Saturday, January 25, 2020

அஞ்சனக்கல்


கஸ்துாரியுடனான என்னுடைய சந்திப்பை எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றாக என்னால் கடந்து போக முடியவில்லை. இத்தனை வருடங்களாக நான் காவிக்கொண்டலைவதை எதிர்கொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்காக எவ்வளது துாரம் என்னைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றேன் என்று அறிவதற்காக கொடுக்கப்பட்ட சவாலாகத்தான் பார்க்கின்றேன்.  
கஸ்துாரியுடனான சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. கிளிநொச்சியில் கவிஞர் கருணாகரன் வீட்டில் சிலநாட்கள் தங்கியிருந்த போது, கவிஞரின் இலக்கிய நண்பர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு நண்பர் என்னிடம் 
“நாளைக்குப் பின்னேரம் ரெடியா இருங்கோ, நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போய் ஒருவரை அறிமுகப்படுத்தப் போகின்றேன்”
நான் கவிஞரைப் பார்த்தேன். அவர் போய்விட்டு வாருங்கள் என்பது போல் புன்னகைத்தார்.
அடுத்தநாள் நல்ல மழை. முன் முற்றத்தில் நின்ற தென்னை ஈரத்தில் தோய்ந்து ஓலைகளின் இடைவெளிக்குள்ளால் என் முகத்தில்  சூரிய வெளிச்சத்தை அடித்துக்கொண்டிருந்தது. முக்கனி மரங்களும் முற்றத்தில் நனைந்து நின்றன. மழையில் நனைந்த காகம் ஒன்று கரைந்த படியே மாமரத்திலிருந்து பறந்து போனது. மண்புழுக்கள், பூச்சிகள் எல்லாமே மனதுக்குள் எதையோ கிளறிவிட்டுக்கொண்டிருந்தன. நான் இழந்தவற்றைச் சுற்றி என் மனம் ஓடிக்கொண்டிருந்தது. மழை, பனி, வெய்யில் எதையுமே கனடாவில் ரசிக்க முடிவதில்லை.
மழைவிட்டுச் சிறிது நேரத்தில் கவிஞரின் நண்பர் கோபி வந்தார். நாற்பது வயதிருக்கும்  சொன்னது போலவே வந்திருந்தார். என்னைப் பார்த்துப் புன்னகைத்து
“ரெடியா?”
ஒரு ஹெல்மெட்டை என்னிடம் நீட்டினார்.
மழைநீர் வடிந்து ஓடிக்கொண்டிருந்த குன்றும், குழியுமாக பாதையில்  மோட்டர் சைக்கிளில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதிகம் அறிமுகமில்லாத ஆண். பாதுகாப்பிற்கு எங்கே பிடிப்பது என்று தடுமாறி, பின்னர் அவர் தோளைப் பிடித்துக் கொண்டேன். எங்கே போகின்றோம், யாரைச் சந்திக்கப் போகின்றோம் என்று நானும் கோபியிடம் கேட்கவில்லை, அவரும் எனக்குச் சொல்லவில்லை.
மருதநிலப்பரப்பு என் கண்களுக்குள்ளும், மனதுக்குள்ளும் சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கிளிநொச்சி இலங்கைத் தமிழர்களுக்கு வலி நிறைந்த நிலப்பரப்பின் அடையாளமாக மாறிவிட்டது. அதன் குளிர்மையையும், செழிப்பையும் இரசிப்பது கூடக் குற்றமோ என்ற கேள்வி எனக்குள் மேவியது. அத்தனை வடு அந்த நிலத்திற்கு.
சுற்றி மதில் போடப்பட்ட சிறிய கல்வீடு,  இரத்தின நீலத்தில் அமைதியாக இருந்தது.
கோபி  “இது கஸ்துாரி” என்று ஒரு இளம் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து விட்டு
“கதைத்துக் கொண்டிருங்கோ நான் இப்ப வாறன்” என்று போய் விட்டார்.
கஸ்துாரி என்னை சினேகிதமாகப் பார்த்துச் சிரித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். கோபியின் மனைவியா இவள்?
ஏணைக்குள் ஒரு குழந்தை நித்திரையாக இருந்தது.
“கோபி என்னைப் பற்றி உங்களுக்கு ஒண்டும் சொல்லேலைப் போல”
நான் புன்னதைத்தேன்.
“இருங்கோ தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்” அவள் போக
நான் எழுந்து குசியின் வாசல் புறம் போய் நின்று கொண்டேன். அவள் உடல்மொழி என் இளம்வயதை எனக்கு நினைவூட்டியது.  
குழந்தை சிணுங்கியது, அவள் ஏணையை ஆட்டிவிட திரும்பவும் குழந்தை நித்திரையாகிப் போனது.
இருவரும் வீட்டின் முன் விறாந்தையில் வந்து இருந்து கொண்டோம்.
“நீங்கள் பேப்பரில வேலை செய்யிறீங்களா?” என்றாள்
”இல்லை, நான் கனடாவில இருந்து ஒரு இலக்கியச் சந்திப்புக்காக வந்தனான்”
“ஓ, அப்ப என்னை இன்ரவியூ செய்ய வரேலையா?” என்றாள்
நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
“பரவாயில்லை, கோபி கூட்டிக்கொண்டு வந்தவரெண்டால், நீங்கள் விசேசமானவராத்தான் இருப்பீங்கள், கனடாவில பொம்பிளைகளுக்காக  நிறம்ப வேலை செய்திருக்கிறீங்கள் எண்டு  சொன்னவர்” என்றாள்.
“ஐயேயோ என்ன இது புதுக் கதையாயிருக்கு அப்பிடியொண்டுமில்லை, சும்மா ஒரு பொம்பிளையா என்ர அனுபவங்களை சிறுகதைகளா எழுதியிருக்கிறன் அவ்வளவுதான்” என்றேன்.
கஸ்துாரி சிரித்தாள். மிக அழகாக இருந்தாள். அவளிடம் நான் கதைக்க வேண்டியது நிறையவே இருக்கின்றது என்று மனம் சொன்னது.
“நீங்கள் பயந்து, பயந்து கதைக்கிறீங்கள் அக்கா, கனடாவில இருந்து வந்திருக்கிறீங்கள் பிறகு ஏன் பயப்படுறீங்கள்?” என்றாள்
நான் சிரித்தேன். பின்னர்
“இல்லை எனக்கு கோபியையும், பெரிசாத் தெரியாது, உங்களையும் தெரியாது அதுதான்..”
”கோபி ஒரு லுாரு, என்னைப் பற்றி ஒண்டுமே சொல்லாமல் கொண்டு வந்து உங்களை இஞ்ச விட்டிட்டுப் போயிட்டான், ஆனால் அவனுக்கு உங்களில நல்ல மரியாதை அதுதான்” என்றாள்
நான் சிரித்தேன்.
“என்ர பிரச்சனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்களோ தெரியாது, ஒரு வருஷத்துக்கு முதல்  பேஸ் புக்கில எல்லாம் பெரிசா அடிபட்டது” என்றாள்.
அவள் தொடர்வதற்கு நேரம் கொடுத்து நான் மௌனமானேன்.
அவள் எழுந்து உள்ளே போய் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து, திறந்து காட்டினாள். உள்ளே படங்கள், பத்திரிகைத் துண்டுகள், கடிதங்கள். படங்களை எடுத்து என்னிடம் நீட்டினாள். கஸ்துாரியின் கலியாணப் படங்கள். கணவன் கோபி இல்லை. அவள் விரல் கணவனின் முகத்தை வருடியது.
“இது வரதன், என்ர கஸ்பெண்ட்” என்றாள்.
”இப்ப எங்கை?”
“உயிரோட இல்லை, கொண்டிட்டான்கள்”
“யார் ஆமியா?”
இல்லையென்று தலையை ஆட்டினாள்.
“இயக்கமா?”
புன்னகைத்து இல்லையென்று தலையாட்டிவிட்டு, ”என்ர வீட்டுக்காறர்” என்றாள்.
நான் மௌனமானேன்.
“சாதி மாறிக்கட்டினால் இந்தியாவிலதான் கொலை செய்வார்கள் எண்டு கேள்விப்பட்டிருப்பீங்கள், ஆனால் ரகசியமா இஞ்சையும் அது நடக்குது, அக்ஸ்சிடென்ட் மாதிரி செட்டப் செய்து எல்லாத்தையும் முடிச்சிட்டீனம்” என்றாள்.
குழந்தை சிணுங்கியது.
எனக்கு இளவரசன், திவ்யாவின் முகங்கள் கண்முன்னே தோன்றின. கஸ்துாரி, வரதன் பெயர்கள் மறைக்கப்பட்டுவிட்டன.
“அப்ப நான் மூண்டு மாதம் ப்ரெக்னெண்ட், வரதன் சாவுக்குப் பிறகு வீட்டை கூட்டிக்கொண்டு போய் பிள்ளையைக் கலைக்கச் சொல்லீச்சினம், நான் கோபிக்குப் போண் பண்ண” சிறிது மௌனத்தின் பின்னர் , ”கோபி வரதன்ர நல்ல ப்ரெண்ட், அவர் என்னை கிளிநொச்சி கூட்டிக்கொண்டு வந்து வேலையையும் எடுத்துத் தந்து நல்ல உதவி”
“அப்ப நீங்கள் கிளிநொச்சி இல்லையா?”
”யாழ்ப்பாணம்”
என் மீது சுமத்தப்படும் குற்றம் போல் நான் சிறிது விறைத்து, கால்களை மாற்றிப்போட்டு இருந்து கொண்டேன்.
நனைந்த கோழியொன்று செட்டைகளை அடித்தபடி வர, அதனைச் சுற்றி மெல்லிய மஞ்சளில் குட்டிக்குட்டியாய் கள்ளக் கண்களோடு குஞ்சுகள் ஓடித்திரிந்தன.
கஸ்துாரியின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் எழுந்து சென்று ஒரு சிறு பேணிக்குள் அரிசிக் குறுணல்களை எடுத்து வந்து முற்றல்தில்  துாவினாள். கோழியும், குஞ்சுகளும் ஓடிவந்து குறுணல்களைக் கொத்தத் தொடங்க எங்கிருந்தோ பல கோழிகளும், சேவல்களும் ஓடிவந்தன. நான் கண்வெட்டாமல் அவைகளையே பார்த்தவண்ணமிருந்தேன்.
ஆச்சி சுளகில் அரிசியைப் பரப்பிப் புடைத்துக் கல்லுப்பொறுக்கும் போது, குறுணல் அரிசியை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்திருப்பார். நானும், எனது தங்கையும் அதனைக் கையால் கிள்ளி முற்றத்தில் போடுவோம் கோழிக்கூட்டம் ஓடிவரும். சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த விடையம் அது. பருந்துகளை ஏமாற்ற கோழிக்குஞ்சுகளைப் பிடித்து அண்ணா வண்ண நிறமடித்து நிலத்தில் விடுவார். தும்பு மிட்டாஸ் போல் அவைகள் ஓடித்திரிவது வேடிக்கையாக இருக்கும்.
கனடா, கிளிநொச்சி, கோண்டாவில்.. எனது மனது கிளறுப்பட்டுச் சுத்திச் சுத்தி வந்தது. எது நிசம்? எது மாயம்? எல்லாமே நிசமா? இல்லை அனைத்துமே மாயமா? இன்று கஸ்துாரி கோழிக்கு அரிசிக்குறுணலைப் போடாமலிருந்திருந்தால், சின்ன வயதில் எனக்குப் பிடித்த அந்த சம்பவம் என் நினைவில் மீண்டு வராமலேயே போயிருக்கும். என் வாழ்வில் மீண்டு வரவேண்டிய பல சம்பவங்களைக் மீட்டி எடுக்க நான் யாரையெல்லாம் சந்திக்க வேண்டும். எனக்குத் தலை இடிப்பது போலிந்தது. இது கஸ்துாரிக்கான நேரம் நான் என்னை முதன்மைப் படுத்துகின்றேனோ என்ற குற்ற உணர்வு எனக்குள் எளாமலில்லை. நான் என்னை என் சிந்தனையை அன்றையை நிமிடத்திற்கு இழுத்து வந்தேன். கஸ்துாரி கொஞ்சக் குறுணல்களை என் கைகளுக்குள் திணித்துவிட்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் சுதாகரித்துச் சிரித்து அவற்றை முற்றத்தில் வீசினேன். குஞ்சுகள் கொத்தத் தொடங்கின.
நான் கஸ்துாரியைப் பார்த்து “சொல்லுங்கோ” என்றேன்.
“அக்கா உங்களைப் பற்றிச் சொல்லுங்கோ, உங்கட கதைப்புத்தங்கள் இருந்தா தாங்கோ வாசிக்க ஆசையா இருக்கு” திடீரென கலகலப்பானாள். அழுது, மனஅழுத்தப்பட்டுச் சுருங்கி விடாமல், தன்னையும் தனது குழந்தையையும் பாதுகாக்க இவளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமாகவிருந்தது.
“உங்கட கதைகள் பற்றிச் சொல்லுங்கோக்கா, அங்க என்ன மாதிரிப் பிரச்சனைகள் இருக்கு?”
“இங்க இருக்கிற பிரச்சனைகளோட புது நாடு எண்டதால புதுப்பிரச்சனைகளும் கனக்க வந்திட்டுது”
“கனடா பிடிச்சிருக்காக்கா?”
“பழகீட்டுது, இப்ப அதுதானே என்ர நாடு, ஆனால் இஞ்ச விட பொம்பிளைகளுக்கு அங்க நல்ல பாதுகாப்பு, அதால பிடிச்சிருக்கு” என்றேன்
“சாதிப் பிரச்சனையெல்லாம் இருக்காது, என்னக்கா?” என்றாள்
“எல்லாமே இருக்கு, ஆனால் இஞ்சமாதிரி வெளிப்படையா வேணுமெண்டால் இல்லாமல் இருக்கலாம்”
“சின்னப்பிள்ளைகளுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கும் என்னக்கா” என்றாள். அவள் முகத்தில் அதுவரை பாத்திராத ஒரு சோகம் படர்ந்து கொண்டது.
கஸ்துாரி என்னிடம் மனம்விட்டு நிறம்பவே கதைக்க ஆசைப்படுகின்றாள். ஆனால் நான் அவளிடம் என்னைக் காட்டிக்கொள்ளாமல் என் கதைகளை அமுக்கிக் கொண்டிருக்கின்றேன்.
இருவரும் சிறிது நேரம் மௌமாக இருந்தோம். குழந்தை சிணுங்கிப் பின்னர் அழத் தொடங்கியது.
“எழும்பீட்டான்” என்ற படியே எழுந்து போனாள் கஸ்துாரி.
நான் பெட்டிக்குள் இருக்கும் பத்திரிகைத் துண்டுகளை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். மனம் எதற்குள்ளும் அடங்க மறுத்தது.
துடிப்போடு சிரிக்கும் குழந்தையைக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். குளிக்க வைத்திருக்கின்றாள். பொண்ட்ஸ் பேபி பௌடரில் குழந்தை சுகந்தமாக மணந்தது.
“சந்தோஷ், அன்ரிக்கு வணக்கம் சொல்லு”
குழந்தை துள்ளிக்கொண்டு என்னிடம் வந்தது.
“அக்கா இரவுக்கு இஞ்ச சாப்பிடுங்கோ, நான் புட்டு அவிக்கிறன்” என்றாள். பின்னர் இரவைக்கு இஞ்ச நில்லுங்கோவன் அக்கா” என்றாள்.
நான் சிரித்தேன்.
“நான் கருணா அண்ணைக்கும், கோபிக்கும்  போன் பண்ணிச் சொல்லுறன் நீ்ங்கள் நிண்டிட்டு நாளைக்குப் போங்கோ” என்றாள்.
எனக்கும் பிடித்திருந்தது சரியென்றேன்.
தனது இரவு உடுப்பு ஒன்றை என்னிடம் நீட்டி
“மாத்தீட்டு வாங்கோ அக்கா, காத்தோட்டமா சுகமாயிருக்கும் வேர்க்காது” என்றாள்.
நான் நெஞ்சோடு உடுப்பை வைத்துப் பார்த்தேன்.
“இது எனக்குப் பெரிசக்கா உங்களுக்கு அளவாயிருக்கும் என்றாள்”.
நான் சிரித்து குளிக்கும் அறைக்குள் நுழைத்து கொண்டேன்.

சாப்பிட்டு முடித்துவிட்டுக் கை கழுவும் போது மீண்டும் நான் சின்ன வயதில் கோண்டாவிலில் இருந்த வீடு நினைவிற்கு வந்தது. புட்டு, மீன் குழம்பு, முட்டைப் பொரியல் எனக்கு மிகவும் பிடித்த இரவு உணவு. சின்ன வெண்காயம், பச்சைமிளகாய் நிறையவே போட்டு முட்டை பொரித்தாலும் எட்டுப் பிள்ளைகள், அப்பா, அம்மா, ஆச்சி, சந்தணம் என்று சரி சமமாக பொரியலை வெட்டும் போது சிறிய துண்டுதான் எனக்குக் கிடைக்கும், அதனை பாதுகாத்து கடைசியில் சாப்பிடுவேன். பெரிதாக இரண்டு முட்டைகளை அடித்து வட்டமாகப் பொரித்து கஸ்துாரி எனது தட்டில் வைத்த போது என் மனம் அடித்துக் கொண்டது. கனடா முட்டைப் பொரியல் தராத ஒரு அதிர்வை கஸ்துாரி வீட்டு முட்டைப் பொரியல் எனக்குத் தந்தது.
நிலத்தில் துணியைப் போட்டு சந்தோஷை கிடத்தியிருந்தாள் கஸ்துாரி. தலைக்கு மேல் சுத்திக்கொண்டிருக்கும் வண்ணப் பொம்மைகளைப் பிடிக்க அவன் கைகள் துடித்துக் கொண்டிருந்தன. என் கண்கள் வண்ணப் பொம்மைகளைச் சுற்றிச் சுற்றி வந்தன. எனது அக்காவின் குழந்தை படுத்திருந்த போது வண்ணப்பொம்மைகள் அல்ல, அவன் தலைமேல் சுற்றிக்கொண்டிருந்தது பலவண்ணப் பிளாஸ்டிக் பூக்கள்.
ஏதோ ஒரு அசூசை, பேசாமல் கவிஞரின் வீட்டிற்கே போயிருக்கலாமோ என்று சங்கடமாக மனதுக்குள் அடித்துக் கொண்டது. எனக்கு அப்போது எட்டு வயசிருக்கும். குழந்தையோடும், வண்ணப் பூக்களோடும் விளையாடும் வயசது. ஆனால் நான் ஓடி ஒழிந்து கொண்டிருந்தேன். அத்தான் காலடி ஓசை கேட்டாலே அவர் கண்களில் படாமல் எனது வீட்டிற்குள்ளேயே ஒரு மூலையைத் தேடித்திருந்திருந்த காலமது.
 இஞ்சி போட்ட தேனீரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் பக்கத்தில் இருந்து  கொண்டாள் கஸ்துாரி..
இந்த வீட்டில் ஏதோ ஒரு சங்கடம் என்னை நெருடிக்கொண்டிருந்தது. வரதன் உயிரோடு இருந்திருந்தால் கலகலப்பாக இருந்திருக்கும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட  அறியப்படாத வரதன் இல்லாத வெறுமை, சங்கடம் என்னையும் ஆட்கொண்டதோ புரியவில்லை.
“என்னை யோசிக்கிறீங்கள் அக்கா? நீங்கள் ஓக்கேயா?” திடீரென்று கேட்டாள் கஸ்துாரி.
“ஒண்டுமில்லை, நான் ஓக்கே” என்றேன்
அவள் மௌனமாக இருந்தாள். நானும் மௌனமானேன். இருவருக்கிடையிலும் மௌனம் ஒரு பாலம் போல் இணைத்துக் கொண்டிருந்தது. ஒரு புள்ளியில் இருவரும் சேருவதற்கான தருணம் புரியாத புதிராக சுற்றிச் சுற்றிவந்தது. கதைப்பதைவிட மௌனம், அமைதி மிகவலிமையாக நோகச் செய்தது. நாம் சம்பத்தப்பட்ட பல விடையங்கள் ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பதற்காக சுழல்கின்றதோ? தியான மனநிலையில் ஒரு புதிர் என்னைச் சுற்றியது. இதயம் பட,படத்தது. ஏதோ வேண்டாத ஒரு வெறுப்புநிலை உருவாகப் போகும் தருணத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கு என்ன ஆனது என்று புரிமுனைந்து கொண்டிருக்கும் கணத்தில், சந்தோஷ் அழத்தொடங்கினான். கஸ்துாரி தரையில் இறங்கிக் குழந்தையை எடுத்து பாலுாட்டினாள். நான் எழுந்து குசினிக்குள் சென்று தேனீர் கோப்பைகளைக் கழுவி வைத்துவிட்டு வந்தேன்.
சந்தோஷை ஏணைக்குள் வளர்த்தியவள் “நீங்கள் களைச்சுப் போயிருக்கிறீங்கள் அக்கா படுக்கப் போறீங்களா?” என்றாள்.
மனதுக்குள் படுக்கலாம் என்று பட்டாலும், என் மனச் சங்கடம் அர்தமற்றது, அதிலிருந்து மீண்டு, மீண்டும் கஸ்துாரியோடு சகசமாக உரையாட என்னை உந்தி உற்சாகப்படுத்தினேன்.
“இல்லை, இப்ப தானே ஒன்பது மணி படுக்க நேரம் இருக்கு” என்றேன்.
தொலைக்காட்சியின் சனல்களை மாற்றி, மாற்றிப் போட்டேன். பின்னர்
”கொஞ்ச நேரம் கதைப்பம்” என்றேன்.
“அக்கா உங்களோட கனக்க மனம் விட்டுக் கதைக் வேணும் போல இருக்கு” என்றாள். எனக்குள் ஒரு கடினம் புகுந்து கொள்ள நான் புன்னகைத்தேன்.
”சில ஆக்கள் தாங்களும் ஒரு மனுசர் எண்டு வெள்ளை பாண்டும், சேர்ட்டோடையும் திரியினம் அக்கா” என்றாள்.
வலசைப்பறவைகளின் ஒலி ஆற்றோட்டத்தோடு கலந்தொலித்தது. கூகைகளும், தவளைகளும், சில்வண்டுகளும் தாளம் தவறாமல் இரவை மௌனத்தைக்  கலைத்தன.
“வரதனைக் கொலை செய்தது என்ர அக்கான்ர புருஷனும், சித்தப்பாவும்தான்” என்றாள்.
நான் அதிர்ந்து பின்னர் மௌமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“சாதிப் பிரச்சையெண்டு சொல்லுறதெல்லாம் உண்மையில்லையக்கா” என்றாள்.
என் புருவங்கள் உயர்ந்தன.
“அப்பான்ர தம்பி, என்ர சித்தப்பா எங்களோடதான் இருந்தவர். சின்னனில இருந்தே என்னைத் துாக்கி வளர்த்தவர், நான் எப்பவும் அவரின்ர மடியுக்கதான் இருந்தனான், வளர்ந்து புத்தி வர நான் ஒதுங்கத் துடங்கீட்டன், அவருக்கு அது பிடிக்கேலை” கை நிகம் ஒன்றை மற்றதால் நோண்டியபடிய படியிருந்தவள் பின்னர் தொடர்ந்தாள்
“பிறகு அவர் கலியாணம் கட்டிக்கொண்டு  போயிட்டார். நான் நிம்மதியாப் பெருமூச்சுவிட, என்ர தலைவிதி அக்காக்கு கலியாணம் நடந்தது, அத்தான் எண்டு சொல்லிக்கொண்டு ஒருத்தன் வந்தான், நான் வரதனை லவ் பண்ணிக் கொண்டிருந்த காலம் அது நான் வரதனுக்கு எல்லாத்தையும் சொல்லிப் போட்டன்”
எனது குடும்பம் பெரியது. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருந்தது. என் பெரும் குரல் எழுப்பல் எனது குடும்பத்தை ஆட்டியது. அம்மா அழுதாள். அக்காவின் குடும்பம் கலைந்துவிடும் என்ற கவலையில் எனது குரலை அனைவரும் சேர்ந்து அழுத்தி, அமுக்கி அடக்கிவிட்டார்கள். அன்றிலிருந்து குரலற்றவளாய் நானும் இந்த அழுகிய சமூகத்தின் ஒரு பிரநிதியாய் வலம்வந்து கொண்டிருக்கின்றேன்.
கஸ்துாரி தொடர்ந்தாள்… அவள் குரல் கனத்துக் கண்ணீராகப் பொழிந்து கொண்டிருந்தது. அவளை அணைத்து நான் ஆறுதல் சொன்னேன். அந்த நொடியிலும் என்னால் வெளியில் வரமுடியவில்லை.  அவள் விக்கி, விக்கி அழுதுகொண்டிருந்தாள். என் குரல் இன்றும் அழுக்கப்பட்டு அடங்கிக் கிடந்தது. நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
அவள் வீட்டுச் சுவர் என்னை நெருக்கி மூச்சு முட்ட வைத்தது. எழுந்து ஓடிவிடலாம் போலொரு வேகம்.
“யாழ்ப்பாணச் சமூகம் ஒரு அழுகின, நரகம் பிடிச்ச சமூகம் அக்கா, ஒரு சமூகத்துக்கு இருக்கக் கூடாத அத்தனை அழுகிய குணங்களும் அங்கை இருக்கிற மனுசரிட்ட இருக்கு, ஆனால் தாங்கள்தான் பெரியாக்கள் எண்ட நடப்பும், நடிப்பும். மனம் விட்டுப் போச்சக்கா” மௌனமானாள். பெருமூச்சு விட்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். நான் அசையாது அமர்ந்திருந்தேன்.
வயது, அனுபவம், மேற்குலக வாழ்க்கை எதுவும் என்னைப் பதப்படுத்தவில்லை. நான் கஸ்துாரியை ஏக்கத்தோடு பார்த்தேன். எனது கற்கள் ஒருபோதும் கரையப்போவதில்லை. அவை எனக்குள் கனமாக ஆழப்பதிந்தே கிடக்கும். இறக்கி வைப்பதற்கான சூச்சுமத்தை ஒரு போதும் நான் கற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
“நான் இனிமேல் அழ மாட்டன்” என்று அவள் சொன்ன போது நடுச்சாமம் ஆகியிருந்தது.
படுக்கை விரிப்பை எடுத்து தலையை மூடிக்கொண்டேன். அறையை நோக்கிக் கால்கள் நடக்கும் சத்தம். கதவு கிரீச் சென்று சத்தம் எழுப்ப நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். கதவு திறந்து அத்தான் உள்ளே நுழைந்தார். நான் கத்தியபடி கண் விழித்தேன்.
சந்தோஷ் வீல் என்று சத்தம் போட்டு அழுதான். கஸ்துாரி என் அருகில் வந்து என் தலையைத் தடவி “கனவா அக்கா?” என்றாள். எங்கு இருக்கின்றேன் என்று தெரியாது சிலநிமிடங்கள் தலையைச் சுற்றியது.

Published https://naduweb.com/
April 17, 2019