Monday, February 27, 2023

குற்றம் கழிதல்

 “என்ன திடீரெண்டு உமக்கு இப்பிடியொரு ஆசை?”

சாந்தனின் முகத்திலிருந்த உணர்வை கவிதாவால் அடையாளம் காண முடியவில்லை. சந்தேகம்?, கோவம்?, வியப்பு?. ஒன்றுமில்லை அவன் முகம் மிகச்சாதாரணமாகவே இருந்தது. அவன் முக உணர்விலிருந்து தனது உரையாடலை தொடர விரும்பியவளுக்கு பெருத்த ஏமாற்றமாகவும், அவனுக்கு எப்படிப் பதிலளிப்பதென்ற தடுமாற்றமும் தான் மிஞ்சியது.

“சொல்லுமன்” 

அவன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இல்லை, எல்லாரும் போகீனம் என்னையும் கேட்டீச்சினம் அதுதான்” 

கவிதாவிற்குத் தொண்டை அடைத்தது. தான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று காட்டுவதற்காய் அவள் கால்களை மாற்றிப் போட்டு ரீவியில் சனலை மாற்றினாள்.

சாந்தன் பெரிதாகச் சிரித்தான். கவிதா அசடு வழிய அவனின் முகத்தைப் பார்த்து ஒன்றும் விளங்காதவளாய் தானும் சிரித்தாள். அவளின் கைகள் குளிர்ந்தன, உள்ளுக்குள் எழுந்த அவமானத்தை அடக்கிக் கொண்டு தொலைக்காட்சியில் நகர்ந்து கொண்டிருந்த தமிழ் நாடகத்தின் மேல் பார்வையை ஓடவிட்டாள்.

“ இங்கிலீஸ் படம் பார்க்கப் போறீர் ஆ..?”

 சொன்னபடியே அவன் எழுந்து சென்றுவிட்டான். கவிதா அசையாமல் சோபாவிலேயே இருந்தாள். சந்திரனுக்கு எதில் பிரச்சனையென்று அவளுக்குப் புரியவில்லை. வேலைத்தள நண்பர்களுடன் அவள் படத்துக்குப் போவதா?, இல்லை ஆங்கிலப்படம் பார்க்கப் போவதா?. இல்லை அவன் போக வேண்டாம் என்று மறுத்த மாதிரியும் தெரியவில்லை. நண்பர்களுடன் படத்துக்குப் போவதற்கு, தான் சாந்தனின் அனுமதியை எதிர்பார்த்து நிற்பதே அவளுக்கு கேவலமாகப் பட்டது.

“சரி வெள்ளிக்கிழமை வேலை முடிய போறதெண்டு சொன்னனீர் என்ன?” கையில் தண்ணீர் போத்தலுடன் கவிதாவிற்குப் பக்கத்தில் வந்து இருந்தான் சாந்தன். இந்த உரையாடலைத் தொடரும் மனத்திறன் அப்போது அவளிலிருந்து வெளியேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்ப்பது போல் பாவனை செய்தாள் அவள். அவன் வெடுக்கென்று ரிமோட்டைப் பறித்து ரீவியை அணைத்தான். திடுக்கிட்ட கவிதாவைப் பார்த்து, “என்ன படத்துக்குப் போக விடேலையெண்ட கோவமா?” என்றான். “விடுவது”, “அனுமதி தாறது” இப்படியான வார்த்தைகள் அவளின் உள் மனதை உலுக்குபவை. பெற்றோரோடு இலங்கையில் வாழ்ந்த காலங்களில் கூட இப்படியான வார்த்தைகளை அவள் கேட்டவளல்ல. நம்பிக்கை ஒன்றின் அடித்தளம் மட்டும்தான் உறவுகளைப் பலப்படும் என்பதைப் பெற்றோரிடமிருந்து கற்றவள் அவள்.

தனது படபடப்பை மறைக்க முயன்று தோற்ற கவிதா “இல்லையே” என்றாள். கண்கள் பனிக்க பார்வையே இடம் மாற்றினாள்.

“அவதார் 2 தானே?, நானும் பாக்கவேணுமெண்டு நினைச்சனான், நான் வியாழக்கிழமை வேலையால வெள்ளணை வாறன், ரெண்டு பேரும் போவம், உம்மட வேலையாக்கள் போறதுக்கு ஒருநாள் முதலே நீர் பாத்திடுவீர்” சாதித்தது போல் சிரித்தான் சாந்தன்.

“என்ன உம்மட ஹஸ்பண்ட் படத்துக்கு போறதுக்கு பெமிஷன் தந்தவரோ?” ஹலன் சிரித்தபடியே அடுத்தநாள் வேலைக்குச் சென்றபோது கேட்டாள்.

“ எனக்கு ஒருத்தரிட்டையும் பெமிஷன் எடுக்கத் தேவையில்லை நானும் படத்துக்கு வாறன்” வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டாள்.

“ஹலன் ப்ளீஸ்” ஹலனை அடக்கினாள் நிம்மி. அவமானத்தால் சுருங்கிப்போனாள் கவிதா. நண்பிகள் என்று நம்பி சாந்தனிலிருந்த சின்னச் சின்னக் குறைகளை இவர்களுடன் பகிர்ந்தது இப்போது அவளை அவமானப்படுத்துவதற்கான பயன்படுத்தப் பட்டது.

“ச் சீ படத்துக்கு எப்ப போகப் பிளான் போட்டிருக்கிறார்கள் எண்டதை சாந்தனுக்குச் சொல்லாமல் விட்டிருந்தால், பேசாமல் படத்தைப் பாத்திட்டு, லேட்டானதுக்கு ஏதாவதொரு சாட்டுச் சொல்லியிருக்கலாம், எப்ப, என்ன படம், எந்த தியேட்டர், எத்தின மணி ஷோ எல்லாம் விலாவாரியாச் சொல்லிப் போட்டன் இனி ஒண்டும் செய்யேலாது”

“ரிப்போர்ட் ரெடியென்றால் உடனே என் அறைக்கு வரவும்” கவிதாவின் சூப்பவைசரிடமிருந்து ஈமெயில் வந்திருந்தது. “இந்தச் சனி மனுஷி ஒரு நிமிசம் நிம்மதியா இருக்கவிடாது” புறுபுறுத்த படியே வேலையில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள் அவள். அன்று முழுவதும் தான் மிகவும் பிஸியென்று காட்டியபடியே ஹலனுடனான உரையாடல்களைத் தவிர்த்துவிட்டாள்.

வெள்ளிக்கிழமைகளில் வேலைத்தள நண்பர்கள் மதியம் சாப்பிட டவுண்ரவுணிலிருக்கும் பலவிதமான உணவகங்களுச் செல்வது வழக்கம். கவிதா வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது கிழமையே ஹலன் அவளுக்கு லன்ஞ் இன்வரேஷன் அனுப்பியிருந்தாள். எங்கு செல்வதென்றாலும் சந்திரனோடு செல்லப் பழகியிருந்த கவிதாவிற்கு உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மனம் சந்தோசத்தில் துள்ளியது. இது ஒருவகை புதிய அனுபவம். வேற்று இனத்தவர்களுடன் ஒன்றாக ரொறொன்டோ மத்தியில் இருக்கும் நவீன உணவகத்திற்குச் சென்று மதிய உணவு உண்பதை நினைக்கும் போது த்ரில் ஆக இருந்தது. இருந்தாலும் தான் கொண்டுவந்திருக்கும் சாப்பாட்டை என்ன செய்வது, எப்படியான உணவகத்திற்கு செல்லப் போகிறார்கள், எவ்வளவு காசு முடியும் இப்படிப் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தாலும், “ தாங்ஸ் வில் ஜொயின்” என்று பதில் போட்டாள்.

ஆறு நபர்கள் இரண்டு ஆண்களும் நான்கு பெண்களுமாக சேர்ந்து ஒரு மெக்சிகன் உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டார்கள். பார்த்த படங்கள், சூப்பவைசர்கள் எப்படியெல்லாம் வேலை என்ற பெயரில் ரோச்சர் பண்ணுகின்றார்கள், கனேடிய பொலிடிக்ஸ், உலக பொலிடிக்ஸ் என்று உரையாடலும், சிரிப்புமாக அவளது மதியம் அன்று கழிந்தது.

“இண்டைக்கு நான் கோ- வேர்க்கேஸ் ஓட லன்ஞ் இற்குப் போனான் சந்திரன்” வீட்டுக்குச் சென்றதும் சொன்னாள் கவிதா.

“ கோ- வேர்கேஸ் எண்டால் ஆம்பிளைகளும் வந்தவேலோ?”, அவன் புருவம் உயரக் கேட்டான்.

“ச்சீ நாங்கள் லேடீஸ் மட்டும்தான், நாலுபேர் போன்னாங்கள்” எப்படி தனக்கு உடன இப்படிப் பொய் சொல்லவந்ததென்று அவளே ஒரு கணம் திகைத்துப் போனாள். கட்டிக் கொண்டு போன சாப்பாட்டை என்ன செய்தனீர், டவுண் ரவுண் எண்டால் நல்ல காசு முடிஞ்சிருக்கும், இப்பிடி ஏதாவது கேள்வியைத்தான் அவள் அவனிடமிருந்து எதிர்பார்த்து அதற்கான பதிலையும் தயார்படுத்தி வைத்திருந்தாள். ஆனால் இந்தக் கேள்வி அவனிடமிருந்து வருமென அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் ஒரு கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுள் எழத்தொடங்கியது.

“பொம்பிளைகளோடையெண்டால் ஓகே”. என்றான். தான் எப்போது அவனிடம் அனுமதி கேட்டேன் இவன் ஓகே சொல்வதற்கு என்று மனதிலெழுந்த கேள்வியை மனதுக்குள்ளேயே அடைத்துவிட்டாள். அதன் பின்னர் வெள்ளிக்கிழமைகளில் தொடரும் உணவக நுழைவுகள் பற்றி அவனுக்கு அவள் மூச்சுவிட்டது கூட இல்லை.

ஆனால் இப்போது அவள் வேலை நேரம் முடிந்தபின்னர் திரைப்படத்திற்கு போகக் கேட்கிறாள். அதுவும் ரொறொண்டோ மத்தியில் அமைந்திருக்கும் திரையங்கிற்கு. படம் பார்த்து வீட்டிற்கு வர இருட்டிவிடும். பெண்களோடு மட்டும்தான் போக கேட்கிறாள் என்றாலும் இது கொஞ்சம் டூமச் தான். சந்திரன் இப்படித்தான் நிறைத்திருப்பான்.

ஹலனுக்கு தானும் படத்திற்கு வருவதாக கவிதா சொன்னாள். “ஐ ஆம் ஸோ ஹப்பி” அணைத்துக் கொண்டாள் ஹலன்.

வியாழன் இரவு சாந்தனும், கவிதாவும் அவதார்-2 படம் போய் பார்த்தார்கள். வெள்ளி காலை வேலைக்கு “சிக் லீவ்” சொல்லிக் கொண்டாள். சாந்தன் உண்மையில் அவளுக்கு உடல் நலமில்லையென்று நம்பினான். அவள் நம்ப வைத்தாள். திங்கள் கவிதா வேலைக்குச் சென்ற போது எல்லோரும் சுகம் விசாரித்தார்கள். ஹலன் வாயுக்குள் சிரிப்பது போல் கவிதா கற்பனை செய்தாள்.

சந்திரனும், கவிதாவும் தமிழ் திரையரங்குகளில் திரையிடப்படும் அனேக திரைப்படங்களை தவறாமல் சென்று பார்ப்பவர்கள் தான். “யோர்க் சினிமா”என்றால் படம் பார்ப்பதோடு அருகிலிருக்கும் உணவகம் ஒன்றிற்குச் சென்று சாப்பிடுவார்கள். “வூட் சைட் சினிமா” என்றால் சரவணபவனுக்குச் சென்று “ மினி ரிபன்”, அல்லது மசாலாத் தோசை சாப்பிட்டு ஒரு மசாலா ரீயும் குடிப்பார்கள். இதையெல்லாம் கவிதா மிகவும் சந்தோசமாக அனுபவிப்பவள் தான். இருப்பினும் பிடிக்காத திரைப்படம் என்றாலும், வாயிற்கு உருசையான சாப்பாடு இல்லாவிட்டாலும் வேலைத்தள நண்பர்களோடு திரைப்படத்திற்கும், உணவகத்திற்கும் செல்வது வேறு ஒரு அனுபவம், அதை எப்படி வெளிப்படுத்துவது, சாந்தனுக்கு விளங்கப்படுத்துவது என்பது அவளுக்கு புரியாமலே போனது.

ஒரு மாதம் கடந்து ஹலனிடமிருந்து குரூப் ஈ-மெயில் வந்தது. இந்த வெள்ளிக்கிழமை “த வுமன் கிங்க்” திரைப்படம் பார்க்கப் போகலாமா என்று. எல்லோரும் சம்மதம் என்று பதில் போட்டார்கள், கவிதாவும் அதே பதிலை அனுப்பி வைத்தாள். தொடர்ந்து வந்த நாட்களை மிகச் சந்தோசமாவும், சுமூகமாகவும் சந்திரனுடன் செலவிட்டாள்.

வெள்ளியன்று பின்னேரம் நாலுமணியளவில் “கிளையண்ட் ஒருவருக்கு எமேர்ஜென்சி, போக வேணும் பின்னர் அழைக்கிறேன்” என்றொரு குறுஞ்செய்தியை சந்திரனுக்கு அனுப்பிவிட்டு போனை மியூட்டிற்கு மாற்ற ஹலன் “ஆர் யூ ரெடி” என்றபடியே வந்தாள்.

திரையரங்கு இருக்கைகளில் கவிதாவிற்கு இடப்பக்கமாக டேவிட் உம் வலப்பக்கமாக ஹலனும் இருந்து கொண்டார்கள். டேவிட் நீட்டிய பொப்கோனை ஒருகையால் எடுத்து வாயில் போட்டபடி திரைப்படத்தை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினாள் கவிதா.

Published - https://solvanam.com/  Feb.26, 2023