Friday, September 21, 2012

இனி அவன் (இனியவன்)

இனி அவன் (இனியவன்)   சர்வதேச திரைப்பட நிறுவனங்களால் சிறந்த இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்ட கலைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சியினுள்ளும் அலசிப்பார்க்க வேண்டிய ஆழமான அர்த்தங்கள் அடங்கிக் கிடக்கும். அந்த வகையில் தற்போது சிறந்த கலைப்பட இயக்குனர் என்று உலகத்திரைப்படக் குழுவினர்களால் அடையாளம் காணப்பட்ட சிங்கள இயக்குனர் அசோகா ஹண்டகம அவர்களின் தமிழ் திரைப்படமான “இனி அவன்” உலகெங்கும் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கின்றது.



 “இனி அவன்” “இனியவன்” என்று இத்திரைப்படத்தின் தலைப்பு இரண்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பதின்மவயதில் அனைத்தையும் துறந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தன்னை இணைத்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடச்சென்ற இளைஞன் ஒருவன், இருபத்தைந்து வருடங்களின் பின்னர், போராட்டம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசினால் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு, மீண்டும் தனது வாழ்வை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆசையுடன் தன் சொந்தக் கிராமம் நோக்கித் திரும்புகின்றான். அவனை முதலில் வரவேற்பது முறைத்து முகம் திருப்பும் அவன் ஊர் மக்களும், பாழடைந்த அவன் வீட்டுச்சுவரில் மாலையுடன் தொங்கும் அவன் படமும்தான். மாலையுடன் அவனை மாவீரனாய் ஏற்றுக்கொள்ளும் எமது சமூகம் மறுவாழ்விற்காய் ஏங்கும் அவனது உணர்வைப் புரிந்து கொள்ள மறுக்கின்றது.  இயக்குனர் உரையாடல்களைத் தவிர்த்து, குறியீடாய் திரைமொழியை நகர்த்தியமை, இந்தியத்திரைப்பட ஞனரஞ்சகத்திரைக்கதைக்குப் பரிச்சயமாகிப் போன தமிழ்ப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.

 திரைப்படக் காட்சியின் இறுதியில் இயக்குனருடனான கேள்வி பதில் நேரத்தின் போது ஈழத்தமிழர்கள் முன்வைத்த கேள்விகளிலிருந்து அவற்றை உணரக்கூடியதாக இருந்தது. முப்பது வருடப் போராட்டத்தின் பின்னர், தமிழ்க் கிராமங்களில் மக்களின் வாழ்வு சிதைந்து போய்விட்;டது என்பதையும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து பழகிப் போன இளைஞனுக்கு, இன்றைய தமிழ் மக்களின் வாழ்வின் யாதார்த்தம் புரியாமல் தடுமாறிப் போகின்றான் என்பதனையும் இயக்குனர் காட்சிகள் மூலம் செதுக்கியிருக்கின்றார். “இனி அவன்” என்று ஒரு ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களாக பெண்களே உயர்ந்து நிற்கின்றார்கள். போரினால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள், அதே போல் அவர்கள்தான் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நம்பிக்கையோடு சோர்ந்து போகாமல் எதிர்காலத்தை முன்னின்று எடுத்துச் செல்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதனை திரைப்படம் தெளிவாகக் காட்டுகின்றது. நாடும், மக்களும் அழிந்து போனாலென்ன நான் சாதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பேன் என்று இளைஞனின் பழைய காதலியின் தந்தை ஒருபக்கம், ஓட்டுனர் பத்திரம் எடுக்கச் சென்றபோது இருபதினாயிரம் ரூபாய் கேட்கும் அலுவல ஊழியர் ஒருபக்கம், சாட்டுக்கு நகைஅடைவு கடை வைத்துக்கொண்டு கள்ளக்கடத்தல் செய்பவர் ஒருபக்கமென்று ஊர் இயங்கிக்கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலி உறுப்பினருக்குப் புனர்வாழ்வு என்று கூறி அரசாங்கம் முறையாக எதையாவது செய்ததா? தமிழர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி என்று கூறி முறையாக ஏதாவது நடக்கின்றதா? போராட்டத்தின் பின்னர் மக்களின் உண்மையான நிலை என்ன? அவர்களுக்கு தீர்வு சொல்ல யார் வரப் போகின்றார்கள்? இயக்குனர் அசோகா ஹண்டகம உலகெங்கும தனது திரைப்படத்தைத் திரையிட்டுக் கேள்வியாக முன் வைக்கின்றார்? இனி அவனின் எதிர்காலம் என்ன என்று பார்வையாளர்களிடம் கேட்டு முடிகின்றது திரைப்படம். 

இயக்குனரிடம் தமிழ் பார்வையாளர்கள் காட்சி நேரத்தின் போதும், பின்னர் நண்பர்களுடன் கலந்துகொண்ட போதும் முன்வைத்த சில கேள்விகளுக்கு இயக்குனரின் பதில்களும்

கேள்வி – ஏன் இப்படத்தை எடுத்தீர்கள்? 
பதில் -  நான் ஒரு திரைப்பட இயக்குனர் 

கேள்வி - இராணுவம் தமிழ் பிரதேசம் எங்கும் பரவியிருக்கும் போது, ஒரு ஆமியைக் கூடத் திரையில் காணவில்லையே. வேண்டுமென்றே தவிர்த்தீர்களா? காரணம் என்ன? 
பதில் - இராணுவம் திரை முழுவதும் பரவிக் கிடக்கின்றார்கள். பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். 

கேள்வி – தமிழர்களின் பிரச்சனையை அதிகம் ஆராய்சி செய்யாமல் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது போலுள்ளது? 

பதில் - நான் தமிழர்கள் பகுதியிலும், சிங்களவர் பகுதியிலும் வாழ்ந்து வருபவன் அன்றாடம் காண்பவற்றிலிருந்து தொகுத்துத் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். உங்களுக்கு உள்ளது போல் எனக்கு தமிழர்களும், அவர்கள் வாழ்வனுபவங்களும் வெறும் செய்திகளல்ல. 

கேள்வி – தமிழ் பெண்ணிற்கு உதவுவதற்கு ஒரு தமிழனும் முன்வராத போது ஒரு சிங்கள ஆண் உதவ முன்வருவது போல் காட்சி அமைத்திருப்பது பற்றி? 
பதில் - ஞனரஞ்சக தமிழ் சினிமாவிற்குப் பரிச்சயமான உங்கள் பார்வை, கலைப்படங்களின் காட்சிகளை ஆராய மறுக்கின்றது என்பதற்கு இந்தக் கேள்வி நல்ல உதாரணம். உதவ வந்த சிங்கள ஆண், என்ன வாகனத்தில் வந்தான், என்ன உடை அணிந்திருந்தான் என்பதையும், அதற்கு அந்த தமிழ்ப் பெண் என்ன பதில் சொன்னாள் என்பதனையும் நீங்கள் அவதானித்திருந்தால் இந்தக் காட்சியை நான் ஏன் அமைத்தேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
 கேள்வி – தமிழர்களுக்குள்ளான பிரச்சனையை ஒரு சிங்களவராகிய நீங்கள் திரைப்படமாக்கி, தமிழனுக்குப் பிரச்சனை தமிழனினால்தான் என்பது போல் தமிழர்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றீர்கள் என்பது என் கருத்து. இதற்கு உங்கள் பதில்? 
பதில் - (சிரித்து விட்டு) எனது மொழி சிங்களம், ஆனால் போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் நான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன். கொலை மிரட்டல்களுக்குள்ளாகியிருக்கின்றேன். எனது நாடகப்பிரதிகளுக்குத் தடை விதித்திருக்கின்றார்கள். நான் நாட்டை விட்டு ஓடவில்லை. இன்றும் நான் இலங்கையில்தான் வசிக்கின்றேன். இன்றும் நான் தமிழர்களின் உரிமைக்காகப் போராடியும் குரல் கொடுத்துக்கொண்டும்தான் இருக்கின்றேன். இருப்பேன். நீங்கள் பேசுவது மட்டும்தான் தமிழ். புலம்பெயர்ந்த மக்களுக்கு அங்கே என்ன நடக்கின்றது என்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இன்னுமொன்றையும் கூற விரும்புகின்றேன். இத்திரைப்படத்திற்கு “இனி அவன்| என்று பெயரிட்டதற்கு வேறொரு காரணமும் இருக்கின்றது. சிங்களத்தில் இத்திரைப்படத்திற்கு “இனியவன்” என்று மட்டும்தான் பெயரிட்டிருக்கின்றேன். காரணம் விடுதலைப்புலிகள் என்றாலே, பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தும் அவர்களுக்கு அவர்கள் நல்ல ஒரு நோக்கத்திற்காகப் போராடச் சென்ற சாதாரண மனிதர்கள் என்று உணர்த்துவதற்காகத்தான். 

கேள்வி – “இனி அவன்” திரைப்படத்தில் தமிழர்களின் பங்கு எந்தளவிற்கு இருந்தது? 
பதில் - பல இளைஞர்கள் என்னோடு இணைந்து வேலை செய்தார்கள். நடிகர்கள் அனைவரும் தமிழர்களே, அதிலும் கதாநாயகனைத் தவிர்த்து மற்றைய அனைவருக்கும் இதுதான் முதல் திரைஅனுபவம். எனது முழு நோக்கமும், ஈழத்தமிழ் மக்கள் இந்திய ஞனரஞ்சகத்திரைப்படங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தமக்கென்றொரு திரைமொழியை கண்டெடுத்து சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்கு நான் முன்நின்று உதவுவேன்.

 “இனி அவன்” திரைப்படம் உலகின் பல நாடுகளிலும் திரையிடப்படுகின்றது. இத்திரைப்படத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத்தமிழர்கள் தமக்கென்றொரு திரைமொழியை உருவாக்கித் தரமான திரைப்படங்களை எமக்குத் தருவார்கள் என்று நாமும் நம்புவோம்.  

No comments: