Saturday, September 5, 2015

முகில்கள் பேசட்டும்.








1

கசன்ரா திடீரெனக் கேட்டாள், ”இந்த வருடம் விடுமுறைக்கு ஏதாவது பிளான்
வைச்சிருக்கிறாயா?” என்று. வழமைபோல் வெள்ளி மதிய உணவு ரெஸ்டோரென்டில் சாப்பிட்டுக்கொண்டிரும் போதுதான்  இப்படிக் கேட்டாள். அன்று ”சலாட்கிங்க்” இற்கு சாப்பிடப் போயிருந்தோம், வழமை போல் எனக்குப் பிடித்த ”இஸ்லாமிக் நுாடில்ஸ்” பதினைந்து மிளகாய்கள் உறைப்புடன்  ஊதி ஊதிச் சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் கசன்ரா திடீரென்று இப்படிக் கேட்டாள்.

 டோனாவும், ஜனீபரும் நெட்பிளிக்ஸ் இல் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கும்  ”இன் சீக்ரெட்ஸ்” பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பார்ப்பதில்லை, அதனால் என் கவனம் சாப்பாட்டில் இருந்தது. கசன்ரா ”ரெட் பீன் நுாடில்ஸ்” ஐந்து மிளகாய்களுடன் எடுத்திருந்தாள். அவள் நெற்றியிலிருந்து வியர்வை ஓடிக்கொண்டிருந்தது. கன்னங்கள் இரண்டும் கையால் பிசைந்து விட்டது போல் சிவந்து கிடந்தன. மூக்கிலிருந்து ஒழுகும், நீரை துடைத்துச் துடைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று விடுமுறை பற்றிக் கேட்டாள்.

 தாங்க முடியாத உறைப்பைச் சாப்பிடும் போதெல்லாம் கசன்ராவின் மனம் இந்தியாவைச் சுற்றிவருவது எனக்குத் தெரியும். இன்றும் அதுபோல்தான். இனிச் சிறிது நேரம் இந்தியா பற்றி வாயூறக் கதைப்பாள். ”அந்தக் கலர் கலரான உடுப்புகள், மினுமினுக்கும் நகைகள், ஸ்பைசி சாப்பாடு” ஒன்று இரண்டு ஹிந்திப் படங்கள் பார்த்திருக்கின்றாள், அதிலிருந்து தனக்குள் ஒரு கற்பனை இந்தியாவை வடிவமைத்து சொல்லிக்கொண்டே போவாள். ”நானும் இந்தியன், நீயும் இந்தியன்” குழந்தைபோல் சிரிப்பாள். நான் இந்தியன் இல்லை, சிறீலங்கன் என்று சொன்னால் எல்லாம் ஒன்றுதான் என்பாள்.தான் நேட்டிவ் இந்தியன், (கனேடிய பூர்வீக குடி) அதனால் இந்தியாவிற்கும் தனக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்பாள்.

நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். போன தடவை சாப்பிட்டபோது பத்து மிளகாய்கள் எடுத்திருந்தேன். அது அளவான உறைப்பாக இருந்தது. சரி இந்த முறை பதினைந்தை எடுத்துப் பார்ப்போம் என்று வீண் பரீட்சை எடுத்திருந்தேன். கதைப்பதற்குக் கூடக் கஷ்டமாக இருந்தது. சுடுதண்ணீரில் எலும்பிச்சை போட்டு இடையிடையே குடித்துக்கொண்டிருந்ததால் சமாளிக்கும்படியாக இருந்தது. இருந்தும் எனது அவஸ்தையை நான் அவளுக்குக் காட்ட விரும்பவில்லை. நான் இந்தியன். மாஜிக்கல் வுமன் என்று அவள் நம்பினாள். அதை நான் கெடுக்க விரும்பவில்லை. அவள் திரும்பவும் கேட்டாள், ”ஏதாவது வக்கேஷன் பிளான்?’

நான் யோசித்தேன். ஜே (ஜெயக்குமார் - எனது கணவன்) இந்த வருட விடுமுறை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை. ஓகஸ்டில் ”க்குவாஷ்” விளையாட்டில் தான் பிஸியாக இருப்பேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, அதனால் நானும் பெரிதாக விடுமுறை பற்றி யோசிக்கவில்லை. வின்டர் விடுமுறைக்கு ஒரு கிழமை வடஅமெரிக்கா பக்கம் சிலவேளை போவதாக உள்ளோம், அதைத் தவிர கோடைக்கு ஒரு பிளானும் இல்லை. நான் கசன்ராவிற்கு இதைச் சொன்னபோது அவள் கண்கள் ஆர்வத்தோடு விரிந்தன. ”வாறியா நானும் நீயும் ஒரு மூன்று கிழமைக்கு இந்தியா போய் வருவோம்” எனது ஒற்றைக் கையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டாள். எனக்கு ஒன்றுமாக விளங்கவில்லை. எனக்குத் திருமணமாகி இந்தப் பதினைந்து வருடத்தில் நான் ஜேயை விட்டுத் தனியாக விடுமுறையென்று போனதில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து போவோம், சிலவேளைகளில் நானும் ஜேயும் மட்டும் தனியாகப் போவோம். ஒருவருடத்தில் ஒரு விடுமுறைக்காவது புதிய நாடொன்றிற்குச் சென்றுவருவது எமது வழக்கம். போன வருடம்தான் இந்தியா சென்று வந்திருந்தோம். அப்படியிருக்கும் போது ஜேயை விட்டுவிட்டு எனது அலுவலத் தோழியுடன் திரும்பவும் இந்தியா செல்வதென்றால்? நான் வியப்போடு புன்னகைத்தேன். அவள் முகம் வாடிப்போய் விட்டது.

அவள் ஒற்றைத் தாயாக இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்தவள், பிள்ளைகள் இருவரும் தற்போது தமது காதல்களுடன் தனியாக வாழ்வதற்குப் போய்விட்டார்கள். கசன்ராவிற்கும் ஒரு காதலன் இருக்கின்றான். இருந்தும் அவள் தனியாகத்தான் வாழ்கின்றாள். கனடாவை விட்டு அவள் வெளியெங்கும் போனதில்லை. விடுமுறைக்கு தனது சொந்த இடமான ”வின்னிப்பெக்” மாகாணத்திற்கு விமானத்தில் போய் வருவாள். அங்கு அவளது வளர்ப்புத் தாயும், சொந்தங்களும், நண்பர்களும் இருக்கின்றார்கள். டொரொன்ரோ வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. வேலைக்காகவென்றே டொரொன்டோவிற்கு இடம்பெயர்ந்திருக்கின்றாள். ”நான் ஜேயை விட்டிட்டு ஒருநாளும் வக்கேஷன் போனதில்லை” என்றேன். என்னை அவள் வினோதமாகப் பார்த்தாள். ”ஆனால் ஜே உன்னை விட்டிட்டுப் போயிருக்கிறானே? பெண்கள் போகக் கூடாதா? இது என்ன உங்கட கல்சரா?” என்றாள். நான் யோசித்துப் பார்த்தேன். ஜே தனது நண்பர்களுடன் ஸ்கேட்டிங் ரிப் இற்கு ஒவ்வொரு வருடமும் போகின்றான், வெஸ்இன்டீசில் கிரிக்கெட் மட்ச் நடக்கும் போது நண்பர்களுடன் போய் வந்திருக்கின்றான். அவள் சொன்னது சரிதான். பெண்கள் தனியாக விடுமுறைக்குப் போகக் கூடாது என்று நான் ஏன் நினைக்கின்றேன்?. ஜேயிடம் கேட்டால் அவன் வேண்டாம் என்று சொல்வானா?

நான் கசன்ராவைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டேன், ’இந்தியா ரிப் பற்றிச் சீரியஸாத்தான் கேக்கிறியா?’ என்று, அவள் கண்கள் படபடக்க ஓம் என்றாள். அது தனது கனவு என்றாள். தன்னால் தனியாகப் போக முடியாது, உன்னைப் போல் ஒருவருடம் சேர்ந்து போனால்தான் உண்டு” என்றாள். நான் சரி என்றேன்.  இன்னும் மூன்று மாதங்களில் பயணம் என்று முடிவானது,  அவள் சந்தோஷத்தில் விக்கி விக்கி அழத்தொடங்கிவிட்டாள். நான் அவளது கையை இறுகப் பிடித்தேன். தங்களுக்குள் கதைத்துக்கொண்டிருந்த டோனாவும், ஜனீபரும் திடுக்கிட்டு எங்களை வினோதமாகப் பார்த்துவிட்டுப் பின்னர், தாங்களும் இந்தியா வரப்போகிறோம் என்று எங்கள் கைகள் மேல் தங்கள் கையை வைத்தார்கள்.

டோனா ஜமேக்காவைச் சேர்ந்தவள், திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் வாழ்பவள். நண்பர்களுடன் விடுமுறைக்குப் போவது அவளுக்கு சர்வசாதாரணம். ஜனீபர் கணவரை இழந்த மெக்சிகன். இரண்டு ஆண்பிள்ளைகள் வேலைக்குப் போகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் பெற்றோரைப் பார்க்கவென்று மெக்சிக்கோ போய் வருவாள். இந்த வருடம் இந்தியாதான் என்றாள். ஜேயிடம் சொன்னபோது அவன் சந்தோஷமாக சம்மதித்தான்.

2

இந்தியா என்று முடிவாகிவிட்டது, ஆனால் இந்தியாவில் எங்கே போவது? விடுமுறையை ஒழுங்கு செய்யும் பொறுப்பு முழுக்க, முழுக்க  என்னிடம்தான் விடப்பட்டிருந்தது, கசன்ராவிற்கு  பாஸ்போட் தயார் செய்வது உட்பட. நான் மூன்று தடவைகள் மெட்றாஸ் போய்விட்டேன். இந்த முறை வேறு எங்காவது போனால் என்ன என்று மனம் சொல்ல மும்பை என்று  முடிவெடுத்துக் கொண்டேன். ஜே என்னை வியப்போடு பார்த்து ”ஆர் யூ ஷ்வர்?” என்றான். “வை நொட்?“ என்றேன். அவன் தோளைக் குலுக்கிவிட்டுப் போய்விட்டான்.

கூகிள்இல் மும்பையை ஒருமுறை வலம் வந்தேன். பார்க்க வேண்டிய
இடங்கள் தங்குவதற்கான ஹொட்டேல். ஷோப்பிங் சென்டேஸ், ரெஸ்டோரென்ட்ஸ் என்று,இரண்டு மாதங்கள் கூகிளில் கேர்சரை அங்கும் இங்கும் இழுத்து இழுத்து மும்பை எனக்கு தலைகீழ் பாடமாகி விட்டிருந்தது. அம்பானியின் வீடு எங்கேயுள்ளது என்றும் பார்த்துக்கொண்டேன்.
சத்ரபதி சிவாஜி ஏர்போட்டிலிருந்து அதிகம் துாரமில்லாமலும், நான்கு பேர் வசதியாகத் தங்குவதற்குமென ஐந்து நட்சத்திர ஹொட்டேல் லீலாவில் ஒரு பெரிய அறையையும்  ஹந்தேரி என்ற இடத்தில் பதிவு செய்து கொண்டேன். அதன் பின்னர் வந்த நாட்களெல்லாம் இந்தியப் பயணத்துக்கான ஒழுங்கு செல்வதிலேயே கழிந்தன. பயணத்தன்று ஜே என்னை ஏர்போட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான். கசன்ராவை அவளது காதலன் அழைத்து வந்திருந்தான். டோனாவை வழியனுப்ப அவளது முழுக்குடும்பமும் வந்திருந்தது. ஜனீபருடன் அவளது இரண்டு மகன்மாரும் வந்திருந்தார்கள். நான்கு பெண்களாகப் போகின்றீர்கள் கவனம், கவனம் என்று எல்லோரும் அடிக்கடி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். என் வயித்துக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. இந்தியாவை வரைபடத்தில் மட்டும் பார்த்த பெண்கள், என்னை நம்பி என்னோடு விடுமுறைக்காக வருகின்றார்கள்.

சென்னையென்றால் மொழி தெரிந்த இடம். சென்னையில் எனக்கு
நண்பர்கள் கூட இருக்கின்றார்கள், ஏதாவது உதவி தேவையென்றால் அவர்களை அழைக்கலாம். மொழிதெரியாத, எனக்கே புதிய இடமான மும்பையை நான் ஏன் தெரிவு செய்து கொண்டேன்? விமானத்திற்குள் ஏறி எமக்கான இருக்கையைக் கண்டு பிடித்து அமர்ந்த போது எனக்குள் பயம் எழத்தொடங்கியது.விடியற்காலை இரண்டு மணிக்கு மும்பையில் வந்திறங்கினோம். ஒழுங்கான நித்திரையில்லாததால் அனைவருமே மிகவும் களைத்து பார்ப்பதற்கு சகிக்காமலிந்தோம். இருந்தும் கசன்ரா தனது மேக்கப்பைச் சரிசெய்து தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். முதல் முதலில் இந்திய மண்ணைத் தொடும் போது தான் உற்சாகமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்றாள்.

3.
சூரிய ஒளி கண்களைத் தொட்டபோது கூச்சத்தால் கண்களைத் திறக்கமுடியாமல் புரண்டு படுத்து கைகளால் கட்டிலின் பக்கத்தில் ஜேயை அணைப்பதற்குத் தடவிப் பார்த்தேன். கட்டில் வெறுமையாகக் கிடந்தது, இருந்தும் சூடு குறையவில்லை. கொஞ்ச நேரமெடுத்தது நான் எங்கேயிருக்கின்றேன் என்பது பிடிபட. மனதுக்குள்  வேதனையோடு கூடிய ஒரு சந்தோஷம்.

ஜேயை நிறம்பவே மிஸ் பண்ணுகின்றேன், இருந்தாலும் இப்படியொரு விடுமுறை கிடைக்குமா? திரும்பி பக்கத்துக் கட்டிலைப் பார்த்தேன், டோனாவும், ஜெனியும் குறட்டைவிட்டபடி கிடந்தார்கள். வோஸ்ரூமில் தண்ணியோடும் சத்தம் கேட்டது, கசன்ரா இப்பதான் எழும்பிப் போயிருக்கின்றாள். நான் லாப்டொப்பை எடுத்து பேஸ்புக்கைத் திறந்தேன். ஜேயிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ”கண்மணி உன்னை நான் நிறம்பவே மிஸ் பண்ணுகின்றேன், இருந்தாலும் வேலை, ஸ்குவாஷ் பயிற்சி, நண்பர்களுடன் வெளியில் செல்வது என்று நேரம் போய் விடுகின்றது. உனது ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாக அனுபவித்துவிட்டு திரும்பிவா” திரும்பத்திரும்ப அவனது செய்தியைப் படித்தேன். குரலைக் கேட்க வேண்டும் போலிருக்க போன் பண்ணிப் பார்த்தேன் மெசேஜ் இற்குப் போனது, ஐ லவ் யூ சொல்லி போனைக் கட் பண்ணிவிட்டு, அவனுக்கு எனது காதலைச் சொல்லி செய்தி அனுப்பினேன். மனம் ஏனோ கனத்தது. அழ வேண்டும் போலிருந்தது, கண்கள் கலங்க சூரியனைப் பார்த்தேன்.

காலைச் சூரியனை இவ்வளவு அழகாக நான் கண்டதில்லை. போர்வையை விலக்கி என் உடல் முழுக்க சூரிய ஒளியைப் பரவ விட்டேன். உடல் இதமான சூடு கண்டது. ”என்னை உனக்குள் இழுத்து எரித்துவிடு” புரண்டு படுத்தேன்.
ஜே யின் நினைவு என்னைப்  புரட்டிப் போட்டது. கனடா திரும்பியதும் மும்பையில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனுக்கு கதைபோல சொல்ல வேண்டும். முதல் மூன்று நாட்களும் நாங்கள் என்ன செய்தோம் மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால் எனக்கு அப்போது தெரியவில்லை நான் ஒரு சம்பவத்தை மட்டும் அவனுக்கு மறைக்கப் போகின்றேன் என்று.

முதல்நாள் குளிரூட்டப்பட டக்ஸியில் மும்பையை சுத்திப் பார்க்க முடிவெடுத்தோம். அரை மணித்தியாலத்தில் போக வேண்டிய இடத்திற்குச் செல்ல இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலானது. அந்த அளவிற்கு வாகனங்கள் ரோட்டெல்லாம். அத்தோடு வெய்யில் அதிகமிருந்ததால் அடிக்கடி தண்ணீர், ஜீஸ் என்று வாங்கிக் குடித்தோம், வெளியில் சாப்பாடு. திரும்பி ஹோட்டேலுக்கு வர மீண்டும் டக்ஸி. கணக்குப் பார்த்த போது இப்படியே போனால் கொண்டு போன பணம் அனைத்தையும், போக்குவரத்திலேயே செலவழித்து விட்டுவிடுவோமோ என்று பயம் வந்தது. இரண்டாம்நாள், டக்ஸியை கைவிட்டு ஓட்டோவிற்குத் தாவினோம். அப்போதுதான் தெரியவந்தது மும்பையில் புகையிரதப் பயணச்சீட்டு மிகவும் மலிவு என்று. அத்தோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாகப் பெட்டிகள் இருந்தன. ரோட்டு நெரிசலிலிருந்து தப்பி அனைத்து இடங்களுக்கும் மிகவிரைவில் சென்றும் வரமுடியும் என்பதால் ஒட்டுமொத்தமாக ரயில்பயணத்துக்குத் தாவிவிட்டோம். ஓட்டோ பிடித்து ஹந்தேரி புகையிரத நிலையத்திற்குப் போய் அங்கிருந்து சேர்ச்கேட் புகையிரத நிலையத்திற்கு டிக்கெட் எடுத்து பெண்களுக்கான தரிப்பிடத்தில் காத்து நின்றோம்.

புகையிரதம் வந்து நின்ற போது பெட்டியிலிருந்து ஈசல் கொட்டுவது போல் பயணிகள் வெளியில் வந்தார்கள். இவ்வளவு மக்களை எப்படி அந்தப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. டோனாவும், ஜெனியும் எப்போதும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, முகத்தில் தடுமாற்றம், பயத்தோடு காணப்பட்டார்கள். மாறாக கசன்ரா ஒரு துள்ளலோடும், சிரிப்போடும், பார்க்கும் இடங்களிலெல்லாம் யாரோடாவது கதைக்க முனைந்து கொண்டிருந்தாள். வந்த இரண்டாம் நாளே ஹோட்டேலில் வேலைசெய்யும் பலர் அவளுக்கு நண்பரகளாகியிருந்தார்கள். காலை உணவு ஹோட்லில் முடித்துக்கொண்டுதான் வெளியில் கிளம்புவோம். டோனாவும், ஜெனியும் பிரெட், ஒம்லெட், ஜாம் என்று சாப்பிடுவார்கள், நானும் கசன்ராவும் பூரி, கிச்சடி ஊத்தப்பம், சட்னி,
உருளைக்கிழங்குப் பிரட்டல் என்று உறைக்க உறைக்கச் சாப்பிட்டு ஒரு மசாலா ரீயும் குடிப்போம். கசன்ரா பானிப்பூரிக்கு அடிமையாகியிருந்தாள். ரோட்டோரம் கண்டால் ஓடிப்போய் தானாகவே ஓடர் பண்ணி வாங்கிக் கொள்வாள். சிலவேளைகளில் அவள் இந்த ஒரு கிழமையில் ஹிந்தி கதைக்கப் பழகிவிட்டாளோ என்று எனக்குச் சந்தேகமாகவிருக்கும்.

எவ்வளவு இயல்பாக இந்தியாவை ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்று சந்தோஷமாகவுமிருந்தது. ஆனால் மெக்சிக்கோவில் பிறந்து வளர்ந்த ஜெனிபருக்கும், ஜமேக்காவில் பிறந்து வளர்ந்த டோனாவுக்கும் மட்டும் இந்தியாவோடு ஒட்டக் கஷ்டமாகவிருந்தது.மூன்று நாட்களில் பழகிப்போயிருந்தது மும்பையின் சத்தம். கதவைத் திறந்து கொண்டு கசன்ரா வந்தாள். முகம் பளீச்சென்றிருந்தாலும் சோகம் தெரிந்தது, என்னவென்றேன். தனது லக்கேட்ஜை இழுத்துப் போட்டாள், எனக்குப் பக்கத்தில் வந்து தொப்பென்று இருந்தாள். எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. எழும்பி கால்களை மடக்கி கைகாளால் அவளை அணைத்துக்கொண்டு நானும் பொய்ச் சோகமாக முகத்தை வைத்தபடியே அவளைப் பார்த்தேன். அவள் முகத்தை நீட்டி ”சீரியஸ்லீ வட் ஆம் ஐ கோயிங் ரு டூ?” என்று இழுத்தாள். ”இன்னும் பத்து நாளுக்கு மேல இருக்கு மும்பையில” என்றாள். நான் ”தெரியும்” என்றேன். ”நீயாவது தடுத்திருக்கலாமே?” என்றாள். ”நான் ரை பண்ணினன் முடியேலை” என்றபடியே எழும்பி வோஸ் ரூம் பக்கம் போனேன். டோனாவும், ஜெனியும் விழித்துக்கொண்டார்கள். நான் வோஸ் ரூம் கதவைச் சாத்தி சில நிமிடங்களின் பின்னர் கசன்ரா ஓ என்று வாய்விட்டு அழும் சத்தம் கேட்டது. வாயுக்குள் பிரஸ்சை வைத்தபடியே வெளியே வந்தேன். டோனாவும், ஜெனியும் வயித்தைப் பிடித்துக்கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் நின்றார்கள். கசன்ரா தனது லக்கேட்ஜை மூட முடியாமல் பக்கத்திலிருந்து அழுதுகொண்டிருந்தாள். ”சரி சரி அழாதை ஏதாவது செய்யலாம்” என்றேன். மும்பை வந்து ஒருகிழமையில் தனது லக்கேட்ஜை மூட முடியாத அளவிற்குப் பொருட்களை வாங்கிக் குவித்துவிட்டாள். இனி வரும் நாட்களில் வாங்கப் போகும் பொருட்களின் தொகையை நினைத்து அவளுக்கு இப்போதே பயம் வந்து விட்டது. ஒன்று விமான அனுமதிக்கு மேலாகப் பொருட்கள் சேரப் போகின்றது, மேலதிக பணம் கட்டி அதற்கான அனுமதியைப் பெற்றாலும், டொரொன்டோ ஏயர் போர்ட்டில் எக்கச்சக்கமா ரக்ஸ் அடிக்கப் போகின்றார்கள்.

 பந்டாரா தெருக் கடைகளில் அவள் ஒரு கடையை விடாது பொருட்களை அள்ளியிருந்தாள். வேறு இடங்களுக்குப் போவோம், பல இடங்களில் பார்த்துத் தெரிவு செய்து வாங்குவோம் என்று நான் தடுக்க முயன்ற போது இப்பிடிக் கலர் புல்லாய், அழகழகாய் குறைந்தவிலையில் இந்த உலகத்தில் எங்கும் கிடைக்காது என்று அள்ளிவிட்டாள். இன்றுமொருக்கா வாங்க முடியாத பொருட்களுக்காக பந்டாரா தெருக்கடைகளுக்குப் போகவேண்டும் என்பதும் அவளது ஆசை.ஆனால் பந்டாரா புகையிரத நிலையத்தில் நடந்த சம்பவத்தால் அவள் கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள். புகையிரநிலையத்தில் இறங்கி நாம் வீதியோரக் கடைகளை நோக்கி நடந்த போது நடைபாதையையும், புகையிர நிலையத்தையும் பிரிக்கும் இரும்புக் கம்பி வேலியோரத்தில், சிறுசிறு குழுக்களாக பலர் அமர்ந்திருந்தார்கள். கவனித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது அவர்கள் அங்குதான் வாழ்கின்றார்களென்று. பெண்கள் மரநிழலில் அடுப்பு மூட்டி சமைத்துக்கொண்டிருந்தார்கள், ஆண்கள் எந்த விரிப்புமில்லாமல் அந்த இரைச்சலுக்குள்ளும் வாய் பிளந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள், அவர்கள் தலைக்கு மேல் இலையான்கள் ரீங்காரத்தோடு வட்டமடித்தன. ஒரு பெண் தனது கால்களில் ஒரு குழந்தையை கிடத்திப் பக்கத்திலிருக்கும் பிளாஸ்ரிக் வாளிக்குளிருந்து தண்ணீர் அள்ளி அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள், சிறுவர்கள் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  இந்தக் காட்சியைக் கண்ட கசன்ரா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு,   'கௌ க்கியூட்'  என்றுவிட்டு தனது கமெராவை எடுத்து அவர்களைப் படமெடுக்க முயன்றாள். சமைத்துக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி கமெராவைக் கண்டுவிட்டுத் தனது கையிலிருந்த அகப்பையை தூக்கி எங்களை நோக்கி எறிந்துவிட்டு ஹிந்தியில் கத்தத் தொடங்கினாள். குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவளும் ஒற்றைக் கையை அசைத்து அசைத்து எங்களைப் பார்த்துக் கூச்சல் போட்டாள். படம் எடுத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்று புரிந்து கொண்டு நாங்கள் அங்கிருந்து மிகவேகமாகப் போய்விட்டோம். பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்ப புகையிரத நிலையத்திற்கு வந்த போது நடந்த விடையத்தை நாம் மறந்து போனோம். ஆனால் அதே இடத்திலிருந்து கதைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்கள், எங்களைக் கண்டதும் திரும்பவும் கூச்சல் போடத் தொடங்கினார்கள். ரோட்டால் போவோர் வருவோரெல்லாம் எங்களை வேடிக்கை பார்த்தார்கள். மிகவும் தர்மசங்கடத்துடன் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டோம். இனிமேல் பந்டாரா புகையிரத நிலையத்தைத் தவிர்க்க வேண்டுமோ? தான் வாங்கத் தவறிய பொருட்களை பந்டாரா வீதியோரக் கடைகளுக்குச் சென்று வாங்கியே  ஆக வேண்டும் என்று கசன்ரா அடம்பிடித்தாள்.

மும்பையில் நாம் பார்க்க வேண்டிய இடங்களென்ற பட்டியலில் ராஜீவ்காந்தி சீ லிங்க்கும் இருந்ததனால் ஹொட்டேல் முதலாளியின் உதவியுடன் கார் ஒன்றை ஒழுங்கு செய்து அந்தத் தொங்குப்பாலப் பெரும்தெருவில் பயணித்து பந்டாரா கடை வீதிகளுக்குப் போவதென்று முடிவெடுத்தோம். ரொறொன்டோவின் 407 பெருந்தெருப்போல் கட்டணத்துடன் பயணிக்கும் தொங்குபால பெரும்தெருவது. எனவே ஓட்டோ அங்கு செல்லாது. பண முதலைகளின் பளீச் சென்ற கார்களை மட்டுமே அங்கு காணக்கூடியதாக இருந்தது. இரவு நேரம் சூரிய அஸ்த்தமனம் அங்கே பெயர் போனது. அற்புதமான எங்கும் கிடைக்காத சூரிய அஸ்தமனத்தை அங்கு பார்த்து மகிழ்ந்தோம். ”கேட் ஒவ் இந்தியா” பக்கத்தில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான ”தாஜ்” ஹொர்டேல் புரணமைக்கப்பட்டுப் பிரமாண்டமாக நின்றது. சின்ன வயதில் அப்பா அம்மாவோடு முத்தவெளி, யாழ்ப்பாணம் கோட்டையெல்லாம் சுற்றிப் பார்த்த ஞாபகம் வந்தது. ஒரு சிறுபெண் தன்னிடமிருந்த பெட்டியொன்றை எங்களுக்குக் காட்டி ஹிந்தியில் எதையோ சொல்லிக் கெஞ்சிக்கொண்டு எங்களைத் தொடர்ந்து வந்தாள். நான் முதலில் பிச்சைதான் கேட்கின்றாள் என்று நினைத்துவிட்டேன். கசன்ரா நின்று நிதாமாக தனது பேர்ஜைத் திறந்து ஒரு ஆயிரம் ரூபா நோட்டை இழுத்தாள் கொடுப்பதற்கென்று. நான் அவளது கையைத் தட்டி உள்ளே வை என்று கண்ணைக் காட்டிவிட்டு, எனது பேர்ஸ் இற்குள் இருந்த சில்லரையைப் பொறுக்கி அவளிடம் நீட்டினேன். சிறுமி என்னை முறைத்துப் பார்த்தாள் பின்னர், கசன்ராவின் ஒற்றைக் கையைப் பிடித்து தனது பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு அச்சுப் போன்ற ஒன்றை எடுத்து சைகைப் பாசையால் கையில் அழுத்தலாமா என்று கேட்டாள். எங்கள் முகத்திலிருந்த குழப்பத்தைப் பார்த்த சிறுமி பின்னர் தனது கையில் அச்சை அழுத்திக்காட்டினாள். அது ஒரு அழகான சின்னத் தாமரைப் பூவாய் அவள் கையில் பதிந்தது. அன்று முழுவதும் கால்களிலும், கைகளிலும். கன்னங்களிலும் விதவிதமாக சின்னப் பூக்களுடன் நாம் சுற்றி திரிந்தோம். அந்தச் சிறுபெண் கண்கள் மின்ன கையில் கிடைத்த பணத்துடன் ஓடி மறைந்தாள்.

4.
நான் எதிர்பார்த்தது போல் அனேகமாகப் பார்க்க வேண்டிய இடங்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் செய்து முடித்திருந்தோம். மூன்று பெண்களை எனது பொறுப்பில் இந்தியா கூட்டிவந்து பாதுகாப்பாக திரும்பக் கூட்டிச்செல்கின்றேன் என்று எனக்குச் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.டொனாவும், ஜெனிபரும் மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். கசன்ராவும் நானும் மும்பையை அனுபவித்தது போல் அவர்கள் அனுபவிக்கவில்லை என்பதை நான் புரிந்து
கொண்டேன். இன்னும் ஐந்து நாட்களில் ரொரொன்டோ திரும்ப உள்ளோம். கடைசி இரண்டு நாட்களும் ஒரிடமும் போகாமல் ரெஸ்ட் எடுப்பது என்று முடிவெடுத்தோம். டொனாவும், ஜெனிபரும் அதிகம் பொருட்கள் வாங்காததால் அவர்களின் லக்கேட்ஜிற்குள் தனது பொருட்களை அமுக்கி வைத்திருந்தாள் கசன்ரா. ரொறொன்டோ திரும்பப் போகின்றோம்
என்றவுடன், என் மனம் ஜேயைச் சுற்றிச் சுற்றி வரத் தொடங்கியது. அவனுக்காக நான் பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்களை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொண்டேன். பல நிறங்களில் அவனுக்கு மிகவும் பிடித்த லினன் ஸ்சேட்டுக்கள், மரத்தாலன மாலைகள், கை சங்கிலிகள், செருப்புகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தேன். அவன் கட்டாவிட்டாலும் அவனுக்குக் கட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் லுங்கிகளும் வாங்கியிருந்தேன். மனம் முழுக்க சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தது. ரொறொன்டோ போய் வேலைக்குத் திரும்புவதற்கு முன்னர் மூன்று நாட்கள் லீவு நாட்கள் இருக்கின்றன. ஜேயும் என்னோடு
கழிப்பதற்கு என்று அந்த மூன்று நாட்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அந்த நினைவு என்னை அலைக்கழிக்க அதன் பின்னர்  இடங்கள் பார்க்க என்று அலையவோ, உணவங்களுக்குச் சென்று விதம்விதமாக சாப்பிடவோ எனக்குப் பிடிக்கவில்லை. பேசாமல் ஹொட்டலிலேயே கழிப்பதென்று நானும் முடிவெடுத்துக் கொண்டேன். கசன்ராதான் முகத்தைத் தூக்கிக்கொண்டு திரிந்தாள். இருந்தாலும் இரண்டு தடவைகள் ஹொட்டலில் தங்கியிருந்த ஒரு ஜேர்மன் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு ஷொப்பிங் போய் வந்தாள்.
வாங்கி வந்த பொருட்களை எது லக்ஜேட்க்குள் அமுக்கினாள். நான் ஒருநாளைக்கு இரண்டு மூன்று தடவைகளென்று ஜேயுடன் மணிக்கணக்காக தொலைபேசியில் உரையாடினேன். கசன்ராவைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரித்தேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது. உடனடியாக ஜேயிடம் ஓடிச்சென்றுவிடவேண்டும் என்று எனது மனம் பரிதவிக்கத் தொடங்கியது. இத்தனை நாட்களுமில்லாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்? எனக்கே புரியாமலிருந்தது. அவன் தானும் தவிப்பதாகச் சொன்னான். என் உடம்பு சூடு கொண்டது. கடவுளே எமக்கிடையில் ஏனிந்தப் பிரிவு. இனிமேல் ஜே  இல்லாது நான் ஒரு இடமும் போகக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன்.

5.
அன்று இரவு தங்கியிருந்த விருந்தாளிகளுக்கென ஹோட்டேல் லீலா ஒரு பெரிய பார்ட்டியை அறிவித்திருந்தது. கசன்ரா பொலிவூட் நடிகைகள் போல்த் தன்னை அலங்காரம் செய்துகொண்டாள். டொனாவும், ஜெனிபரும் கூடக் களைப்பிலிருந்து மீண்டு புத்துயிர்ப்போடு தம்மை அலங்காரம் செய்துகொண்டு பார்ட்டிக்குப் போகத் தயாரானார்கள். என் மனம் ஜேயைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததால் அலங்காரம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கையில் கிடைத்ததை மாட்டிக்கொண்டு அவர்களுடன் சென்றேன். ஹோட்டேலின் கீழ்த்தளத்திலிருந்த பெரிய மண்டபம் அலங்காரத்தில் மின்னியது. விருந்தாளிகள் அனைவரும் தங்கள் சிறந்த உடையில் காட்சியளித்தார்கள். ஆங்கிலப் பாடல்கள், ஹிந்திப்பாடல்கள் என்று மண்டபம் களைகட்டியிருந்தது. பல வர்ண ஒளிக்கீற்றுக்கள் சுவர்களிலும், முகங்களிலும் நிலங்களிலும் தெறித்து உருவங்களை மாற்றிக் காட்சிப்படுத்தியது. கசன்ரா வாய்விட்டுச் சிரித்துக் கொண்டு ஓடித் திரிந்தாள். அவள் கையில் மெல்லிய நீல நிறத்தாலான அவளுக்கு மிகவும் பிடித்த ப்புளூ ட்றகன் குடிபானம் இருந்தது. அவள் சிரிப்பின் உச்சத்திலிருந்து அவள் எத்தனை க்ளாஸ்களை முடித்திருப்பாளென்று கணிக்க உதவியது. டொனாவும், ஜென்னிபரும் கூட கைகளில் க்ளாஸ்களுடன் ஆண்களுடன் இணைந்து நடமாடிக்கொண்டிருந்தார்கள். மூட் அவுட் என்ற நிலையில் நானிருந்தேன். எங்காவது தனிமையில் இருப்பதற்கு இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த என்னை கசன்ரா வந்து இழுத்துக்கொண்டு ப்பார் பக்கம் போனாள். போகும் போது உனக்கு ஒரு சேர்ப்பிறைஸ் இருக்கிறது என்றாள். நான் புருவத்தை உயர்த்தி என்ன என்றேன்? சேர்ப்ரைஸ் என்றாள் திரும்பவும். ப்பார்இல் நின்ற வெயிட்டர் என் முன்னால் ஒரு பீனகொலோடாவை வைத்து இது உங்களுக்காக அங்கேயிருப்பவர் ஓடர் செய்தது என்றார். நான் ரிங்கைக் கையிலெடுத்த படியே வெயிட்டர் சுட்டிக்காட்டிய பக்கத்தைப் பார்த்தேன்.
தூரத்தில் பல நிற பட்டுச் சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட அறையின் மூலைப்பகுதியில் புன்னகையுடன் என்னைப் பார்த்தபடி உயர்ந்த கதிரை ஒன்றில் அவன் அமர்ந்திருந்தான். நான் அவனைப் பார்ப்பதைக் கண்டதும் தலையை சிறிது ஆட்டித் தனது கையிலிருந்த க்ளாஸை உயர்த்தி எனக்குக் காட்டி மீண்டும் அழகாகப் புன்னகைத்தான். ஒரு செக்கன் அது ஜே யோ என்ற சந்தேகம் எனக்கெழுந்து அடங்கியது. என் பாதங்களில் கையை வைத்து என்னை யாரோ முகில்களுக்குள் உயர்த்தித் தூக்குவது போலொரு உணர்வு எனக்குள் எழுந்து அடங்கியது. நான் அவனை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவனிருந்த தூரம் நடக்க நடக்க நீண்டு கொண்டே போனது. முகில்களுக்குள்ளால் நடக்கும் உணர்வுகளுடன் நான் நடந்து கொண்டிருந்தேன். அருகில் சென்றதும் அவன் எழுந்து தனக்கு முன்னால் இருந்த உயர்ந்த கதிரையை எனக்குக் காட்டி ப்ளீஸ் என்றான். நான் கதிரையில் அமர்ந்துகொண்டேன். கையிலிருந்த தனது க்ளாஸை உயர்த்தி என் க்ளாஸோடு மெல்ல உரசி 'ப்ரெண்சிப்' என்றான். நானும் பதிலுக்குச் சொன்னேன். சிறிது நேரம் மௌனமாக எமது ரிங்ஸ்சை நாம் உறிஞ்சினோம். அவன் தனது கையை நீட்டித் தனது பெயர் சயன் என்றான். நான் எனது பெயரைக் கூறினேன். மீண்டும் மௌனம், புன்னகை, பார்வைகள் சுழன்றவண்ணமிருந்தன. திடீரென நடனமாடுவதற்கு எனக் கையை நீட்டினான். அவன் கேட்க மாட்டானா என்று காத்திருந்தது போல் நானும் கையை அவன் கையினுள் வைத்து எழுந்து கொண்டேன். மௌனமாக நடனம் தொடர்ந்தது. மெதுவான ஆங்கிலப் பாடல் முடிந்து வேகமான ஹிந்திப் பாடல் ஆரம்பித்த போது மீண்டும் நாங்கள் எங்கள் இருக்கைகளுக்கு வந்தோம். அவன் தமிழில் கேட்டான் கனடாவா என்று. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஹிந்திக்காறன் என்று நான் நினைத்திருந்தேன். நான் ஓம் என்பதாய் தலையை அசைத்தேன். தான் ஒஸ்ரெலியாவிலிருந்து விடுமுறைக்கு வந்திருப்பதாக சொன்னான். மீண்டும் மௌனம், புன்னகை, பார்வைகள் சுழன்றன. எனது ரிங்க் முடித்திருந்தது. வெயிட்டரிடம் கைகாட்டி  எனக்கு இன்னுமொரு ரிங்க் ஓடர் செய்தான். தனக்கும் ஒன்று என்றான். ரிங்க்ஸ், நடனம், உரையாடல் என்று சில மணித்தியாலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சில மணித்திலயாலங்களில் நான் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டவை. சயன் திருமணமானவன். இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தகப்பன். மனைவியும், குழந்தைகளும் மனைவியின் பெற்றோரோடு விடுமுறையைக் கழிக்க லண்டன் போய்விட்டார்கள். சயனுக்கு லண்டன் பிடிக்காது. அவன் கனவுகளில் ஒன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது. மும்பையை சுற்றிப் பார்க்கும் ஆவலோடு சில நண்பர்களோடு வந்திருக்கின்றான். நான் என்னைப் பற்றிச் சொன்னேன். “ஹப்பிலி மரீட்டா?” என்று கேட்டான். நான் “வெரி மச், ஹப்பிலி மரீட்” என்றேன். “குட்” என்றான். “ஹொ எபௌட் யூ?” என்றேன். “ஸ்ஸேம் ஹியர், வெரி மச் இன் லவ் வித் மை வைப்ஃ” என்றான். எனக்கு ஏனோ பொறாமையாக இருந்தது. சயனின் கூரிய நாடியும், சிறிது மெலெழுந்த மேலுதடும் சிரிக்கும் போது அடுக்கி வைத்தது போன்ற நேர்த்தியான பற்களும், சிறிய மின்னும் கண்களும் மிகவும் கவர்சியாக இருந்தன. ஜே யிலிருந்து இவன் மிகவும் மாறுபட்டிருந்தான். ஜே ற்கு வட்ட முகம். அழகான பெரிய கண்கள். உதடுகள் சிறிது தடித்திருக்கும். ஐயோ நான் எதற்காக இப்போது ஜே யோடு  இவனை ஒப்பிடுகின்றேன். பார்வையை சுழலவிட்டேன். எனது நண்பிகள் மிகவும் ஆக்ரோஷமாக தம் நிலை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். சயன் என் ஒற்றைக் கையை எடுத்துத் தன் கைகளுக்குக் அமுக்கிக் கொண்டான். சுகமாக இருந்தது. அவன் மெல்ல எழுந்து என்னை இழுத்தான். ஏதோ மந்திரத்தில் உழல்வது போல் நானும் எழுந்து கொண்டேன். என்னை இறுக அணைத்து நடனமாடினான். நான் அசைந்து கொடுத்தேன். என் காதோரம் அவன் மூச்சுக்காற்று வேகம் கொண்டது. ரூமுக்குப் போவோமா என்றான். அதற்கு மேலும் தாங்க முடியாதவளாய் அவனைப் பின் தொடர்ந்தேன். போகும் போது திரும்பி ஒரு முறை என் நண்பிகளைப் பார்த்தேன். நான் போவதை ஒருவரும் காணவில்லை. எனக்குள்ளிருந்த மிருகத்தை யாரோ உலுப்பி விட்டதுபோல் வேகம் கொண்டு இயங்கினேன் நான். அவனது அறைக் கதவின் வெளியே 'டூ நொட் டிஸ்ரேப்' கார்ட் தொங்கிக் கொண்டிருந்தது. வாழ்வில் இனிமேல் ஒரு போதும் கிடைக்காத சந்தர்ப்பம் என்று எதுவோ என்னை இயக்கிக்கொண்டிருந்தது. ஆடி அடங்கி நித்திரையில் மூழ்கி நான் கண் விழித்துக்கொண்ட போது அதிகாலையாகியிருந்தது. பக்கத்தில் சயன் சீரான மூச்சோடு நித்திரையாயிருந்தான். நிர்வாணமாய் இரு உடல்கள். நான் எழுந்து எனது உடுப்பைப் போட்டுக்கொண்டு அவன் நெற்றியில் மெல்ல ஒரு முத்தமிட்டுவிட்டு எனது அறையை நோக்கி ஓடிப் போனேன். நண்பிகள் விழித்துக்கொள்ளு முன்னர் போய் விட வேண்டும். அவர்களுக்கு இரவு நான் எங்கு தங்கினேன் என்று சொல்லப் போகின்றேன்? தெரியவில்லை. ஆனால் உண்மை சொல்லப் போவதில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. மெதுவாகத் கதவைத் திறந்து மெல்ல மெல்ல அடியெடுத்து உள்ளே போனேன். கட்டில்கள் வெறுமையாக் கிடந்தன. ஆச்சரியம் அவர்களும் இன்னும் அறைக்குத் திரும்பவில்லை. பெருத்த நிம்மதியோடு கட்டிலில் சாய்ந்தேன்.
 அதன் பின்னர் நான் சயனைச் சந்திக்கவில்லை. அவன் என்னைத் தேடினானா தெரியாது. அவனுக்கு எனது அறை இலக்கம் தெரியாது. அவனது அறை இலக்கம் எனக்குத் தெரிந்திருந்தும் நான் அவனைத் தேடிப் போகவில்லை. எங்கள் அறை முழுக்கப் பொருட்கள் பரவிக் கிடந்தன. இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் கனடா திரும்ப உள்ளதால் அதிகம் வெளியில் போகவில்லை. அறையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தோம். கசன்ரா திடீரெனச் சொன்னாள், ”நாங்கள் பார்ட்டி முடிய பீச்சிற்கு வோர்க் போனோம். உன்னையும் கேட்கலாம் என்று தேடினால் உன்னைக் காணவில்லை. நாங்கள் போய்விட்டோம். சன் ரைஸ் பார்த்தோம் தெரியுமா?” அவள் கண்களை அகட்டி, வாயைப் பிளந்து சிரித்தாள். டொனாவும், ஜனிபரும் கூடச் சிரித்தார்கள். என்னால் சிரிக்க முடியவில்லை. நான் சயனோடு இரவைக் கழித்தது இவர்களுக்குத் தெரிந்துதான் சிரிக்கின்றார்களா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. எப்போதும் கசன்ராவின் சிரிப்பை ரசிக்கும் எனக்கு இப்போது அவளின் சிரிப்பு எரிச்சலைத் தந்தது. கசன்ராவே சொன்னாள், ”உனக்குக் கனக்கக் குடிச்சுப் பழக்கமில்லைத்தானே அதுதான் படுக்கப் போயிருப்பாய், உன்னை டிஸ்ரேப் பண்ணாமல் நாங்கள் போயிட்டம்” நான் தலையசைத்துப் புன்னகைத்தேன். நிம்மதியாக சுவாசம் வெளியேறியது. அதன் பின்னர் பெட்டிகளை அடுக்குவதும், ஓய்வெடுப்பதும், இந்தியப் பயணத்தை மீட்டுப் பார்த்து சிரித்து மகிழ்வதுமாக இரண்டு நாட்களையும் கழித்து கனடா திரும்பினோம். அந்த இரண்டு நாட்களும் நான் தனியே இருப்பதைத் தவிர்த்தேன். என் நினைவு சயனைச் சுற்றி வருவதைத் தவிர்ப்பதற்குத்தான் அப்படிச் செய்தேன் என்பதை நானே ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்தேன். என் சந்தோஷத்தை அமுக்கி குற்ற உணர்வு மேலோங்கி என்னை அவஸ்தைக்குள் தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். உண்மைக் காதலுக்குத் துரோகம் செய்துவிட்டேன் என்று அவஸ்தைப்படவோ, இல்லாவிட்டால் செய்ததை நியாயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ”யு நோ வாட்,? உங்களுக்கு இதெல்லாம் விளங்காது, எனக்கும் சயனுக்கும் ஒரே அலைவரிசை, இரண்டு பேரும் டிக்கின்ஸ்சை விழுந்து விழுந்து வாசிப்போம், கொரொசாவாவின் திரைப்படங்கள் என்றால், அம்மாடியோவ் சாப்பாடு கூட வேண்டாம். வீட்டில் எப்போதுமே கசல் மியூசிக்தான்.. இத்யாதி, இத்யாதி நொன்சென்ஸ் எல்லாம் அவிழ்த்துவிடப் போவதில்லை. அந்த இரவு ஐ வோஸ் லுங்கிக் ஃபோர் எ குட் கெம்பெனி, அவ்வளவுதான். அந்த இடத்தில் சயனுக்குப் பதிலாக வேறு ஒரு ஆண் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்குமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. இருக்கலாம் இல்லாமலும் இருந்திருக்கலாம். சம்திங் எபௌட் சயன், என்னை அவனிடம் இழுத்துச் சென்றது அவ்வளவுதான். நான் ஜே யை மிக மிகக் காதலிக்கின்றேன். அவனோடுடனான எனது வாழ்க்கையை எதற்காகவும் இழக்க நான் தயாராகவில்லை. இந்தியப் பயணத்தின் அனைத்தையும் நான் ஜே யிற்குச் சொல்லிக் குதூகலிக்கப் போகின்றேன். ஆனால் ஒன்றை மட்டும் மறைக்கப் போகின்றேன். என் மும்பை பயணம் மறக்க முடியாத ஒன்று. அதில் சயன் ஒரு துளி மட்டுமே. விமானம் முகில்களுக்குள் நுழைந்து சென்றுகொண்டிருந்தது, நான் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். எனக்காக ஜே விமானநிலையத்தில் காத்திருப்பான்.

செப்டெம்பர் 2015 அம்ருதாவின் வெளியான சிறுகதை.

July 15, 2015

No comments: