Tuesday, January 5, 2016

அவள் V அவன்







சந்திரன் இன்று வழமையிலும் பார்க்கப் பிடிவாதமாக நின்று மாலதியைச் சம்மதிக்க வைத்துவிட்டான். இத்தனை வருடங்களாக அவன் கேட்பதும், மாலதி மறுப்பதுமாகத்தான் காலம் கழிந்துகொண்டிருந்தது. ஆனால் சந்திரன் இன்று முடிவெடுத்துவிட்டான் தான் இனிமேல் மாலதி இல்லாமல் எந்த இலக்கியக் கூட்டத்திற்கும் செல்வதில்லையென்று. எல்லா ஆண்களும் சொல்வது ஒன்று செய்வதொன்றாகத்தான் இருக்கின்றார்கள், பெண்கள் வேலைக்கு மட்டும் போனால் போதாது, வெளியேயும் வரவேண்டும், உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்புவதோடு சரி, தம்முடன் தமது மனைவியரை ஒரு கூட்டத்திற்கும் அழைத்து வருவதில்லை. தான் அவர்களிலிருந்து விதிவிலக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துப் பிடிவாதமாக நின்று மாலதியைச் சம்மதிக்க வைத்துவிட்டான்.
இதுவரை காலமும் மாலதி தனக்கு இந்த நுால் வெளியீடு, இலக்கியக் கூட்டம் எதிலும் ஆர்வமில்லை நீங்களே போய்விட்டு வாங்கோ, நான் எனது நண்பிகளுடன் படத்திற்கோ, இல்லாவிட்டால் ஷொப்பிங் ஏதாவதற்கோ போய்வருகிறேன் என்று சந்திரனை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தாள்.
அது மிகவும் இலகுவான விடையம். அனேகமாக வார இறுதி நாட்களில் கூட்டம் ஒன்று நிச்சயம் இருக்கும். பார்வையாளனாக இல்லாவிட்டால் கட்டுரை படிப்பவனான சந்திரன் கலந்து கொள்வான். மாலதிக்கும் பழகிப் போய்விட்டது. அதனால் அவள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இருவருமாக வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, சந்திரன் கூட்டத்திற்குச் செல்ல மாலதி வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்ப்பாள், நண்பிகளுடன் வெளியில் செல்வாள், ஜிம்மிற்குப் போவாள், ஒன்றுமில்லையென்றால் ஆசைதீர நித்திரை கொள்வாள். இப்பிடி ஏதாவது தனக்குப் பிடித்ததைச் செய்வாள். சந்திரன் கூட்டம் முடிய, நண்பர்களுடன் பிரத்தியேகக் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு போதையோடு வீட்டிற்குத் தாமதமாக வந்தால்க் கூட அவள் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. ஒன்றில் மட்டும் மாலதியின் கவனமிருந்தது. குடித்திருந்தால் சந்திரன் கார் ஓட்டக்கூடாது. அதன் காரணமாக அவன் நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது தங்கிவிட்டுக் காலை வந்தால்க் கூட அதுபற்றி அவள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
இதுநாள் வரைக்கும் சந்திரன் சாட்டிற்கு மாலதியைக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்திருக்கின்றான். அவள் தனக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை என்று மறுக்கும் போது, அவளைத் தனியாக வீட்டில் விட்டிற்று செல்லத் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லுவான். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்கள் தமது நண்பர்களுடன் சுற்றித்திரிகின்றார்கள், தானும் சென்று விட்டால் மாலதி தனிமையை உணரலாம் என்ற அச்சம் சந்திரனுக்கு. தான் நண்பிகளுடன், அல்லது தனது சொந்தங்களுடன் வெளியில் செல்லத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி மாலதி தட்டிக்கழிக்கும் போது சந்திரனுக்கு மனதுக்குள் சந்தோஷமாக இருக்கும். மாலதி கூட்டத்திற்கு வந்தால், கூட்டம் முடிய நண்பர்களுடனான பிரத்தியேகக் கூட்டத்திற்குச் செல்ல அவள் நிச்சயம் மறுப்பாள். அதன் காரணமாகத் தானும் வீட்டிற்கு செல்ல நேரும். கிழமையில் ஐந்து நாட்களும் வேலை வேலையென்று ஓடிவிட்டு, இப்படிச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் கொஞ்சம் மனதுக்குச் சந்தோஷமாக நண்பர்களுடன் கழிக்க முடிகின்றது. அதுவும் பறிபோய்விட்டால் வாழ்ந்து என்ன பயன் என்று கூட அவன் நினைத்திருக்கின்றான். அந்த வகையில், அவன் மிகவும் அதிஷ்டசாலி. பல ஆண்களுக்கு வார இறுதி நாட்களில் கூட்டங்களுக்குச் செல்வதால் வீட்டில் பிரச்சனை என்று கேள்விப்பட்டிருக்கின்றான். மாலதி அவனை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றாள் என்று அவன் பெருமைப்பட்டுக்கொள்வான்.
ஆனால் தற்போது கூட்டங்களுக்கு பெண்களின் வருகை சிறிது அதிகரித்திருப்பதும், பெண்கள் கூட்டங்களில் பேசும் போது, ”பெண்கள் வெளியே வரவேண்டும் உலக விடையங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஆண்கள் ஒருவரும் தமது மனைவியரையோ மகளையோ கூட்டங்களுக்கு அழைத்து வருவதாகத் தெரியவில்லை” என்று பேசத் தொடங்கியபோது சந்திரன் சங்கடப்படத் தொடங்கினான். தான் மாலதியை எத்தனை தடவைகள் அழைத்திருக்கின்றேன், அவள்தான் வர மறுக்கின்றாள் என்று இந்தப் பெண்களிடம் சொல்லவா முடியும். இருப்பினும் கொஞ்சம் தெரிந்த பெண்களுக்கு அவன் சொல்லியும் இருக்கின்றான். அப்போது அந்தப் பெண்கள் சிரித்த படியே, ’உதைத்தான் எல்லாரும் சாட்டாச் சொல்லுறீங்கள்” என்ற போது அவன் சுருங்கிப் போய்விட்டான். அதன்பி்ன்னர் எப்படியாகவது மாலதியை இனிமேல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அவளையும் நாலு நல்ல புத்தகங்கள் வாசிக்கப் பழக்க வேண்டும், அரசியல் கதைக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். அதன் முதற்கட்டமாகத்தான் அவளோடு வாதிட்டுப் பிடிவாதமாக அவளைச் சம்மதிக்க வைத்துள்ளான்.

மாலதி சீலை உடுத்தச் சொன்னான் சந்திரன். தானே அறைக்குள் வந்து, ”பொறும் நான் செலெட் பண்ணித்தாறன்” என்று விட்டு அவளது சீலைகளைக் கிளறத் தொடங்கினான். இவ்வளவு காலமாக எத்தனை இடங்களுக்கு ஒன்றாகப் போய் வருகின்றார்கள், ஆனால் ஒருநாள் கூட அவன் அவளுக்கான உடையைத் தெரிவுசெய்து கொடுத்ததில்லை. மாலதி கொண்டாட்டங்களுக்காக கொஞ்சம் கலர்புல் சீலைகளை ஒருபுறமும், சோகமான நிகழ்வுகளுக்குச் செல்வதற்கென கொஞ்சம் டல்லான நிறத்தில் உள்ள சீலைகளை வேறொரு புறமும் அலுமாரிக்குள் தொங்க வைத்திருந்தாள். வேலைக்கான உடுப்புக்கள் வேறு. சந்திரன் டல்லான சீலைகள் பக்கம் விரலை ஓடவிட்டு “இதில் எதையாவது ஒன்றைக் கட்டும், நேரம் போகுது கெதியா வெளிக்கிட்டுக்கொண்டு வாரும்” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான். மாலதிக்கு கொஞ்சம் குழப்பமாகவுமிருந்தது. இலக்கிய நிகழ்வென்பது சோகமான நிகழ்வா என்ன? இதற்கு எதற்குச் சீலை கட்ட வேண்டும் என்பதே அவளுக்குப் புரியவில்லை, அத்தோடு சந்திரனை இந்த அளவிற்கு ரென்சனாக அவள் ஒரு போதும் கண்டதுமில்லை.
பலவாறு மனதுக்குள் கற்பனைகள் ஓட, மாலதி வெளிக்கிட்டுக்கொண்டு வெளியில் வந்தாள். சந்திரனின் முகத்தில் மாலதியின் தோற்றத்தில் திருப்தி தெரிந்தது காரை ஒட்டிக்கொண்டிருக்கும் போது சந்திரன் இடையிடையே பெருமூச்சு விடுவதும், மாலதியைத் திரும்பிப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரிப்பதுமான இருந்தான். மாலதி தனது பொறுமையை இழந்து ”என்ன சந்திரன் ஏதாவது பிரச்சனையா? நீங்கள் சரியான ரென்சனாக இருக்கிறமாதிரி இருக்கு?’ என்றாள். சந்திரன் அதற்கும் ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்துவிட்டு ’இல்லை மாலதி, தெரியாதே எங்கட இலக்கியவட்டம் சரியான ஒரு கொசிப்புக் கூட்டம், இனி உம்மைக் கூட்டத்தில கண்ட உடன ஏதாவது விசர் கேள்விகள் கேப்பீனம், நீரும் அதுக்கு அசட்டுத் தனமாப் பதில் ஏதும் சொல்லாமல் இருக்க வேணும், அதுதான் எனக்கு ஒரே ரென்சனா இருக்கு” என்றான். மாலதிக்கு முகத்தில் யாரோ ஓங்கிக் குத்தியது போலிந்தது. கோபம் தலைக்கு மேலே ஏறியது. உடனேயே காரை நிப்பாட்டுங்கள் நான் இறங்கிக் கொள்ளுறன், நீ்ங்களும் உங்கட இலக்கியக் கூட்டமும் என்றுவிட்டு நடந்தே வீட்டிற்குப் போகலாம் போலிந்தது, ஆனால் அவள் அப்படிச் செய்தால் அன்று அவர்கள் நாள் மிகவும் மோசமாகப் போய்விடும் என்று கவலை ஏற்பட, எந்தக் கோவத்தையும் தன்னால் கட்டுப்படுத்தி ஆசுவாசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தானும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுவிட்டு, ”அப்பிடி என்னதான் கேக்கப் போகீனம், நானென்ன படிக்காத முட்டளே, நீங்கள் கவலைப் படேதேங்கோ நான் பாத்துக்கொள்ளுறன்” என்றாள்.
சந்திரன் தர்மசங்கடமாக நெளிந்த படியே, ”கிட்டத்தட்ட என்னமாதிரிக் கேள்விகள் வரும் எண்டு எனக்குத் தெரியும், அதுக்கு என்ன மாதிரிப் பதில் சொல்ல வேணும் எண்டு நான் சொல்லித்தாறன் அதுக்கேற்ற மாதிரி நீர் கொஞ்சம் அஜெட்ஸ் பண்ணிச் சொன்னாச் சரி, சரியே” என்றான். இப்போது மாலதிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தன்னை எதற்காக வலுக்கட்டாயமாக இந்தக் கூட்டத்திற்கு இழுத்துப் போகின்றான் என்பது புரியாமலிருந்தது. ’சரி சொல்லித் தாங்கோ” என்றாள்.
சந்திரன் சந்தோஷமாகச் சிரித்த படியே கார் சீட்டில் கொஞ்சம் நிமிர்ந்து இருந்து கொண்டு, ”கட்டாயம் உங்கட பொழுது போக்கு என்னெண்ட கேள்வி வரும்” என்றான். மாலதி ”இது என்ன பெரிய கேள்வி, இதுக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியாதே?” என்றாள் சிரித்த படியே. சந்திரன் பொறுமை இழந்தவன் போல் தலையை பெரிதாக அங்கையும் இங்கையும் ஆட்டி, ”கேள்வி ஒன்றும் புதுசில்லை ஆனால் நீர் பதிலைத்தான் நான் சொல்லுற மாதிரிச் சொல்ல வேணும்” என்றான். மாலதி யோசித்துவிட்டுச் ”சொல்லுங்கோ?” என்றாள்.
”சரி சொல்லும் உம்மட பொழுது போக்கு என்ன?’ என்றான். மாலதி முகத்தைச் சுளித்தபடியே ”நீங்கள் இன்னும் பதிலே சொல்லித் தரேலை” என்றாள். சந்திரன் சினத்தோடு நேரத்தைப் பார்த்துவிட்டு ”இல்லையப்பா உண்மையாவே உம்மட பொழுதுபோக்கு என்னெண்டு சொல்லும்” என்றான். ஓ அதுவா என்பது போல் தலையை ஆட்டிய மாலதி சிறிது நேரம் யோசித்துவிட்டு ”ரிவி பார்க்கிறது, படம் பார்க்கிறது, ப்ரென்ஸோட வெளியில போறது, புத்தகங்கள் வாசிக்கிறது, நித்திரை கொள்ளுறது. பூக்கண்டு வளர்க்கிறது” என்றாள். சந்திரன் திருப்தியாக் தலையை ஆட்டிவிட்டு ”இந்தப் பதில் எல்லாம் சரியா இருக்கு ஆனால் அவங்களிட்ட இருந்து வாற அடுத்த கேள்விக்குத்தான் நான்  சொல்லுற மாதிரி நீர் பதில் சொல்ல வேணும்” என்றான் சிறிது பூடகமாக. மாலதிக்கு இப்போது இந்த விளையாட்டுப் பிடித்திருந்தது. ”சரி சொல்லுங்கோ” என்றாள். சந்திரன் ”சரி முதல்ல நீர் சொல்லும், நீர் என்னமாதிரிப் புத்தகங்கள் வாசிக்கிறனீர்?“ என்றான். ”ஏன் உங்களுக்குத் தெரியாதே? நீங்கள் தானே வாங்கிக் கொண்டுவந்து தாறனீங்கள், குமுதம், ஆனந்தவிகடன் தான்” என்றாள் மாலதி. ”ஆனால் நீர் அதைச் சொல்லக் கூடாது, நீர் நான் வாசிப்பன் காலம், காலச்சுவடு, உயிர்மை இப்பிடிப் புத்தகங்களைத் தான் சொல்ல வேணும்” என்ற போது கூட்டம் நடக்கும் இடத்திற்கு அண்மையில் வந்திருந்தார்கள். கார் பார்க் செய்யும் இடத்தில் கூட்டத்திற்கு வரும் யாராவது வந்து தன்னைக் கண்டால் சிக்கலாகிவிடும் என்று நினைத்த சந்திரன் மீண்டும் காரைத் திருப்பி ஒரு கோப்பிக் கடையின் முன்னால் நிறுத்தினான். மாலதி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ”நேரம் போட்டுது கெதியா வெளிக்கிடும் எண்டு என்னை அரியண்டப்படுத்திப் போட்டு, இப்ப என்னத்துக்கு இஞ்ச நிப்பாட்டுறீங்கள்?” என்றாள். அவள் கேள்வியை அலட்சியப்படுத்திய சந்திரன் ”சரி சொல்லும் நீர் என்ன புத்தகங்கள் வாசிக்கிறனீர் எண்டு சொல்லப் போறீர்?“ என்றான். மாலதி கோவத்தோடு ”அப்ப என்ன என்னைப் பொய் சொல்லச் சொல்லிச் சொல்லுறீங்களே? நான் உங்கட புத்தகங்கள் ஒண்டையும் கையால கூடத் தொட்டுப் பாத்ததில்லை, பிறகேன் நான் பொய் சொல்ல வேணும்,” என்றாள். அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப் பட்டது சந்திரனுக்கு. இந்தப் புத்தகங்களைச் சொன்னால் அதில உங்களுக்குப் பிடிச்சது எந்தக் கதை, கட்டுரை என்று வேண்டுமென்றே அடுத்த கேள்வியையும் யாராவது போடக்கூடும்.
சந்திரன் சிறிது நேரம் மௌனித்திருந்தான். கோப்பிக் கடைக்குள் பலர் போவதும் வருவதுமாக இருந்தார்கள். சந்திரனின் வீட்டிற்கு எதிர்புறம் ஒரு கோப்பிக் கடையிருந்தது. அவனின் பக்கத்துவீட்டுக்காறி, வேலைக்குப் போவதில்லை ஆனால் ஒவ்வொருநாளும் விடிய வெள்ளணை கோப்பிக் கடைக்குப் போய்த்தான் கோப்பி வாங்கிக் குடிப்பாள். வேலைக்கும் போகும் போது காரை ஸ்டாட் பண்ணிவிட்டுச் சில நிமிடங்கள் அவன் காருக்குள் இருப்பான், அப்போது கண்டிருக்கின்றான். ”என்ன பொம்பிளை இவள், கோப்பியை வீட்டில போட்டுக் குடிக்கக் கூட இவளுக்குப் பஞ்சியா?, புருஷன் வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டுவருவதை இப்படிக் கோப்பி குடித்தே நாசமாக்குகின்றாளே” என்று அவன் நினைப்பதுண்டு.
சந்திரன் மாலதியைத் திரும்பிப் பார்த்தான், அவள் எந்த சலனமுமில்லைாமல் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். தலைமயிரின் சிறுபகுதி அவள் கன்னத்தில் சரிந்து விழுந்து கிடந்தது. சிறிய பொட்டும், தோடும் அவளை அழகு படுத்தின. மாலதி கைநிறையச் சம்பளம் வாங்கும் உத்தியோகத்தவள். கனடாவிற்கு ஏற்ற நாகரீகம் தெரிந்தவள். வீட்டுக் கணக்குவழக்கு அவள் கையில்தான் இருந்தது. தனக்கு மாலதி மனைவியாகக் கிடைத்ததில் சந்திரனுக்கு மிகவும் சந்தோஷமே. சந்திரன் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்.

கோடை முடிந்து இனி இலையுதிர்காலம் வந்து பின்னர் குளிரும் தொடங்கிவிடும், எது எப்படியிருந்தாலும் கனடாவில் கூட்டங்கள் நடப்பது மட்டும் தடைப்படாது. வேண்டாத வில்லங்கத்தை விலைக்கு வாங்கிவிட்டேனோ? பேசாமல் மாலதியை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வரலாம் என்று கூட அவன் மனம் சொன்னது. கூட்டத்திற்கு வருபவர்களில் பலரைச் சமாளித்து விடலாம் ஆனால், சுதாகரனையும் அவனது மனைவி வதனியையும்தான் சமாளிப்பது கஷ்டம். இருவரும் சோடியாகத்தான் எல்லாக் கூட்டத்திற்கும் வருவார்கள்.  சுதாகரன் மட்டுமல்ல, வதனி கூட கூட்டங்களில் பேசுவாள். அவளது பேச்சுத் திறன் கண்டு சந்திரனே அங்கலாய்த்திருக்கின்றான். ஒரு பெண்ணிற்கு இந்த அளவிற்கு இலக்கியத்திறனும், பேச்சுத்திறனும் இருக்கமுடியுமா என்பதில் அவனுக்குப் பலத்த சந்தேகமிருந்தது. நண்பர்களோடு உரையாடும் போது வதனிக்குப் பேச்சுத் திறன் இருக்கின்றது, ஆனால் கட்டுரையை சுதாகரன்தான் எழுதிக்கொடுத்திருப்பான் என்று சிரித்துக்கொண்டே கூறியுமிருக்கின்றான். மாலதி சந்திரனைத் திரும்பிப் பார்த்தாள், பின்னர் ”என்னப்பா யோசிக்கிறீங்கள்?, நேரம் போகேலையே?” என்றாள். சந்திரன் மௌனமாகக் காரை ஓட்டினான்.

மண்டபத்திற்குள் நுழைந்த போது வழமையான நபர்கள்தான் வெளியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் கூட்டம் ஆரம்பிக்கவில்லை, வழமைபோல் ”சற்று“த் தாமதமாகத்தான் தொடங்க உள்ளது போலும். சந்திரனைக் கண்டதும், சிரித்தபடி வந்து கைகொடுத்த பல நண்பர்கள், மாலதிக்கும் கை கொடுத்தார்கள். மாலதி அவர்களை சுகம் விசாரித்துக் கைகொடுத்தாள். சுதாகரனும், வதனியும் சந்திரனைக் கண்டதும் வந்து கதைத்தார்கள், வதனி பலநாட்கள் பழகியது போல் சிரித்த படியே மாலதியை அழைத்துக்கொண்டு போனாள். இன்று சுதாகரன் உரையாற்ற இருக்கின்றான், வதனி மாலதிக்குத் தனது கணவனின் புகழ் பாடப் போகின்றாள் போலும். “ச்சீ இன்றைக்கு என்னுடைய உரையுமிருந்திருந்தால் மாலதிக்கும் பெருமையாக இருந்திருக்கும்” தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவன்.
மாலதியும், வதனியும் வேறு சில நண்பர்களும் உரையாடிக்கொண்டிருப்பதை சந்திரன் துாரத்திலிருந்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். என்ன கதைக்கின்றார்கள். வதனி பெரிதாகச் சிரிக்கின்றாளே, மாலதி ஏதாவது அசட்டுத்தனமாகக் கதைத்து வைத்தாளோ? சந்திரனுக்கு நண்பர்களுடன் தொடர்ந்தும் உரையாடிக்கொண்டிருக்க முடியவில்லை. மாலதியின் பக்கத்தில் போய், கூட்டம் தொடங்கப் போகின்றது உள்ளே போவோம் என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டான்.
வழமையைவிட மண்டபம் நிறைந்த கூட்டமாகவிருந்தது. பல புதிய முகங்கள். நாவலாசிரியரின் உறவினர்களும், நண்பர்களும் திருமணவீட்டிற்குச் செல்வது போல் அலங்காரங்களுடனிருந்தார்கள்.
சந்திரனுக்கு மனம் எதிலும் ஒப்பவில்லை. வதனி, மாலதியுடன் என்ன கதைத்திருப்பாள், மற்றவர்கள் அவளை என்ன கேட்டார்கள், மாலதி என்ன பதிலளித்திருப்பாள் என்பதிலேயே அவன் மனம் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. அவர்களுக்கு அவருகில் பலர் இருந்ததால் அவனுக்கு மாலதியிடம் எதையும் கேட்டு அறிய முடியவில்லை. அன்றைய கூட்டதில் எவர் உரையும் சந்திரனின் காதில் விழவில்லை. கூட்டம் முடிந்தவுடன் நேராக வீட்டிற்குத்தான் செல்லவேண்டும் வழியில் மாலதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் அவனுக்கு இனிமேல் நிம்மதியாக இருக்கும்.

கூட்டம் முடிந்ததும்  நாவல் ஒன்றை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டான். ”எங்கள் வீட்டிற்கு வாருங்கள், கோப்பிக் கடைக்குப் போவோம், எங்காவது போய்ச் சாப்பிட்டுவிட்டுப் போவோம்” என்று அழைத்த பலருக்கும், வேறு ஒரு இடத்திற்கு அவசரமாகப் போக வேண்டும் என்று கூறிவிட்டுக் காரை நோக்கி சந்திரன் நடந்தது மாலதிக்கு அதிசயமாகவிருந்தது.
இலக்கியக் கூட்டம் அவளுக்கு சலிப்பாகவேயிருந்தது. வதனி தங்கள் வீட்டிற்கு இரவுக்குச் சாப்பிட அழைத்திருந்தாள், அவர்கள் வீட்டிற்குப் போய் சில மணிநேரங்கள் பிறருடன் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குப் போனாலாவது இன்று மினக்கெட்டு சேலைகட்டி வெளியில் போனதற்குப் பிரயோசமான இருந்திருக்கும். எப்போதும் கூட்டம் முடிந்ததும், எங்காவது போய்விட்டு மிகவும் தாமதித்து வீட்டிற்கு வருவதுதான் சந்திரனின் வழக்கம், ஆனால் இன்று ஏன் இப்படிப் பொய் சொல்லிவிட்டு அவசரமாக வீட்டிற்குக் கிளம்பிவிட்டான்?. ”அப்பா, வதனி தங்கட வீட்டை வரச்சொல்லிக் கேட்டவ நான் ஓம் எண்டு”, அவள் முடிக்கவில்லை, ”அதெல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு கட்டுரை எழுதி முடிக்கக் கிடக்கு” என்று விட்டுக் காருக்குள் ஏறி இருந்துவிட்டான். ஒன்றும் சொல்லாமல் மாலதியும் ஏறிக்கொண்டாள். போகும் வழியில் ”வதனி உம்மோட என்ன கதைச்ச?” என்று மட்டும் கேட்டான். ”ஒண்டுமில்லை, சும்மா கதைச்சனாங்கள்” என்ற மாலதியின் பதில் அவனுக்குக் கோபத்தைத் தந்தாலும் அவனால் தொடர்ந்து வேறு எதையும் கேட்க முடியவில்லை.
கோடை இறுதி மாதத்தில் மாலதியின் வேலைத்தளத்தில் ஒரு கோடைக் கொண்டாட்ட நிகழ்வு நடப்பது வழக்கம். வருடாவருடம் அவள் போய்வருவாள். பலமுறை சந்திரனை அழைத்தும், தனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது என்று அவன் தட்டிக்கழித்து விடுவான். ஆனால் இந்தவருடம் அவனைத் தட்டிக்கழிக்க மாலதி விடவில்லை. நான் உங்களுடன் இலக்கியக் கூட்டதிற்கு வந்தது போல் நீங்களும் என்னுடன் என்னுடைய வேலைக் கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவனை அழைத்துப் போனாள். இந்த வருடம் சந்திரனையும் எப்படியும் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்று நினைத்துத்தான் அவள் அவனுடன் இலக்கியக் கூட்டத்திற்குச் செல்லவே சம்மதித்தாள். அதற்குப் பிரத்தியேகமான காரணம் ஒன்றுமிருந்தது. அவள் எதைப் பற்றியும் சந்திரனுக்குச் சொல்லவில்லை. அது அவனுக்கு சேப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்றே அவள் விரும்பினாள்.
சந்திரனுக்குத் தொடக்கத்திலிருந்தே எதுவும் பிடிக்கவில்லை. முதலாவது அவனுக்குப் புதிதாக ஒரு ”சூட்” வாங்கி அவனை அணிய வைத்திருந்தாள். பத்தாததற்கு ”ரை” வேறு. ”இடதுசாரியாக வாழுற என்னை, என்ர கொள்கைக்கு எதிராக உடையணிய வைக்கின்றீர், நண்பர்கள் யாராவது கண்டால் நான் என்ன பதில் சொல்லுறது?” என்றபடியே முதல்முதலாகத் தனது தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்து உள்ளூறப்  பெருமைப்பட்டுக்கொண்டான். ”நீங்கள் என்ன வேட்டியும், சால்வையுமான போடுறனீங்கள்,, வழமையாப் போடுற பான்ஸ்சோட கோட்டும் போட்டு, ரையும் கட்டியிருக்கிறீங்கள்? எதுக்கு சும்மா பந்தா” என்றாள் மாலதி. மாலதி கறுப்பு நிறத்தில் கையில்லாத நீண்ட சட்டையும், குதியுயர்ந்த சப்பாத்தும் அணிந்திருந்தாள். மாலதி வேலைக்குச் செல்லும் போது மிகவும் நாகரீகமாகச் செல்பவள். அதில் சந்திரனுக்கு உள்ளூறப் பெருமையிருந்தாலும், தனது கொள்கைக்கு அது ஒவ்வாதது, தனது இலக்கிய நண்பர்கள் மாலதியின் நாகரீகத்தைக் கண்டால் தன்னைத் தவறாக எடைபோட்டு விடுவார்கள் என்ற அச்சம் அவனுக்கு எப்போதுமே இருக்கும். இருந்தாலும் ரொரொன்டோவின் மையத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இப்படித்தான் உடையணிய வேண்டும் யாராவது கேட்டால் சொல்லலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்வான்.

சந்திரனிற்கு நிரந்தர வேலையில்லை, ”பீட்சா” கடை ஒன்றில் பகுதி நேரம், ”காஸ் ஸ்ரேசன்” ஒன்றில் பகுதி நேரம் என்று தனது உழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கின்றான். இதனால் அவனுக்கு இலக்கிய சேவை செய்யப் போதுமான நேரம் கிடைத்தது. ஆனால் மாலதி பல வருடங்களாக ரொறொன்டோவின் மத்தியிலிருக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்க்கின்றாள். சந்திரனோடு ஒப்பிடும் போது அவளது வருமானம் மூன்று மடங்கு அதிகம். அவளது நிறுவனத்தில் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் சந்திரனும், பிள்ளைகளும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். கனடாவில் பெண்களுக்கு வேலை எடுப்பது மிகவும் சுலபம், ஆண்கள் படித்திருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பதில்லை. இப்படிக் காரணத்தைச் சொல்லியே சந்திரனும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றான்.
ரொரொன்டோவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும், அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விலை உயர்ந்த உணவகம் ஒன்றில் அன்று மாலதியின் வேலைத்தள ஊழியர்களுக்கு விருந்துபசாரம் இடம்பெற்றது. காரில் போய் இறங்கி மண்டபத்திற்குள் நுழைந்த போது சந்திரனைத் தாழ்வுமனப்பான்னை கௌவிக்கொண்டது. மாலதி நுனிநாக்கால் ஆங்கிலம் கதைப்பவள். இலகுவாக வேற்றுமொழிக்காறருடன் பழகக் கூடியவள், சந்திரனின் பழக்கம்  தமிழர்களோடு நின்றுவிட்ட ஒன்று. மாலதி சந்திரனைத் தனது சக ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். சந்தரனின் முகத்தில் அசடு வழந்தது. சிரித்துச் சிரித்து ஒருசில வார்த்தைகளோடு சமாளித்து எங்காவது தமிழ் முகம் தெரிகிறதா என்று தேடினான். மாலதி அவனை அழைத்துச் சென்று சர்மிளா என்ற  இந்தியப் பெண் ஒருத்தியை அறிமுகம் செய்து வைத்தாள். சர்மிளா தனது கணவன் சிறீதாஸ்ஓடு வந்திருந்தாள். அவர்கள் மலையாளிகள். சிறீதாஸ்இன் ஆங்கிலமும் அரைகுறையாக இருந்தது சந்திரனுக்குத் திருப்தியாக இருந்தது அவர்களோடே அவனும் சந்தோஷமாக இருந்து கொண்டான். அன்றைய கொண்டாட்டம் முடியும் வரை சிறீதாஸஉடன்  உரையாடுவதிலேயே சந்திரனின் பொழுது கழிந்தது. மாலதி எங்கே என்ன செய்கின்றாள் என்ற ஒன்றையும் அவன் கவனிக்கவில்லை.

மாலதி கையில் ஒரு விருதுடன் வந்தாள். முகத்தில் பெருமையும் பூரிப்பும் நிறம்பிக் கிடந்தது. அவளைப்  பாராட்டி அவளது நிறுவனத்தின் தலைவர் அவளுக்கு விருதை வழங்கும் போது சந்திரன் மிகவும் பெருமைப் பட்டிருப்பான் என்று அவள் நம்பினாள். ”மன்னிக்க வேண்டும் நான் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன்” என்றாள் சிரித்த படியே. சிறீதாஸ் மாலதியைப் பார்த்து ”என்ன உங்கள் கணவர் ஒரு கவிஞராமே, பல கட்டுரைகளைக் கூட எழுதியிருக்கின்றாராம், கவிதைத் தொகுப்புக் கூட வெளிவந்திருக்கின்றதாம், இப்படி ஒரு திறமையான கணவன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்குத் தன்ர கவிதைகள் சிலவற்றைக் கூடத் தமிழில் சொல்லிக் காட்டினார். புரியாவிட்டாலும் நன்றாக இருந்தது” என்றார். மாலதி ”ஓம்” என்பது போல தலையாட்டினாள்.
சாப்பாட்டு நேரம். சாப்பிட்டார்கள். சந்திரன் அரைகுறை ஆங்கிலத்தில் தனது கவிதைகள், கட்டுரைகள் பற்றி அந்த மேசையில் இருந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான். மாலதி மௌனமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவளது விருது கேட்பாரற்று மேசையில் ஒரு மூலையில் கிடந்தது.


நன்றி - அம்ருதா ஜனவரி 2016