நோவின் இடைவெளி குறைந்து
கொண்டே வந்தது. அது அப்படித்தான் இருக்கும் என்று அம்மா சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு,
மாமியுடன் கதையைத் தொடர்ந்தாள். பரிச்சயமற்ற ஊர்களின் பெயர்கள், அங்கு வசிக்கும் முகம்தெரியாத
சிலரின் ரகசியங்கள், கனடாவின் ஒரு பிரசவ மருத்துவமனை அறையில் நிர்வாணமாகிக் கொண்டிருந்தது.
தலைமாட்டிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்து அம்மாமேல் ஓங்கி எறிய நினைத்தாள் வனிதா.
அம்மா மேல்தான் எறிவதற்கு நினைக்கவாவது அவளுக்கு உரிமையிருந்தது. அவர்களது குரல் அவளின்
அடிவயிற்றிற்குள் புகுந்து இறுக்கியது. வெய்யிலின் ஆக்கிரமிப்பு யன்னலில் விழுந்து
கண்களைக் கூச வைத்தது. யன்னல் சீலையை இழுத்து விட்டு இருளுக்குள் அமிழ்ந்து போக ஆசைப்பட்டாள்
வனிதா.
ஆஸ்பத்திரிக் கட்டில் உயரமாகவும்,
குறுகியதாகவுமிருந்தது. வனிதா கட்டிலின் பக்க கைபிடியைப் பிடித்துக் கவனமாக கால்களை
நிலத்தில் வைத்திறங்கி மெதுவாக நடந்து வாஸ்ரூருக்குப் போனாள். இறங்கும் போது அம்மா எழுந்து வந்து உதவி
செய்வாள் என்று எதிர்பார்த்தாள் ஆனால்
அம்மா ”ஏதும் உதவி வேணுமெண்டாக் கேள் பிள்ளை” என்றுவிட்டு மாமியுடன் கதையைத் தொடர்ந்தாள். மாமி எழுந்து வந்து உயர்ந்து கிடந்த அவள் சட்டையை இழுத்து விட்டாள், பின்னர் அம்மாவின் அருகில் போயிருந்து ”சொல்லுங்கோ” என்றாள். அம்மாவை கனடாவிற்கு கூப்பிட்டிருக்க வேண்டாமோ என்று இப்போது அவளுக்குத் தோன்றியது. கோவம், கோவம், எல்லோர் மேலும் காரணமின்றிக் கோவம் வந்தது.
அம்மா ”ஏதும் உதவி வேணுமெண்டாக் கேள் பிள்ளை” என்றுவிட்டு மாமியுடன் கதையைத் தொடர்ந்தாள். மாமி எழுந்து வந்து உயர்ந்து கிடந்த அவள் சட்டையை இழுத்து விட்டாள், பின்னர் அம்மாவின் அருகில் போயிருந்து ”சொல்லுங்கோ” என்றாள். அம்மாவை கனடாவிற்கு கூப்பிட்டிருக்க வேண்டாமோ என்று இப்போது அவளுக்குத் தோன்றியது. கோவம், கோவம், எல்லோர் மேலும் காரணமின்றிக் கோவம் வந்தது.
வனிதாவுக்கு வோஸ் ரூமுக்குள்
போனவுடன் வயிற்றைக் கலக்கியது. இருந்தாள். நீராகக் கழிவு போனது. குனிந்து பார்த்தாள் கடும் கறுப்பு
நிறத்தில் இருந்தது அது. வனிதா அப்படியே அசையாமல் இருந்தாள். பிறப்புறுப்பு சிறிது
விரிந்து கொடுக்க சுகமாக இருந்தது. இப்போது
அடிவயிற்றின் நோ குறைந்தது போலிருந்தது. இரவு முழுவதும் நோவின் வீரியத்தால் நித்திரை
கொள்ளாதது, இப்போது தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரம் கண்களை மூடி வோஷ்
ரூமுக்குள்ளேயே இருந்தாள். நெற்றிக் கண்ணும், நீட்டிய பல்லும், ஒற்றைக் கையுமாய் மடியில்
அவள் குழந்தை அழுதது, அடிவயிற்றில் சுளீரென நோ தாக்கத் திடுக்கிட்டெழுந்தாள். அடிவயிறு
கல்லுப்போலிந்தது. தொடைகள் இரண்டும் விண்ணென்றிழுத்தன. சுவரில் கையூன்றி எழுந்தாள்.
தொடைகளுக்கு நடுவில் எதுவோ அசைவது போலிந்தது, வெளியில் ரேவதியின் குரல் கேட்டது, பின்னர்
கதவு தட்டப்பட்டது.
மனம் யாரையும் பார்க்க விரும்பா
பொழுது அது. இந்த எல்லாவற்றிலுமிருந்து தப்பி எங்காவது ஓடிவிடலாமா என்று ஒரு நிமிடம்
தோன்றியது. கதவு திரும்பவும் தட்டுப்பட ”ஓமோம் வாறன் பொறு ” சொல்லிவிட்டு அடிவயிற்றைக்
கைகளால் ஏந்தி மெல்லக் கதவைத் திறந்து வெளியில் வந்தாள் வனிதா. ரேவதி சந்தோஷமாக அவளை
அணைத்துக் கொண்டாள்.
நேர்ஸ் அவசரமாக உள்ளே வந்து வனிதாவின் கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தாள், பின்னர் வயிற்றைத் தொட்டுப் பார்த்து
”இன்னும் நேரமிருக்கு” என்று
விட்டுப் போய் விட்டாள். அம்மாவையும், மாமியையும் காணவில்லை. வனிதா கட்டிலில் அசையாது
கிடந்தாள். ரேவதி அவளின் தலையைக் கோதிவிட்டுக் ”குட்டி அம்மா” என்றாள்.
வனிதா புன்னகைத்தாள். அத்தனை
நோவிலும் அவள் பார்வை ரேவதியை ஆராய்ந்தது. ரேவதி தலைமயிரைக் குட்டையாக வெட்டி, பேர்கண்டி
நிறத்தில் ஹை லைட் பண்ணியிருந்தாள். அவள் முகம் மினுமினுப்பாக ஆரோக்கியமாகவிருந்தது.
கனடா வந்தவுடன் பாங்கில் வேலை எடுத்ததோடு, யூனிர்வேர்சிட்டியில் இணைந்து மேற்படிப்பைத்
தொடர்கின்றாள் அவள். ரேவதி அவள் கையை அழுத்திப்
பதிலுக்குப் புன்னகைத்தாள்.
மாயக்கனவொன்றில் திளைத்துக்
கொண்டிருக்கும் வனிதா, தனது கனவை ரேவதி வாழ்ந்துகொண்டிருப்பதாக நம்பினாள். ரேவதியைச்
சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் வேலை, படிப்பு பற்றி ஆவலோடு கேட்டு அறிந்து கொள்வாள்.
திருமணமாகி கனடா வந்திறங்கிய போதே வனிதாவிற்கு தலைச்சுற்றும், குமட்டலும் வரத் தொடங்கிவிட்டன.
தொடர்ந்து மருத்துவமனையும், சத்தான உணவும், பின்னேர நடையும்தான் அவளின் வாழ்க்கையாகிப்
போனது. கனடா வந்ததும் கணவன் ராம் உடன் சுற்றித் திரிந்து இடங்கள் பார்க்க வேண்டும்,
வெள்ளையர்களுடன் வேலைக்குப் போக வேண்டும், கார் பழக வேண்டும், விதம் விதமாக உடை உடுக்க
வேண்டும், எல்லாம் கனவாகிப் போனது. தான் கற்பமாக இருப்பதை அறிந்த போது குழந்தையை கலைத்து
விடலாமா என்று கூட நினைத்தாள், இருந்தும் ராமிடம் அவளால் கேட்க முடியவில்லை. ராமை அவள்
அறிந்தே சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. அவன் சுபாவத்தை அவள் அறிந்து கொள்ளு முன்பே
கற்பவதியாகி நின்றாள். போதாதற்கு ராம்இன் அக்கா வீட்டில் அவனது அப்பா, அம்மா சகிதம்
குடியிருப்பு. கேட்டதற்கு ”அக்கா பாவம் பெரிய வீடு மோட்கேஜ் கட்ட வேணும், உதவியா இருக்கும்”
என்று முற்றுப் புள்ளி வைத்தான் ராம். அன்றிலிருந்து மாயக்கனவொன்றில் தனது சந்தோஷங்களைத்
தேடத் தொடங்கினாள் அவள்.
ரேவதியும், வனிதாவும் பாடசாலையில்
ஒன்றாகப் படித்து, ஒரே ஆண்டில் திருமணம் செய்து, ஒரே ஆண்டில் கனடா வந்தவர்கள். படிப்பில்
இருவருமே மிகவும் சாதாரணம். ஆனால் வனிதா அழகி. அழகு என்பதற்கு யாழ்ப்பாணச் சமூகத்தால்
கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வரைவிலக்கணங்களையும்
கொண்டிருந்தாள் அவள். அதன் காரணமாக சமூகத்தில் குறிப்பாகப் பாடசாலையில் வனிதா முதன்மைப்
படுத்தப்பட்டாள்.. வனிதாவின் அழகு, சீதனம்
ஏதுமின்றி கனேடியக் கணவரை அவளிற்குக் கொடுத்தது. தனது கணவன் ராம் நடிகன் அஜித் போல்
இருக்கின்றான் என்று அன்று மிகப் பெருமை கொண்டவள்தான் வனிதா
கதவைத் திறந்து கொண்டு ராம்
உள்ளே வந்தான். ரேவதியைப் பார்த்து ”ஹாய்” சொல்லிவிட்டு நேராக வனிதாவின் அருகில் வந்து
அவளது நெற்றியில் கொஞ்சிவிட்டு
”வேலைக்கு அரை நாள் லீவு
போட்டிட்டன்” என்று சுற்றும் முற்றும் பார்த்து
”அம்மா வந்தவவே” என்றான்.
”ரெண்டு ஆண்டீசும் கொஃபி
குடிக்க கீழ போயிட்டீனம்” என்றாள் ரேவதி.
ராம் பெரிதாகச் சிரித்தான்.
வனிதாவிற்கு எரிச்சல் வந்தது. ரேவதியை ராமிற்கு அதிகம் பிடிக்காது என்பது அவளுக்குத்
தெரியும், இருந்தும் ரேவதியைக் காணும் போதெல்லாம் அவன் அதிகமாகக் கதைப்பதும், சிரிப்பதும்
அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
கண்களை மூடினாள். நெற்றிக்கண்ணும்,
ஒற்றைக் கையுமாகக் குழந்தை சிரித்தது. நோ அடிவயிற்றை மீண்டும் தாக்க. துடித்து ”ஆங்..
ஆங் ..” என்று ஒலி எழுப்பிய படியே, படுப்பதா, இருப்பதா, நடப்பதா எது தனக்கு ஆசுவாசத்தைத்
தரக்கூடும், என்று தெரியாமல் தடுமாறி கால்களை கட்டிலில் அகட்டிப் போட்டு அழத்தொடங்கினாள்.
ஒருபக்கம் ரேவதியும், மறுபக்கம்
ராம்உம் அவள் கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நேர்ஸ் வந்து அவர்கள் இருவரையும்
அறைக்கு வெளியில் அனுப்பிவிட்டு வனிதாவின் தொடைகளின் நடுவிற்குள் சோதனை செய்து,” இப்பதான்
மூன்று சென்டி மீட்டர் திறந்திருக்கு இன்னும் நேரமிருக்கு” என்று விட்டுப் போனாள்.
வனிதாவிற்கு வயிற்றைக் கிழித்துக் குழந்தையை வெளியில் எடுத்துவிடவேண்டும் என்ற ஆவேசம்
எழுந்தது.
நேர்ஸ் வெளியே போக ரேவதியும்,
ராம்உம், அம்மாவும், மாமியும் வெளியில் கதைத்துக் கொண்டிருந்த உரையாடலின் தொடர்ச்சியோடு
உள்ளே வந்தார்கள். ”
நான் ஏன் இவர்கள் போல் சந்தோஷமாகக்
கதைச்சுச் சிரிக்கக் கூடாது. எனக்கும் நடந்து திரிய ஆசையாய் இருக்கு, நோ இல்லாமல் வேகமாக
நடந்து திரிஞ்சு எத்தினை நாளாச்சு”, நினைவு மயங்க திரும்பவும் நோ கிளம்பியது. வனிதா தன் கையைப் பிடித்து அழுத்தும் ரேவதியை கண்வெட்டாமல்
பார்த்தாள். ரேவதி குதி உயர்ந்த சப்பாத்தும், கறுப்பு நிறத்தில் வெள்ளை நிறச் சிறிய
நட்சத்திரம் போட்ட இறுக்கமான சட்டையும் போட்டிருந்தாள். ராம் பெரிதாகச் சிரித்தான்,
அம்மா எதுவோ மாமிக்குச் சொன்னாள். ரேவதி ”ஓக்கே, ஓக்கே” என்று அவளை அணைத்தபடியிருந்தாள்.
கையில் ஒரு பிரீஃப் கேசும்,
குதி உயர்ந்த சப்பாத்தும், உடலோடு ஒட்டிய கறுப்புச் சட்டையுமாய் வனிதா அந்தக் கண்ணாடிக்
கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அவள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றார்கள்.
நோ உடலைக் கிழித்தது. தன்
கனவு எப்போது பிய்த்து எறியப்பட்டது என்று தெரியாமல் தடுமாறினாள் வனிதா. தனக்குக் கிடைக்காத
அனைத்தும் ரேவதிக்குக் கிடைத்திருப்பதாய் முதல், முதலாய் தனது நண்பிமேல் பொறாமை கொண்டாள்
அவள்.
வனிதா வேறு அறைக்குள் மாற்றப்பட்டாள்.
ராம் அவளுடன் சென்றான். ரேவதி வனிதாவின் நெற்றியில் கொஞ்சிவிட்டு ராம் இன் கையைக் குலுக்கி
விடைபெற்றாள்.
பூப்போன்ற, பஞ்சுப் பொதி
போன்ற, எத்தனையோ உவமைகள் வனிதா கேள்விப்பட்டிருக்கின்றாள். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டியதாக
இருந்தது அவளுக்குப் பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் அழகு. ராம் துாக்கித் துாக்கிக்
கொஞ்சினான். ஆண் குழந்தையென்ற இரண்டு மடங்கு சந்தோஷம் அவனுக்கு. அம்மாவும், மாமியும்
வீட்டிற்குப் போயிருந்தார்கள். ராம்இன் சில நண்பர்கள் வந்தார்கள், வனிதா ஆர்வமற்று,
உடல் களைப்பில் அயர்ந்து நித்திரையாகிப் போனாள்.
கண்விழித்த போது ரேவதி கணவன்
ரிஷியுடன் வனிதா அருகில் நின்றாள். கையில் பெரிய பூக் கூடை. வெள்ளை நிறத்தில், சிறிய
பூப்போட்ட கையில்லாத சட்டை, அதன் மேல் மெல்லிய மஞ்சள் நிற ஷோலால் சுற்றியிருந்தாள். மெலிந்த வாகான உடலில் மிக அழகாகத் தோன்றினாள். ரிஷி
வெளிர் நிற டெனிம் பான்ஸ்சும், வெள்ளை நிற ரீசேர்ட்டும் போட்டிருந்தான். ஜிம்மிற்கு
ஒழுங்காகப் போகின்றான் என்று அவன் அகன்ற தோள்களும், கனமான கைகளும் காட்டின. கனடா வந்து
ஒருவருடம் தான் ஆகின்றது, அதற்குள் அவர்கள் கனேடியர்களாகவே மாறிவிட்டார்கள் என்று வனிதா
ஒருநாள் நகைச்சுவையாகச் சொன்னாள். உள்ளுக்குள் நாங்களும் கனடா வந்து ஒருவருடம்தான்
ஆகின்றது என்ற ஏக்கமும், சிறிது பொறாமையும் இருந்தது.
ரேவதி குழந்தையைத் துாக்கி
கொஞ்சி ரிஷியின் பக்கம் நீட்ட, ரிஷி குழந்தையின் விரல்களைத் தடவி ”ஸோ ஸ்சொப்ட்” என்று
காதலோடு ரேவதியைப் பார்த்தான். அவள் அவனது
தோளில் தனது தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
வனிதா மௌனமானாள், அவர்களின்
நெருக்கம் அவளிற்கு என்னவோ செய்தது. தனக்கும்
ராம்இற்கும் இடையில் இப்படியான காதல் நெருக்கம் இருக்கின்றதா என்ற கேள்வி அவளது மனதுக்குள்
எழுந்து, இல்லை என்று பதில் வர, மனம் சோர்வு கண்டது. ராம் தன்மேல் மிகவும் அன்பாக இருக்கின்றான்
என்பதை அவள் அறிவாள். இருந்தும் தமக்கிடையிலான
காதலில் எதுவோ விடுபட்டிருக்கின்றது. ஆனால் அது என்ன என்பதுதான் அவளிற்கு இன்றும் புரியவில்லை.
”எங்கை குட்டி அப்பா ராம்?”
என்று கேட்டாள் ரேவதி
”யாரோ ப்ரெண்ஸ் வந்தாப்
போல வெளியில போயிட்டார், வந்திடுவார்” என்றாள் வனிதா. பின்னர் ”என்ன இண்டைக்கு வேலைக்கு
லீவா?” என்றாள்.
”இல்லை வீக் எண்ட் தானே,
இல்லாட்டியும் உன்னைப் பாக்க வாறதுக்காக ஓஃப் எடுத்திருப்பன்” என்று அவளைக் கட்டிக்
கொண்டாள் ரேவதி.
”பிள்ளை வடிவா இருக்கிறான்
என்ன?” என்றாள் வனிதா.
”பின்ன இல்லாமலா?, அம்மா
அழகி அந்த அழகில கொஞ்சமாவது வரத்தானே வேணும்” என்றாள் ரேவதி அவளின் தலையைத் தடவியபடி.
”அதெல்லாம் ஒரு காலம்” என்றாள் வனிதா பெருமூச்சோடு
”என்னடி ஒருகாலம் எண்டிறாய் கிழவி மாதிரி, அம்மா ஆகினா வயசு கூடீடுமே, உன்னை ஊரில எத்தினை பெடியங்கள் கலைச்சுத் திரிஞ்சவங்கள், நீதான் ஒருத்தரின்ர பிடியிலும் விழேல்லை” என்று வனிதாவை உற்சாகப்படுத்த முனைந்தாள் ரேவதி.
”அதெல்லாம் ஒரு காலம்” என்றாள் வனிதா பெருமூச்சோடு
”என்னடி ஒருகாலம் எண்டிறாய் கிழவி மாதிரி, அம்மா ஆகினா வயசு கூடீடுமே, உன்னை ஊரில எத்தினை பெடியங்கள் கலைச்சுத் திரிஞ்சவங்கள், நீதான் ஒருத்தரின்ர பிடியிலும் விழேல்லை” என்று வனிதாவை உற்சாகப்படுத்த முனைந்தாள் ரேவதி.
வனிதா அவனைப் பார்த்துப்
புன்னகைத்தாள். அவளது புன்னகையிலிருந்த சோகம் ரிஷியைப் பதட்டமடைய வைத்தது, யன்னலருகில்
சென்று வெளியே பார்த்து
”இண்டைக்கு நல்ல வெய்யில் வெளியில, சின்ன ஒரு காத்தும் அடிக்குது நல்லா இருக்கு” என்றான்
”இண்டைக்கு நல்ல வெய்யில் வெளியில, சின்ன ஒரு காத்தும் அடிக்குது நல்லா இருக்கு” என்றான்
அறை கனமாகவும், மௌனமாகவும்
மாறியது. குழந்தை சின்னதாப் புன்னகைத்து,வாயைச் சப்புக் கொட்டியது. கண்களைத் திறந்து
ஒருமுறை விழியை சுழலவிட்டு மீண்டும் மூடிக்கொண்டது. அதன் சின்னக் கைகள் காற்றைப் பிடிப்பது
போல் மெல்ல, மெல்ல அசைந்தன. வெளியில் காற்றின் அசைவை யன்னலோம் சாய்ந்து நின்ற மரக்
கொப்பு காட்டியது. யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று ரேவதிக்குப் பட்டது. அவள்
பார்வை குழந்தைமேல் பதிந்திருந்தது. சிந்தனை அதையும் தாண்டி எங்கோ நிலைத்திருந்தது.
வனிதா முகத்தை தனது மடிநோக்கி வைத்திருந்தாள் அவள் தோள்கள் சின்னதாகக் குலுங்கின.
வனிதா விக்கி, விக்கி அழுதாள்.
ஏன் அழுகின்றோம் என்று அவளுக்கே விளங்கவில்லை. ஒரு நிமிடம் குழந்தையைத் திரும்பிப்
பார்த்த அவளுக்கு எரிச்சலாக வந்தது. ரேவதி கண்ணைக் காட்ட ரிஷி அறையை விட்டு வெளியே
போனான். ரேவதி அவளை அணைத்துக் கொண்டு, ”என்னடி இப்ப என்னத்துக்கு அழுகிறாய், உடம்பு
நோகுதா?, நல்லாக் களைச்சுப் போனாய் போல, இப்ப நீ உன்ர செல்லக் குட்டிக்கு அம்மா, சின்னப்
பிள்ளை மாதிரி அழலாமே” என்றாள்
”நானே ஒரு சின்னப் பிள்ளைதானேடி,
இப்ப பிள்ளைக்கு அவசரமே” என்றாள் அவள்.
”ஏய் என்ன இது, இப்ப போய் இப்படிக் கதைக்கிறாய்” என்றாள் ரேவதி
”நான் அப்பவும்தான் கதைச்சனான்,
என்ர விருப்பத்தை யார் கேட்டது” என்றாள் வெறுப்போடு
”மனசைப் போட்டு சும்மா குழப்பாதை, எங்கட அம்மான்ர காலத்தில..” ரேவதி முடிக்கவில்லை, அவளின் கையைப் பிடித்த வனிதா,
”மனசைப் போட்டு சும்மா குழப்பாதை, எங்கட அம்மான்ர காலத்தில..” ரேவதி முடிக்கவில்லை, அவளின் கையைப் பிடித்த வனிதா,
”சும்மா சாட்டுக்கு எனக்கு
ஆறுதல் சொல்லாதை” என்றாள்.
மௌனம் ஒரு ஆவி போல் அறையை
நிறைத்துக் கொண்டது. அசைவற்று மூன்று உயிர்களும் நின்றன. பூமியின் தாண்டவத்தை அறியாத
குழந்தை மெல்லக் குரல் எழுப்பி ஆவியைத் துரத்தியது.
கதவு திறந்தது. ராம் தனது
நண்பர்களுடன் உள்ளே வந்தான். கண்கள் சிவந்திருந்தன. மருத்துவமனை அறையின் வாசனை மாற்றம்
கண்டது.
”ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கு
அதுதான் சின்னதா ஒரு பார்ட்டி” என்று விட்டு ரேவதியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
பின்னர் வனிதாவின் அருகில் போல் அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். வனிதா முகத்தைச்
சுளித்தாள். குழந்தை அழுதது, ரேவதி குழந்தையைத் துாக்கி வனிதாவிடம் கொடுத்தாள்.
”ரிஷி வரேலையா?” ரேவதியைப் பார்த்துக் கேட்டான் ராம்
”ரிஷி வரேலையா?” ரேவதியைப் பார்த்துக் கேட்டான் ராம்
”வந்தவர், வெளியில நிக்கிறார்,
போன் ஒண்டு வந்தாப் போல போயிட்டார்” என்றாள் ரேவதி.
குழந்தை பாலுக்காக வனிதாவின்
மார்பைத் தேடியது. புரிந்த கொண்ட ராம் நண்பர்களுடன் வெளியேறினான். ரேவதி யன்னருகில்
போய் நின்று கொண்டு வீதியை நோட்டமிட்டாள். ஐந்தாம் மாடியில் நின்று வெளியில் பார்க்க
அடர்ந்த மரங்களின் பச்சையிலைகள் மட்டும் காற்றின் வேகத்தில் அசைவது தெரிந்தது. ரேவதிக்கு
மனம் ஒன்றிலும் ஒப்பவில்லை. வனிதாவின் அழுகை அவளின் மனதில் அவிழ்க்க முடியாத பின்னல்
கேள்விகளை அடுக்கியவண்ணமிருந்தது.
அறையிலிருந்து வெளியில்
வந்த ராம், விருந்தாளிகளின் இருக்கை அறையில் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்த
ரிஷியைக் கண்டதும் அவனை நோக்கிச் சென்று தனது நண்பர்களை அறிமுகம் செய்து விட்டு அருகில்
இருந்து கொண்டான். அவர்கள் குடித்திருக்கின்றார்கள் என்பது அவன் மூக்கில் நுழைந்த வாசனையிலிருந்து
ரிஷிக்குப் புரிந்தது. ரிஷி நேரத்தைப் பார்த்தான்,
பின்னர் ரேவதி வருகின்றாளா என்றும் பார்த்தான். அங்கிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.
ரிஷிக்குப் பொதுவாகவே ராமைப் பிடிப்பதில்லை. அவனோடு தனக்கு உரையாடல் கொள்வதற்குப் பொதுவான
விடையம் ஒன்றுமில்லையென்று அவன் நம்பினான். ரேவதி, வனிதாவின் நட்பிற்காக ராம் உடன்
ஒட்டாத நட்பொன்றைத் தொர்ந்துகொண்டிருக்கின்றான் அவன்.
”அப்ப அண்ணை நீங்கள் மேய
விட்டிருக்கிறியள் போல” என்றான் ராமின் நண்பன் ஒருவன்
ராம் அவனின் கையைத் தட்டிச்
சும்மா இரு என்று ஜாடை காட்டினான். ஏனைய நண்பர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். வேண்டாத
கீழ்த்தரமான ஜோக் என்பது ரிஷிக்குப் புரிந்தது, இருந்தும் புரிந்தும் புரியாமலும் தானும்
சிரித்து வைத்தான்.
”கனடா பற்றி உங்களுக்குத்
தெரியாதண்ணை, ராம் கெட்டிக்காறன், கனடா வந்த
உடனையே பிள்ளையைக் குடுத்து ”லொக்” போட்டிட்டான்,
இனி அவன் சேஃப்” என்றான் இன்னுமொருவன். எல்லோரும்
விழுந்து. விழுந்து சிரித்தார்கள். பின்னர் அவன் ராமைப் பார்த்து
”ஒருவருசம் விட்டு இன்னுமொண்டைக்
குடுத்து டபிள் லொக் போட்டிட்டாயெண்டால் நீ முற்றிலும் சேஃப்” என்றான் வாய் கோணச் சிரித்தபடியே.
ரிஷிக்கு குமட்டுவது போலிந்தது,
திரும்பிப் பார்த்தான் ரேவதி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ரிஷி எழுந்து ராம்
இற்கு மீண்டும் வாழ்த்துக் கூறிவிட்டு ரேவதியை நோக்கி நடந்து அவள் கையை இறுகப் பற்றி அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.
பால் குடித்த குழந்தையைத்
தொட்டிலில் கிடத்திய வனிதா, அம்மாவை எப்படியாவது கனடாவில் தங்க வைத்து அவளிடம் பிள்ளைப்
பராமரிப்பைக் கொடுத்து விட்டுத் தான் படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்று
தனது கனவுகளை கற்பனையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். குழந்தை வாயைக் கோணிச் சிரித்தது.
வனிதா குனிந்து குழந்தையின் நெற்றியில் கொஞ்சினாள். மனம் சந்தோஷத்தில் நிறைந்தது. வெளியில்
ராமும், அவன் நண்பர்களும் வாய்விட்டுச் சிரிக்கும் சத்தம் கேட்டது காரணம் அறியாமல்
வனிதாவும் மனம் நிறையச் சிரித்துக் கொண்டாள்.
No comments:
Post a Comment