Friday, December 21, 2012

தாமரைப்பாதங்கள்

உள்ளங்காலுக்கும் மொளிக்குமிடையில்தான் அந்த நோவிருந்தது. காலையூண்டி நடக்கும் பொழுது சுள்ளென்ற அந்த நோ, வரவரக் கூடிக்கொண்டு போனதே தவிர குறைகிறமாதிரி தெரியவில்லை. விடிய எழும்பி கட்டிலால் காலை நிலத்தில் வைக்கவே பயமாகவிருந்தது வனிதாவுக்கு. நாளுக்குநாள் நோ கூடுவதும் குறையுறதுமாயிருக்கும். சிலநாட்கள் உயிர் போவதுமாதிரியிருக்கும், சிலநாட்கள் இந்தக்காலா நேற்று அப்பிடி நொந்தது என்றுமிருக்கும். இருந்தாலும் ஏதோ நோயொண்டு காலுக்க வந்துவிட்டது என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது. வலதுகால் வேறு. இனிமேலும் இழுத்தடிக்காமல் டொக்டரிட்டம் காட்டவேணும் என்று முடிவெடுத்து மூன்று மாதங்களாகிவிட்டன.




வேலை முடிந்தவுடன் நடப்பதற்கு வசதியாகத் தன் அலுவலக மேசையில் கீழ் வைத்திருக்கும் சப்பாத்தை போட்டுக்கொண்டு அவசர அவசரமாக மின்சார ரயில் நிலையத்தை நோக்கி நடந்தவளுக்கு, சப்பாத்து வலக்கால் பெருவிரலை இடித்துக்கொண்டு நிற்பதுபோல் உணர்வைக் கொடுத்தது. காலமை நடக்கேக்க ஒழுங்காத்தானேயிருந்தது, அடுக்கிடையில பெரிய விரல் என்ன வளந்திட்டுதா? என்று நினைத்த படியே ஒரு ஓரமாக நின்று சப்பாத்தைக் கழற்றி உள்ளே ஏதாவது அடைந்து கிடக்கின்றதா என்று பார்த்து, ஒன்றுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் போட்டு ஒருமுறை பாதத்தை சுழற்றிச் சுழற்றிப் பார்த்து, காலுக்கு வசதியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினாள். இப்படியாகத் திடீரென ஆரம்பித்ததுதான் அவள் கால் நோ. இப்போ தட்டையான கால்களுக்கு இதமான விலையுயர்ந்த சப்பாத்துக்களைத் தவிர அவளால் வேறு எதையும் அணியமுடிவதில்லை.

அவள் கனவுகளில் கால்களைத்தவிர வேறெதும் வருவதில்லை இப்போதெல்லாம். அழகான மெல்லி நீண்ட வாழைத்தண்டு என்று சொல்வார்களே அதே போன்ற வழுவழுப்பான கால்கள், நோய்ப்பட்ட யானைக்கால்கள், நொண்டிக்கால்கள், சூம்பியகால்களென்றும் கனவெல்லாம் கால்களாய் நிறைந்திருந்தன. வேலைத்தளத்திலும் அவள் கால்களைப் பற்றியே கதைத்துக்கொண்டிருந்தாள். சப்பேக்குள்ளும், வீதியோரங்களிலும் அவர் பார்வை மற்றைய பெண்களில் கால்களின் மேலேயே எப்போதும் பதிந்திருக்கும். அவள் பார்வை தமது கால்களை ஊடுருவதை உணர்ந்த பெண்கள் கால்களை தம் பக்கம் இழுத்துக்கொண்டோ, அல்லது உடையைச்சரிசெய்து கால்களை மறைத்துக்கொள்வதோ உண்டு. சிலர் சினத்தோடு முகத்தைத் திருப்பியும் கொள்வார்கள். கால்கள் எவ்வளவு அழகானவை. நிகங்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட சுத்தமான கால்களுக்கு நிகரான உடலுறுப்பு பெண்களுக்கில்லை என்பதில் அவள் உறுதியாயிருந்தாள். கால்களைச் சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் மேல் அவளுக்கு அலாதி மரியாதையிருந்தது. கால்களை அவர்களின் பொறுப்பில் தூக்கி;க்கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு அலாதியாகவிருக்கும் பெண்களைப் பார்க்கையில் பெருமையாகவிருக்கும். பெண்கள் தமது கால்களைத்தான் மிகவும் நேசிக்கின்றார்கள். கால்கள் இல்லாதவர்கள் பாவம். எம்நாட்டுப் போரினால் எத்தனை மக்கள் தமது கால்களை இழந்திருக்கின்றார்கள்.

கைகளில் அணிவது போல் ஏன் கால்களிலும் காப்புக்களைப் பெண்கள் அணிவதில்லை என்பதை ஆராய அவள் விரும்பினாள். கைகளில் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய தடித்த பொற்காப்புக்களை அணியும் பெண்கள் ஏன் கால்களிலும் அதுபோல் அணிவதில்லை. காற்சங்கிலி மிகவும் மெல்லியது, கால்களுக்கு அது போதாது. காற்சதங்கை அது நாட்டிய மங்கைகள் மாத்திரமே அணிந்து கொள்ளும் அணிகலன். கண்ணகியை அவள் குலதெய்வமாகக் கருதினாள். அவள் காற்சிலம்பு ஒரு காவியத்தையே படைத்துவிட்டதல்லவா? கண்ணகியின் கால்கள் எப்படியிருந்திருக்கும். அழகிய சின்னக் கால்களில் அந்தச் சிலம்பு எப்படி ஜொலித்திருக்கும். ஏன் பெண்கள் சிலம்பணிவதில்லை என்ற கேள்வியையும் தனது ஆராய்வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். மனித உறுப்பில் கால்களின் முக்கியத்துவம் வேறெந்த உடலுறுப்புக்குமில்லை என்பதை எந்தச் சபையிலும் ஆதாரங்களுடன் வாதாட அவளால் முடியும். அதிலும் பெண்களுக்கு கால்கள் மிகமிக முக்கியமானது. இரண்டு கால்களும் இருக்கும் போதே அவர்களைத் தமது அசையாச் சொத்துக்கள் போல் அடைத்து வைக்க முயலும் ஆண் சமுதாயத்தில் கால்கள் இல்லாவிடின் பெண்களின் நிலை எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அவள் இரத்தம் கொதித்தது. குதி உயர்ந்த சப்பாத்தணியும் பெண்களை அவள் வெறுத்தாள். அவர்கள் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வன்முறையாளர்கள். ஆண்களைக் கவர்வதற்காய் தமது கால்களைக் காயப்படுத்திக்கொள்ளத் துணியும் மோசக்காரிகள். தம்மை வியாபாரப்பொருளாய் மாற்றிக்கொள்ளும் கோழைகள்.



வேலை முடிந்தவுடன் அவசர அவசரமாக சப்பே பிடித்து பஸ் பிடித்து வீட்டுக்கு வந்தவளுக்கு கோபம் தலை உச்சி மட்டும் சுள்ளென்று ஏறியது. வீட்டுக்கு முன்னால் காரில்லை. வேலையில இருந்து நாலைந்து தரம் ரவிக்கு போன் பண்ணி தனக்கு இன்றைக்கு டொக்டர் அப்பொயின்மெண்டிருக்கு வீட்டுக்குவந்து குளித்துவிட்டு உடனேயே போக வேண்டும், கார் தனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தாள். இது முதல் தடவையில்லை, எத்தனையோ தரம் தனக்கு அலுவலிருக்கு இண்டைக்கு கார் வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாலும் அவளுக்கு கார் கிடைப்பது மிகவும் அரிதாகவேயிருந்தது. எப்ப பார்த்தாலும் பிள்ளைகள் கைவசமாகவிருந்தது கார். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத்தான் கஸ்டத்தோட கஸ்டமாகவென்றாலும் குறைந்தவிலையில் ஒரு பாவித்த காரை வாங்கினாள் வனிதா. ரவிக்கு இதில் உடன்பாடில்லை. தேவையில்லாத செலவு. காரைச் சமாளிக்கலாம், ஆனால் காருக்கான இன்சூரன்ஸை எப்படிச் சமாளிப்பது. உமக்குத்தானே கால்கள் இருக்கிறனவே கார் எதற்கு?

ச்சீ பேசமால் வேலையால் நேராக டொக்டரிடம் போயிருக்கலாம். குளித்து விட்டுக் கொஞ்சம் துப்பராகப் போவம் என்று நினைத்ததால் வந்த வினை. இனி ரக்ஸியில் போனால் கூட பூட்டும் நேரத்திற்கு முன்பு போய்விட முடியாது. பிள்ளைகளில் யாரோதான் தனக்குக் கார் வேண்டுமென்பது தெரியாமல் கொண்டுபோய் வி;ட்டார்கள் என்று கோவம் கோவமாக வந்தது. என்ன இனி, ஆளுக்கு ஒரு கார் வாங்க வேண்டுமா? நினைத்த படியே உடுப்பை மாற்றிக்கொண்டு ஒரு தேத்தண்ணி போட்டுக் குடிக்கலாம் என்று குசினிக்குள் நுழைந்தவளுக்கு “சிங்”கிற்குள் காய்ந்த சாப்பாடு ஒட்டிய பாத்திரங்கள் நிறம்பி வழிந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் “ஐயோ” என்று கத்தலாம் போலிருந்தது. பேசாமல் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு கொஞ்ச மிக்சரையும் எடுத்துக் கொண்டு ரீவிக்கு முன்னாலிருந்து டொக்டருக்கு போன் செய்து தவிர்க்க முடியாத காணத்தால் தனக்கு இன்றைக்கும் வரமுடியாது என்று மன்னிப்புக் கேட்டுத் தொடர்பைத் துண்டித்தாள்.





ஓப்பரா வின்ஃபி கணவரால் வன்முறைக்குள்ளான பெண்ணொருவருடம் பேசிக்கொண்டிருந்தாள். ரவி ஏன் இன்னும் வேலையால் வரவில்லை? அவனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். தான் ஒரு முக்கியவேலையாக காரில் வெளியில் வந்துவிட்டதாகவும் “ஃப்ளீஸ் நீர் ஒரு ரக்ஸி பிடித்து டொக்டரிடம் போம்”; என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தான். வனிதாவுக்கு கைகள் நடுங்கியது. ஒன்றுக்கு மூன்று தரம் அவள் போன் பண்ணித் தனக்கு இன்றைக்கு டொக்டர் அப்பொன்மெண்ட் இருக்கென்று ரவியிடம் சொல்லிருந்தாள். சொல்லும் போது நானும் உம்மோட வாறன் என்று அவன் சொல்ல மாட்டனாவென்று ஏங்கியிருக்கின்றாள். “சரி, நீர் கொண்டு போம், எனக்கு ஒரு அலுவலுமில்லை நான் வீட்டைதான் நிற்பன்”. அப்ப சொன்னான், இப்ப அப்படியென்ன அவசரம்?. அவளுக்குத் தெரியும் அவனது சமூகசேவைகளில் ஒன்றாகத்தானிருக்கும். ரவி ஏதோ அமைப்பொன்றுடன் இணைந்து வேலைசெய்கின்றான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. அவனும் அதுபற்றி அவளுக்குச் சொன்னதில்லை. தன்னோடு அவன் போதுமான நேரம் செலவழிக்கின்றானே அதுவே போதும் என்று அவள் இருந்துவிட்டாள். ஆனால் வரவர அவன் கூட்டம் அது இதுவென்று அதிக நேரம் வெளியில் செலவிடுகின்றான் என்பதை அவள் உணரத்தொடங்கினாள். இனி இதுபற்றிக் கதைத்தோ சண்டை பிடித்தோ ஒன்றுமாகப்போவதில்லை. தனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் நல்ல ஒரு நியாயம் வைத்திருப்பான் அவன், கடைசியாக உம்மோட ஒண்டும் கதைக்கேலாது என்பதாய் அவன் விவாதம் முடிவடையும். எப்போதுமே தோற்றுப் போவாள் அவள். மனதுக்குள் தன்பக்கம் நியாயம் இருக்கிறது என்பது தெளிவாத் தெரிந்தாலும் தனது பக்க நியாயத்தை வார்த்தைக்குள் அடக்கி அவன் போல் நிதானமாக வாதட அவளுக்குத் தெரிவதில்லை. கண்கள் கலங்கிவிடும். குரல் உயரும். அவன் ஏதோ அன்பாக தனது வாதத்தை வைப்பது போலவும் இவள் விதண்டாவாதம் பண்ணுகின்றாள் போலவும் ஒரு பிரம்மையை ஏற்படுத்தும்; பிள்ளைகள் கூட ஏனம்மா சும்மா எல்லாத்துக்கும் கத்துறீங்கள் என்பார்கள். கடைசியி;ல் அவளே மன்னிப்புக்கேட்குமளவிற்குத் தாழ்ந்து போவாள்.

இரண்டு “அட்வில்” எடுத்துப் போட்டுவிட்டு அறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள். மனம் அழுந்தி அழுந்தி அழச்சொன்னது. அழுவதைத் தனக்கு அவமானமாய் உணர்ந்து கண்களை மூடி நல்ல விஷயங்களை மனதுக்குள் ஓடச் செய்து தனது தளர்விற்கு மாற்றுத் தேடினாள். மனம் அடம்பிடித்தது, எழுந்து நோவுக்கு பூசும் கிறீமை எடுத்துக் காலில் நோ தரும் பகுதிக்கு அழுத்திப் பூசிவிட்டபடியே தனது கால்களைப் பார்த்தாள். கவனமாக மயிர்களை அகற்றிக் கிறீம் பூசிவந்தாலும் அவள் கால்கள் அழகில்லாமலிருந்தன. ஆண்களின் கால்கள் போல் பெரிதாக விரல்கள் அகன்று காணப்பட்டன. அப்பாவின் சாயல் அவளுக்கு, அதுதான் அப்பாவின் கால்களைப் போலவே அவள் கால்களும் இருக்கின்றதோ என்னவோ. தொடர்ந்தும் தன் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்குத் தன் கால்கள் மீதே இரக்கம் வந்தது. பாவம் உள்ளுக்க என்ன வருத்தத்தை வைச்சுக்கொண்டு அவதிப்படுகுதுகளோ. “கவலைப் படாதை இனி நான் ஒருத்தரையும் நம்பப் போறதில்லை, அடு;;த்தகிழமையே நான் உன்னை டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போய் மருந்தெடுத்து உன்ர நோவை இல்லாமல் பண்ணுறன்” சொல்லிவிட்டுச் குசினிகுள் போய் பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கி விட்டு சமைப்பதற்கு ப்ரிட்ஜிக்குள்ளிருந்து மீனை எடுத்து சுடுதண்ணிக்குள் போட்டாள். மீன் என்றால் மூத்தவன் மூஞ்சையை நீட்டுவான் என்று ஒரு கோழிக்காலையும் எடுத்து அந்தத் தண்ணிக்குள் போட்டாள். அரிசியைக் கழுவி “ரைஸ்குக்கரில்” போட்டு விட்டு வெண்காயம், உள்ளி, இஞ்சி, பீன்ஸ் எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்துக்குள் போட்டுக்கொண்டு வந்து ரீவிக்கு முன்னாலிருந்து வெட்டத்தொடங்கினாள். ரீவியில் வடஅமெரிக்க பூர்வீக மக்களின் கால்கள் “மற்றவர்”களின் கால்கள் போலல்லாது “வழமை” அற்றுக்காணப்படுவதாயும், அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக “எயார் நேரிவ் என்7” எனும் சப்பாத்து வகையைத் தாம் உருவாக்கியுள்ளார்கள் என்றும் “நைகி” சப்பாத்தின் விற்பனை முகவர் ஒருவர் அதற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் வழங்கிக்கொண்டிருந்தார்.



கடைசி மகள் 8ம் வகுப்புப் படிக்கின்றாள், சப்பாத்தைக் கூடக் கழற்றாமல் குசினிக்குள் சென்று ஒரு நோட்டம்விட்டு வனிதா சிட்டிங் ரூமுக்குளிருப்பதைக் பார்த்துவிட்டு “ஹாய் மாம் வாட்ஸ் ஃபோர் டினர்”; என்றாள், மீன்கறியும் சோறும் என்ற வனிதாவின் பதிலுக்கு முகத்தைச் சுளித்தபடியே தனது அறையை நோக்கிப் போனாள். அவளி;ன் சப்பாத்து முன்னும் பின்னும் கிழிந்து போயிருந்தது. புதுச்சப்பாத்தை பெட்டிக்குள் பத்திரமாக வைத்துவிட்டு எதற்காக இந்தக் கிழிந்து போன சப்பாத்தைப் போட்டபடி திரிகின்றாள் என்பது வனிதாவுக்குப் புரியவில்லை. இதனால் அவள் கால்களுக்கு எவ்வளவு பாதிப்பு. கேட்டால் எல்லாவற்றிற்கும் ஒரு தோள் குலுக்கல்தான் பதிலாக வரும். வனிதாவின் கண்கள் தொலைக்காட்சியில் பதிந்து போயிருந்தன. மனம் எங்கெல்லாமோ சுழன்றுகொண்டிருந்தது.



பத்துமணிவரை ரவியிற்காகக் காத்திருந்துவிட்டுப் படுக்கைக்குப் போய்விட்டாள் அவள். தனது தலையை யாரோ வருடுவதுபோலிக்கத் திடுக்கிட்டெழும்பியவளின் தலையை வருடியபடியே “டொக்டர் என்ன சொன்னவர்” என்றான் ரவி. நேரம் ஒருமணியாகியிருந்தது. “நான் போகேலை” திரும்பிப் படுத்தவளை கட்டிப்பிடித்த ரவி “ஏனம்மா ரக்ஸிக்கு அடிச்சுப் போயிருக்கலாமே” என்ற படியே தனது பிடியை இறுக்கினான். இது ரவியின் இன்னுமொரு யுக்தி. வனிதா களைத்துப் போனாள். வாக்குவாதப்பட்டு அழுது கடைசியில் அவன் சரி அவள் பிழையென்ற முடிவோடு அவன் அவளை கட்டியணைத்து உடலுறவு கொள்வதோடு எல்லாமுமே சரியாகிப் போகும். அவளுக்குத் திராணியில்லை. “நாளைக்கு நான் வெள்ளணை வேலைக்குப் போகவேணும் பேசாமல் படுங்கோ” என்று போர்வையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள். “அப்ப கால் நோ” அவன் குரல் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

இப்பவெல்லாம் எதற்கெடுத்தாலும் கோபம் வருகின்றது வனிதாவுக்கு. கோபம் இறுதியில் அழுகையாகமாறிச் சுயபச்சாதாபத்தில் போய் முடியும். ரவி சொன்னான் “நீர் முந்தினமாதிரியில்லை எதுக்கெடுத்தாலும் கோவிக்கிறீர், செக்ஸ்இற்குக் கேட்டாலும் ஏதாவது சாட்டுச்சொல்லிக்கொண்டிருக்கிறீர், என்ன நடந்தது?” எதை எப்படிச்சொல்வதென்று வனிதாவிற்கு விளங்கவில்லை. குடும்பவாழ்க்கை சந்தோஷமாகவில்லை என்பது அவளுக்கும் விளங்கியது காரணம்தான் விளங்கவில்லை. வெளியிலிருப்பவர்கள் நல்ல சந்தோஷமான வடிவான குடும்பமாகத்தான் அவள் வாழ்க்கையைப் பார்த்தார்கள். பிள்ளைகள் நன்றாகப் படிக்கின்றார்கள். ரவி ஒரு நல்ல தமிழ் மகன் என்ற சட்டத்திற்குள் நச்சென்ற அடங்கியிருந்தான். இருவருக்கும் நிரந்தரமான வேலையிருக்கின்றது. விடுமுறைக்கும் குடும்பமாக வேறுநாடுகளுக்குச் சென்று வருகின்றார்கள். பலருக்குக் கிடைக்காத வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருப்பதாகத்தான் பலரும் சொல்கின்றார்கள். இரவில் ரவி அவளை அணைத்து உடலை அளையத் தொடங்கிவிட்டாலே அவளுக்கு பூச்சி உடம்பில் ஊர்வதுபோலிருக்கும். கையைத் தட்டிவிட்டு விலத்திப் படுத்துக்கொள்வாள். அடுத்தநாள் முழுநாளும் ஏதாவது ஒரு சாட்டைச் சொல்லி ரவி எரிந்து விழுந்துகொண்டிருப்பான். தொடக்கத்தில் அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் காலப்போக்கில் உடலுறவுக்குத் தான் மறுப்புத்தெரிவித்த அடுத்தநாள் வீட்டில் ஏதாவது காரணத்தால் ரவிக்கும் தனக்கும் விவாதம் ஏற்படுவது புரியத் தொடங்கியது, அவளுக்கு மனவேதனையைதந்தது. பலநாட்கள் இதுபற்றி மனதுக்குள் ஓடவிட்டு தன்னைப் பற்றியே ஆய்வுசெய்யத் தொடங்கினாள்.

ரவியை அவள் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டாள். தனக்கு வரும் கணவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாளோ அதற்கு மேலேயே ரவியிருந்தான். காதலித்த நாட்களின் இருவரும் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ரவியின் பரிசுகள் எப்போதும் விலை உயர்ததாகவேயிருக்கும். பல தடவைகள் விடுமுறையைக் களிக்க வேறு நாடுகளுக்குச் சென்று வந்திருக்கின்றார்கள். அப்போதும் செலவெல்லாம் அவனே ஏற்றுக்கொண்டிருக்கின்றான். வனிதா இது முறையில்லை என்று வாதிட்டால், “ஏன் நான் நீ என்று பிரிச்சுப் பார்க்கிறீர்” என்பதோடு அவள் அடங்கிக்கொள்வாள். தன்னைப் போல் அதிஷ்டசாலி ஒருவருமில்லை என்று எப்போதுமே அவள் பெருமைப்பட்டதுண்டு. பின்னர் பிள்ளைகள் பிறந்து, இப்போது வளர்ந்து பெரியவர்களான பின்பும், ரவி அவளோடும் பிள்ளைகளோடும் மிகவும் அன்பாகத்தானிருக்கின்றான். வனிதாவிற்குத் தன்னில்தான் ஏதோ பிரச்சனை என்பதாய்ப்பட்டது. தனக்கு எப்போதெல்லாம் அவன் மேல் எரிச்சலாகவருகின்றது என்று தன் வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப ஓட்டிப்பார்த்தாள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு புள்ளியை அவளால் அடையாளப்படுத்த முடியவில்லை. தனக்கு வேறுயாரும் ஆண்மேல் கவர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ என்று கூட அவளுக்குச் சதேகமேற்பட்டது. தன் வாழ்வில் சந்தித்த, சந்திக்கும் ஆண்களை மனக்கண் முன்னே கொண்டுவந்து இவர்களில் யாரையாவது நினைக்கும் போது தன்மனதில் கிளர்சி ஏற்படுகின்றதாவென்று தன்னையே சோதித்;துப் பார்த்தாள். எல்லாமே வெறுமையாகவிருந்தது. ரவியின் குரலைத் தொலைபேசியில் கேட்கும்போதோ, இல்லாவிட்டால் அவன் அவளோடு காதலோடு கதைக்கும் போது எழும் கிளர்ச்சி வேறு எந்த ஆண் பேச்சிலும் அவளுக்குக் கிடைத்ததில்லையென்பது உறுதியாகிவிட அவளுக்கு நிம்மதியாகவிருந்தது. இருந்தும் எதனால் அவன் தொடுகை அவளுக்குப் பிடிக்காமல் போனது. எப்போது அவள் ஒதுங்கத் தொடங்கினாள். புரியவில்லை. டொக்டரிடம் செல்லும் பொது இதைப் பற்றியும் பேசிப் பார்க்கலாமோ என்று யோசித்தாள், பின்னர் இதுபற்றி எப்படிக் கதைப்பது என்பது தெரியவில்லை. வயது போய்விட்டதா? தன் உடலின் ஹோர்மோன்கள் வற்றிப் போய்விட்டதா?

அடுத்தநாள் காலை எழுந்தவுடன் டொக்டரிட்ட அப்பொன்மெண்ட் வையும் நானே உம்மைக் கூட்டிக்கொண்டு போறன் என்ற ரவி. தான் இரவு ஒழுங்காக நித்திரை கொள்ளாததால் தனக்கு தலையிடிக்குது அதனால் கொஞ்சம் வேலைக்குப் பிந்திப் போகப் போகிறேன் என்று அவள் நெத்தியில் கொஞ்சி அவளை வேலைக்கு அனுப்பிவிட்டுத் திரும்பவும் படுத்துக்கொண்டான். அவள் நெஞ்சை எதுவோ நெருடியது. இனிமேல் சும்மா அவனோடு சண்டைபிடிக்காமல் சந்தோஷமாயிருக்க வேணும். வருகிற கோடை விடுமுறைக்கு “ஜமேக்கா” போகலாம் என்றிருக்கின்றார்கள். “ஹனிமூன்” சென்றபோது எப்படியெல்லாம் அனுபவித்தார்களோ அதே போல் திரும்பவும் எல்லாம் அனுபவிக்கவேண்டும் என்று அவள் மனதுக்குள் பட்டியல் போட கால் நோ குறைந்தமாதிரியிருந்தது. மனம் சந்தோஷமாகவிருந்தது. பஸ்தரிப்பில் வந்து நின்றபோது தானும் ஏதாவது சாட்டைச் சொல்லிவிட்டு வேலைக்குப் பிந்திப் போகலாமா என்று யோசித்தாள். இன்று அவனோடு உடலுறவு கொள்ளலாம் போல் அவள் உணர்வுகள் மனதை சஞ்சலத்திற்குள்ளாக்கியது. மனது கிளுகிளுப்பாக வீட்டை நோக்கித்திரும்பியவளை எதுவோ தடுத்தது. பஸ் வந்தது அவள் ஏறிக்கொண்டாள். தன் மனப் பதட்டம் மனமாற்றத்திற்கான காரணம் அவளுக்கே குழப்பமாகவிருந்தது.

“ராத்திரி ஒழுங்கா நித்திரை கொள்ளேலை தலையிடிக்குது நான் படுக்கப்போறன்” அவனது குரல் திரும்பத் திரும்ப வனிதாவின் காதுகளில் வந்து மோதிக்கொண்டிருந்தது.

கலியாணம் கட்டிய புதிதில் உமக்கு ஒரு ஆம்பிள எப்பிடி நடந்தாப் பிடிக்கும் என்ற அவன் கேள்விக்கு, சமைக்கேக்க குசினிக்க உதவிசெய்தா எனக்கு மூட் வரும் என்றாள் அதன் பின்னர் ரவிக்கு “மூட்” வரும் போதெல்லாம் அவன் வனிதாவுக்கு உதவிசெய்யத் தொடங்கினான். அது நன்றாக அப்போது வேர்க் அவுட் ஆகியது. ஆனால் காலப்போக்கில் குழந்தைகள் பிறந்து அவர்களுக்குத் தனிமை கிடைப்பது அரிதாகிப் போக, ரவியும் அடிக்கடி சமூகசேவை செய்கின்றேன், கூட்டம் அதுஇதுவென்று வெளியில் போய்விடுவதால் வீட்டு வேலை முழுக்க அவள் தலையில் விழுந்தது. பிள்ளைகளும் படிக்கிறேன் படிக்கிறேன் என்று எப்போதும் அறைக்குள் அடங்கிக் கிடந்தார்கள். அன்றைக்கு ஒருநாள் வனிதா வேலையால் வந்து சமைத்துக்கொண்டிருக்கும் போது தானாக வந்து ரவி உதவிசெய்தான். சமையல் முடிந்து சாப்பிட்ட பின்னர் ரவி சில மணிநேரங்கள் கொம்பியூட்டரில் சிலவிடுவது வழமையான ஒன்று. வனிதா படுத்துவிடுவாள். அன்றும் ரவி கொம்பியூட்டரில் இருந்து விட்டான். வனிதா படுத்துவிட்டாள். நன்றாக அவள் அயர்ந்து நித்திரையாகவிருக்கும் போது ரவி வந்து அவளை எழுப்பினான். அவள் அரைகுறை நித்திரையில் என்னவென்று கேட்டபோது நான் உமக்கு இண்டைக்கு சமைக்க உதவினனானெல்லே என்றான். அவள் விளங்காதவளாய் அதுக்கென்ன என்றுவிட்டுத் திரும்பிக்கொண்டாள். அவன் விடுவதாயில்லை, அவளின் உடலில் கையை மேயவிட்டான். அவள் அவன் கையைத் தட்டிவிட்டாள். அவன்; திரும்பிப் படுத்துக்கொண்டான்.

அடுத்தநாள் வனிதா வேலைக்குப் போகும் அவசரத்தில் எழும்பி ரவியை எழுப்ப அவன் தான் சரியாக நித்திரை கொள்ளேலை அதனால் இண்டைக்கு நான் வேலைக்குப் போகேலை என்றான். “ஏன் வெள்ளணத்தானே படுத்தனீங்கள் ஏன் நித்திரை கொள்ளேலை என்றதற்கு, செக்ஸ் செய்தால் நல்லா நித்திரை வரும். மனுசனுக்கு வேணுமெண்டமாதிரியிருக்கேக்க செய்யாமல் மரக்கட்டை மாதிரிக்கிடந்தா பிறகு என்னத்துக்குப் பொஞ்சாதியெண்டு கொண்டு. நான் என்ன உம்மில லவ்விலையே கேட்டனான் உடம்புக்குத் தேவைப்படுது அதுதான் கேட்டனான். செய்தாத்தான் ஒழுங்கா நித்திரை வருகுது, சும்மா அலம்பாமல் போம்” அவன் கத்தினான். அவள் போய்விட்டாள். அதன் பிறகு அவள் எவ்வளவு முயன்றும் அவள் உடம்பு அவனோடு ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டது. அவள் மனதில் ஆசையெழுந்தால் கூட அவள் உடம்பு பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மறுத்தது அவளுக்கே ஆச்சரியமாகவிருந்தது. அதன் பிறகு அவள் ஆசையாய் அவனோடு இணைந்ததென்ற நாளே இல்லாமல் போய்விட்டது. காதல் வற்றியது. அவள் உடலின் ஒவ்வொரு பாகங்களும் அவள் சொற்கேட்க மறுத்தன. அவள் மனதிலிருந்து விலகி வேறொரு உலகிற்கு உடல் இடம்மாறிக் கொண்டது. தன் உடலும் உணர்வுகளும் தன்னைவிட்டுப் போய்விட்டன. ஐயோ ஐயோ இனி ஏலாது ஏதாவது செய்தாக வேண்டும், இது நிரந்தரமோ என்ற அச்சம் அவளை ஆட்கொள்ளத்தொடங்கியது. யாரிடம் இதுபற்றிக் கேட்பது என்று தெரியாத நிலையில் மின்கணனியில் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று ஆராயத்தொடங்கினாள்.

மின்கணனியில் கூகுள் செய்து பார்த்தாள். மழிக்கப்பட்ட நீண்ட பெண்களின் கால்கள் பலவகை நிறங்களில். உன்னிப்பாகப் பார்க்க சிலகால்களில் இன்னும் பொன்தூவல்போல் பூனைமயிர்கள் படிந்து கிடந்தன. முலைகள் கனங்கொள்ள, தொடைகள் இறுகிக்கொண்டு யோனியை எச்சிப்படுத்தின. வனிதாவிற்கு விடை தெரியவில்லை. அகோரக் கமாம்; அவளைத்தாக்க விலங்காய் புணர ரவியைத் தேடினாள். உடல் தளர்ந்து அனைத்து அவையங்களையும் மூடிக்கொண்டு. அவளைப் பார்த்து பல்லிளித்து நகைத்தது. வெக்கங்கெட் வேசை என்றவளை வைதது.
அன்று செவ்வாய்கிழமை ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி. வனிதாவின் அம்மாவின் நினைவு நாள். அம்மா இறந்து பலவருடங்களாகிவிட்டதால் வெறும் நினைவுகளில் மட்டும் அவள் வந்து போய்க்கொண்டிருப்பாள். ஆனால் இந்த வருடம் வனிதாவின் மனநிலை வழமையிலிருந்து மாறுபட்டடிருந்தது. துக்கம் ஏனோ நெஞ்சை அடைத்தது. கால் நோ கூட வழமையை விட தாங்க முடியாமல் இருந்ததால் அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். அவள் வீட்டினுள் நுழைந்தபோது ரவியும் இன்னும் மூன்று ஆண்களும் அவர்களது இருக்கையறையிலிருந்து ஏதோ முக்கியமான விடையம் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தான். அவள் திடீரென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் வேண்டாத விருந்தாளியைப் போல் அவர்கள் பார்வை அவள் மேல் விழுந்தது. ஒரு பெண்ணோடு கட்டிலிலிருக்கும் போது அகப்பட்டுக்கொண்ட கணவன் போல் முழித்தான் ரவி. மற்றைய ஆண்களின் பார்வையில் இறுக்கத்துடன் கூடிய வெறுப்புத் தெரிந்தது. ஒரு வெளியை நோக்குவதுபோல் அவளைக் கடந்து அவர்கள் பார்வை எங்கோ தெறித்துக்கொண்டது. ரவியின் பார்வையும் அவர்கள் பார்வையை ஒத்திருக்க, அவள் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்று விட்டாள். ரவி ஏதோ வேண்டாத வேலையில், அல்லது சட்டவிரோதமான செயல் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றான் என்று அவள் மனம் அடித்துக்கொண்டது.

கனடாவில் தமிழர்கள் சட்டவிரோதமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் செயல்கள் என்ன என்பதை வரிசைப்படுத்தி யோசித்தபடியே உடையை மாற்றி நோகும் காலுக்கு கிரீமைப் பூசினாள்.



1. குடும்பமாக இருந்து கொண்டு ஒற்றைத்தாய் என்று கூறி அரசஉதவிப்பணம் பெற்றுக்கொள்ளல். - இது ரவிக்குப் பொருந்தாது. அவன் ஒற்றைத்தாய் இல்லை.
2. சமூகநலஉதவிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு வேறு ஒருவரின் அட்டையில் வேலைசெய்தல், அல்லது அட்டையில்லாமல் வேலைசெய்தல் - இதுவும் ரவிக்குப் பொருந்தாது. அவன் தனது அட்டையில் பலவருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கின்றான்.

3. வேறுஒருவரின் வங்கி அட்டையைப் பிரதியெடுத்து அவர் வங்கிப் பணத்தைக் கையாடல். – ம்

4. வேறு ஒருவரின் கிரடிட்கார்டை எடுத்து பொருட்களை வாங்கி விற்றல், அல்லது பணம் கையாடல் - ம்

5. புலிகளில் அமைப்பில் இணைந்து பணம் சேர்த்தல். அதில் ஒருபகுதியை தனது வங்கியில் இடுதல் - ம்

இதற்கு மேல் யோசித்துப் பார்த்தும் வேறு ஒன்றும் வனிதாவின் மனதில் எழுவில்லை. ஐந்தில் மூன்றுக்கான சாத்தியங்கள் இருந்தன. ஆனால் பணவிஷயத்தில் ரவியின் நேர்மைமேல் அவள் சந்தேகம் கொள்வது தனது மனச்சாட்சிக்கே பிடிக்காமல் இருந்தது. அவள் அதிகம் புலிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காதலித்த தொடக்கத்தில் புலிகள், புலிகள் என்று ரவி கதைக்கும் போதெல்லாம். ஏன் ரவி புலிகள் மேல் இவ்வளவு பாசமும் விசுவாசமுமாக இருக்கின்றான் என்று அவளுக்குச் சந்தேகமெழுந்தது என்னவோ உண்மைதான். அவளுக்கு எப்போதும் சாந்தமாகவும், அழகாகவும் இருக்கும் மான்கள், முயல்களைத்தான் பிடித்திருந்தது. காலப்போக்கில் ரவியோடு சேர்ந்து அவள் தனது தாய்நாட்டைப் பற்றிப் பலதும் அறிந்து கொண்டாள். இருந்தாலும் ‘இஞ்ச இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்” என்று ஒருமுறை கேட்டு அவனின் கோவத்திற்குள்ளாகியதால் அப்படியான கேள்விகளை அவள் முற்றாகத் தவிர்த்துக் கொண்டாள்.

கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது. ரவி அறைக்குள் வந்தான். அவள் கால்களை அவசரமாகத் தேய்த்;துவிட்டுக்கொண்டிருந்தாள். தான் நாளைக்கு அவசர அலுவலாக அமெரிக்கா போகஉள்ளதாகச் சொல்லிவிட்டு வனிதாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். ஏன் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. அவன் ஏன் இன்று வேலைக்குப் போகவில்லை என்று அவள் கேட்கவில்லை. அவள் ஏன் வேலையால் கெதியாக வந்தாள் என்று அவனும் கேட்கவில்லை. நாளைக்கு டொக்டர் அப்பொன்மென்ட் வனிதா கார்திறப்பை எடுத்து வைத்துக்கொண்டாள். இரண்டு அட்விலை போட்டு, பான்டேஜ்ஆல் காலை இறுக்கிச் சுற்றிக்கட்டிவிட்டுப் படுத்துக்கொண்டாள். நோ அதிகமாகிக்கொண்டிருந்தது.

அப்போது வனிதாவுக்கு மூன்று வயதிருக்கும் வீட்டிற்கு அவளின் சொந்தங்கள் பலர் வந்திருந்தார்கள். வீட்டில் பெரிய சமையல் நடந்தது. எல்லோரும் வனிதாவின் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பா அவளைத் தூக்கி மடியில் வைத்து அவள் கால்களுக்கு எண்ணெய் ப+சி மசாஜ் செய்தார். அவளுக்குக் கூசியது. இழுத்துக்கொண்டாள். சாப்பாட்டுப் பந்தி முடிந்ததும், பெரிய செம்பு அண்டாக்குள் மெல்லிய சூட்டில் தண்ணீரை நிரப்பி அதற்குள் வாசனைத் திரவியங்கள், தாமரை இதழ்கள் என்பனவற்றைப் கொட்டி வனிதாவை ஒரு சிறிய மரக்கதிரையில் இருத்தி அவள் கால்களை அந்தத் தண்ணீருக்குள் வைத்தார்கள். வனிதாவுக்குப் பயமாகவும், சந்தோஷமாகவுமிருந்தது. தன்னை எல்லோரும் கவனிக்கின்றார்கள் என்ற சந்தோஷம் ஒருபக்கம், தான் ஏன் பிரத்தியேகமாகக் கவனிக்கப்படுகின்றேன் என்ற சந்தேகத்துடன் கூடிய பயமும் அவளை ஆட்கொண்டது. பெண்கள் எல்லோரும் கைதட்டிப் பாட்டுப் பாடினார்கள். சிறிது நேரத்தின் பின்னர் அம்மா வந்து அவளைத் தூக்கி; கால்களை ஒருவரிடம் காட்டினாள். அவர் கால்களைத் தொட்டுப்பார்த்து விட்டுத் தலையசைக்க அம்மா அவளைத் தனது மார்போடு அணைத்துக்கொண்டு நிலத்தில் இருந்தாள். அம்மாவின் முதுகுப்புறத்தில் அப்பா இருந்துகொண்டு அவளைத் தடவி விட்டுக்கொண்டிருந்தார். அவள் திரும்பிப்பார்க்க முனைகையில் அம்மா அவள் தலையை இறுகப் பிடித்துக்கொண்டாள். அவள் ஒரு காலை ஒரு முரட்டுக்கை பிடிப்பதை அவளால் உணர முடிந்தபோது அவள் திமிறினாள். முரட்டுவிரல்களால் அழுத்தி அவள் கால் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்டதை உணர்ந்த அடுத்த நிமிடம் அவள் விரல்கள் உடைக்கப்பட்டன. ஐயோ கத்திக்கொண்டு மயக்கமானாள் வனிதா.

கதவை உடைப்பது போல் கத்தம் கேட்டுத் திடுக்கிட்டெழுந்த வனிதா முதலில் தனது கால்களைப் பார்த்தாள். அவை ஒழுங்காக இருப்பது கண்டு அமைதியானாள். இருந்தும் வலக்கால் அசைக்கமுடியாதபடி விண்விண்னென்று நோவாய்க் கிடந்தது. வெளியில் மழை பலமாகப் பொழிந்து கொண்டிருந்த சத்தத்திற்கு மேலால் கதவு தட்டும் சத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. யாராக இருக்கும்? வீட்டில் தன்னைத் தவிர ஒருவருமில்லையா? பிள்ளைகள் எங்கே?, நோவும், நித்திரைக் கலக்கமும், கனவும் கலந்து ஒற்றைக் காலை இழுத்தபடியே மயக்கநிலையாய் எழுந்து தாண்டித்தாண்டி மெதுவாக நடந்து சென்று முன்கதவைத் திறந்தவளைத் தள்ளிக்கொண்டு மூத்தவன் உள்ளே வந்தான். மழையில் முழுதாக நனைந்திருந்தான். I am all wet, what the fuck are you doing upstairs nonsense” கத்தி விட்டு அவளைக் கடந்து போனான். வனிதாவுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. “உன்ர திறப்பு எங்கை? வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டாள். அம்மா, அம்மா என்று புலம்பியபடியே வலக்காலை இழுத்து இழுத்து நொண்டியபடியே தனது அறையை நோக்கி நடந்து போனாள்.


காலம் - 40வது இதழில் வெளியான கதை இது