தற்கால இலங்கை அரசியலைத் தவிர்த்து எதையும் கலந்துரையாட சிந்திக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு அனைத்துத் தமிழ் மக்களும் தள்ளப்பட்டிருக்கும் காலம் இது.
சில வருடங்களுக்கு முன்பாயின் கனடாவில் பெண்களின் நிலை என்பதுதான் நினைவிற்கு வந்திருக்கும். அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பின் படி ஒன்றாறியோ மாகாணத்தில் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகும் பெண்களில் முன்நிலையில் நிற்பவர்கள் இலங்கைத் தமிழ் பெண்கள். பெண்கள் மீதான வன்முறை, தற்கொலைகள், கொலைகள் என்பன கடந்த ஆண்டுகளில் அதிகமான இடம்பெற்றுக் கனேடிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழ் மக்களிடம் ஒரு இறுகிய மனநிலை காணப்படுகின்றது. எம்நாட்டுப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் எம்மவரிடையே நெருக்கமாக உறவை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.
இன்று என்னுடைய உரை இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு புலம்பெயர் தமிழ் மக்களிடையே அவதானிக்கக் கூடியதாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பண்பாட்டு மாற்றம் அதற்கான காரணங்கள் பற்றியதாகும்.
35வது இலக்கியச்சந்திப்பிற்காக எனக்குக் கொடுக்கப்பட்ட அல்லது நான் தெரிவுசெய்த தலைப்பு "சின்னத்திரை பெரியதிரை புகலிட சமூகப் பண்பாட்டில் ஏற்படுத்தியருக்கும் தாக்கம்" என்பதாகும். அதில் ஒரு சிறு மாற்றம் செய்து ஊடகங்களும் கனேடியத் தமிழ் சமூகமும் என்று மாற்றி அமைத்திருக்கின்றேன்.
ஊடகங்கள் எனும்போது அச்சு ஊடகங்களைத் தவிர்த்து மின்னியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்பனவற்றில் மேல் எனது கவனத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.
இலங்கை ஒரு கலாச்சாரப் பாலைவனம் என இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் யாழ்ப்பாணந்தான் ஒரு கலாச்சாரப் பாலைவனம் என ஏ.ஜே கனகரட்னா 79ம் ஆண்டு றீகல் தியேட்டரில் இடம்பெற்ற ரூமேனியத் திரைப்படவிழா பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். பொழுது போக்குத் துறையை பொறுத்தவரை யாழ்ப்பாணம் போர் அடிக்கிறது அதனால்தானோ என்னவோ யாழ்ப்பாணத்தில் திரையரங்குகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன என்கின்றார் இவர். தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தற்போது பொழுதுபோக்குப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.
புலம்பெயர்வு என்பது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் ஒன்று. வரட்சி, நோய் காரணமாக உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களும், கல்வி, தொழில் நிமித்தமாய் உள், வெளிநாட்டுகளில் புலம்பெயர்ந்த பலரும் இருக்கின்றார்கள். ஆனால் இப்புலப்பெயர்வுகள் அனைத்துமே மட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கும், நாடுகளுக்கும் அவரவர் தெரிவிலேயே இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு வடக்கிலிருந்து கிழக்கு, தெற்கு மாகாணங்களுக்கு தொழில் கல்வி நிமித்தமாகவும், தீவுப்பகுதிகளிலிருந்து வடக்கு தெற்கு பிரதேசங்களுக்கு வியாபார நிமித்தமாகவும் புலம்பெயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். வெளிநாட்டுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்று பார்க்கும் போது தொழில் நிமித்தமாய் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளையும், கல்வி நிமித்தமாய் லண்டனையும் குறிப்பாகச் சொல்ல முடியும்.
ஆனால் 80களின் பின்னர் அரசியல் சுதந்திரம், வாழ்தல் அல்லது இருப்பு, அடிப்படை உரிமை போன்ற காரணிகளுக்குகாக உலகளாவிய அளவிற்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு தெரிதல் என்பது இருக்கவில்லை. அனைத்தையும் துறந்து இருப்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் இந்தப் புலப்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
80களுக்கு முந்திய காலங்களில் இடம்பெற்ற புலப்பெயர்விற்கும், பிந்தைய காலங்களில் இடம்பெற்ற புலப்பெயர்விற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நோக்குவோம் ஆனால் 80களுக்கு முந்தைய காலங்களில் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த பின்னரும் தம்முடைய தாய்வழிச்சமூகத்துடன் கணிசமான அளவிற்கு தொடர்பை வைத்திருந்தார்கள். குடும்ப நிகழ்வுகள் (மரணவீடு, திருமணங்கள்) கோயில் திருவிழாக்கள், போன்றவற்றிற்கு சென்று வருதலோடு விடுமுறை என்பது தாய்நாடு செல்தல் என்பதாயே பலருக்கு அமைந்திருந்தது. (தமிழ்நாட்டுத் தமிழர்களின் தற்போதைய நிலை இதுவாகத்தான் இருக்கின்றது)
80களின் பின்னர் புலம்பெயர்ந்தோர் பலருக்கு தாய்வழிச் சமுதாயத்தினுடனான தொடர்பு முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் உறவுகள் எவருமற்ற நிலையில் உலகெங்கும் தெறிபட்டு வாழும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையை நாம் மிக உன்னிப்பாக நோக்குவோமானால் இப்புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தோள்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாரத்தை நாம் அவதானிக்க முடியும். அதாவது தமிழரின் தனித்துவமாகப் போற்றப்பட்டு பேணப்பட்டு வந்த பண்பாட்டைக் காக்கும் முக்கிய பழு இந்தப் புலம்பெயர் மக்களின் தோள்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றது. தாய்வழிச் சமூத்துடனான கணிசமாக தொடர்பு அறுபட்ட நிலையில், பண்பாட்டைப் பேணுவதற்கு முக்கிய அடித்தளமான மொழி மருகத்தொடங்கிய நிலையில், சமூகம் சிதறுண்ட நிலையில் பண்பாட்டைப் பேணப் போராடும் இலங்கைத் தமிழர்களின் கவனம் தமக்கு மிகநெருக்கமாக ஒத்ததாக இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பக்கம் முற்றுமுழுதாகத் திரும்புகின்றது.
இலங்கைத் தமிழர்கள் எப்போதுமே மாற்றங்களை இலகுவில் உள்வாங்கி ஏற்றுக் கொள்பவர்களான இருக்கின்றார்கள். காலனித்துவத்தின் பிந்தைய காலங்களைப் பார்த்தோமானால் தமிழ்நாட்டு மக்களிடையே மேற்கத்தைய நாகரீகம் ஏற்படுத்திய தாக்கத்தை விட இலங்கைத் தமிழர்களிடம் அதிக தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்பட்டிருக்கின்றது. (ஒரு சிறு உதாரணம் கூற வேண்டுமாயின் தமிழ்நாட்டில் இன்றும் உயர்பாடசாலைகளில் தாவணி போடாமல் செல்ல முடியாத நிலை இருக்கின்றது.)
இலங்கையில் இருக்கும் போது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமக்கான பிரத்தியேகமான வாழ்க்கை முறையையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வந்த மக்கள், புலம்பெயர்ந்து கனடா போன்ற பல்கலாச்சார நாடொன்றிற்குக் குடிபுகுந்தவுடன் அவர்கள் சிறிது சிறிதாக தமக்கான பிரத்தியேகமான பண்பாடுகளை இழக்கத்தொடங்கியுள்ளார்கள். ஒரு சமூகத்தின் ஊடாட்டமே பண்பாட்டை இயக்கத்தில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாகின்றது.
பிரதேச, வட்டார, கிராமிய, ஏன் வீதிகளுக்கான தனித்துவமான பண்பாட்டு அம்சங்களோடு வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்து இனம், மொழி, மதம், கலாச்சாரம், வர்க்கம் அனைத்திலும் தமக்கான அடையாளங்களுடன் ஒவ்வாதவர்களுடன் வாழத்தொடங்க அவர்களை அறியாமலேயே அவர்களது பிரத்தியேகமான அடையாளங்கள் அழியத் தொடங்கி விட்டன. ஒன்றை இழக்கும் போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப அவர்களுக்கான பிரத்தியேகமான ஒன்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அபாயகரமான அந்த வெற்றிடத்தை நிரப்பும் பணியை கனேடியத் தமிழ் ஊடகங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றன.
ஒரு சமூகத்தின் பண்பாட்டைப் பேணிக்காப்பதில் அந்நாட்டு அரசு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது இலங்கை அரசின் ஆதவு இல்லாமலேயே பலஆண்டு காலமாக சமூக, கலாச்சார மொழியின் ஆதிக்கம் மூலம் தனக்கான ஒரு காத்திரமான இடத்தைக் தக்க வைத்துக்கொண்டிருந்தது. இலங்கை ஊடகங்கள்; மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளை தணிக்கைகள் செய்து வழங்கிவருவதனால் தாய்நாட்டுச் செய்திகளை முழுமையாக அறிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச உரிமையும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை புலம்பெயர் ஊடகம் என்பது உலகளாவிய அளவில் பரந்திருக்கும் தமிழரிடையேயான தொடர்பாடல் முறைமையில் முன்நிலையில் நிற்பதோடு புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க, வாசிக்க, பார்க்க வேண்டியவற்றைத் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தாமே தீரம்மானித்து வழங்கியும் வருகின்றன. தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டின் முக்கிய காரணிகளின் ஒன்றாகவும் அடிநாதமாகவும் விளங்கும் தமிழ்மொழியின் பங்கு என்பது புலம்பெயர் தமிழரிடையே மருகிய நிலையில் அந்நியமொழியின் உதவியுடன் பண்பாட்டு காத்தலும் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றது. உதாரணத்திற்கு தம்கல்வி மொழியான ஆங்கிலத்தின் மூலம் மேடைப்பேச்சு, இசை, நடனம், நாடகங்கள் என்பனவற்றை அடுத்த சந்ததியினர் பயிலுகின்றார்கள்.
இது மிகப்பெரிய பரிதாபமான ஒருநிலையாகவே படுகின்றது. இவ்வேளையில்தான் புலம்பெயர் தமிழரின் பண்பாடு என்பது ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றுக்கொள்கின்றது எனலாம்.
மின்னியல் ஊடகம் எனும் போது முதலில் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டோமானால்,தமிழ்நாட்டுப் பெரியதிரை இலங்கை வாழ் தமிழரிடையே தாக்கங்களைக் கொண்டு வந்திருக்கின்றது என்பது உண்மையாயினும் அத்தாக்கங்கள் அதிகம் புறநிலைத்தாக்கமாகவே இருந்திருக்கின்றது. நடப்பியல் மெய்மையைப் புறக்கணித்து இயல் முரண்பட்ட கற்பனாவாதத்தில் இளையோர் திளைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும். உதாரணத்திற்கு இளம்சமுதாயம் கதாநாயகர்கள் போல் உடையணிந்து நாயகத்துவத்திற்குள் தமைக் கொண்டு செல்ல முயன்றிருக்கின்றார்கள். பெரியதிரை என்பது குறுகிய நேரத்திற்குள் யதார்த்தத்திற்குப் புறம்பான வாழ்வுக்கு ஒவ்வாத ஒரு கதையை திரையில் சொல்லி முடித்து விடுவதால்; அவை எப்போதுமே ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது.
அதேவேளை புலம்பெயர் இளம்சமுதாயத்தில் பெரியதிரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்று பார்க்கும் போது பல்கலாச்சார நாடான கனடாவில் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பல்கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும் போது இலங்கைத் தமிழ் இளஞர்கள் தமது கலைநிகழ்வாக திரைஇசை நடனங்களையே முன்வைக்கின்றார்கள். இந்நடனங்களை வழங்குவதற்காகப் பணமாதங்கள் நடன ஒத்திகை பார்க்கின்றார்கள். அதேவேளை இவர்களது உடை அலங்காரங்களைப் பார்த்தீர்களானால் திரையில் நாயகர்கள் எப்படியான உடையணிந்து அலங்காரம் செய்திருந்தார்களோ அதை வகையைத்தான் இவர்களும் தெரிவ செய்திருப்பார்கள். நடன அசைவுகள் கூட இவர்களது கற்பனையில் திறமையில் இருந்து வெளிப்படாமல் திரைப்படப்பாடலை அப்படியே ஒத்திருப்பதாகவே அனேகமாக அமைந்திருக்கின்றது. எனவே இவர்களது ஒத்திகை பார்க்கும் நேரம், உடை அலங்காரங்களுக்கான செலவு ஒருபுறம் இருக்க கற்பனைத் திறன் என்பது கூட மட்டுப்படுத்தப்படுகின்றது. தற்போது ரொரொன்டோவில் பகுதி நேர வேலையாக நடனக் குழுக்கள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல ஊர்நிகழ்வுகள், பழைய மாணவர் சங்கநிகழ்வுகளிற்கு இவர்கள் நடனத்திற்காக அழைக்கப்படுவதுண்டு. அத்தோடு திரைஇசை நடனத்தை மட்டும் கொண்டு வருடா வருடம் இடம்பெறும் கலைநிகழ்வுகளும் உண்டு. உதாரணத்திற்கு வசீகரா, மின்னலே.
அதேவேளை திரைஇசை நடனத்தை இழிந்த வடிவமான கடும் தூய்மைவாதிகளான யாழ்ப்பாணியப் பெற்றோர் நோக்கியதால் தம் பிள்ளைகளுக்கு கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் கற்பித்துப் பெருமைப்பட்டு;கொள்கின்றார்கள். இவ்வொழுக்கவாதிகள்தான் புலம்பெயர் மக்;களிடையே மரவுவழி வந்த பண்பாட்டினைப் பாதுகாக்கும் காவலர்களாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். மருகத்தொடங்கி விட்ட பல பிற்போக்குச் சம்பிரதாயங்களையும், பண்பாடுகளையும் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான்.
பெரியதிரை ஏற்படுத்திய பாரிய தாக்கம் ஏது என்று பார்த்தால் மற்றைய அனைத்து ஊடகங்களையும் இது ஆக்கிரமி;த்துக் கொண்டிருக்கின்றது. அச்சு ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகளோடு மின்னியல் ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, போன்ற அனைத்துமே தமிழ்நாட்டுப் பெரியதிரையை விளம்பரப்படுத்தி ஆராய்வதிலேயே தமது நேரத்தையும் பக்கங்களையும் செலவிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்று வருடத்திற்கு 4 அல்லது 5 முழுநீளத்திரைப்படங்கள் இலங்கைத் தமிழர்களால் கனடாவில் எடுக்கப்பட்டு திரையிடப்படுகின்றன. இத்திரைப்படங்கள் அனேகமாக தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் பாதிப்பபைக் கொண்டு அமைந்திருக்கின்றன. (பாடல்கள் சண்டைக் காட்சிகள்)
பெண்ணிய நோக்கில் பெரியதிரையை ஆராய்ந்தோமானால் அனைத்துப் படைப்புக்களுமே பெண்ணை இரண்டாம் பிரஜையாகவும், ஒரு பாலியல் பிண்டமாகவும் பிரகடனப்படுத்துவதிலேயே முன்நிற்கின்றன. அத்தோடு சாதியம், மதம் என்பனவற்றை ஊக்கவிக்கும் ஒரு ஊடகமாக இது விளங்குவதனால் எமது அடுத்த சந்ததியினர் பிற்போக்குவாதிகளாக உருவாகும் அபாயமும் உள்ளது. அதேவேளை தமது குழந்தைகள் தமிழை மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் படங்களை முழுநேரமாக வீட்டில் ஓடவிட்டு அவர்களைப் பார்க்க விடுகின்றார்கள். தமிழ்நாட்டுத் தமிழோடு சேர்த்து சமுதாயத்தின் அத்தனை பின்போக்குத் தனங்களையும் வன்முறைகளையும் புலம்பெயர் தமிழ் குழந்தைகள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியத் தமிழ் திரைப்படமும் புலம்பெயர் தமிழர்களும்-
“நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள். இந்த மூன்று திரைப்படங்களி ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே. நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள். ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?
இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை.
ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள்.
இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.
அடுத்து சின்னத்திரையை எடுத்துக் கொண்டால். பெரியதிரை இளம் சமுதாயத்தினரை கவர்ந்தது போல் சின்னத்திரை மூத்தவர்களைக் கவர்ந்திருக்கின்றது. கனடாவில் தமிழர் அதிகமாக வாழும் பிரதேசமான ரொறொன்டோ நகரத்தை அண்மித்த பகுதிகளில் நூற்றிற்கும் அதிகமான வீடியோ கடைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 15இற்கு மேற்பட்ட தொடர்நாடகங்கள் நூற்றுக்கு மேற்பட்ட வாரத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழர்;கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ, மார்க்கம், மிசிசாகா, ரொறொன்டோ நகரப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களில் அனேகமாக வீடுகளில் குறைந்தது ஐந்து நாடகங்களாகவது தொடராகப் பார்க்கப்பட்டு வருகின்றன. வெளியாகும் அனைத்து நாடகங்களையும் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முதியவர்கள், வேலைக்குப் போகதா பெண்கள் இருக்கும் வீடுகளில் பகல் பொழுதுகளில் தொடராக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரியதிரைபோல் இல்லாது சின்னத்திரை சமூகம், குடும்பம் சார்ந்த திரைக்கதையைக் கொண்டிருப்பதனால் இது நடுத்தர வயதுதினரின் கவனத்தை அதிகம் ஈர்பதாகவுள்ளது.
பெரியதிரையில் கனவு நாயகர்களாகப் பரிணமித்த கதாபாத்திரங்கள், சின்னத்திரையில் தம்குடும்ப அங்கத்தவராகவோ, பக்கத்து வீட்டினராகவோ பார்வையாளர்களால் உணரப்படுகின்றார்கள். சின்னத்திரையின் பாத்திரங்கள் புலம்பெயர்ந்த பலதமிழ் குடும்பங்களின் அங்கத்தினராக வாழ்கின்றார்கள். பெரியதிரை புறநிலைத்தாக்கங்களை புலம்பெயர் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்றால், சின்னத்திரை அகநிலைத்தாக்கங்களையே அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். சின்னத்திரையின் பாதிப்பால் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டில் கணிசமான அளவு மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி விட்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு குழந்தையை தொட்டிலில் இடுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு, பூப்புனிதநீராட்டு விழாவின் போது ஊஞ்சலில் இருத்தி ஆட்டுதல். இதைத்தவிர இன்னும் தமிழ் சம்பிரதாயங்களில் என்றும் கண்டிருக்க முடியதா பல சடங்கு முறைகள் தாமாகவே தோன்றிக்கொண்டிருக்கின்றன.
இவற்றோடு வடஇந்திய மக்களின் கலாச்சரம் பண்பாடுகள் மெல்லமெல்ல தமிழ்நாட்டிற்குள் நுழைந்து சின்னத்திரை பெரியதிரை மூலம் புகலிடத் தமிழ் மக்களையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.
இறுதியாக தமிழ் தொலைக்காட்சியைப் பார்த்தோமானால் - இது என் சொந்த அனுபவமாக அமைந்திருக்கும். நான் வேலை செய்த தமிழ் தொலைக்காட்சி நிலையம் தன்னைச் சமூகத் தொலைக்காட்சியாக அடையாளப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கின்றது. கனடாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி “நேர்கொண்டபார்வை” எனும் ஒரு நிகழ்வை நான் நடாத்தி வந்தேன். மூன்று நான்கு நிகழ்வு ஒளிபரப்பின் பின்னர் நிகழ்ச்சி நிலையப் பொறுப்பாளர்களால் இந்நிகழ்வு நிறுத்தப்பட்டது, அதற்கு அவர்கள் கொடுத்த காரணம், ஆண் பார்வையாளர்களுக்கு நிகழ்வு பிடிக்கவில்லை என்பதே. அதன் பின்னர் சினிமாப்பாடல்களை மையமாக வைத்து சில நிகழ்வுகளைச் செய்யும் பொறப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல சமையல்கலை, சிகை அலங்காரம் செய்வது எப்படிப் போன்ற எமது ஆண்கள் விரும்பும் பெண்களுக்கான நிகழ்வுகளையும் நான் நடாத்தினேன் என்பதை தற்போது வெட்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கனேடியத் தமிழ் முற்போக்கு நாடகக் கலைஞரகளால் வருடாவருடம் நடாத்தப்படும் “அரங்காடல்”; எனும் நாடக நிகழ்விற்காக அரை மணிநேரம் ஒரு விவரண நிகழ்வை ஒளிபரப்ப நான் நிலையப் பொறுப்பாளர்களிடம் இரங்க வேண்டிய நிலையில் இருந்தேன். இந்தியத் தமிழ் நட்சத்திரங்களான மாதவனுக்கும், ரேவதிக்கும் இரண்டு மணித்தியாலத்தை அள்ளி வழங்கிய நிலையத்தவர்கள், கனேடியக் கலைஞர்களின் நிகழ்வு எனும் வரும் போது ஒளிபரப்பு நேரம் இல்லை என்று மறுத்துவிட்டார்கள். அதற்காக நான் வாதிட்ட போது மாதவனால் தாம் பணம் உழைப்பதாக கூச்சமின்றிக் கூறினார்கள், தமது தொலைக்காட்சி தமிழ் சமூகத்தொலைக்காட்சி என்றே அடையாளப்படுத்தி நிலையத்தை நடாத்தும் உரிமையை கனேடிய அரசிடமிருந்து பெற்றிருக்கும் இவர்கள் குறிப்பிட்ட நேரம் ஈழத்தமிழ் சமூகத்திற்காக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கோயில் பூசைகள், சில நேர்காணல்கள் என்பவற்றை பணம் பெற்று நடாத்தி அந்த நேரத்தை நிறைத்துக் கொள்கின்றார்கள். அதைத் தவிர அரசியல் நிகழ்வுகள் என்பன ஒருபக்கச் சார்பாகவே என்றும் அமைந்திருக்கும். “செய்திக் கண்ணோட்டம்” என்ற நிகழ்வில் யாராவது ஒரு அரசியல் ஆய்வாளர் தமது நடுநிலையான கருத்தை நிகழ்வில் கூறிவிடின் அவரது பெயர், அவர்களது பட்டியலில் இருந்து உடனேயே அகற்றப்பட்டு விடும். (இதனை முன் நின்று செய்தவர் அப்போதைய நிலையத்தின் பொறுப்பாளர். பின்னர் நிலையத்தின் பணத்தைக் கையாண்டதற்காக அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விடையம்) அவர் பின்னர் நிகழ்விற்கு அழைக்கப்படமாட்டார். ஆய்வாளர் அனைவருமே விடுதலைப்புலிகளுக்கு சார்பாகத் தாளம் போடுபவர்களாக இருந்தால் மட்டுமே நிகழ்சிக்கு அழைக்கப்படுவார்கள். கலந்து கொள்ளும் ஆய்வாளர்களும் அதற்குத் தருந்தால் போல் மக்களை வெறும் ஆட்டு மந்தைகளாக எண்ணி தமது ஆய்வை ஆய்ந்து விட்டுப் போவார்கள். கனேடித் தமிழ் மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத் தொலைக்காட்சியின் சேவை இது. இந்திய சினிமா, சின்னத்திரைகள், சினிமாவைத் தளமாகக் கொண்ட நிகழ்வுகள், ஈழப்போராட்டத்தின் பொய்யான பக்கங்கள் இவற்றை மட்டுமே கொண்டு மக்களின் சிந்தனையையும், அறிவையும் மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றார்கள். “மனோப்பொலி”யாக இவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதனால், சமூக நோக்கோடு தரமான நிகழ்வுகளை கொடுக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கூட இவர்களிடம் கையேந்த வேண்டிய நிலையிலேயே உள்ளார்கள் என்பது வெட்கப்பட வேண்டியதே.
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் முற்போக்கான நிகழ்வுகளை (“இப்படிக்கு ரோஸ்”, “நீயா நானா”) துணிந்து நடாத்தி வரும் நிகழ்ச்சி பொறுப்பாளருடம் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனக்குக் கொலை மிரட்டல்கள் கூட வந்திருப்பதாகவும், தொலைக்காட்சி நிலையம் தனக்கு மிகவும் சார்பாக உள்ளதால் தன்னால் இதுபோன்ற விழிப்புணர்வைக் கொண்டு வரும் நிகழ்வுகளை மக்களுக்கு வழங்கக் கூடியதாக உள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து கொண்டு மக்களை முற்போக்குச் சிந்தனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மத்தியில் இன்றும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு மக்களை ஆட்டு மந்தைகளாக எண்ணி இந்தியத் தமிழ் சினிமா ஒன்றை மட்டும் தளமாகக் கொண்டு ரொரொன்டோவில் ஒரு பிற்போக்குத் தமிழ் தொலைக்காட்சி நிலையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கனேடியத் தமிழ் மக்களின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறுஒன்றும் சொல்வதற்கில்லை.
இனி இது தொடர்பாகப் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்பார்க்கின்றேன்.
(ஓஸ்லோவில் இடம்பெற்ற 35வது இலக்கியச் சந்திப்பில் படிக்கப்பட்ட கட்டுரை)
No comments:
Post a Comment