இங்கே கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளிருந்தது. நாங்கள் ஒரு நாளைத் தெரிவு செய்து, நான் நினைக்கின்றேன் ஜுலை மாதம் ஒரு சனிக்கிழமையென்று. நாங்கள் எங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்த அவர்கள் தமது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். சில மின்தளங்களிலும் விபரத்தை அறிவித்திருந்தோம். பேரிதாக அறிவித்தல் என்றில்லாமல் உள்ளுக்குள்ளாகவே தெரியப்படுத்தினோம். ஒரு நாலு பேர் வருவார்கள் என்று நம்பி வடையும் சம்பலும் எடுத்துக்கொண்டு போனாம். நம்பமாட்டீர்கள், பெரிதாக அறிவித்தல் ஏதுமில்லாமல் ஆரம்பித்த முதல் கூட்டத்திற்கு பன்னிரண்டு பேர் வந்திருந்தார்கள். அது எங்களுக்கு மிகவும் உச்சாகத்தைக் கொடுத்தது. வெளியே பல தமிழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் சந்தித்துக் கொள்வதற்கு ஓர் இடம் தேவைப்படுகின்றது என்பது தெளிவானது. பல வயதினர் வந்திருந்தார்கள். எங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் ரொறொன்டோவில் வாழும் தமிழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதே. எங்களுக்குச் சந்தித்துக்கொள்ள ஓர் இடம் தேவை, எமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஓர் இடம் தேவை, என்பதோடு வேறு எதுவெல்லாம் விடுபடுகின்றது என்பதை ஆராய்ந்தோம். நாங்கள் எங்கள் தமிழ் கலாச்சார நிகழ்வுகளுக்கு தமிழ் ஆண் ஓரினப்;பாலினர்கள் என்ற அடையாளத்துடன் செல்ல முடியாது. எங்களுக்கான ஓர் இடம் தேவை என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் ஆறுமாதத்திற்கு ஒருமுறை, அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் வந்தவர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொள்ளாலாம் என்பதோடு எம் போன்றவர்களுக்காக எதையாவது செய்யலாம், ஒன்றாக இணைந்து குழுவாக எங்காவது செல்லலாம் என்று கேட்டுக்கொண்டார்கள். அப்படித்தான் இந்த அமைப்பு ஆரம்பித்து வளர்ந்து கொண்டது. சினேகிதன் அமைப்பு அங்கு வருபவர்களின் வாழ்க்கை முறையை இரகசியமாகப் பாதுகாப்பதோடு, அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு தளமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. பல ஆண் ஓரினப்;பாலினர்கள் தமது வாழ்க்கை முறையை இன்னமும் தமது நண்பர்களுக்கோ, அல்லது குடும்ப அங்கத்தவர்களுக்கோ வெளிப்டுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம்

டான்ஸ்ரன் - உதவி அமைப்பு ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்பு நான் பல வேற்று இன ஆண் ஓரினப்பாலினர்களைச் சந்தித்து இருக்கின்றேன். இருந்தும் தமிழில் ஒருவரையும் சந்திக்கவில்லை என்பது எனக்குள் ஒரு ஏக்கத்தைத் தந்து கொண்டிருந்தது. முதல் முதலில் ஒரு தமிழ் ஆண் ஓரினப்பாலினரைச் சந்தித்த போது அப்பாடா என்று மனம் திறந்து நான் எதிர்கொண்ட பிரச்சனைகளை கலந்துரையாட முடிந்தது. எனக்கு பல நண்பர்கள் இருக்கின்றார்கள், அவர்களும் எனக்கு மிகவும் உதவியாகத்தான் இருக்கின்றார்கள், இருந்தும் ஒரு தமிழ் ஆண் ஓரினப்பாலினரின் நட்பு என்பது ஒருவிதத்தில் எதையோ கடந்து ஒரு மனஅமைதியைத் தரும் ஒன்றாகத்தான் என்னால் உணர முடிந்தது, அந்த உணர்வுதான் என்னைப் போன்ற மற்றை இளைஞர்களுக்கும் இப்படியான உதவி கிடைக்க வேண்டும், அதற்குக் காரணமாக நான் ஏன் இருக்கக் கூடாது என்ற உந்துதலை எனக்குள் உருவாக்கி விட்டது. எங்களைப் புரிந்துகொண்டவர்களின் நட்பும், உதவியும் கிடைக்காவிட்டால் நிச்சயம் இவர்கள் தொலைந்து போய் விடுவார்கள். மனஉளைச்சலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவிருக்கும்.

நீஙகள் எல்லோரும் படித்த நன்கு ஆங்கிலம் கதைக்கக் கூடிய மின்தளங்கள் பாவிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றீர்கள் உங்களுக்கு ஓர்பாலினச் சேர்க்கை பற்றிய தெளிவு அதிகம் இருக்கும், ஓரினப்பாலினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும், இப்படி இல்லாத தமிழ் இளைஞர்கள் எப்படி உங்களுடன் இணைந்து கொள்ள முடியும், அதற்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கின்றீர்களா?

டான்ஸ்ரன் - அப்படியான பலர் இணைந்திருக்கின்றார்கள். நாங்கள் ஆரம்பத்தில் பார்த்ரஸ் பகுதிகளின் பல கூட்டங்களை நடாத்தியிருக்கின்றோம், அப்போது கேள்விப்பட்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அனேகமாக இப்படியானவர்களுக்குத் தேடல்கள் அதிகம் இருக்கும், ஆங்கிலம் தெரியவேண்டிய அவசியம் இல்லை, ஏதோ வழிகளில் தேடல்கள் மூலம் தம் போன்றவர்களை இனங்கண்டு கொள்வார்கள்.

எந்த வயதினர் அதிகம் உள்ளார்கள்?
டான்ஸ்ரன் - எல்லா வயதினர்களும் உள்ளார்கள். இருபது வயதிலிருந்து அறுபது வயது வரையான தமிழ் ஆண்கள் எமது கூட்டங்களுக்கு வருவதுண்டு.

இந்த வயதானவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது. இவர்கள் திருமணமானவர்களா?

டான்ஸ்ரன் - பல விதமாக உள்ளார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து செய்தவர்கள் உள்ளார்கள், திருமணமாகாதவர்கள் உள்ளார்கள். அத்தோடு சில வயதான ஆண்கள் தமது ஆண் துணையோடு சந்தோஷமாக உள்ளார்கள். இவர்கள் பெரிதாகக் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதுமட்டுமல்ல கூட்டங்களுக்கு வந்து போன சில ஆண்கள், பின்னர் குடும்ப நெருக்கடியால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் நடந்திருக்கின்றது.

ஆண் துணையோடு இருக்கும் வயதான இந்த ஆண்கள் சமூகத்திற்குத் தம்மை அடையாளம் காட்டியவர்களாக உள்ளார்களா? இல்லைவிட்டால் மறைவில் உள்ளார்களா?

டான்ஸ்ரன் - இதுவும் எல்லா மாதிரியும்தான் இருக்கிறது. சிலர் வெளியில் வந்துவிட்டார்கள், சிலர் இன்னமும் மறைவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்துத்தான் எல்லாமுமே.

தம்மை ஓரினப்பாலினர்கள் என்று அடையாளம் காட்டாத ஆண்களுக்கு, அவர்கள் குடும்ப அங்கத்தவர்களால் திருமணம் செய்யக் கேட்டு நெருக்கம் கொடுப்பது அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், இந்த நிலையை அவர்கள் எப்படிச் சமாளிக்கின்றார்கள்.

விஜெய் - தம்மை அடையாளம் காட்டாதவர்களுக்கு மட்டுமல்ல, காட்டியவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றது. காட்டியவர்களுக்குத்தான இன்னமும் கடுமையாக உள்ளது என்பது எனது கருத்து. நான் எனது குடும்பத்திற்குச் சொல்லிவிட்டேன். அவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். அவர்களின் கருத்துப் படி கனடா வந்ததால்தான் நான் இப்படி மாறிப் போய்விட்டேன் என்றும் அதோடு சும்மா ஒரு வித்தியாசமாக உணரவேண்டும் என்பதற்காக, ஒரு நாகரீக மோக முகம் காட்டிக்கொண்டிருக்கின்றேன் என்று தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். முப்பது வயது வரும்போது நானாகவே அதை உணர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நம்புகின்றார்கள்.

உங்களுக்கு இப்போது எத்தனை வயது?
விஜெய் - இருபத்தைந்து.

எப்போது நீங்கள் உங்களை ஒரு ஓரினப்பாலினர் என்று உணர்ந்தீர்கள்?

விஜெய் - நான் வந்து ஐந்து வயதாக இருக்கும் போதே, நான் மற்றவர்களில் இருந்து வித்தியாசப்படுவதாக உணரத்தொடங்கிவிட்டேன்.

ஐந்து வயதென்றால் நம்பமுடியாமல் இருக்கின்றது,. வித்தியாசம் என்றால் அதை எப்படி உணர்ந்தீர்கள் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?

விஜெய் - அங்குமில்லாமல் இங்குமில்லாமல் என்று சொல்வார்களே, ஆண்களோடும் சேர்ந்து விளையாட முடியாமல் பெண்களோடும் சேர்ந்து விளையாட முடியாமல் ஒருவித தனிமையை உணரத் தொடங்கினேன்.

டான்ஸ்ரன் - நானும் சின்ன வயதிலேயே நான் மற்றவர்களிலிருந்து வேறு படுவதாக உணரத் தொடங்கிவிட்டேன். எனது அண்ணாவின் நண்பர்கள் என்னை விளையாடச் சேர்க்க மாட்டார்கள். தள்ளி விட்டு விடுவார்கள். சின்னவயதில் உணரத் தொடங்கிவிட்டோம் என்பது பாலியல் சம்மந்தமாக இல்லை, ஆனால் மற்றைய ஆண்களிலிருந்து வேறுபடுவதாக நிச்சயமாக உணரத்தொடங்கிவிட்டோம்.

சிவா - எனக்குச் சின்ன வயதில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாமல் இருந்தது. பெண்களோடு சேர்ந்து விளையாடவும் முடியாது, ஆண்கள் கேலி செய்வார்கள், இது பெரிய தடுமாற்றமா இருந்தது.

டான்ஸ்ரன் - நீங்கள் சியாம் செல்லதுரையின் “Funny Boy ” வாசித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அவர் எழுதிய அத்ததையும் எனது வாழ்விலும் இருந்தன. அவர் குறிப்பிட்டிருந்தது எல்லாம் உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகின்றேன், அப்படியே அவருடைய வாழ்க்கையை என்னுடையதோடு நீங்கள் பொருத்திப் பாரக்க முடியும்.

நீங்கள் உங்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக உணரும் போது எப்படியிருந்தது. கவலையாக, குழப்பமாக இல்லாவிட்டால் பயமாக?

விஜெய் - எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. ஏனென்றால் இது பாலியல் சார்ந்ததல்ல, ஆனால் ஆண்கள் எங்களைப் புறக்கணிப்பது, முக்கியமாக என் வயதுச் சிறுவர்கள் விளையாடும் எந்த விளையாட்டிலும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நான் அதிகம் பெண்களோடுதான் விளையாடுவேன், எனக்குப் பெண் நண்பிகள்தான் அதிகம் இருந்தார்கள், இதனால் பாடசாலைகளில் ஆண்கள் என்னை ஒதுக்கத் தொடங்கிட்டார்கள் அது எனக்குக் குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது.

சிவா - நான் அதிகமாக எனது சகோதரியின் நண்பிகளுடன் விளையாடுவதுதான் வழக்கம். இது மற்றவர்களுக்கு நான் வித்தியாசமாக இருப்பதாக உணரச்செய்யும், அதனால் அவர்கள் என்னை வித்தியாசமாக நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

உங்கள் பெற்றோர்களுக்கு உங்கள் நிலை தெரியுமா?
சிவா - இப்போது தெரியும்.

அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?
சிவா - தெரியாது நான் அவர்களோடு கதைப்பதில்லை.

கதைப்பதில்லை என்றால் இந்தப் பிரச்சனையால்தானா? அப்படியென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?
சிவா - ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வதிலும் பார்க்க அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அவர்களுக்கு விளங்கிக் கொள்வது கடிமாக இருக்கும் என்பது உங்களுக்குப் புரிகின்றதா?

சிவா - ஓம், எனது அப்பாவுக்குத்தான் முதலில் தெரியவந்தது. எப்படியென்று எனக்குத் தெரியாது, அவர் அம்மாவுக்குச் சொல்ல அம்மா என்னிடம் கேட்டார். நான் ஒத்துக் கொண்ட போது அது சண்டையாக மாறியது. அதன் பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் அவர்களோடு கதைப்பதில்லை.

உங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்களா?

சிவா - எனக்கு இப்போது இருபத்தி ஐந்து வயது. எனக்கு இருபத்தொரு வயதாக இருக்கும் போதே அவர்கள் வற்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள். நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன், முன்பு ஒன்று இரண்டு மணித்தியாலங்கள் வீட்டிற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருக்கின்றார்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த சகோதரியுடன் எனக்கு நெருங்கிய உறவு இல்லை. எனது இரண்டாவது சகோதரிக்கு நான் பதினாறு வயதாக இருக்கும் போது சொல்லி விட்டேன். அவருக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது இருந்தாலும் இதுபற்றிக் கதைப்பதை அவர் எப்போதுமே தவிர்த்துத்தான் வந்துகொண்டிருக்கின்றார்.

டான்ஸ்ரன் - பொதுவாகவே தமிழ் மக்கள் பாலியல் சம்மந்தமாக எதையும் கதைப்பதில்லை. தாம் காதலிப்பதைக் கூடக் கதைப்பதற்கு அஞ்சுபவர்களாகவே இருக்கின்றார்கள். இப்படியாகத் தவர்க்கும் மனப்பான்மை கொண்டவர்கள்தான் இவர்கள். நான் ஒரு ஓரினப்;பாலினர் என்பது எனது குடும்பத்தில் எல்லோருக்குமே தெரியும், நான் எந்த ஒரு குடும்ப நிகழ்விற்குச் சென்றாலும் ஒருத்தரும் என்னை ஒன்றும் கேட்பதில்லை. எல்லாத்தையும் மூடியே வைத்திருப்பார்கள்.

சும்மா எதையாவது கேட்டு உங்கள் மனதை நோகச் செய்வதிலும் பார்க்க இது பரவாயில்லை என்றே நினைக்கின்றேன்.

டான்ஸ்ரன் - அப்பிடி என்றில்லை, ஒரு குடும்ப நிகழ்விற்குச் செல்லும் போது எனது சகோதர்கள் மனைவி குழந்தைகளுடன் வந்தால் அவர்களை நன்றாக வரவேற்றுக் கதைத்துச் சந்தோஷமாக இருப்பார்கள், எனது வாழ்க்கை பற்றி ஒருநாளும் ஒருத்தரும் ஒன்றுமே கேட்பதில்லை. காரணம் எனது வாழ்க்கை முறையை அவர்கள் வாழ்க்கையாகப் பார்க்கவில்லை.

சிவா - அவர்களுடைய பார்வையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதைத்தான் வாழ்க்கையாகப் பார்க்கின்றார்கள். நாங்களும் ஒருநாளைக்கு மனம் மாறி ஒரு பெண்ணைத் திருமணம் செய்வோம் என்று நம்புவதால் எமது வாழ்கையைப் பற்றிக் கதைப்பதைக் கூடத் தவிர்க்கின்றார்கள்.

சினேகிதன் அமைப்பிற்கு பிரச்சனையோடு அதாவது குழம்பிய மனநிலை என்று வைத்துக்கொள்வோமே, வந்து தமது குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு போனவர்கள் உள்ளார்களா?

டான்ஸ்ரன் - நிறம்பப் பேர் உள்ளார்கள். சினேகிதன் அமைப்பின் நோக்கமே அதுதான். நீங்கள் தனியாக இல்லை உங்களைப் போன்றவர்கள் பலர் எமது சமூகத்தில் உள்ளார்கள், அவர்களுடன் உரையாடுவதன் மூலம் உங்களுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் தெளிவடைவீர்கள் என்பதைத்தான் நாம் முக்கியமாக அவர்களுக்கு உணர்த்துகின்றோம். தமக்கான ஒரு துணையை இங்கே கண்டுகொண்டு சந்தோஷமாக விலகியவர்களும் உள்ளார்கள். இதுதான் எமக்குத் தேவை. இன்று உங்களோடு நாம் மனம் திறந்து கதைப்பதற்கான காரணமும் இதுதான். இந்த உரையாடலை வாசிக்கும் ஒன்றிரண்டு இளைஞர்களாவது தமக்கு உதவி செய்யக் கூடிய அமைப்பு ஒன்று ரொறொன்டோவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று அடையாளம் கண்டு எங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கான உதவிகளையும் ஆறுதலையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.


தங்களது குடும்பத்தின் தூண்டுததால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்கள் உள்ளார்களா?

சிவா - பலர் இருக்கின்றார்கள்

அதுதான் மாறவேண்டும் என்பது எனது கருத்து, என்னைப் பொறுத்தவரை சமூகம் மாறும், எமது குடும்பம் மாறும் அதன் பின்னர் நாங்கள் வெளிப்படையாக ஒரு துணையுடன் வாழலாம் என்று நினைத்தால் நீங்கள் ஒருபோதும் வாழ முடியாது, அதே நேரம் உங்கள் குடும்பம் சமூகம் என்று பார்த்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் செய்யும் துரோகம் அல்லவா?

டான்ஸரன் - சமூகம் மாறேலை என்று சொல்ல முடியாது. இப்படி ஒரு தமிழ் பத்திரிகைக்காக எங்களைப் பேட்டி நீங்கள் எடுக்கின்றீர்களே இதுவே எமது சமூகத்தின் ஒரு பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் நினைக்கிறன் 2006ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ் ஆண் ஓரினப்;பாலினர் ஒருவருக்குப் பெரிதாகத் திருமணம் நடந்ததென்று, இதெல்லாம் பெரிய மாற்றம். சிறிது சிறிதாகத்தானே எந்த மாற்றமும் இடம்பெறும். முன்பு 90களில் தமிழ் பத்திரிகைகளில் எங்கள் அமைப்புப் பற்றி நாங்கள் எழுத முயன்று தோல்வியடைந்தோம். பணம் கொடுத்ததால் விளம்பரம் மட்டும் போடவிட்டார்கள். பல கடைகள் தங்கள் கடைகளில் எமது துண்டுப் பிரசுரங்களைப் போடக்கூட அனுமதிக்கவில்லை.


விஜெய் - நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் செயல்படுத்துவதுதான் சிரமம். எனக்கு இப்பவும் நினைவிருக்கு, நான் அப்ப மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தனான். என்னுடைய அப்பா என்னைத் தனியாக அழைத்து உனக்குப் பெண்களைப் பிடிக்குமா என்று கேட்டார். எனக்குப் பெரிதாக அவர் என்ன கேட்கின்றார் என்பது விளங்கவில்லை ஓம் பிடிக்கும் என்று சொன்னேன். அதில்லை உனக்கு கேர்ள் பிரண்டாகப் பெண் இருப்பது பிடிக்குமா என்று கேட்டார். அப்போது கூட அந்த வயதில் எனக்கு அவர் எதைக் கேட்கின்றார் என்ற தெளிவு வரவில்லை, இருந்தாலும் ஓம் நல்லாப் பிடிக்கும் என்று சொன்னேன் அதற்கு அவர் உனக்குப் பெண்ணைப் பிடிக்குமென்றால் ஒரு பெண் போல நடப்பதை நீ நிப்பாட்டிக் கொள் என்று சொன்னார். எங்கட சமூகத்திற்கோ அல்லது குடும்பத்திற்கோ ஓர் பாலினச் சேர்க்கையாளர்கள் என்றால் என்ன என்று தெரியாது என்பது பொய். அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கின்றது, ஆனால் ஒருவரும் அது பற்றிக் கதைப்பதில்லைத் தெரிந்து கொள்வதைக் கூட வெட்கப்படும் விடையமாகத் தான் பார்க்கின்றார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தால் சமூகத்தால் ஓர் ஓரினப்;பாலினர் என்று அடையாளம் காணப்பட்டால் உங்களை எப்படி மாற்றலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருக்கின்றது. உங்களில் எதுவோ ஒரு பிழை இருப்பதைப் போலதான் அவர்கள் பார்க்கின்றார்கள், இந்த வேளையில்தான் சினேகிதன் போன்ற அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமாகப் படுகின்றது. எங்களைப் போன்றவர்களுடன் மனம்விட்டுக் கதைத்து சந்தோஷமாகச் சிரித்துப் பழகுவதென்பதுதான் எங்களை ஓர் சுதந்திர மனிதனாக முடிவுகளை எடுக்க வைக்கும் இல்லாவிட்டால் எப்படி எங்களாளல் எமது குடும்பத்தை சமூகத்தைத் துணிவாக எதிர்கொள்ள முடியும் சொல்லுங்கள்.

சிவா - நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எமது சமூத்தை மாற்ற முடியும் என்பது எனது கருத்து. அதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக வேலை செய்ய வேண்டும். செய்து கொண்டிருக்கின்றோம்.

டான்ஸ்ரன் - ஓர் ஆண், தான் ஓரினப்;பாலினர் என்று ஒத்துக்கொண்டு விட்டு தனது சமூகத்தையும், குடும்பத்தையும் எதிர்த்துக் கொண்டு வெளியேறிவடுவதென்பது இலகுவான காரியமல்ல. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு அவர் வீட்டிற்கு ஒரே மகன். அவர்தான் அந்த குடும்பத்தின் சந்ததியைப் பெருக்க வேண்டும், குடும்பப் பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள், இப்பிடிப் பல அழுத்தங்களுக்கு மத்தியில் எல்லோரையும் விட்டு இலகுவது என்பது இலகுவான காரியமல்ல. எங்களுக்கு எமது வாழ்க்கையிலும் சந்தோஷம் வேண்டும், அதே நேரம் எமது குடும்பம், சமூகமும் எமக்கு வேண்டும்.

எமது மக்களுக்கு சமூகத்திற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

டான்ஸ்ரன் - ஒரு தமிழ் கலியாணப் புரோக்கரை எங்களுக்காகவும் வைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். (சிரிக்கின்றார்கள்) நான் பகிடிக்குக் கூறவில்லை. எமது இளைஞர்களுக்குப் பேசித் திருமணம் செய்வதே பழகிப் போய் விட்டது. தான் ஒரு ஓரினப்;பாலினர் என்று தெரிந்து கொண்டவனுக்குக் கூடத் தனக்கான ஒரு துணையைத் தேடும் திறமை இல்லாமல் இருக்கின்றது. இதனால் பல தவறான உறவுகளில் ஈடுபட்டு தம் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்கின்றார்கள்.

விஜெய் - இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பு மீண்டும் எமது சமூக மாற்றம் பற்றிக் கூறலாம் என்று நம்புகின்றேன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளார்கள். எனக்கு 16வயது இருக்கும் போதே நான் அவர்களுக்கு என் நிலையைக் கூறி விட்டேன். அவர்கள் இதைப் பெரிதாக எடுக்கவில்லை. மாறாக எனது தங்கை எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளார். விழிப்புணர்வுக் கூட்டங்களின் அவள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றாள், அதேவேளை இளம்வயதினர் பலர் இந்த விடையத்தில் மிகவும் தெளிவாக உள்ளார்கள் என்பதுதான் என் எண்ணம். என் வயதினரிலும் விட, எனக்குப் பத்து வயது குறைந்தவர்களின் புரிந்துணர்வு மிகவும் அதிகமாக உள்ளது. இது எமது சமூகத்தின் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத்தான் உணர்த்துகின்றது. அடுத்த சந்ததியினருக்கு நாம் எதிர்கொண்ட அளவிற்குப் பிரச்சனை இருக்காது. மேலும் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என்ன, நாங்கள் வித்தியாசமானவர்கள், எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எங்களை மதிக்க அவர்கள் பழக்கிக்கொள்ள வேண்டும்.


நீங்கள் அடிக்கடி வித்தியாசமானவர்கள் என்ற பதத்தை உபயோகிக்கின்றீர்கள் அது உகந்ததா?

டான்ஸ்ரன் - வித்தியாசம் என்றால் பெரும்பான்மையிலிருந்து நாங்கள் வேறுபடத்தான் செய்கின்றோம். அது எந்தக் காரணமாகவும் இருக்கலாம். நீங்கள் ஒரு பெண்ணியவாதியாக இருக்கும் பட்சத்தில் நீங்களும் எமது வழமையான பெரும்பான்மைச் சமுதாயத்திலிருந்து வேறுபடுகின்றீர்கள். அதனால்தான் இந்தப் பதத்தை நாம் உபயோகிக்கின்றோம்.

விஜெய் - நாங்கள் எங்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசம் என்று உணர்கின்றோம். நாங்கள் அதைக் கூறலாம், ஆனால் மற்றவர்கள் அப்படிக் குறிப்பிடுவது தவறு.

தாம் ஓர் பாலினச்சேர்க்கையளார் என்று தெரிந்து கொண்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது. அவர்கள் தமது காதல் வாழ்க்கையைத் தமது மனைவிக்குத் தெரியாமல் தொடர்கின்றார்களா?

டான்ஸ்ரன் - இதிலும் பலவிதமானவர்கள் உள்ளார்கள். சிலர் தமது மனைவியுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அது எப்படிச் சாத்தியம்?

டான்ஸ்ரன் - இரு பால்சேர்க்கையாளர்கள் இருக்கின்றார்கள் தானே. திருமணத்திற்கு முன்பு ஆண்ணோடு உறவு வைத்திருந்தவர்கள், திருமணமான பின்னர் மனைவியுடன் மட்டும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகின்றீர்களா?

டான்ஸ்ரன் - ஓம் மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கின்றார்கள். ஆண் நண்பர்களைச் சந்தித்து ஒரு பியர் அடிப்பார்கள், சாப்பிடப் போவர்கள் ஆனால் உடல் ரீதியான உறவு என்பதைத் தன் மனைவியுடன் மட்டும் என்று வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்ப காதலிப்பது ஒருத்தியைக் கை பிடிப்பது ஒருத்தியை என்று இருக்கின்றதுதான் அதுபோலதான் இதுவும்.

ஆனால் இதில் உடல் உறவு சம்மந்தமான வேறுபாடுகள் உள்ளதே.

டான்ஸ்ரன் - அதுதான் அவர்கள் அப்படியென்றால் இருபாலினச் சேர்க்கையாளர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லாதவர்கள்தான் மனைவிக்குத் தெரியமால் தமது உறவைத் தொர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்பவர்களாக உள்ளார்கள். இது எயிட்ஸ் அளவிற்குப் பிரச்சனையைக் கொண்டுபோய் விடுவதுமுண்டு.

உங்களுக்குத் தமிழ் பெண் ஓரினப்பாலினர்கள் யாரையாவது தெரியுமா? நான் அவர்களுடன் உரையாட முடியுமா?டான்ஸ்ரன் - பலர் இருக்கின்றார்கள், ஆனால் வெளியில் வந்து உரையாடத் தயாராக இருக்கின்றார்களா என்பது தெரியாது. எமது சமூகத்தில் பெண்களுக்கான வெளியே இன்னும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் பெண் ஓர்பாலினர்களை தம்மை அடையாளப்படுத்தினால் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்று நம்புகின்றேன்.

நீங்கள் ஏன் ஆண்களுக்கான அமைப்பாக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் பெண்களையும் இணைத்து இயங்கலாமே? தமிழ் பெண் ஓர்பாலினர்களுக்கான அமைப்பு ரொறொன்டோவில் இருக்கின்றதா?

டான்ஸ்ரன் - சினேகிதன் அமைப்பு ஆண்களுக்கு மட்டுமானது. பெண்கள் விரும்பினால் அவர்களாக ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும். தற்போது பெண்களுக்கென்று அமைப்பு இருப்பதாக நம்பவில்லை.

சினேகிதன் அமைப்பு எயிட்ஸ் நோயளர்களிற்கு எந்த அளவிற்கு உதவி செய்கின்றது?.

டான்ஸ்ரன் - உதவி என்பதில்லை விழிப்புணர்வைக் கொண்டு வருவதுதான் எமது நோக்கம். உடலுறவு, அதற்கான பாதுகாப்புப் பற்றிய தெளிவு எமது சமூத்தில் மிகக் குறைவாக உள்ளது. கொண்டம் (ஊழனெழஅ) என்று ஒன்று உள்ளதே சிலருக்கு இன்னமும் தெரியாமல் உள்ளது. இந்தத் தெளிவுகளை அவர்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில்தான் சினேகிதனின் கவனம் உள்ளது. இதனால் தவறான பாதுகாப்பற்ற உறவுகளில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புக்கள் என்பனவற்றிற்குச் சென்று விழிப்புணர்வு உரைகளை நடாத்தி வருகின்றோம். பல பெற்றோர் தமது குழந்தைகளுடன் இது பற்றிக் கதைப்பதைத் தவிர்த்தே வருகின்றார்கள். அவர்களுக்கு எச்ஐவி வைரஸ், எயிட்ஸ் பற்றிய தெளிவைக் கொண்டு வரவேண்டும் என்பது எமது அமைப்பின் நோக்கம். நாங்கள் ஒன்றும் பெரிதாக சமூகத் தொண்டு செய்கின்றோம் என்று கூறவில்லை. எம்மால் முடிந்ததை நாம் செய்கின்றோம். இன்னும் ஒளிந்து கொண்டிருக்கும் ஆண் ஓரினப்;பாலினர்கள் எங்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான் சினேகிதன் அமைப்பின் விருப்பம்.

அப்படிச் சொல்ல முடியாது நீங்கள் மிகவும் நல்ல விடையங்கள் செய்கின்றீர்கள். உங்கள் சேவையைத் தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் “வைகறை” சார்ப்பில் எனது விருப்பமும் கூட.

நல்லது டான்ஸ்ரன், விஜெய், சிவா உங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாது வைகறைக்காக என்னோடு உங்கள் உணர்வுகள் கருத்துக்கள் போன்றவற்றை தெளிவாகவும், வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டதற்காக மிகவும் நன்றிகள். சினேகிதன் அமைப்பு எப்போதும் தனது சேவையை எமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்திக்கொள்கின்றேன்.


நன்றி:வைகறை