Monday, March 5, 2018

Demons in Paradise








அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜூட் ரட்ணத்தின் இயக்கத்தில் உருவான "Demons in Paradise"  பார்க்க கிடைத்தது. இயக்குனர் இலங்கையில், கொழும்பில் வாழ்ந்த ஒரு தமிழனாய் அவரைப் பாதித்த விடையங்களை ஒரு narrator ஆகவும்போராட்ட சூழலில் தனக்கு அதிகம் தகவல்களை தரக்கூடிய தனது மாமா மூலமும் கதையை நகர்த்தி சென்றுள்ளார்
திரைப்பட ஆரம்பத்தில் கறுப்பு வெள்ளையில் இலங்கை ஆதிக்குடிகள், காலனித்துவகாலம் என்பன சிலவினாடிகள்  காட்சிப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து, கைவிப்பட்ட புகையிரதம் அதன் இடையில் ஊடுருவி வளர்ந்து நிற்கும் ஆலமரம் ஒன்றின் அடியிலிருந்து திரைப்படம் ஆரம்பித்தது ஒரு தரமான படைப்பின் குறியீடாக நம்பிக்கையை வரவழைத்தது.

Demons in Paradise இல் நான் மூன்று விடையங்களை முக்கியமாக பார்க்கின்றேன்.
ஒன்று - 83 ஆம் ஆண்டுக் கலவரத்தின் போது கொழும்பில் சிங்கள காடையர்களினால், அல்லது இளைஞர்களினால் தமிழ் இளைஞன் ஒருவன் நிர்வாணமாக்கப்பட்டு பெட்ரோல் ஊத்தித் கொழுத்தப் படுவதற்கு முன்னால், எடுக்கப்பட்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தை எடுத்து உலகிற்கு காட்டிய புகைப்பட கலைஞனுடனான அனுபகப் பகிர்வு, சம்பவம் நடந்த இடத்தில் வைத்துக் காட்சிப் படுத்தப் பட்டிருந்ததும், தற்போது புகைப்படக் கலைஞனாக இருக்கும் அந்த சிங்களக் கலைஞர் அப்போது ஒரு  பத்திரிகை நிருபராக இருந்து நடந்த கோரச் சம்பவத்தை, அந்தக் கோரத்தின் சுவடு மறையாமல் வழங்கியிருப்பதும் அவரின் மனதில் அந்தக் காட்சி இன்றும் பதிவாயிருக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்திருக்கின்றது.
சம்பவத்தைப் படம் பிடித்திருக்கின்றீர்கள், ஆனால் அந்தக்  கோரச் சம்பவத்தை தடுக்க நீங்கள் ஏன் முயலவில்லை என்ற கேள்விக்கு, அப்போது அந்த இடத்தில் அப்படியான பல சம்பவங்கள் நிகழ்ந்தன, தன்னால் புகைப்படத்தை எடுத்துத் தமிழ் மக்கள் மேல் நடாத்தப்பட்ட வன்முறையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதை தவிர வேறு எதும் அந்தச் சந்தர்ப்பத்தில் முடியவில்லை என்ற தனது கையறு நிலையை வருத்தத்தோடு தெரிவித்திருந்தார். இயக்குனருடன் இந்த ஊடகவியலாளர் பற்றி நான் கேட்ட போது, தனக்கு அவரைக் கண்டுபிடித்து அவரோடு ஒரு சுமூகமான நட்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள சம்மதிக்க வைப்பதற்குத் தனக்கு இரண்டு வருடங்கள் பிடித்தன என்று கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் இயக்குனரின் நம்பிக்கையையும், உழைப்பையும் பாராட்டாமல் என்னால்  இருக்க முடியவில்லை.

அடுத்து கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரதத்தில் கடந்த நாற்பது வருடங்களாக சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் இயக்குனருக்குக் கொடுத்த வாக்குமூலம். அவர் விரிவாக எதையும் கூறவில்லை, இருப்பினும் அவர் கூறிய சில சொற்களே அங்கே இடம்பெற்ற கொடூரத்தை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது. "நான் அனைத்தையும் பார்த்தேன், வன்முறைத் தாக்குதல், கொலை, இரயிலிருந்து இராணுவத்தினரால் எடுத்து வெளியே எறியப்பட்ட தமிழர்கள்". இந்திய, பாக்கிஸ்தான் போரின் போது இரயில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களை திரைப்படங்கள் மூலம் பார்த்திருக்கின்றேன். அப்போது என் மனக்கண்ணில் அந்தக் காட்சிகள்தான் படம் போல் ஓடியது.

இறுதியாக மிகமுக்கியமாக நான் பார்த்தது, முக்கிய சில இயக்கங்களில் இணைந்திருந்த பல இளைஞர்கள் (தற்போது தமது 50, 60களில் உள்ளர்கள்) ஒன்று கூடி தம்மைத் தாமே மறுவிசாரிப்புக்கு உள்ளாக்கியது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று நேரடி வர்ணனை செய்தார். இரவு வேளை அவர் அந்த வீதியில் வேகமாக அங்குமிங்கும் பார்த்தபடி சென்று அவர்கள் ரெலோ அமைப்பின் மேல் மேற்கொண்ட தாக்குதலை விவரித்தார். அந்த வேளை தடுமாற்றத்தோடு "800, 900 பயிற்சிபெற்ற இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டார்கள், அவர்களும் எங்களைப் போல் எமது மக்களுக்காகப் போராட வந்தவர்கள் தானே என்று உணர்சி பொங்கக் கூறினார். அவ்வேளை கண்கலங்காத பார்வையாளர இருந்திருக்க மாட்டார்கள்.  தொடர்ந்து பல கொலைகளுக்கு உடைந்தையாக இருந்த, கொலைகளைச் செய்த பலர் தற்போது புலம்பெயர்ந்து (குறிப்பாக அவர் கனடாவைக் குறிப்பிட்டிருந்தார்) திருமணம் செய்து குடும்பமாக வாழ்கின்றார்கள், இவர்கள் எல்லோரும் மௌனம் காக்காமல் பேச வேண்டும் என்றார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்திருந்து உரையாடியது மனிதத்தில் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது.

“Demon’s In Paradise” 83ல் ஆரம்பித்த இனப்படுகொலையில் தொடங்கிப் பின்னர், அனைத்து இயக்கங்களும் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட காலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இதில் பலருக்குக்கு முரண்பாடு உள்ளது, அது இயக்குனரின் தெரிவு. அது அவர் சார்ந்த அரசியல், இயக்குனர் தவறான தகவல்களைத் தராதவரையில் திரைப்படத்தை ஒரு நேர்மையான விமர்சகனால் மறுக்க முடியாது.

Tatiana de Rosnay “Sarah’s Key” எழுதியபோது, பிரெஞ்சு மக்கள் பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. யூத மக்களை அதிகம் கொன்ற ஜேர்மெனியர்களைப் பற்றிய படைப்புகள் வெளிவந்த போது அதை ஏற்றுக்கொண்டவர்களால், பிரெஞ்சு நாட்டிலும் கணிசமாக அளவு யூதமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த ரகசியம் வெளியில் வந்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “Demon’s In Paradise” மேல் எதிர்மறை விமர்சனம் வைக்கும் தமிழ் மக்களின் பார்வையையும் அப்படித்தான் என்னால் பார்க்க முடிகின்றது

முதல் இலங்கைத் தமிழரின் ஒரு படைப்பு “கான்ஸ்” திரைப்படவிழாவில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது என்று அறிகின்றேன். யூட் ரட்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.