Sunday, February 9, 2020

சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு



அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளைஇரண்டு தாய்மார்கள்
இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவேகாவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
1
மிஸ்ரிமோஃபோர்பியாதான் சந்தேகமில்லை”. பெரியக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்துஎன்ன பெயர் சொன்னனீ?” என்றாள். நான் முகத்தை வலு சீரியஸாக வைத்துக்கொண்டு, “மிஸ்ரிமோஃபோர்பியா, எல்லா அறிகுறிகளும் அது போலதான் கிடக்குது. நான் கூகிளில தேடியும்; பார்த்தனான். இப்படித்தான் விளக்கம் கிடந்ததுஎன்று கையில் மடித்து வைத்திருந்த வெள்ளைப்பேப்பர் ஒன்றை விரித்துப் படித்துக்காட்டத் துடங்கினேன்

மிஸ்ரிமோஃபோர்பியாபொருள்தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களுக்கு உண்டாகும்; மனக்கோளாறு. மற்றவர்களையும், சமூகத்தையும் வெறுக்கும் இவர்கள் எவ்விதமேனும் தம்மை உயர்த்;திக் காட்ட சபைகளில் உயர்ந்த குரலில் கதைத்து தம்மை மையப்படுத்தல், தமக்கே எல்லாம் தெரியும், தாம் சொல்வதுதான் சரியென்று விதண்டாவாதம் செய்தல். எல்லோரையும் எப்போதும் மட்டம் தட்டுதல்
நான் வாசித்துக்கொண்டு போக பெரியக்கா கண்கள் விரிய என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். என் முகம் வலு வலு சீரியஸாகவிருந்தது. வாசித்து முடித்துவிட்டு அக்காவைப் பார்த்தேன். அவளின் கண்கள் என் கண்களை ஊடுருவிக்கொண்டிருந்தன. முகத்தில் கொஞ்சம் பயம் தெரிந்தது. முகம் மாறிப் போக சோகமாகபாவமடி அவள், அவளுக்கு வருத்தம் எண்டு தெரியாமல்…” அக்காவின் கண்கள் என் கண்களைவிட்டகலவில்லை வாய் கதைத்துக்கொண்டிருந்தது. என் முகத்திலும் மாற்றம் தோன்றத்தொடங்கியிருக்க வேண்டும். அக்காவின் முகம் உடனேயே அசடு வழிவதுபோல் மாறத்தொடங்க எனக்கு வாய் வெடித்துச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கினேன். அக்கா அசடு வழிந்தாலும் சிரிக்கத் தொடங்கினா. சிரிப்பு பெரிசாகப் பெரிசாக வயித்தைப் பிடித்துகொண்டு வோஷ்ரூமுக்கு ஓடினா, திரும்பி வந்து எனக்கு அடிச்சுப் போட்டுச்சனியன் நான் உண்மையெண்டு நம்பீட்டன். சிரிச்ச சிரிப்பில காச்சட்டையோட மூத்திரம் போகப் பாத்திட்டுதுதொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தா. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
என்ன நான் பொய் சொல்லுறன் எண்டே நினைக்கிறாய்?” நான் கேட்டேன்.
சும்மா இரடி நீயும் உன்னர விளக்கமும்சொன்ன படியே வெளியில எட்டிப் பாத்தாள். அத்தான் அக்காவை ஏத்துறதுக்கு வருவார். அத்தானிட்ட செல் போனில்லை. வீண் செலவுகள் ஒருபோதும் அவர் செய்யிறேலை. அக்காக்கு கார் ஓடத் தெரியாது. எங்க போறதெண்டாலும் அத்தான்தான் இறக்கிவிட வேணும். ஆனால் அத்தான் வீட்டுக்குள்ளுக்க வரமாட்டார். இறக்கிவிட்டிட்டுப் போயிடுவார், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தால திரும்பி வந்து வீட்டுக்கு முன்னால பார்க் பண்ணிப்போட்டு நிற்பார். கதவையும் வந்து தட்டமாட்டார் அக்கா தனது ஞானத்தால அத்தான் வந்திட்டார் எண்டு அறிஞ்சு போக வேணும். கனநேரம் காக்க வைச்சாலும் வீடு போய்ச் சேரமட்டும் பேசிக்கொண்டே வருவாராம். அதுதான் அக்கா அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அடிக்கடி யன்னனால வெளியில ஒரு கண் வைத்தபடியேயிருக்கிறாள். பிறகு கேட்டாள்
நாங்கள் ஆகத்தான் அவளைப் பற்றி கொசிப் பண்ணிறமோ?”
நான் அண்டைக்கு சிட்டி ரீவியில ஒரு புரோகிராம் பாத்தனான் அதில கொசிப் பண்ணுறது உடம்புக்கு நல்லதெண்டு ஆராய்சியில கண்டு பிடிச்சிருக்கீனமாம் ஒரு சைகொலொஜிட் சொல்லிக்கொண்டிருந்தார். கொசிப் மனுசரின்ர இயல்பு அதை அடக்கி வைக்கக் கூடாது ஆனால் தனிப்பட்ட முறையில மற்றவர்களைப் பாதிக்காமல் கொசிப் பண்ணுறது பிழை இல்லை எண்டும் சொன்னார்.” நான் எப்பவுமோ நான் செய்யும் அத்தனை தவறுகளுக்கும் எனக்கேற்ற முறையில் அதை நியாயப்படுத்தி விளக்கம் குடுக்கப் பழகி வைத்திருந்தேன். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றில்லை. என்னளவில் எனக்கு இந்த விளக்கம் தேவைப்பட்டது.
அக்கா என்னைப் பயத்தோட பார்த்தா. “இப்ப நாங்கள் அவளைப் பற்றித் தனிப்பட்ட முறையிலதானே கதைக்கிறம் தெரிஞ்சா எவ்வளவு கவலைப் படுவாள்
ச்சீ போடி அவளுக்குத் தெரியவந்தாத்தானே, நீ நினைக்கிறியே அவள் எங்களைப் பற்றி கொசிப் பண்ணுறேலையெண்டு, நேராவே இந்தத் தாக்குத் தாக்கிறாள், பின்னால என்னவெல்லாம் கதைப்பாள்
ஓம் என்னசொன்ன படியே வெளியில எட்டிப் பார்த்த அக்காஅய்யோ வந்திட்டாரடி கத்தப் போறார்சொன்ன படியே தன்ர கான்பாக்கை எடுத்துக் கொண்டு தடக்கி விழுவது போல் ஓடிப் போனாள்.

2.
மூத்த அண்ணன். எங்கட வீட்டின்ர ஒரே ஆண்வாரிசு. அவனுக்கும் என்ர மூத்த அக்காக்கும் கூட கனக்க வயசு வித்தியாசம். ஆதால வீட்டில அவனுக்கு மதியாதை அதிகம். பாவம் சின்னனில இருந்தே நாங்களெல்லாம் அவனோட மரியாதையா நடந்ததால அவனுக்கு அப்பயிருந்தே தானாகவே பொறுப்பு வந்திட்டுது. அவன்ர துரதிஷ்டமோ, கஸ்டகாலமோ என்னவோ நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கையே எங்கட அம்மா செத்துப் போனா. அப்பாவோட சேர்ந்து அண்ணாதான் குடும்பப் பாரத்தைச் சுமந்தான். தன்ர நாலு தங்கச்சிமாரையும் வேலை எதுவும் செய்யவிடாமல் ஆச்சியோட சேர்ந்து தானே எல்லாத்தையும் செய்வான். அப்பாவோட சேர்ந்து வீட்டுக் கணக்குவழக்கெல்லாம் பார்ப்பான். அவன் எங்களுக்கு இரெண்டாவது அப்பா மாதிரி ஆகிப் போனான். ஒழுங்காகப் படித்து பல்கலைக்கழகம் போய்வந்து வேலையிலையும் அவன் சேர்ந்த நேரம்தான் ஊரில ஆமிக்காறரின்ர தொல்லை தாங்கேலாமல் போச்சுது. வீட்டுப் பொறுப்பு அதிகமிருந்ததால அண்ணா எங்கட நாடு பற்றி யோசிக்கவேயில்லை. அவன் யோசிச்சானோ என்னவோ ஆமிக்காறன்கள் அவனைத் தேடி வரத் தொடங்கினாங்கள். ஒருக்கா வந்து அண்ணனை விசாரிக்கக் கூட்டிக்கொண்டு போனதோடையே அப்பா அவனைப் பிடிச்சு லண்டனுக்கு அனுப்பிப் போட்டார். நாங்கள் அதோடையே உடைஞ்சு போனம். அண்ணா இல்லாத வீடு வெறிச்சுப் போய்க்கிடந்தது. நாங்கள் உடைஞ்சமோ இல்லையோ அப்ப நல்லா உடைஞ்சு போனார். அம்மா செத்த போது பாதிக்கப்;படாத அப்பா அண்ணா லண்டன் போனதோட உருக்குலைஞ்சு போனார். அண்ணாதான் தனக்கு வலக்கை மாதிரியிருந்து குடும்பத்தை நல்ல படியாக்கொண்டு போக உதவினவன், இப்ப அவன் போனாப் பிறகு எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை எண்டு தன்ர நண்பர்களுக்கெல்லாம் சொல்லத் துடங்கீட்டார்.



பெரியக்கா அப்ப ஏ.எல் எடு;த்துப் போட்டு ஒண்டும் சரிவராததால வீட்டில இருந்தா. அக்கா வீட்டில இருந்ததுஅப்பாவுக்குப் பெரிய பொறுப்புப் போல பட்டதோ என்னவோ உடனேயே கிடந்த வீட்டையும் நகைகளையும் சீதணமாக் குடுத்து மூத்த அக்காக்கு கனடா மாப்பிளையக் கலியாணம் செய்து குடுத்தார். சின்னக்காவுக்கு அப்பா செய்தது கொஞ்சம் கூடப் பிடிக்கேலை, அப்பா யோசிக்காமல் எல்லாத்தையும் மூத்தக்காக்குக் குடுத்திட்டார் இனி மிஞ்சியிருக்கிற மூண்டு பெட்டைகளுக்கும் என்ன செய்யப் போறார் எண்டு அவள் புறுபுறுக்கத் தொடங்கீட்டாள். நானும் தங்கச்சியும் சின்னப்பிள்ளைகளாயிருந்ததால அதுப்பற்றி எங்களுக்கு விளங்கேலை. ஆனால் சின்னக்கா சாடை மாடையா அப்பாவைத் தாக்கி கதைக்கத் தொடங்கீட்டாள். அண்ணன் லண்டனில ஒரு கடையில வேலை செய்யிறதாயும், வேலையில வாற காசு அவன்ர படிப்புக்கும், செலவுக்குமே போதாததாயிருந்ததால படிப்பு முடிஞ்சு நல்ல வேலை எடுத்த உடன தான் முழுசாக் குடும்பப் பொறுப்பை எடுக்கிறன் அதுவரை அப்பாவை ஒண்டும் கேட்டுத்தொந்தரவு பண்ண வேண்டாமென்று போன் பண்ணி சின்னக்காவுக்குச் சொன்னார். அப்பா தன்னைப் பற்றி அண்ணாக்கு ஏதோ குறை சொல்லிப் போட்டாரென்று கற்பனை பண்ணி ஒருநாளும் இல்லாத மாதிரி சின்னக்கா அப்பாவை மனம்நோகிற மாதிரிப் பேசிப் போட்டாள். அப்பா அதோட உடைஞ்சவர்தான் கொஞ்ச நாளால கார்;ட் அட்டாக் வந்து செத்துப் போனார். செத்த வீட்டுக்கு லண்டனில இருந்து வந்த அண்ணனைக் கட்டிக்கொண்டு “ஐயோ என்ர அப்பாவைப் பாரடா, நான் அவரை ராசா மாதிரி மனம் நோகாமல் வைச்சுப் பாத்தன், எல்லாம் வீணாப் போயிட்டுதே” என்று கத்தி அழுதாள். “இனி நாங்கள் அனாதைகள் எங்களுக்கு ஒருத்தருமில்லை” என்றும் என்னையும் தங்கச்சியையும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதாள். எனக்கு ஒரு மாதிரியிருந்தது. அக்கா அப்பாவைப் பேசினது, அப்பா கண் கலங்கிப் போய் கட்டிலில தோள் குலுங்க அழுததையும் நான் கண்டதால சின்னக்கா அப்பிடி அழுதது எனக்கு விளங்காமல் குழப்பமா சின்னக்காவில கோவம் வந்தது.
அண்ணா பயந்திட்டான். செத்தவீடு முடிஞ்சு லண்டனுக்குப் போகமுதல் கொழும்பில ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து எங்கட மாமாவையும் எங்களுக்குப் பொறுப்பாக வைச்சான், பிறகு அடுத்த வருஷமே எங்கள் மூண்டு பேரையும் கனடாவுக்கு காசு கட்டி எடுப்பிச்சுப் போட்டுத் தானும் கனடா வந்திட்டான். எங்களைக் காசு கட்டிக் கூப்பிட்டதால அண்ணாவுக்குத் தலைக்கு மேல கடன். அவன் அதை ஒண்;டையும் எங்களுக்குச் சொல்லேலை. நாங்களும் அவனிட்ட அதுபற்றிக் கேக்கேலை. எங்களுக்கோ கனடா வந்த புளுகம். அதுக்குப் பிறகு எங்களுக்கு அம்மாவா அப்பாவா எல்லாம் செய்தது அண்ணன்தான். பாவம் எங்கள் மூண்டு பேருக்கும் கலியாணம் செய்து வைக்க அவனுக்கு நாப்பத்தைஞ்சுக்கு மேல போயிட்டுது. அதுக்குப் பிறகுதான் அவன்ர சினேகிதர்மார் அவனைக் கட்டாயப்படுத்தி அண்ணியை அவனுக்குக் கலியாணம் கட்டி வைச்சார்கள்.. இப்ப நினைச்சுப் பாத்தாலும் நாங்கள் நாலு தங்கச்சிமாரும் சுயநலமாத்தான் இருந்திருக்கிறம் எண்டது விளங்குது. அண்ணாக்குகலியாணம் செய்து வைக்க வேணும்;, அவன் எப்படி எங்களைக் கூப்பிட்ட கடனை அடைச்சான், எண்டெல்லாம் நாங்கள் ஒருக்காலும் யோசிக்காமல் எங்கட வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தம். அப்பவும் அண்ணன் எல்லாம் செய்வான், அவன் செய்யத்தான் வேணும் எண்டுதான் நினைச்சம்.
அண்ணனை எல்லாரும் சரியான நல்லவன் எண்டு அடிக்கடி சொல்லுவீனம், அப்பிடி அவன் முகத்துக்கு முன்னால ஆட்கள் சொல்லேக்க அவன் வெக்கப்படுறமாதிரிச் சிரிச்சுக்கொண்டு நிற்பான். அண்ணா சரியான நல்லவன். சுயநலமில்லாதவன். தன்ர தங்கச்சிகளுக்காகவே வாழுறவன். சிலநேரங்களில நான் நினைக்கிறதுண்டு, இவன் ஏன் இப்பிடியிருக்கிறானெண்டு. கொஞ்சம் அசடோ?, இல்லாட்டி தற்புகழ்ச்சிக்கு ஆசைப்படுகிறானோ? எண்டெல்லாம் அவன்ர குணத்தை நான் மனசுக்கு ஆராய்ஞ்சு பாக்கிறதுமுண்டு. இருந்தாலும் அண்ணா இப்பிடியிருக்கிறது எனக்கு நல்ல வாசியாயிருந்தது. சில அண்ணன்மார்மாதிரி தங்கச்சிகள் இருக்கேக்கையே தான் கலியாணம் கட்டிக்கொண்டு போயிருந்தானெண்டா நாங்கள் என்ன செய்திருப்பம்? நினைச்சுப் பாக்கவே பயமாயிருக்கும். அதால நான் அண்ணான்ர குணத்தை ஆராயிறதை விட்டிட்டு முதல்ல என்ர குணத்தைத்தான் ஆராய வேணுமெண்டு மனசுக்க ஒருத்தருக்கும் தெரியாமல் நினைக்கிறதுண்டு.
அண்ணாக்கு கலியாணம் நடக்கேக்க அண்ணிக்கு நாப்பத்திமூண்டு வயசு. பிள்ளை பிறக்கேலை. ஆனால் அண்ணாவும், அண்ணியும் நல்ல சந்தோஷமாக் குடும்பம் நடத்தீச்சினம். அண்ணி நல்ல அன்பா அண்ணாவோட வாழ்ந்தா. ரெண்டு பேரும் அடிக்கடி வக்கேஷன் எல்லாம் போய் நாடுநாடாச் சுத்திப் பாத்துக்கொண்டு வருவீனம். அப்பதான் எங்களுக்கு அண்ணாக்கும் ஆசைகள் இருக்கெண்டு விளங்கினமாதிரியிருந்துது. இப்பிடியே பதினைஞ்சு வருஷத்துக்கு மேல போயிட்டுது அதுக்கிடையில எங்களுக்குள்ள, அதாவது அண்ணனின்ர தங்கச்சிமாருக்க நிறையப் பிரச்சனைகள். யாரிட்ட பெரியவீடு, ஆரின்ன பிள்ளை நல்லாப் படிக்குது, யாரின்ர பிள்ளை குழப்படி செய்யுது. இப்பிடி மாறி மாறிப் பிரச்சனைப்பட அண்ணாவும், அண்ணியும் தங்கச்சிமாரிலையிருந்து ஓரளவுக்கு ஒதுங்கிட்டீனம். நாங்கள் போனுக்குள்ளால சண்டை பிடிச்சிட்டு அண்ணாக்கு கோள் மூட்ட எடுத்தால் அவன் ஏதாவது ஆறுதல் சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணீடுவான். ஓவ்வொருத்தரும் அண்ணா எங்களுக்குத்தான் சப்போட் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தம். ஆனால் அண்ணா கவனமா ஒருத்தருக்கும் சப்போட் பண்ணாமல் அண்ணியையும் எங்கட உப்புச் சப்பில்லாத சண்டைக்குள்ள வர விடாமல் பாத்துக் கொண்டான். எல்லாத்துக்கும் கட்சி இருக்கிற மாதிரி எங்கட சண்டைக்கும் கட்சிகள் இருந்துது. நானும் மூத்த அக்காவும் ஒரு கட்சி, சின்னக்காவும் தங்கச்சியும் ஒருகட்சி. நானும் மூத்தக்காவும்; நாங்கள் சரியான நேர்மை எண்டிருந்தம். சின்னக்காவும் தங்கச்சியும் தாங்கள்தான் சரியான நேர்மை எண்டு நினைச்சுக்கொண்டிருந்தீச்சினம். ஆனால் உண்மையிலேயே நாங்கள்தான் சரியான நேர்மை.
3
நாங்கள் நாலு பெட்டைகளும் நாலு விதம். சகோதரிகளெண்டு பெயரே தவிர சாயலில் கூட ஒற்றுமையில்லை. உயரம், கட்டை, வெள்ளை, கறுப்பெண்டு நாலு பேரும் நாலு விதம்.. அதே மாதிரிக்; குணத்திலையும் நாங்கள் நாலு பேரும் நாலு விதமாயிருந்தம்.
பெரியக்கா சரியான பயந்தவ. எல்லாத்துக்கும் பயம். கடவுளுக்கும் பயம், பேயுக்கும் பயம், இருட்டுக்கும் பயம், சரியான வெளிச்சமெண்டால் அதுக்கும் பயம். இவ்வளத்துக்கும் அவவுக்கு கடவுள் நம்பிக்கையுமில்லை, பேயையும் அவ நம்பிறதில்லை. கடவுளையும் பேயையும் தான் நம்பேலை எண்டதாலை தனக்கு ஏதும் நடந்திடுமோவெண்டு சரியான பயம்.
சின்னக்காவுக்குச் சரியான தாழ்வு மனப்பான்மை. தன்னிலை ஒருத்தருக்கும் விருப்பமில்லையெண்டு தானாகவே முடிவு செய்து, சும்மா சும்மா எதையாவது சொல்லி மற்றாக்களின்ர மனசைப் புண்படுத்தியபடியே இருப்பா.. உதாரணத்துக்கு பெரியக்காவுக்குப் பெரிசாச் சாமித்தியச்சடங்கு செய்தது தனக்குச் செய்யேலை, அப்பாக்கும், அண்ணாக்கும் பெரியக்காவிலதான் விருப்பம் தன்னிலை விருப்பமில்லையெண்டு பெரியக்கான்ர மகளின்ர கலியாண வீட்டில அண்ணனோட சண்டைக்குப் போனா. அப்பா பெரியக்காவுக்கு எல்லாத்தையும் சீதணமாக் குடுத்திட்டார் அதால அப்பாக்குத் தன்னில விருப்பமில்லையெண்டு, என்ர மகனின்ர பிறந்தநாளண்டு அழுதா. இப்பிடிச் சம்மந்தா சம்மந்தமில்லாமல் சும்மா சும்மா தன்னைச் சுத்திக் கதையைத் திருப்பி அட்ரென்ஷன் எடுக்கிறதிலை அவவுக்கு நிகர் அவவேதான். ஆனால் ஒருநாள் கூட எனக்கோ தங்கச்சிக்கோ சாமத்தியச்சடங்கு செய்யேலை எண்டதைப் பற்றியோ (செய்ய நான் விட்டிருக்க மாட்டன்) சீதணத்துக்கு எங்களுக்கும் ஒண்டும் அப்பா மிச்சம் வைக்கேலை (சீதணம் குடுக்கவும் நான் விட்டிருக்கமாட்டன்) எண்டதைப் பற்றியோ அவ நினைச்சுப் பாக்கவுமில்லைக் கதைச்சதுமில்லை. இப்பிடியொரு விசித்திரக் கரெக்கடர் சின்னக்கா.


நல்லா நித்திரையாயிருக்கேக்க யாராவது தண்ணியைக் கொண்டுவந்து திடீரெண்டு ஊத்தினா திடுக்கிட்டெழும்பி பேந்தப் பேந்த முழுசிக்கொண்டு நிப்பமே அதுமாதிரி எந்த நேரமும் முழுசிக்கொண்டு ஒரு நிலையில தங்கச்சி. தேவையில்லாததுக்கெல்லாம் விழுந்து விழுந்து பெரிசாகச் சிரிப்பாள் ஏன் சிரிக்கிறாள் என்று ஒருவருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் அவள் சிரிப்பாள். அவளுக்கே தான் ஏன் சிரிக்கிறன் எண்டு தெரியுமோ தெரியாது. ஆனால் சிரிப்பாள். சிலநேரங்களில யாரையாவது அறம்புறமாத் துண்டு கிழியப் பேசுவாள், யாரெண்டில்லை, ரீவியிலை வருகிற பாட்டுக்காறிகளில இருந்து பக்கத்து வீட்டு பாக்கிஸ்தான்காறிவரை தங்கச்சீன்ர வாயில இருந்து தப்பேலாது. அவள் பேசேக்க நான் நினைக்கிறதுண்டு இப்பிடியான வார்த்தைகளெல்லாம் இவள் எங்கையிருந்து பொறுக்கிறாளெண்டு. அதிகமா அவளின்ர வாயுக்க அகப்பட்டுக் கிழியிறது பொம்பிளைகளாகத்தானிருக்கும். இப்பிடி எல்லாரையும் எந்த நேரமும் திட்டிக்கொண்டிருக்கிற ஒரு கரெக்டயாய் அவள் இருக்கிறதால நண்பர்கள் என்பது அவளுக்கு மிகமிகக் குறைவு. அவளுக்கிருந்த ஒரே நண்பியெண்டு சின்னக்காவைத்தான் சொல்லலாம். படத்துக்குப் போறதெண்டாலென்ன, அரங்கேற்றத்துக்குப் போறதெண்டாலென்ன சின்னக்காவோடதான் போவாள். ஒருநாள் பெரியக்கா தாங்கேலாமல் சின்னக்காட்டக் கேட்டா ஏன் இவள் இப்பிடி நாகரீகமில்லாமல் அறம்புறமா தெரியாத ஆக்களக் கூடப் பேசிறாளெண்டு. சின்னக்கா சொன்ன பதில் விசித்திரமாயிருந்தது, அவளுக்குக் குடும்பத்தில சரியான பிரச்சனை, புருஷனோட பிரச்சனை அவளை ஒண்டும் சொல்லிப்போடாதை பாவமெண்டு. சின்னக்கா எல்லா விஷயத்திலையும் தன்னுடைய அரசியலைக் காட்டாமல் இருப்பதில்லை. பெரியக்கா உடன என்னைத் திரும்பிப் பாத்தா, எனக்கு அவவின்ர பார்வையின்ர அர்த்தம் உடன விளங்கீட்டுது. சின்னக்கா இப்பிடித்தான் யாருக்கும் ஏதாவது பிரச்சனையெண்டு நாங்கள் கதைச்சா, உடன அந்தாளுக்குப் புருஷன் சரியில்லை, அவேலுக்க சரியான பிரச்சனையெண்டு பக்கத்தில இருந்து பாக்கிறமாதிரிச் சொல்லிக் கதைய முடிச்சுப்போடுவா. தங்கச்சீன்ர புருஷனை மட்டுமில்லை, பெரியக்கான்ர புருஷனையும் அந்தாள் சரியான நப்பி, அதால பெரியக்கா சந்தோஷமாயில்லையெண்டு எனக்கே சொல்லியிருக்கிறா. அதே மாதிரி என்ர புருஷன் குடிக்கிறது, சிகரெட் பத்திறது அதால நானும் சந்தோஷமாயில்லையெண்டு தங்கச்சிக்கும், பெரியக்காவும் கூடச் சொல்லியிருக்கிறா. எல்லாற்ற புருஷன்மாரைப் பற்றியெல்லாம் விலாவாரியாச் சொல்லுறவ தன்ர புருஷன் பற்றி மூச்சும் விடமாட்டா. சின்னத்தான் குடிக்கிறேலை, சிகரெட் பத்திறேலை, நப்பியுமில்லை, தங்கச்சீன்ர புருஷன் மாதிரி விசர்கதை கதைக்கிறேலை, விடுப்புக்கதைக்கிறேலை, அதால அவ தன்ர புருஷனைப் பற்றிப் பெருமையாய் கதைப்பா. கதைக்கேக்க அடிக்கடி அப்பா அப்பாவெண்டு தன்ர புருஷனைப் பற்றிப் பெருமை கதைக்காட்டி அவவுக்கு இருப்புக்கொள்ளாது. ஆனால் சின்னத்தான் பற்றி வெளியில சொல்லேலாத கதைகள் இருக்கெண்டு அவவுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். எங்களுக்குத் தெரியுமெண்டு அவவுக்கும் தெரியும். நாங்கள், எங்கட பிள்ளைகள், குறிப்பாப் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாருமே சின்னத்தானிலையிருந்து விலகியிருக்கிறமெண்டதும் அவவுக்குத் தெரியும் அதாலதான் தேவையில்லாமல் பத்தைக்குள்ள கொப்பனில்லையெண்ட கணக்கா நாங்கள் சந்திக்கிற நேரமெல்லாம் சின்னத்தான் புகழ்பாடுவா. நான் சிலநேரத்தில நினைப்பன், நாங்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிப்பமெண்டு எங்கட பொறுமையைச் சோதிச்சுப் பாக்கிறாவோ?, இருந்தாலும் பாவமெண்டிட்டு வாய் திறக்கிறேலை.
4
அப்பா ஹார் அட்டாக் வந்து செத்ததால, அண்ணா தனக்கும் ஹார் அட்டாக் வரலாமென்ர பயத்தில் நல்ல கவனமாத்தானிருந்தவர், இருந்தாலும் அவருக்கு ஒருக்கா மைனர் அட்டாக் வந்திட்டுது. அண்ணா அதோட நல்லாப் பயந்திட்டார், தனக்கு ஒண்டு நடந்திட்டா அண்ணி தனிச்சுப் போவாவெண்டு கவலைப்படுறாரெண்டு அண்ணி எங்களுக்குச் சொல்லிக் கவலைப்பட்டா. ஆனால் நாங்கள் ஒருத்தரும் எதிர்பார்க்காத மாதரி அண்ணாக்கு ஹார்ட் அட்டாக் வந்து மூண்டு மாசத்தால உடம்பு செக்கப்புக்குக்குப் போன அண்ணிக்கு கான்ஸரெண்டும் நல்லாப் பரவீட்டுது, கடைசி ஸ்ரேஜ்இல இருக்கிறாவெண்டும் டொக்டர் சொன்னார். அதுக்குப் பிறகு அண்ணா வெளியிலை போறதை முழுசா நிப்பாட்டிப் போட்டார். அண்ணி கண்ணுக்கு முன்னாலையே உருகிக் கொண்டு போகத் தொடங்கீட்டா. அண்ணா, அண்ணியைத் தன்ர பி;ள்ளை மாதிரி பொத்திப் பொத்தி வைச்சுப் பார்த்தார். எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை. வேலை, பிள்ளைகள் வீட்டுவேலையென்று போக மீதியிருந்த நேரத்தை அண்ணாக்குப் போய் உதவிசெய்தம். இந்த நிலமைக்குள்ளையும் சின்னக்கா தன்ர குணத்தை விடேலை.
“நான் இந்தக் கிழமை நாலுதரம் வந்திட்டன், நீ மூண்டுதரம் தானே வந்தனி” சின்னக்கா அட்டவணை போடத்தொடங்க, பெரியக்கா சின்னக்காவுக்குப் பயத்தில ஒவ்வொருநாளும் வேலையால, வீட்டை போய்ச் சமைக்கிறது பிறகு அண்ணாட்டப் போறதெண்டு விசரிமாதிரி அலையத்  தொடங்கினா. நான் போய் நிற்கிற நேரம் சின்னக்கா நிண்டால் அவவின்ர நடிப்பை என்னால தாங்கேலாமலிருக்கும். அண்ணி அண்ணியெண்டு அண்ணிக்கு மேல ஏறி விழாத குறையா எங்களக் கண்ட உடன ஓடியோடி ஏதாவது செய்வா. நான் மனசுக்க கேட்டுக்கொள்ளுவன், “உண்மையிலேயே சின்னக்காவுக்கு அண்ணியில எங்கள விட அன்புதானோ? நான்தான் பிழையா அவவை எடை போடுறனோ? இப்பிடி என்ர மனதுக்க எழுந்த கேள்வியெல்லாம் லண்டனிலயிருந்து மாமா போன் பண்ணிக் கதைச்சதோட மறைஞ்சிட்டுது.
அண்ணிக்கு வருத்தமெண்டு கேள்விப்பட்டவுடன மாமா அண்ணாக்கு போன் பண்ணியிருக்கிறார். சின்னக்காதான் போனை எடுத்தவவாம். அண்டைக்கு அண்ணிக்கு டொக்டர் அப்பொயின்மெண்ட் இருந்ததால அண்ணாவும் அண்ணியும் வீட்டில நிக்கேலை, சின்னக்கா தனிய நிண்டிருக்கிறா. மாமா கொஞ்சநேரம் கவலைப்பட்டுக் கதைச்சுப்போட்டு சின்னக்காவுக்குச் சொல்லியிருக்கிறார், “அண்ணிக்கு ஏதும் நடந்தாலும் நீதான் வேலைக்கும் போறேலை அதோட அண்ணாக்குக் கிட்டவும் இருக்கிறாய் அதால அண்ணாவை நீதான் பாத்துக்கொள்ள வேணும், உங்களுக்கு அவன் நிறம்பச் செய்திருக்கின்றான்” மாமா உரிமையோட சின்னக்காவுக்குச் சொல்லியிருக்கிறா.  உடன சின்னக்கா “ஏன் நான் பார்க்க வேணும், இன்னும் மூண்டுபேர் இருக்கீனம் அவையளிட்டச் சொல்லுங்கோவன், உதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது”, எண்டு மாமாவோட கத்தியிருக்கிறா. மாமா பயந்து போய் போனை வைச்சிட்டார். பிறகு என்னோட எடுத்துக் கதைக்கேக்க “அண்ணாவை நீங்கள்;தான் எல்லாரும் ஒற்றுமையாப் பார்க்க வேணும் அவன் உடைஞ்சு போவான்| சொல்லி விக்கி விக்கி அழத்தொடங்கீட்டார். மாமா அழுதது எனக்குப் பெரிய சங்கடமாப் போச்சு, “என்ன மாமா நீங்கள், நாங்கள் நாலு தங்கச்சிகள் இஞ்ச இருக்கிறம் அண்ணாவை விட்டிடுவமே” நானும் அழுது கொண்டு கேக்கத்தான், சின்னக்கா சொன்னதை தயங்கித் தயங்கி மாமா எனக்குச் சொன்னார். எனக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. சின்னக்கா சரியான நடிப்பு, வேஷம் எண்டு தெரிஞ்சாலும் அண்ணான்ர விஷயத்திலையும் இப்பிடியிருப்பாவெண்டு நான் நினைக்கேலை, அதுவும் மாமாவுக்கு அப்பிடிப் பேசிப் போட்டு இப்ப இஞ்ச அண்ணா வீட்டை வந்து நிண்டுகொண்டு அண்ணியைக் கொஞ்சுறதும், “எங்கட இளவரசி, ராசாத்தி  எங்களுக்கு அம்மா மாதிரி” எண்டு உருகிறதும். எனக்கு வாய் துருதுருக்கும் ஏதாவது சொல்லாமெண்டு பிறகு, இஞ்ச வந்தும் நாங்கள் சண்டை பிடிச்சா அண்ணா உடைஞ்சு போவானெண்டு நான் பல்லக்கடிச்சுக்கொண்டிருந்தன்.
அண்ணா ஒண்டையும் கவனிக்காமல் அண்ணிக்குப் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொள்ளுவார். அண்ணி கொஞ்ச நாளிலையே எலும்பும் தோலுமா மெலிஞ்சு போனா. இனி அவவை வீட்டில வைச்சிருக்கேலாதெண்டு டொக்டர் அவவை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரச் சொன்னார்;. அண்ணி தன்ர நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாவெண்டு அண்ணாவுக்கு வடிவா விளங்கீட்டுது. அவர் ஆஸ்பத்திரியிலையே போய் இருந்து கொண்டார். சின்னக்கா பெட்சீட், தலையணியெல்லாம் கட்டிக்கொண்டு தானும் ஆஸ்பத்திரியில போய் இருந்திட்டா. பெரியக்காவுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேலை. தான் போகாட்டித் தனக்கு அண்ணாவில விருப்பமில்லையெண்ட சின்னக்கா சொல்லிப் போடுவாவெண்ட பயம் அவவுக்கு. மாமாவோட சின்னக்கா கதைச்ச விஷயத்தை நான் பெரியக்காவுக்குச் சொல்லேலை. மாமா என்னட்டை ஒருத்தருக்கும் சொல்லிப்போடதை பிறகு பெரிய பிரச்சனையாப் போயிடுமெண்டு சத்தியம் வாங்கிப் போட்டார். அண்ணியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மூண்டாம் நாள் டொக்டர் எல்லாரையும் ஆஸ்பத்;திரிக்கு வரச்சொன்னார். எல்லாருக்கும் முடிவு விளங்கீட்டுது. என்ன செய்யிறது எப்பிடி அண்ணாவைத் தேற்றப்போறமெண்டு தெரியாமல் தவிச்சுக் கொண்டிருந்தம். அண்ணா தலையைக் குனிஞ்சு கொண்டு விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். நாங்கள் எல்லாருமே அழுதுகொண்டிருந்தம் இந்த நேரம் ஒருத்தரும் பொய்யா அழுத மாதிரி எனக்குப் படேலை. அண்ணியை விட அண்ணாவை நினைச்சுத்தான் நான் கூட அழுதன். வாழ்க்கை முழுவதும் எங்களுக்காக வாழ்ந்த அண்ணன், கொஞ்சக் காலம் தனக்காக வாழத்தொடங்க அது கூட நிலைக்காமல் இப்பிடி இடையில போட்டுதெண்டு என்ர மனசு பதறிக்கொண்டிருந்தது.  அண்ணா குனிஞ்ச முகத்தைத் தூக்கி எங்கள் எல்லாரையும் பார்த்து “என்னை இப்பிடித் தனிய விட்டிட்டுப் போகப்போறாவே” எண்டு கேவிக்கேவி அழுதார். நாங்கள் எல்லாருமே என்ன செய்யிறதெண்டு தெரியமல் அழத்தொடங்கினம். என்ர மனசில “அண்ணா உனக்கு நான் இருக்கிறன்” எண்ட புலம்பல்தான் விக்கலோட எழுந்தது. நிச்சயமாக பெரியக்கா, தங்கச்சி எல்லாருக்கும் அப்பிடித்தான் இருந்திருக்கும். சங்கடமான ஒரு பொழுதில வார்த்தைகள் வெளிவராமல் முட்டுப்பட்ட உணர்வுகளோட, அழுகை ஒன்றைத் தவிர எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில தவிச்சுக்கொண்டிருந்தம். சின்னக்கா உடன அண்ணாக்குப் பக்கத்தில ஓடிப்போய் அவற்றை தலையைத் தன்னர தோளோடை சாய்ச்சு “அண்ணா உனக்கு நானிருக்கிறனண்ணா, நீ அழக்கூடாது, உன்னிலை நான் எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறன் எண்டதை நான் இனி உன்னைக் கவனிக்கப் போறதிலையிருந்து நீ அறிஞ்சு கொள்ளுவாய், அண்ணிக்கு ஏதாவது நடந்திட்டால் நீ என்னோட வந்து என்ர வீட்டில இரு, உன்னை நான் தனிய விடமாட்டன். என்ர வீடு பெரியவீடு, நான் வேலைக்கும் போறேலை, நல்ல பெரிய அறையிருக்கு நீ வந்து என்னோட இருக்கலாம், யோசிக்காதை” அண்ணான்ர முகத்தைத் தடவித் தடவிச் சின்னக்கா சொன்னா. அண்ணா சின்னக்காவைக் கட்டிக்கொண்ட அழத்தொடங்கினார். எனக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. மாமாமேல கோவமும் வந்தது, இவ்வளவு காலமும் சின்னக்காவில இருந்த சந்தேகமெல்லாம் போய் பெரிய மரியாதை எனக்குள்ள எழுந்து நிம்மதியாயிருந்தது. பெரியக்கா என்னைப் பார்த்தா, ஆனால் நான் இந்த முறை அவவைத் திரும்பிப் பாக்கேலை. சும்மா மற்றாக்களை சந்தேகப்பட்டு கொசிப் அடிக்கிறதை இத்தோட விட்டிட வேணுமெண்டு மனசுக்க நினைச்சுக்கொண்டன். நாங்கள் மனசுக்க வேதனைப்பட்டம் ஆனால் உடனடியான அண்ணாவை அரவணைச்சு அவனைத் தன்னோட கூட்டிக்கொண்டு போகிற முடிவை அந்த நேரம் எடுத்த சின்னக்கா போல் நான் இல்லாமல் போயிட்டேனே என்ற வருத்தம் எனக்குள்ள உறுத்திச்சு.
5
மெல்லக் கவியத்தொடங்கும் இருளுக்கு நடுவில் வீடு அமைதியாய்க்கிடந்தது. அங்கங்கே விசும்பல்கள் இருந்தாலும் எல்லோரும் களைத்துப் போயிருந்தார்கள். மூக்கால் வடியும் சளிநீரைத் துடைக்க ஏதாவது கிடைக்கிறதா என்று பக்கத்தில் தேடிப்பார்த்துக் கிடைக்காததால் புறங்கையால் தேய்த்துச் சட்டையின் நுனியில் துடைத்துக்கொண்டேன். அடுக்கி வைத்தால் போல் சாய்ந்து சரிந்த சொந்தங்களுக்கு நடுவில் விசும்பல்களும், குசுகுசுப்புக்களும் சந்தோஷமில்லாமல் சுழன்றுகொண்டிருந்தன. நான் மெல்ல அயரத்தொடங்கினேன். நேற்றைய இரவின் நித்திரையின் இழப்பு என்னை நித்திரைக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. பாய் விரித்த நிலத்தில் படுத்துப் பழக்கப்படாத உடம்பு நோவினால் சுண்டத்தொடங்கியது. அசைத்து அசைத்து இதமான ஒருநிலையைத் தானாகத் தேடிக்கொண்டிருந்து என் உடம்பு. ஒரு நிமிடம் கண்மூடி ஆழ்நிலைக்குப் போன உடலைத் திடுக்கிடச்செய்து எழுப்பியது கூட்டத்தின் சலசலப்பு. யாரோ வருகின்றார்கள். நிச்சயமாக முக்கியமான ஒருவராகத்தான் இருக்கும். இன்று முழுவதும் ஆட்கள் வந்து வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். தொடக்கத்தில், அயர்ந்திருந்த அனைவரும் எழுந்திருந்து விசும்பி, கட்டியணைத்து, மௌனமாயிருந்து, பின்னர் போகப் போகக் களைத்த நிலையில் வருபவருக்கு வேண்டியவர் மட்டும் எழுந்திருந்து எதையாவது கதைத்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் ஒரு மௌனநிலையில் வெறித்தபடியிருந்தார்கள். எல்லோரின் ஆறுதல் வார்த்தைகளும் ஒரே சாயலாயிருந்தது. “கிடந்து இழுபடாமல், சுகமாப் போட்டா எண்டு சந்தோஷப்படுங்கோ” அவர்கள் சொல்லச் சொல்ல நாங்கள் விசும்பினோம்.
வந்தவர் எங்களது பாராளுமன்ற உறுப்பினர். தமிழர். ஒரு தமிழர், முதல் தமிழர் பாராளுமன்ற உறுப்பினராய் வந்ததை எல்லோரும் பெருமையாகக் கொண்டாடியிருக்கின்றோம். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் அவர் எங்கு சென்றாலும் ஒட்டியபடி சென்றுகொண்டேயிருந்தது. அக்கூட்டத்திற்கு அவர் எந்தக்கட்சி என்பதுபற்றி அக்கறையில்லை, கென்சேரவர்டிவ், லிபரல், என்.டி.பி எதுவாகவுமிருக்கட்டும் அவர் தமிழராயிருந்தால் அவர்களுக்குப் போதுமாயிருந்தது. கனடாவில் பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக ஒரு தமிழர் இருந்தால் ஈழம் கூட எடுத்துத் தந்துவிடுவாரென்று சிலர் நம்பி;க்கொண்டிருந்தார்கள். இப்போது ஒரு இலங்கைத் தமிழர் அமெரிக்காவிலும், பாராளுமன்றத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதால் விரைவில் ஈழம் கிடைத்துவிடலாம் என்று பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியிருந்தன.
நாங்கள் அவர் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. கலைநிகழ்வுகள் விளையாட்டுப் போட்டிகளில் அவரைக் கண்டிருக்கின்றோம், ஆனால் ஒரு மரணவீட்டிற்கு அதுவும் வீட்டிற்கே அவர் வருவார் என்று நாம் (நான்) எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கொஞ்சம் ஓவராகப்பட்டது. சின்னக்கா அவசரமாக நாங்கள் படுத்திருந்த பாயைச் சுருட்டி சோபாவிற்குக் கீழ தள்ளிவிட்டு, தலையணைகள் ஊத்தையாயிருந்தால் வந்தவர்கள் கண்டுவிடாதபடி பெட்சீட்டால் போர்த்தி மூடி அறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தா. எல்லாவற்றையும் மறைத்துவிடுவதால் எம்மை மேல்தட்டு மக்கள் என்று மற்றவர்களை நம்பவைக்க முடியும் என்பது அவள் கணிப்பு. அண்ணா அறைக்குள் படுத்திருந்தார். அவரை எழுப்பவெண்டு நான் எழும்ப, வேண்டாம் நாங்கள் வந்து போனோம் என்பதை அவருக்குச் சொன்னால் போதும், பின்னர் மண்டபத்தில் வந்து நாங்கள் அவரைச் சந்திக்கின்றோம், இப்ப அவரைக் குழப்பவேண்டாம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று என்னைத் தடுத்துவி;ட்டார்கள். சின்னக்காவின் முகம் முழுக்கச் சிரிப்பு. பெருமையாய் புன்னகைத்தபடியே இருந்தாள். கொஞ்ச நேரத்திற்கு மரணவீடு என்பதைக் கூட மறந்துவிட்டாள் போல்ப் பட்டது. புன்னகை மாறாத முகத்துடன் வந்தவர்கள் தனக்காய்த்தான் வந்திருக்கின்றார்கள் என்பதுபோல் அவர்கள் பக்கத்திலிருந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினாள். வந்தவர்கள் எல்லோருமே பக்காத் தமிழர்கள். உரையாடல் சுற்றிச் சுற்றி அண்ணியின் புகழ் பாடுவதாயிருந்தது. அண்ணிக்குத் தன்னில் எவ்வளவு விருப்பம். தானும் அண்ணியும் சகோதரிகள் போல பழகினார்கள், தான் அண்ணியை எங்கெல்லாம் கூட்டிக்கொண்டு போனாள் என்று தன்னைச் சுற்றி வழமை போல் கதைக்கத் தொடங்கினாள். வந்தவர்கள் அனைவரும் சின்னக்கா சொல்வதற்குத் தலையாட்டியபடியிருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஆங்கிலத்திலும், மற்றவர்கள் தமிழிலுமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள். சிலரின் முகத்தில் தம்மால் ஆங்கிலத்தில் சரளமாக உiராயாட முடியவில்லை என்ற ஏக்கம் தேங்கிக் கிடந்தது. நான் கைகளைப் பிசைந்து நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தேன். தங்கச்சி வந்தவர்களுக்கு அழுத்திக் கழுவிய கிளாசினில் ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் முகத்திலும் பெருமை குறையவில்லை. சின்னக்கா பெருமைப் படும் விஷயங்கள் அனைத்திற்கும் அவளும் பெருமைப் படுவாள். அதற்கான காரணம் அவளுக்கே தெரிவதில்லை. பெரியக்கா சின்னக்காவின் கதைககளில் விறைத்துப் போய் என் முகத்தைப் பார்த்த படியேயிருந்தாள். வந்தவர்களில் ஒருவர் சின்னக்காவிடம் கேட்டார் “அப்ப அண்ணா இனி எங்கை இருக்கப் போறார் உங்களோடையே?” சின்னக்கா நிதானமாக ஆறுதலாகப் பதில் சொன்னாள், “இல்லை நாங்கள் நாலு தங்கச்சிமார். எல்லாருக்கும் அண்ணா எண்டாச் சரியான உயிர். ஓருஆள் தனியாக் கொண்டு போய் அண்ணாவை வைச்சிருப்பது சரியா இருக்காது, அதால நாங்கள் சரிசமனா நாலாய் வெட்டி ஆளுக்கு ஒருபகுதியைக் கொண்டு போகலாம் எண்டு நினைக்கிறம்” நான் திடுக்கிட்டுத் திரும்பினேன், அண்ணா நின்றுகொண்டிருந்தான்.

Published - yarl.com
September 02, 2020