நான் திரும்பிப் போவதற்கு
என்ன இருக்கின்றது ஊரில்?
முட்டி வழியும் மாரிக் கிணற்றை
எட்டிப் பார்க்க அஞ்சுவது போல்
என் இரவுகள் அச்சங்களால்
நிறைந்து போயின.
மாரிக் கிணற்றில் நான்
ஒருபோதும் தண்ணி அள்ளுவதில்லை
புலுனிகள் இருந்த மதில்கள்
ரத்தம் காய்ந்த சுவர்களாய்
சரிந்து கிடந்தன.
மா, பிலா, தென்னை, விளா
உங்களைக் கூட விட்டு வைக்கவில்லை
இந்த துப்பாக்கி ரவைகள்.
விற்று விட்டு வருவதற்கு
வீடோ, காணியோ எனக்கில்லை.
காதலைனைக் காணவோ?
கல்யாணம் செய்யவோ?
அதற்கும் வாய்ப்பில்லை.
பேசாமல் இருக்கலாம் என்றால்
துரத்தும் கனவுகளுக்கு
யார் பதில் சொல்வது?
No comments:
Post a Comment