சமாதனப் புறாக்கள் உதிர்த்துவிட்டுப் போன வெண்பஞ்சு சிறகுகள் போல் மெல்ல வானிலிருந்து விழுந்துகொண்டிருந்தன பனிச் செதில்கள். மென்மையாக ஒலிக்கும் ட்ரேக் இன் ”பைன்ட் யூர் லவ்”, கார் கண்ணாடியின் பனிப் படிவுகளை அகற்ற அசைந்து கொண்டிருக்கும் தானியங்கித் துடைப்பானின் கிரீச் சத்தம், இவையிரண்டிற்கும் மேலாய் தனுஜாவின் பெருமூச்சு இடையிடையே மேலோங்கி எழுந்தவண்ணமிருந்தது. நான் பார்வையை நெடுஞ்சாலையில் நிலைத்து வைத்திருந்தேன். வெள்ளி மாலை என்பதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகமாகவிருந்தன. தனுஜா போன் பண்ணி
”விஷ்ணு, ஏர்ப் போட்டில்ல என்னை ட்ராப் பண்ணி விடுறாயா?” என்று கேட்ட போது தட்ட முடியவில்லை.
தனுஜா தலையை எனக்கு எதிர்ப்பக்கமாகத் திருப்பிக் கண்ணாடி வழியாக வெளியே மிக ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெளியில் அவள் மிக ஆர்வமாகப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியும். அவளுக்கும் அது தெரியும். பக்கத்திலிருக்கும் என் உருவத்தைத் தன் பார்வையிலிருந்து தவிர்ப்பதற்கான அவள் முயற்சி அது. நானும் முகம் திருப்பி அவளைப் பார்க்காமல் கடைக்கண்ணால் இடையிடையே நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் அவள் மிகவும் ஒடுங்கிப் போயிருப்பது போல்ப்பட்டது. பதட்டத்தால் கைவிரல்களை பிசைந்துகொண்டிருந்தாள். கைவிரல்கள் மெலிந்து சோபை இழந்து காணப்பட்டன. கால்களைக் கதவோரமாகச் சாய்த்து ஒடுக்கி, அசௌகரியமான நிலையில் வைத்திருந்தாள். ஒற்றைக்கால் ”.ஃபைன்ட யூர் லவ்’ இற்குத் தாளம் போடுவது போல் அசைந்து கொண்டிருந்தது. தாளமும் பாடலோடு இசையாமல் தப்புத்தாளமாகவேயிருந்தது.
மூன்று வருஷங்களுக்கு முன்னர், நானும் அவளும் இதே காரில், இதே இருக்கைகளிலிருந்து டொரொன்டோ முழுவதும் சுற்றியபோதெல்லாம் அவள் தனது இருக்கையை ஆக்கிரமித்திருப்பாள். எனது வலக்கையை தன் கைகளோடு இணைத்து வைத்து கதை கதையாகச் சொல்லுவாள். அவசரத்துக்கு ஸ்யரிங் வீலைப் பிடிப்பதற்குக் கூட நான் எனது கையை அவளிடமிருந்து பிடுங்கியெடுக்க வேண்டியிருக்கும். இப்போது அவளது கைகள் செய்வதறியாது ஒன்றையொன்று பிசைந்தவண்ணமிருக்கின்றன. நான் இரு கைகளாலும் ஸ்யரிங் வீலை இறுகப் பற்றியிருந்தேன்.
நேற்றிரவு தனுஜா எனக்குப் போன் பண்ணியிருந்தாள் தான் ஆசைப்பட்ட படியே நியூயோர்கில் தனக்கொரு வேலை கிடைத்திருப்பதாயும்,
”நீயே என்னைக் கொண்டு போய் ஏர்ப்போட்டில் இறக்கிவிடன், உன்னையும் பாத்தமாதிரியிருக்கும்” என்றாள்.
நான் திருப்பிக் கோல் பண்ணுவதாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். உடனேயே ஒத்துக்கொள்ள எனக்கு ஏனோ மனம் வரவில்லை. நிரோ ஒன்றைக் காலை எனக்கு மேல்த் துாக்கிப் போட்டு, ஒற்றைக் கையால் என்னை அணைத்துக்கொண்டாள். நான் அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன். என் கழுத்துக்குள் அவளது சுவாசம் சூடேற்றியபடியிருந்தது. அவளும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட படியே, தலையை மேலே துாக்கி
”ஆர் போனில” என்றாள். நித்திரை வாயிலிருந்து அவித்த கடலை மணம் வந்தது. அவள் ஒன்றைக் கையால் வாயைத் துடைத்துக் கொண்டாள்.
”தனு, நாளைக்கு நியூயோர்க் போகிறாளாம், ஏர்போட்டில கொண்டு போய் விட ஏலுமா எண்டு கேக்கிறாள்” என்றேன்.
நிரோ தலையைத் துாக்கி என்னைப் பார்த்து, ”அதுக்கு நீ என்ன சொன்னாய்”? என்றாள்.
”நான் பிறகு எடுக்கிறன் எண்டனான்” என்றேன்.
”ஏன் கொண்டு போய் விடன், பாவமெல்லா, அவளுக்கும் ஏதோ மனச் சங்கடம் அதுதான் உன்னைக் கேக்கிறாள்”.
”ம்.. பாப்பம்” சொல்லிப் போட்டு நிரோவை இழுத்து எனக்கு மேலே போட்டேன். அவள் தனது கால்களால் என் கால்களைப் பிணைந்த படியே, என் மீசையைத் தனது கைகளால் தடவி விட்டு, ”உன்னைக் கிட்டப் பார்த்தாக் குழந்தைப் பிள்ளை பாக்கிற மாதிரியிருக்கு” என்றாள்.
”ம் மீசை வைச்ச குழந்தை” சொல்லிவிட்டு அவள் பின் பக்கத்தை எனது கைகளால் தடவிக் கொடுத்தேன். அவள் மீண்டும் எனது கழுத்துக்குள் தனது முகத்தைப் பதித்து இறுக என்னை அணைத்தபடியே நித்திரையாகிப் போனாள்.
ஜேய்சனும், யூலியாவும் எட்டு வருஷங்களாகக் காதலித்தார்கள். ஜேய்சன் இந்தா யூலியாவைப் புரொப்போஸ் பண்ணப் போறான் என்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது இருவரும் பிரிந்து விட்டார்கள். ஜேய்சன், மரியாவைக் கலியாணம் செய்து கொண்டான். தற்போது ஒரு குழந்தையும் அவர்களுக்கு இருக்கிறது. மரியா, யூலியாவின் நண்பி. இப்போதும் ஜேய்சனும், யூலியாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். யூலியா, அவளது புதுக்காதலன் நீல், ஜேய்சன், மரியா எல்லோரும் ஒன்றாக விடுமுறைக்குக் கூடப் போய் வருகின்றார்கள். எனக்கு இது தொடக்கத்தில் கொஞ்சம் அதிசயமாகவேயிருந்தது. யூலியாவும் ஜேய்சனும் பிரிந்த பின்னர் முதல் முதலாக ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது எனக்குள் மிகவும் பதட்டமாகவிருந்தது. சண்டை பிடிக்கப் போகின்றார்களா?, இல்லாவிட்டால் முகத்தைத் துாக்கிவைத்துக்கொள்ளப் போகின்றார்களா?, இருவருமே எனக்கும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் நான் யாருடைய பக்கத்திற்கு நிற்கப் போகின்றேன். மொத்தத்தில் ஏன் பிரிந்தார்கள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அது பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ளவுமில்லை.
ஜேய்சன் மரியாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான், நான் உடனே யூலியாவைப் பார்த்தேன், அவள் முகம் ஒரு கணம் சுருண்டு போய்ப் பின்னர், வெளிச்சம் கண்டது, ஓடிச்சென்று இருவரையும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டு, ஒன்றும் நடக்காததுபோல் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாள். நடிக்கின்றாளா என்று நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பேச்சு தான் சந்தித்த ஒரு இன்ரஸ்டிங்க்கான ஆண் மகன் பற்றியிருந்தது. அவனின் பேச்சு, அவனின் உருவம் என்று அவள் முகம் மலர வர்ணித்துக்கொண்டிருந்த போது நண்பர்கள் அவளைக் கேலி செய்ய அவள் வெட்கத்தால் சிவந்து போனாள். அவள் அன்று வர்ணித்தது, அவளது தற்போதைய காதலன் நீல் ஐத்தான் என்பது பின்னர் நான் அறிந்து கொண்டது.
எவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளுகின்றார்கள். ஒரு காதல் முறிந்து சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் அடுத்த காதலை அதே படபடப்போடும், உணர்வுகளோடும் எதிர்கொள்கின்றார்கள் என்றால் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.
எனக்கு வேற்றின நண்பர்கள் ஒரு கூட்டமும், தமிழ் நண்பர்கள் ஒரு கூட்டமுமிருக்கின்றார்கள். எத்தனையோ வேற்றினப் பெண்கள் என் நண்பிகளாக இருக்கின்றார்கள். மிகவும் அழகான, புத்திசாலியான பெண்களிருக்கின்றார்கள். என்னைக் காதலிப்பவர்களுமிருக்கின்றார்கள், ஆனால் எனக்கு ஏனோ காதல் என்று வரும் போது மண்ணிறத் தோல் வேண்டியிருக்கின்றது. இது எனக்குள்ளிருக்கும் குறைபாடா என்பது புரியவில்லை.
தனுஜாவை நான் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். என்னுடைய நண்பர்கள் கூட்டத்தில் அவள் தனித்துத் தெரிந்தாள். அழகி, புத்திசாலி, அதற்கும் மேலால் மண்ணிறத்தோலாள். நான் சொன்ன அதே காரணங்கள்தான் என்னில் பிடித்திருப்பதாக என்னைக் காதலிக்கும் போது அவள் எனக்குச் சொன்னாள். மொத்தத்தில் இருவரின் கெமெஸ்ரியும் மிகவும் கச்சிதமாக வேர்க் அவுட் ஆகியிருந்தது.
நாம் காதலிக்கத் தொடங்கிய பின்னர், வேற்றின நண்பர்களை விட்டுத் தனியாக தமிழ்கலாச்சார நிகழ்வுகள், தமிழ்த்திரைப்படங்கள் என்று போகத் தொடங்கினோம். இதனால் நான் விரைவில் ஃபாமிலி மென் ஆகிவிடுவேன் என்று என்னை நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்.
பெற்றோர்கள் எம்மை வளர்க்கும் விதமோ, இல்லாவிட்டால் இயற்கையாகவே எமது மரபு அணுக்கள் வேலைசெய்யும் விதமோ என்னவோ, தனுஜாவைக் காதலிக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவள்தான் என் மனைவியென்ற நம்பிக்கை என் மனதினுள் பதிந்துவிட்டிருந்தது. அவளுடனான எனது எதிர்காலம் பற்றி நான் திட்டங்களைப் போடத்தொடங்கியிருந்தேன். அவளும் அவ்வாறேயிருந்தாள். தனுஜாவின் இரண்டு அக்காக்களும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காதலித்துக் கலியாணம் செய்தவர்கள், என் வீட்டில் கலியாணம் என்பது காதலித்துத்தான் நடக்க வேண்டும் என்ற எழுதாத சட்டமிருந்தது. நாம் மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும், எப்படியான வேலைக்குக் கனடாவில் அதிகம் வாய்ப்பிருக்கின்றது. எப்படியான அலுவலகங்களில் உயர்பதவிக்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என்று ஆராய்ந்து அலசிக்கொள்வோம். எனக்குப் படிப்பு முடிந்ததும் உடனேயே ஒரு நல்ல பெயர் பெற்ற அலுவலகத்தில் நல்ல சம்பளத்தோடு ஒரு வேலை கிடைத்தது. தனுஜா தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். எமது காதல் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
என் வீட்டிற்கு தனுஜா சகஜமாக வந்து போகத் தொடங்கினாள். அவள் வீட்டிற்கும் சில தடவைகள் நான் போய் வந்திருக்கின்றேன். அவள் குடும்பத்தோடு உணவருந்தியிருக்கின்றேன். அவள் அப்பா அம்மாவோடு நன்றாக உரையாடியுமிருக்கின்றேன்.
எப்போது என்ன நடந்தது என்று தெளிவில்லை, ஒருநாள் தனுஜாவின் அக்கா மகனின் பிறந்தநாளிற்கு அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் சொந்தங்கள் பல அங்கேயிருந்தனர். நட்பாக நல்லமுறையாக என்னோடு எல்லோரும் உரையாடினார்கள். சந்தோஷமாகவும், மனநிறைவோடும் நான் வீட்டிற்கு வந்தேன். அதன் பின்னர் இரண்டு கிழமையாக தனுஜா என்னோடு போன் கதைக்கவில்லை. அவளது தொலைபேசி எப்போதும் அணைப்பிலேயே இருந்தது. வீட்டுத் தொலைபேசிக்கெடுத்தாலும் பதிலில்லை. வீட்டுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினேன். அவள் அம்மாதான் கதவைத் திறந்தாள். முழுமையாகத் திறக்காத கதவினுடே நான் வாய் திறக்கு முன்பே தனுஜா வீட்டில் இல்லையென்று கதவைச் சாத்திவிட்டாள்.
நடுக்காட்டில் விடப்பட்ட உணர்வோடு இரண்டு கிழமைகள் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த போதுதான் தனுஜா போனில் ஒரு வெள்ளியிரவு என்னை அழைத்து வீட்டில் எமது திருமணத்திற்கு சம்மதம் தர மறுக்கின்றார்கள். நாங்கள் கொஞ்சக் காலம் பிரிந்து இருப்போம், என்றாள். நான் காரணத்தைக் கேட்ட போது தான் மிகவும் ஒடிந்து போய் இருப்பதாகவும், தனக்கு தனிமை தேவைப்படுவதாகவும், அதனால் ஒரு கிழமைக்கு மெக்சிக்கோ போய் வர இருப்பதாகவும், திரும்பி வந்தபின்னர் என்னைத் தொடர்பு கொள்வதாகவும் சொல்லி போனை வைத்துவிட்டாள். அவள் ஒரு கிழமை மெக்சிக்கோ போய்விட்டாள். நான் இரண்டு கிழமைகள் வேலைக்கு லீவு போட்டு எனது அறைக்குள் சுருண்டு போய்க் கிடந்தேன். அம்மா, அப்பா புரிந்து கொண்டு எனக்கான வெளியைத் தந்தார்கள்.
அந்த இரண்டு கிழமைகளும் கனவுக்குள் மிதப்பது போன்று எண்ணங்கள் சுற்றிச் சுற்றிவந்து என்னைச் சூரையாடிக்கொண்டிருந்தன. தனுஜாவின், அவள் குடும்பத்தின் மனமாற்றத்திற்கான காரணத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டிற்கு பேர்த்டே பார்ட்டிக்குப் போயிருக்கும் போதுதான் எனது வாழ்க்கை தடம் புரண்டு போவதற்குக் காரணத்துக்கான எதுவோ நடந்திருக்கின்றது. திரும்பத் திரும்ப நடந்த சம்பவங்களை நினைவிற்குக் கொண்டு வந்து மிக நுணுக்கமாக மனதுக்குள் அலசிப் பார்த்தேன். அன்று எவரின் முகமும் கொஞ்சமேனும் சுருங்கிப் போனதற்கான தடையமே கிடைக்கவில்லை. எல்லோரும் சிரித்து சந்தோஸமாகத்தான் கழித்தார்கள். தனுஜா தனது உறவுகளுக்கு என்னைத் தனது ப்ரெண்ட் என்று அறிமுகப்படுத்தினாள். பலருக்கும் எமது காதல் தெரிந்திருந்தது. கிண்டல் செய்து சிரித்தார்கள். எப்போது கல்யாணம் என்று கூடக் கேட்டார்கள். நான் அன்று அதிகம் தனுஜாவின் மாமாவோடுதான் கழித்தேன். அவர் நகைச்சுவைாகக் கதைத்துத் தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு வட்டத்தை வைத்திருந்தார். அந்த வட்டத்திற்குள் நானும் சேர்ந்து கொண்டேன். நான் ஊரில் எந்த இடம் எங்கே படித்தேன் என்று பலரும் விசாரித்தார்கள். நான் சின்ன வயதிலேயே கனடா வந்து விட்டதால் எனக்கு ஊர் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை, இருந்தும் நினைவில் இருந்ததைக் கொண்டு அவர்களுக்குப் பதிலளித்தேன். தனுஜாவின் மாமாவிற்கு எனது பெரியப்பாவைத் தெரிந்திருந்தது. இருவரும் ஒரே பாடசாலையில் படித்திருக்கின்றார்கள். ஒருவேளை தமிழ்த்திரைப்படங்களில் வருவது போல் தனுஜாவின் மாமாவுக்கும், எனது பெரியப்பாவுக்கும் ஏதாவது பழைய விரோதம் இருக்கின்றதோ? இருக்காது, அவர் பெரியப்பா படிப்பில் நல்ல கெட்டிக்காறன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இப்போது என்ன செய்கின்றார், எங்கேயிருக்கின்றார் என்று அன்பாகவும், ஆர்வமாகவுந்தான் கேட்டார், அப்படி இருந்திருந்தாலும் சில்லியான விஷயத்துக்காகத் தனது காதலைத் துாக்கிப் போடும் அளவிற்கு தனுஜா ஒன்றும் கோழையில்லை. பார்ட்டி முடிந்த பின்னர் கார்வரை வந்த அவள் வழமைபோல என்னை முத்தமிட்டுத்தான் வழியனுப்பினாள். நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அன்று எல்லாம் சீராகவும், சந்தோஷமாகவும்தான் கழிந்திருந்தது. பலவருடக்காதல் முறிந்து போகுமளவிற்கு அன்று எதுவுமே நடக்கவில்லை. ஆனால் என் அறிவுக்கும் மீறி எதுவோ நடந்திருக்கின்றது.
இரண்டு கிழமைகளின் பின்னர் எனக்குள் ஏதோ ஒரு தெளிவு வந்தது. இந்த இரண்டு கிழமைகளும் நான் அனுபவித்த நரகவேதனையிலிருந்து மீள நானே தான் முயலவேண்டும் என்பது எனக்குத் தெளிவானது. தலைக்குள் பிராண்டிக்கொண்டிருந்த புழுவை இழுத்து வெளியே போட்டேன். குளித்து, ஷேவ் எடுத்து, சுத்தமாக வேலைக்குத் தயாரானேன். அம்மா என் தலையைத் தடவி விட்டு எனக்குச் சாப்பாட்டை மேசையில் வைத்துவிட்டுத் தான் வேலைக்குப் போகத் தயாரானாள். அப்பா என் முன்னால் சிலநிமிடங்கள் நின்றுவிட்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு வேலைக்குப் போனார். நான் மௌனமாகச் சாப்பிட்டுவிட்டு வீட்டை ஒருமுறை மௌனமாக வலம் வந்தேன். எதுவுமோ ஒட்டாமல் இருப்பது போலிருக்க எனக்குள் பயம் வந்தது. வேலைக்குப் போகுமுன்பு ஒரு முறை கடைசியாக தனுஜாவிடமிருந்து போன் வந்திருக்கின்றதா என்று பார்த்தேன். வரவில்லை. அதன் பின்னர் மூன்று வருஷங்காளாக அவளிமிருந்து போன் எதுவும் வரவில்லை. பேஸ்புக்கில் என்னை நண்பர்கள் பட்டியலிலிருந்து அவள் நீக்கியிருந்தது தெரிந்தது. காரணம் தேட நான் முயலவில்லை. அப்படியே ”கோல்ட் ரேக்கியாக” எமது காதல் முறிந்து போனது.
முதல் வருடம் எனக்கு மிகவும் சிரமமாகவும், மனவேதனையாகவுமிருந்தது. பின்னர் அது அசௌகர்யமாக மாறிப் போய் கேட்பவர்களுக்கு என்ன பதிலளிப்பது. நான் போகுமிடத்திற்கு தனுஜா வந்துவிடுவாளா என்ற பதட்டமாய் ஒரு இடியப்பச் சிக்கலாக எனது வாழ்க்கை மாறிப்போய் இருந்த போதுதான் ஒரு நைட் கிளப்பில் நிரோவைச் சந்தித்தேன். எனது நண்பர்களுடன் வந்திருந்தாள். மண்நிறத் தோல்கொண்ட அழகிதான் அவளும் என்பதற்கு மேலால் எனக்குள் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது பெண்கள் என் மேல் எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்துவதில்லை. நன்றாகக் குடித்தோம், நடனமாடினோம், கலைந்து போனோம்.
இரண்டு கிழமைகளின் பின்னர் மீண்டும் ஒருமுறை நைட்கிளப்பில் அதே நண்பர்களோடு நிரோவைச் சந்தித்தேன். அப்போது தனிமை கிடைத்த நேரத்தில் அவள் என்னோடு தமிழில் உரையாடினாள். என்னைப் பற்றிக் கேட்டாள், தன்னைப் பற்றிச் சொன்னாள், அவளுக்குச் சரியாகத் தமிழ் தெரியாது, எனக்கும் முழுமையாகத் தமிழில் கதைக்க வராது ஆனால் ஏனோ தமிழில் உரையாடினோம். எனக்கு அது புது அனுபவமாகவிருந்தது. நான் அம்மா அப்பாவோடு கூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவேன்.
ஒரு சனிக்கிழமை நிரோவிடமிருந்து எனக்கு போன் கோல் வந்தது. தான் நேர்த்தன் ஸ்குயார்ரில் ஸ்கேட்டிங் போக உள்ளதாகவும் என்னை வர முடியுமா என்றும் கேட்டாள். நான் சம்மதித்தேன். அதன் பின்னர் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். எப்போது எங்களுக்குள் காதல் வந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. தனுஜாவுடனான எனது காதலின் ஆரம்பம் பல உணர்வுகளோடு அட்டகாசமாக ஆரம்பமான ஒன்று. இது இப்படித்தான் என்று பல சட்டதிட்டங்கள் போட்டு அமைந்தது போலிருந்தது. ஆனால் நிரோவுடனான காதல் பல வருடங்கள் பழகிய வீட்டு அங்கத்தவர் ஒருவரை ”வா காதலிப்போம்” என்று ஆரம்பித்தது போலிருந்தது. இத்தனைக்கும் காதலிக்கும் முன்னரே தனுஜாவை நான் பல வருடங்கள் அறிந்திருந்தேன். ஆனால் நிரோவை சில தடவைகள்தான் சந்தித்திருக்கின்றேன்.
நிரோ டவுண்ரவுண் வாழ்க்கை வாழ்பவள். டொரொன்டோ இரவு வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்தது என்றாள். நான் அம்மா, அப்பாவோடு குட்டி யாழ்ப்பாணமான ஸ்காபுரோவில் வாழ்பவன். டவுண்ரவுண் வாழ்க்கை என்பது ஏனோ வேற்றின மக்களுக்கானது என்பது என் எண்ணம். திடீரென்று ஒருநாள் ”பேசாமல் வந்து என்னோட இரன்” என்று நிரோ கேட்டாள். நான் சிரித்துவிட்டேன். அவள் முகம் சுருங்கிப் போனது. என் கன்னத்தில் குத்தி ”நீ ஏன் சிரித்தாய் என்று நான் கேட்கமாட்டேன்” என்றாள். நான் ஏன் சிரித்தேன் என்பது எனக்கே தெரியாமலிருந்தது.
நான் அப்பா அம்மாவுக்குச் சொல்லிவிட்டு நிரோவோடு வாழத்தொடங்கி இப்போது இரண்டு வருஷமாகின்றது.
இடையிடையே தனுஜா பற்றிக் கேள்விப்படுவதுண்டு. மாஸ்ட்டேஸ் முடிச்சு இப்ப வேலை செய்கிறாளாம். அவளுடைய அண்ணாவுக்கு அண்மையில்தான் கலியாணம் நடந்ததாம், காதல் கலியாணம்தான். பொம்பிளை ஸ்பானிஷ்காறியாம். எங்கட முறைப்படிதான் எல்லாம் நடந்ததாம். எங்கள் காதல் முறிவுக்குப் பின்னர் நான் தற்செயலாகக் கூட அவளைச் சந்தித்ததில்லை. அப்பிடியிருக்கும் போதுதான் ஒருநாள் தனுஜாவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
ஒன்றுமே நடக்காததுபோல் சகஜமாக உரையாடினாள். நான் எப்படியிருக்கின்றேன் என்று விசாரித்தாள். தனது மேற்படிப்பு வேலைபற்றிச் சொன்னாள். அவளது தொலைபேசி அழைப்பு வந்தபோது டிஸ்பிளேயில் அவளது நம்பரைப் பார்த்ததும் எனக்குத் திகைப்பாயிருந்தது. ஒன்று அவள் போன் எடுக்கின்றாள் என்பது. அடுத்தது இவ்வளவு காலமும் எத்தனையோ போன்களை நான் மாற்றியிருந்த போதும் அவளது போன் நம்பரைப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன் என்பது.
அவள் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அவளிடம் கேட்பதற்கு என்னிடம் எந்தக் கேள்வியும் இருக்கவில்லை. எமது காதல் முறிவிற்கான காரணத்தைக் கேள்வியாக்கி அவளிடமிருந்து வரும் எந்தப் பதிலையும் நான் கேட்கத் தயாராகவில்லை. எனவே என்னிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை. மொத்தத்தில் எனக்கு அவளிடம் இனிமேல் ஒன்றுமேயில்லை. அவளது போன் நம்பர் கூட இனி எனக்குத் தேவையில்லை. அழித்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் அவள் கேட்டாள்
”விஷ். நாங்கள் ஏன் ஃப்ரென்ட்ஸா இருக்கக் கூடாது. எத்தினை வருஷாச்சு உன்னைப் பாத்து, லவ்தான் இல்லையெண்டு ஆச்சுது, ஆனால் ஃப்ரெண்டஸா இருக்கலாம் தானே”
அந்த நேரம் எனக்குள் சுழன்று வந்த உணர்வுகளை வார்த்தையால் கோர்க்க முடியவில்லை. நான் வெளியில போக ரெடியாகிக் கொண்டிருக்கின்றேன், பிறகு கதைக்கலாம் என்றுவிட்டு போனைக் கட் செய்தேன். நிரோ ஒன்றும் என்னிடம் கேட்கவில்லை. என் பதட்டம் அவளுக்குப் புரிந்திருந்தது. நானானச் சொல்லும் வரை காத்திருந்தாள். அன்று என்னால் சகஜமாக இருக்கமுடியவில்லை. இரவுச் சாப்பாட்டுக்குப் போன ரெஸ்ரோடென்டில் நிறம்பவே குடித்தேன். எல்லாவற்றையும் செமிக்காமல் திரும்பும் சத்தி மாதிரி நிரோவிடம் கக்கிவிட்டேன். அவள் என்னை லேக் ஒன்டாரியோப் பக்கம் காற்றாட நடக்கக் கூட்டிச் சென்றாள்.
அடுத்தநாள் காலை, நிரோ நிதானமாக ”தனு உன்னோட கதைச்சாக் கதையன், ஏதோ ஒரு பிரச்சனை அவளுக்கு ஃப்ரேக் பண்ண வேண்டிய கட்டாயம் வந்திட்டுது, உனக்கு கொம்பேஃட்டபுஃளா இருந்தாக் கதை, எதுக்கு சும்மா குழம்பிறாய்” என்றாள். எனக்கு ஜேய்சனும், யூலியாவும் நினைவுக்கு வந்தார்கள். என்னால் அப்படி இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. ஒன்றுமே நடக்காத மாதிரி தனுஜா கதைத்தது எனக்குள் அவள் மேல் கடுங்கோபத்தை மூட்டியிருந்தது. எனக்கு அவளோடு கதைக்க முடியாது. பிடிக்கவில்லை. ஆனால் அதை நாகரீகமாக அவளுக்குச் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை.
அடுத்தநாளும் தனுஜா போன் பண்ணினாள். நிரோ பற்றிக் கேட்டாள். தனக்கு வீட்டில் புரொப்போஸ் பண்ணுகின்றார்கள் என்றாள். எங்கள் காதல் முறிவுக்குப் பின்னர் தனக்கு ஒருவரையும் காதலிக்க முடியவில்லை என்றாள். தான் புரொப்போஸல் மரீஜ் இற்கு சம்மதித்துவிட்டதாகச் சொன்னாள். நான் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். எப்போதோ மாய்ந்து மாய்ந்து காதலித்த பாவத்திற்குத் தண்டனை என்பதுபோலிருந்தது. ”தனுஜா எனக்கு உன்னோடு நட்பாக இருக்க முடியவில்லை. மூன்று வருட மௌனத்தின் பின்னர் திடீரென்று வந்து ஃப்ரென்ட்ஸா இருப்பம் என்றால், எனக்கு உன்னைத் தெரியாது. என்னைப் பேசாமல் என்ர பாட்டிற்கு விட்டுவிடு” அவள் கதைக்கக் கதைக்க என் மனதுக்குள் இதை எப்படிச் சொல்வது என்று ஓடிக்கொண்டிருந்தது. அவள் தானே கதைத்து முடித்துவிட்டு, நேரம் கிடைக்கிற போது என்னையும் போன் பண்ணச் சொன்னாள். நான் சம்மதித்து போனை வைத்தேன். நல்ல வேளை சந்திப்போமா என்று கேட்கவில்லை என்று ஆறுதலாக இருந்தது.
நானும் நிரோவும் ஸ்கீயிங் இற்கு ஃப்ளு மவுண்டிண் ரிஸோட்டிற்குப் போயிருந்தோம். ஒருகிழமை விடுமுறை. போய் மூன்றாம் நாள் ”ரிஃபனீஸ்” இல் இருந்து வாங்கிச் சென்ற வைர மோதிரத்தை, மென்மையாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்புச் சுவாலையின் முன்னால், ட்ரேக்கின் ”ஃபைன்ட் யுர் லவ்” பாடலின் பின்னிசையில் நிரோ எனும் நிரோஜினியை எனது வாழ்க்கைத் துணைவியாக முடியுமா என்று கேட்டுப் புரொப்போஸ் செய்தேன். தோளோடு கட்டையாக வெட்டப்பட்டு சுருளாக இருந்த அவள் தலைமுடி முகத்தில் கலைந்து போய்க்கிடக்க, தனது பெரிய கண்களைச் சிமிட்டி வாயைக் கோணி, புதிய வெட்கத்தோடு நிரோ என் கழுத்தைக் கட்டிக்கொண்டு என் காதருகே ”யெஸ்” என்றாள்.
மிகவும் எளிமையான முறையில் இரண்டு குடும்பங்களும் இணைந்து எமது திருமணம் நடந்து முடிந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையீனத்தால் எதிர்காலம் பற்றி அதிகம் திட்டமிடாமலிருந்த நான் பழையபடி துாசு படிந்த ஃபைலைப் புரட்டிப் போடுவது போல், திட்டமிடத் தொடங்கினேன். நிரோ என் கைகளைக் கோர்த்த படியே என்னோடு கலந்தாலோசிப்பாள். பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு தனியறை தேவையிருப்பதால், வேறு இடம் பார்க்க முடிவெடுத்து தேடும் படலத்திலிருந்தோம். அப்போதுதான் எதிர்பாராத விதமாகப் பல மாதங்களின் பின்னர் தனுஜாவிடமிருந்து ஒரு இரவு தொலைபேசி அழைப்பு வந்தது. தான் நியூயோர்க் போவதாகவும் தன்னை ஏயார்போட்டில் இறக்கி விடும்படியும் கேட்டாள். ஏதோ வீணான வில்லங்கம் என்றே எனக்குப் பட்டது. நிரோ அப்பிடியெல்லாம் ஒன்றுமிருக்காது, கொண்டுபோய் விட்டிட்டு வா, என்றதனால் சம்மதித்தேன்.
ஏர்ப்போட்டில் அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு அதிகம் கெடுபிடியிருப்பதனால் அனேகமாக எல்லோருமே தேவைக்கும் அதிகமான நேரத்தை வைத்து ஏர்ப்போட் வந்துவிடுவார்கள்.
தனுஜாவை ஏர்ப்போட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விடலாம் என்று நினைத்து வந்த எனை, ”வா நேரமிருக்கு ஒரு கப் கொஃபி குடிச்சிட்டுப் போலாம்” என்று காரைப் பார்க் பண்ண வைத்து உள்ளே கூட்டிக் சென்றாள். பல வருடங்களின் பின்னர் அவளைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்து என்னைத் தடுமாற வைக்குமோ என்று பயமிருக்கத்தான் செய்தது, ஆனால் அவள் வெறும் யாரோ ஒருத்தி போலிருந்தது நிம்மதியைத் தந்தது. சொந்தங்கள், நண்பர்கள் என்று பெரும் கூட்டத்துடன் வாழும் அவள் எதற்காகத என்னை ஏயர்போட் இற்கு அழைத்து வரும்படி கேட்டாள் என்பது புதிராக இருந்தாலும் நான் ஒன்றும் கேட்கவில்லை. அவளிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் இருந்தன. அவை ஒன்றுமே இப்போது எனக்கு முக்கியமில்லை. என் மனம் முழுவதும் நானும் நிரோவும் பார்த்து வைத்திருக்கும் சிறிய வீடு எந்தப் பிரச்சனையுமில்லாமல் எங்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்பதிலேயேயிருந்தது.
இரண்டு கோப்பிகளை வாங்கி வந்து ஒன்றை என் முன்னால் வைத்துவிட்டு, ஒன்றை உறிஞ்சத் தொங்கினாள் தனுஜா. அவள் முகம் வாடிப்போயிருந்தது. முன்பிருந்த துடுக்குத்தனம், முகத்தின் மிளிர்சி ஒன்றையும் காணவில்லை. நிறம்பவே உடல் மெலிந்து போயிந்தாள். நான் அவள் புது வேலைபற்றிக் கேட்டேன். எனக்கு எந்த ஆர்வமுமில்லாவிட்டாலும் அவளுக்கும் எனக்குமான மௌனத்தை நான் வெறுத்தேன். மௌனம் காதலர்களுக்கான மொழி. என் மௌனம் நிரோவுக்கு மட்டுமே சொந்தமானது. அதை இவள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காய் வலிந்து அதை உடைத்தேன்.
அவள் தன் வேலைபற்றி கொஞ்சம் அதிகமாகவே சொன்னாள். அது எனக்கு ஏதோ வேணுமென்றே அவள் தன்னைத் தன் திறமையைப் புளுகுகின்றாள் என்று பட்டது. நான் ஏன் மாஸ்ட்டேஸ் செய்யவில்லை என்று கேட்டாள். நான் ஆர்வமில்லை என்றேன். நம்பாதது போல் வாயைச் சுளித்தாள். எனக்கு அவள் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை. அந்த இடத்திலிருந்து போனால் போதும் என்று பட்டது. ஒருவேளை நாம் சந்தித்துக் கொள்ளுவது இதுவே கடைசியாகக் கூட இருக்கலாம், அதற்கான ஒரு சிறு மரியாதை கொடுத்து நான் அங்கு இருந்துகொண்டிருந்தேன். மீண்டும் மௌனம். எதைக்கொண்டு உடைப்பது அதையென்று புரியவில்லை.
அவளே அதனைச் செய்தாள். ”நிரோ இஸ் வெரி க்யூட்” என்றாள் திடீரென்று.
நான் வெறுமனே புன்னகைத்தேன். என் மனதில் எர்லாம் அடித்து விழித்துக்கொண்டது. இப்படியான ஒரு கருத்திற்கு என்னிடமிருந்து எந்தமாதிரியான ரியாக்க்ஷன் வரவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.
அவளே தொடர்ந்தாள். ”ரூ வீக்சுக்கு முதல் உன்னையும், நிரோவையும் ஏர்கனடா சென்டரில பாத்தன், வந்து ஒரு ஹாய் சொல்லுவம் எண்டுதான் நினைச்சன், ஆனால் நீ உன்ர வேர்க் ஃப்ரென்ஸ்சோட வந்திருந்தாய் போல இருந்துது அதுதான்..” என்று இழுத்தாள்.
நான் ஓம் என்று தலையாட்டி ”அண்டைக்குச் சரியான சனம்” என்றேன் தெளிவில்லாமல்.
”நிரோ எந்த இடம்” என்றாள். தொடர்பில்லாமல்.
”டவுண்ரவுண்” என்றேன் விளங்காமல்
”இல்லை ஊரில” என்றாள்.
”வடிவாத் தெரியாது, ஏதோ நல்லுார் எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு, ஏன்?” என்றேன்
”நிரோ ஆக்கள் எனக்குத் துாரச் சொந்தம் தெரியுமா?” என்றாள்.
”ஓ தெரியாதே., கேட்டுப் பாக்கிறன்”. என்றேன்
”ஏன் அவசரமா உன்ர வெர்ட்டிங் நடந்தது?” என்றாள்
”இல்லையே, கனகாலப் பிளான்தான், சிம்பிளா முடிச்சிட்டம்” என்றேன்.
”அப்ப நிரோ வீட்டில ஒரு பிரச்சனையுமில்லையா, சம்மதிச்சி்ட்டீனமா”. என்றாள்.
”ஏன் எதுக்குப் பிரச்சனை, நாங்கள் லிவ்விங்டு கெதர்ரா ஒரு வருஷத்துக்கு மேல இருந்தனாங்கள், பிறகு கலியாணம் கட்டுவம் எண்டு டிசைட் பண்ணிக் கட்டினனாங்கள்” என்றேன் குழப்பத்தோடு.
”ம் மே பி அதாலதான் சம்மதிச்சீச்சினமோ தெரியேலை” என்றாள்.
எனக்குக் கொஞ்சம் சினம் வந்தது, ”லுக் தனுஜா ஐ டோன்ட் அண்டர்ஸ்ராண்ட வாட் யூ ஆர் ரோக்கிங்” என்றேன். என் குரலில் தெரிந்த சினத்தை அவள் புரிந்து கொண்டாள்.
சிறிது மௌனத்தின் பின்னர் ”நீ எனக்கு மறைச்ச மாதிரி அவளுக்கும் மறைச்சிட்டியோ எண்டு நினைச்சன்” என்றாள்.
”வாட் த ஹெல் ஆர் யு டோர்க்கிங் தனு” என்றேன்
”உன்ர காஸ்ட் பற்றி நீ எனக்கு மறைச்சுத்தானே என்னை லவ் பண்ணினனீ” என்றாள்.
”வாட் வாட் காஸ்ட்” என்றேன் குழப்பத்தோடு
”கமோன் விஷ்.. டோண்ட் அக்ட் இன்னெசென்ட்” என்றாள். பின்னர்
”எனக்கு இந்த காஸ்ட் சிஸ்டத்தில எல்லாம் நம்பிக்கையில்லை, ஆனால் அப்பா, அம்மா, என்ர ரிலேட்டிவ்ஸ்.” அவள் குரல் தடுமாறினாள். ”நிரோன்ட அப்பா, அம்மா அவளின்ட ரிலேட்டிவ்ஸ் எப்பிடி, ஐ ஆம் கென்ஃபியூஸ்ட்” என்றாள்.
நியூயோர்க் விமானப் பயணிகளை வருமாறு ஒலிபெருக்கி அழைப்பு விடுத்தது. தனுஜா தனது கான்ட் பாக்கை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டாள். சில்லு வைத்த கனமான பையை ஒரு கையால் இழுத்துக் கொண்டே..
’நிரோ ப்ரெக்னெட் எண்டு கேள்விப்பட்டன். கெங்கிராட்ஸ்” என்று சொல்லி என் கையை குலுக்க தனது கை யை நீட்டினாள். என் கால்கள் என்னையறியாமல் பின்னால் நகர்ந்து கொண்டன.
”தாங்கஸ், ஃகாவ் எ நைஸ் ஜேர்னி” என்று விட்டு செல்போனை எடுத்துப் பார்த்து ”லேட்டாப் போச்சு நிரோ பார்த்துக்கொண்டிருப்பாள் என்றேன்.
தனுஜா தனது பாக்கை இழுத்துக்கொண்டு திரும்பி நடக்குமுன்னர் என் முகத்தை ஒருமுறை பார்த்தாள். அவள் கண்களின் நான் இதுவரையும் கண்டிராத திருப்தி குடிகொண்டிருந்தது.
2015 மார்ச் ”காலம்”
No comments:
Post a Comment