கனடாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் குடும்பங்களின் வாழ்க்கைத் தரமே தமது குழந்தைகளின் கல்வியில்தான் தங்கியிருக்கின்றது என்றொரு நிலைப்பாட்டில் பல தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளை கட்டாயப்படுத்தி பல கலைகளைப் பயிற்றுவித்து மேடையேற்றுதல் போன்றவை ஏற்கனவே பலராலும் பேசப்பட்ட ஒன்று. இது ஒருபுறமிருக்க அடுத்து அதே யாழ்ப்பாணிய மனப்பான்மையோடு தமது குழந்தைகளை ஒரு மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவர்களுக்கு எல்லாப்பாடத்திற்கும், பாடசாலையின் பின்னர் தனியாரிடம் அனுப்புகின்றார்கள். கனடாவில் பாடசாலைகளிலேயே after school Program இருக்கின்றது. அத்தோடு பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பே பாடத்தில் சந்தேகமிருப்பின் ஆசிரியர்களிடம் சென்று தமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வசதிகளையும் பாடசாலை செய்து கொடுத்திருக்கின்றது. இருந்தும் தமிழ் மக்கள் தமது குழந்தைகளை பிரத்தியேகக் கவனிப்பிற்காக தமிழ் ஆசிரியர்களிடம் பல பாடங்களுக்கும் பணம்கொடுத்து அனுப்புகின்றார்கள். தமது வேலையை விட்டு விட்டு Tuition Centre களை அமைத்து மிகவும் சிறப்பாக பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அளவிற்கு தனியார் கல்வியை நாடிச்செல்லும் மாணவர்களிருக்கின்றார்கள் கனடாவில்.
கனடாவின் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்திற்குச் செல்வதாயின் MCAT எனும் ஒரு பிரத்தியேக சோதனையில் மாணவர்கள் சித்தியடையவேண்டும். மாணவர்களுடைய சராசரி எண் எவ்வளவு உயர்வாகயிருப்பினும் அவர்கள் இந்தப் பிரத்தியேக சோதனயில் சித்தியடையாவிட்டால் அவர்கள் மருத்துவபீடத்திற்குள் நுழையமுடியாது. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்த சோதனையில் சித்தியடையாத தமிழ் மாணவர்கள் வேறு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துத் தமது கல்வியைத் தொடர்ந்தார்கள். இது பெற்றோர்களுக்கு மிகவும் வருத்தம் தரும் ஒன்றாகவிருந்தது. தமது குழந்தைகள் நன்றாகப்படிக்கின்றார்கள் நல்ல சராசரியை ஒவ்வொரு வருடமும் பெற்று வருகின்றார்கள் இவர்கள் மருத்துவத்துறைக்குள் சிரமமின்றிச் சென்று விடுவார்கள் என்று நம்பியிருந்தவர்களுக்கு இந்த MCAT சோதனை பெரும் தலையிடியாகவிருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் வடஅமெரிக்கா நாடுகளில் குறிப்பாக caribbean நாடுகளில் தனியார் மருத்துவக்கல்வி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருப்பதை அறிந்து தமது குழந்தைகளை அந்த நாடுகளுக்கு மருத்துவம் பயில அனுப்பி வைக்கத் தொடங்கினார்கள். இது ஒரு நோய் போல அனைத்துத் தமிழ் பெற்றோர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமது குழந்தைகளின் கல்வி கற்கும் Capacity எவ்வளவு என்பது பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. மருத்துவக்கல்வி நிலையங்களுக்குக் கட்டணம் கட்டத் தம்மிடம் பணமிருந்தால் அது தமது குழந்தைகளை முழு மருத்துவராக்கிவிடும் என்பது தமிழ் பெற்றோரின் கணிப்பு.இதற்காகவே பெற்றோர் இரண்டு மூன்று வேலையென்று நித்திரையின்றி உளன்றுகொண்டுமிருக்கின்றார்கள். எல்லாம் எதற்காக ’எனது மகளோ மகனோ Doctor” என்று பெருமையாகத் தமது சொந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ சொல்லிக்கொள்ளத்தான். தமது குழந்தைகளுக்கு மருத்துவபீடத்தில் ஆர்வமிருக்கிறதா, அவர்கள் அதைத் தமது எதிர்காலத் தொழிலாகச் செய்யவிரும்புகின்றார்களா என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்கு அக்கறையில்லை. ”எனது பிள்ளை மருத்துவர்’ என்று மற்றவர்களுக்குப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்காகக் தமது குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி Caribbean நாடுகளுக்கு அனுப்பிவைக்கத் தொடங்கினார்கள். அங்கு போய்ப் படித்து முழுமையாக ஒரு மருத்துவராக வருவதென்றால் அது ஒன்றும் பூப்பிடுங்கும் வேலையில்லை என்பதைத் தற்போது பல பெற்றோர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வெளிநாட்டு மருத்துவர்கள் கனடாவில் ஒரு மருத்துராகச் செயல்பட வேண்டுமெனின் கனேடியச் சோதனை எடுத்துச் சித்திபெற வேண்டும் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்குள் இந்தக் கரேபியன் மாணர்வளும் அடக்கம்.
சரி இது இப்படியிருக்க, எல்லா விடையங்களும் நாங்கள் நினைப்பது போல் நடந்துவிடுவதில்லை. நண்பரின் பிள்ளை கரேபியனில் போய் படித்து முடித்து கனேடிய சோதனையிலும் சித்தியடைந்து கனடாவில் ஒரு மருத்துவராகக் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் என்றாள், உடனே நானும் எனது குழந்தையை கடன் பட்டோ. வீட்டை விற்றோ அனுப்பி விட்டு எனது குழந்தையும் கழுத்தில் குழாய் மாட்டியபடி வந்திறங்கப் போகின்றது, வந்து தொழில் துடங்கியதும் நாங்கள் பட்ட கடனை அடைக்கும், விற்ற வீட்டை வாங்கித் தரும் என்று கனவிலிருந்த பல பெற்றோருக்கு ஏமாற்றங்கள் பலவடிவில் வந்து கொண்டிருக்கின்றன.
படிப்பின் கனத்தைத் தாங்க முடியாமல் படிப்பை இடையில் கைவிட்டு வருகின்றார்கள் மாணவர்கள்.
கரேபினில் மாணர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகிப் போகின்றார்கள் சிலர்.
படிப்பின் கனம் தாங்காமலும் பெற்றோர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முடியாமல் போகின்றதே என்ற குற்ற உணர்வாலும் பல மாணவர்கள் மனஉளச்சலுக்கு உள்ளாகின்றார்கள்.
எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் படிப்பின் கனம் தன்னால் தாங்கமுடியாமலிருக்கின்றது என்று பெற்றோருக்குச் சொல்ல முடியாத தயக்கத்தால் தற்கொலையும் செய்து கொள்கின்றார்கள் சிலர்.
பிள்ளைகளின் கல்விக்காய் தமது வாழ்வைத் தொலைத்த பெற்றோர் தமது குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதை ஏற்கும் மனப்பான்மையை கொண்டவர்களாக இல்லாமல், முடித்து வந்து மாணவர்களை உதாரணம் காட்டியும், தாம் செலவு செய்த பணத்தைக் காட்டியும் தமது குழந்தைகளின் மனஉணர்வுகளோடு விளையாடுகின்றார்கள்.
ஒட்டு மொத்தத்தில் கனேடியத் தமிழர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பயங்கரக் குழிக்குள் தமது குழந்தைகளையும் இழுத்து விழுத்துகின்றார்கள் என்பதுதான் கொடுமை.
The Medical College Admission Test (MCAT) is a computer-based standardized examination for prospective medical students in the United States and Canada. It is designed to assess problem solving, critical thinking, written analysis, and writing skills in addition to knowledge of scientific concepts and principles
No comments:
Post a Comment