Thursday, April 1, 2021

வாழ்க்கை



கையிலெடுத்து 

மிக அருகில் கொண்டு வந்து 

உற்றுப் பார்த்தேன்.

மெல்லிய வெடிப்பு மயிர்போல் குறுக்கே

நெளிந்து ஓடியது.

எங்காவது தட்டுப்பட்டால்

இரண்டாகப் பிளக்கக் கூடும்.

ரபர் பாண்ட்டெடுத்து

இறுக்கி சுற்றிப் போட்டு

மேசையில் வைத்தேன்.

இளம் சிவப்பு ரப்பர் பாண்ட் துருத்திக் கொண்டு நின்றது.

கழற்றிப் போட்டேன்.

இரண்டாகப் பிரிவதற்கு முன்னால்

ஒட்டுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தாயிற்று

எல்லாமுறைகளும் அடையாளத்தோடு

துருத்திக் கொண்டு நின்றன.

எறிவதற்கும் மனமில்லை.

ஒட்டுவதில் அதிகம் துருத்தாத

ஏதோ ஒருமுறையை மனமின்றித்

தெரிவுசெய்து திருப்திப் பட்டுக் கொண்டேன் என் வாழ்க்கையை போல்

Wednesday, March 31, 2021

A GIFT TO MY FRIEND

A POEM BY KARUPY SUMATHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


My friend had just a lone pair of 

slippery shoes

Snow, Rain, Sun

_ whatever be the case

They made  her slip and fall

causing injuries all over.

One day she came with a wound in hand

On asking she did tell

she slipped and fell 

Another day she came limping.

On asking she did tell

She slipped and fell

Yet another day 

on her cheek

 yet another day

on her back

the shoes let her slip and made her fall

causing wound awful.

For her birthday I gifted her 

three pairs of shoes

to tread along the changing seasons.

The next day she came

wounded on her forehead.

On asking she did tell

She slipped and fell 

inside the bathroom.

That wound looked like the heel of the 

shoe 

I  had gifted her.


Karupy Sumathy


தோழிக்குப் பரிசு


ஒரேயொரு வழுக்கும் 

சப்பாத்து மட்டும்தான் 

என் தோழியிடமிருந்தது.

பனி, மழை, வெய்யில் 

எதுவாகினும் 

அது அவளை 

வழுக்கி விழுத்தி

உடலெல்லாம் காயத்தை

உண்டாக்கியது.

ஒருநாள் கையில் காயத்துடன்

அவள் வந்தாள், கேட்டால் 

வழுக்கி விழுந்ததால் பட்ட அடியென்றாள்

இன்னொருநாள் 

காலை நொண்டிக்கொண்டு

அவள் வந்தாள், கேட்டால்

வழுக்கி விழுந்ததால் பட்ட அடியென்றாள்.

இன்னுமொருநாள்

கன்னத்திலும்,

இன்னுமொருநாள்

முதுகிலும்

சப்பாத்து வழுக்கி 

அவளுக்கு காயத்தை 

உண்டாக்கியிருந்தது.

நான் அவளின் பிறந்தநாளுக்கு

பனி, மழை, கோடையென

காலமாற்றத்திற்கேற்ப

மூன்று சப்பாத்துக்களை பரிசளித்தேன்

அடுத்த நாள் நெற்றியில் காயத்துடன் 

அவள் வந்தாள், கேட்டதற்கு

குளியல் அறையில்

வழுக்கிவிழுந்ததாகச் சொன்னாள்.

அந்தக்காயம் நான் பரிசளித்த

சப்பாத்தின் குதிபோலிருந்தது.


11-03-21

அமானுஷ்யங்கள்


புனலூதிய புகையினுள்

அசைந்து மறைந்தது

உருவமொன்று,

சட்டையை இழுத்து

விட்டுக்கொண்டேன்.


கழுத்து வியர்வையில்

தோய்ந்த மார்பகங்கள்

போர்வைக்குள் அவிந்துஅரித்தன

துருதுருக்கும் 

கைகளையடக்கி

சுவரின் கண்களுக்கு

தீனிபோட மறுத்து

சிலையானேன்.


படுக்கையறை

குளியலறை

குசினி

கிணற்றடி

சிவந்த கண்களுடன்

என்னை விழுங்க

தொடரும் அமானுஷ்யம்.


பிடுங்கி எறியப்பட்ட

என் குரல்கள் 

செவிகளில் விழாது

சிரிக்கும் உறவுகள்.


பத்துக்கைகள்

விரித்து உடல் அளையும்

அமானுஷ்யத்தின் கழுத்தில்

தொங்கிக்கொண்டிருந்து

என்னிலிருந்து

புடுங்கியெறியப்பட்ட

குரலின் மாலை.

பெண்ணியவாதி



எழுத்துக்களின் மேல் சேற்றையிறை

பதாகைகளைப் பிடுங்கி காலால் நசி

வேஷம் என்று

போர்வை என்று

போலி என்று

பிணைந்த கைகளை வாளாலறு

போதவில்லையா?

வெட்டியொட்டி

நீலப்படமும் வெளியிடு


இப்போது

பட்டத்தின் கயிறு

உம்மிடமில்லை

எங்களிடம்தான்

கற்றை மயிருக்குள்

சுருண்டு கிடக்கும்

உம் ஆண்குறி விறைப்பெடுத்தாலும்

எம் ஒற்றை மயிரையும்

புடுங்கிடமுடியாது.

Thursday, March 11, 2021

தோழிக்குப் பரிசு



ஒரேயொரு வழுக்கும் 

சப்பாத்து மட்டும்தான் 

என் தோழியிடமிருந்தது

பனி, மழை, வெய்யில் 

எதுவாகினும் 

அவள் அதை அணிந்து நடப்பதால்

வழுக்கி, வழுக்கி விழுந்து

அடிபட்டதில் 

உடலெல்லாம் காயம்.


ஒருநாள் கையில் காயத்துடன்

அவள் வந்தாள், கேட்டால் 

சப்பாத்து வழுக்கி விழுந்ததால் 

பட்ட அடியென்றாள்

இன்னொருநாள் 

காலை நொண்டிக்கொண்டு

அவள் வந்தாள், கேட்டால்

வழுக்கி விழுந்ததால் 

பட்ட அடியென்றாள்.

இன்னுமொருநாள்

கன்னத்திலும்,

இன்னுமொருநாள்

முதுகிலும்

சப்பாத்து வழுக்கி 

அவளுக்கு காயத்தை 

உண்டாக்கியிருந்தது.

நான் அவளின் பிறந்தநாளுக்கு

பனி, மழை, கோடையென

காலமாற்றத்தற்கேற்ப

மூன்று சப்பாத்துக்களைப் பரிசளித்திருந்தேன்

அடுத்த நாளும் அவள் 

நெற்றியில் காயத்துடனே வந்தாள்

கேட்டதற்கு,

குளியல் அறையில் வழுக்கிவிழுந்ததாகச் 

சொன்னாள்.

அந்தக்காயம்

சப்பாத்தின் குதிபோலிருந்தது.

Saturday, March 6, 2021

வேலைக்காரி


நான் நல்ல வேலைக்காரி,

மகஷாசுரமர்த்தினியை விட பலசாலி.

எனக்கு வேண்டியது பணம் மட்டுமே.

உங்கள் வீட்டு மாபிள் பதித்த குசினியையும், மகோகனி நிலத்தையும் ஒரு நொடியில் துடைத்துவிடுவேன், 

ஓடும் தண்ணீரின் சலசலப்பு 

எனக்கு இசையெனினும், உங்கள் வீட்டுத் தண்ணீர் கட்டணம் பாதியாகும் என்னால்.

சாப்பிட என்ன வேண்டும்? 

லிஸ்டைத் தாருங்கள். 

உங்கள் பீச் மர சாப்பாட்டு மேசையில் காத்திருக்கும் சாப்பாட்டு உரிசையில் இரண்டு கிலோ நீங்கள் கூடலாம். 

பரவாயில்லை உங்கள் நிலக்கீழ் அறையிலிருக்கும் உடற்பயிற்சி மையத்தில் எடையை குறையுங்கள். 

நிறங்களைப் பாதுகாப்பாகப் பிரித்து உடைகளை துவைத்தும், மடித்தும் வைப்பேன்.

என்னை வேலைக்காரியாக ஏற்றுக்கொள்ளுங்கள். 

எனக்கு வேண்டியது பணம் மட்டுமே.

தலைவரின் மரியாதையைப் பெற்ற 

உங்கள் மேல், அதிக மரியாதை எனக்குமுண்டு. 

உங்கள் மனைவி வீட்டிலில்லையா, 

கவலை வேண்டாம்.

நான் உங்கள் வேலைக்காரி.

மகஷாசுரமர்த்தினியை விட அழகானவள்.


25-02-2021

கருவாலி

கருவாலி


நீ விட்டுச்சென்றபின் நான் 

பேதலிப்பேனென்றெண்ணாதே. 

உழன்றசையும் காற்று எனை உயரத்தூக்கி நடனமாடுகின்றது.

இசையும், நடனமுமாய் நிறைந்திருக்க,

காய்ந்த பீங்கான் மேல் சொட்டுச்சொட்டாய் தெறிக்கின்றது தண்ணீர்.


படுக்கையறையின் துளையொன்றில் பதிந்திருந்த ஒற்றைக்கண்ணை  இப்போது காணவில்லை.

கட்டில் விரிப்பை கலைத்துப்போட்டு உரத்துச்சிரிக்க முடிகின்றது என்னால். 

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே. 


நேர் கோட்டை அழித்தாயிற்று. என் கையிலிருக்கும் வெண்கட்டி தாறுமாறாய் கோடுகளை வரைகின்றது. 

கைதட்டி, ஆர்ப்பரித்து நான் வரைந்த கோடுகளை இரசிக்கின்றார்கள். 

நான் இன்னும் நூறு கோடுகளை வரைவேன்.

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே.


பல மொழிகள் என் கைவசமிருப்பதை நீ ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

புறாக்களுடனும், கரப்பான் பூச்சிகளுடனும் என்னால் பேசிக்கொள்ள முடிகின்றது. 

நேற்றிரவு வெள்ளெலியொன்று 

எனை முத்தமிட்டுச் சென்றதை உனக்குச்சொன்னால், 

நீ கெக்கலித்துச்சிரிக்கக்கூடும். 

இறுகிய ஒற்றைக் கல்லல்ல இனி நான்.

பல அடுக்குகளைக்கொண்ட கருவாலி.

அதனால், நீ விட்டுச்சென்றபின் நான் பேதலிப்பேனென்றெண்ணாதே.


18-01-2021

நீர்மகள்

 நீர்மகள்


பாய்கின்ற உடல்

அலைகளின் திமிர்

ஹேர்டீன் காலத்து இளவரசி


சுழிக்குள் அடங்கமறுக்கும் 

கால்களின் சுழற்சி

தாழ்ந்து பறக்கும் பறவையின்

நிழலில் கரையும்

ஓரிரவேனும் கடவுளுடன் கதை பேசலாம்

அவளோடு அவளாக 

சூரிய ஒளியிற்சிதறும் விரிநீர்

வெளிக்கிளம்பும் குமிழி 

அவள் கூவலின் உயிர்கோளம் சிதறும்


தூவான இசை அனைத்தையுமடக்கும்


27-02-2021

நீலச்சட்டைச் சிறுமியின் நடனம்


கருமேகங்களை விலத்தி

மென்நீல மேகத்தை இழுத்தெடுத்து

முகில்களை

கழுத்திலும், கை நுனியிலும் சுருக்கு வைத்து அம்மா எனக்கொரு சட்டை தைத்துத் தந்தாள்.  

வெட்கம் தின்ன நீலச்சட்டையணிந்து நான் சுழன்று, சுழன்று நடனமாடியபோது, மஞ்சள் சட்டையில் என் தங்கை துள்ளிக் குதித்தாள்.


கடலின் அடியிருந்து கடைந்தெடுத்துவந்த

கருநீல அலைகளில், முத்துக்களை பரவவிட்டு அம்மா எனக்கொரு “மாக்ஸி” தைத்துத் தந்தாள். 

பெருமை பொங்க நான் மாக்ஸியில் வளைந்து, நெளிந்து நடனமாடியபோது,

பச்சைப்பாவாடையில் தங்கை துள்ளிக் குதித்தாள். 


மயிலிறகைப் பறித்துவந்து நீலத்தைப் பிரித்தெடுத்து, பொன்வண்டைக் கரைக்கு வைத்து அம்மா எனக்கொரு "பெல்பொட்டம்" தைத்துத் தந்தாள். 

அதிசயத்தில் நான் ஒற்றைக்கால் தூக்கி "பலே" நடனமாடியபோது, சிவப்புச் சட்டையில் தங்கை துள்ளிக்குதித்தாள்.


அம்மா சிவப்பில் எனக்கொரு சட்டை வேண்டுமென்றேன்.

"நியோன்" நீலத்திலெனக்கொரு முழுப்பாவாடை தைப்பதாக அம்மா சொன்னாள்.

அம்மா மஞ்சளில் எனக்கொரு சட்டை வேண்டுமென்றேன்.

அரச நீலத்திலெனக்கொரு அரைப்பாவாடை தைக்கிறேனென்றாள் அம்மா.  

பச்சை சட்டை வேண்டுமென்று அடம்பிடித்த எனைப்பார்த்து அம்மா சொன்னாள், "கறுப்பி உனக்கு நீலம்தான் பொருந்தும்" என்று. 

அன்றிலிருந்து நான் அம்மணமானேன்.


Caroline Lejeune - Contemporary French Painter

புலூட்டோஸ்

புலூட்டோஸ்


கைநிறைய சில்லறையத் திணித்தார் மாமா.


மூலைக்கடைக்கு 

ஓடிச்சென்று வாங்கிவரும் வழியிலேயே 

ஒரு புலூட்டோசை வாயுக்குள் திணித்துக்கொண்டேன்.


என்னைத்தூக்கித் தன் மடியில் வைத்தார் மாமா.


வாயோரம் ஒழுகிய கறுப்புக்களியை 

புறங்கையால் துடைத்தபடி, 

அடுத்த புலூட்டோசின் 

மெல்லிய, வெள்ளை உறையைக் 

கிழிந்துவிடாமல் உரித்தெடுத்தேன். 


சாரத்தை நகர்த்தி 

தன் ஆண்குறியில் என்னை 

இருத்திக் கொண்டார் மாமா.


சௌகர்யமற்ற இருப்பினால் நான் நெளிய, அடுத்த புலூட்டோசை உறையிலிருந்து பிரித்தெடுத்து என் வாயினுள் திணித்துவிட்டார் மாமா.


தலைசரித்து ஒற்றைக் கண்ணால் 

எச்சரிக்கை செய்தது மதில்காகம்.


தவறிவிழுந்த புலூட்டோசை 

எடுக்கக்குனிந்த என்னை 

இறுக்கிக் கொண்ட மாமாவின் 

சுடுமூச்சு என் கழுத்தோரம் பரவிற்று. 


முன்கால்கள் இரண்டையும் நிலத்திலூன்றி, 

மேற்சொண்டு பற்களை மேவ, 

கோவமாய்க் குரைத்தது “ ரெக்ஸி”.


என் தொடைகள் ஈரமாயின.


அடுத்த புலூடோசை எடுக்க 

பையினுள் கையை விட்டேன். 

அது வெறுமனே கிடந்தது. 


இன்னும் கொஞ்சம் சில்லறைகளை என் கைகளுக்குள் திணித்துவிட்டார் மாமா. 

நான் தோடம்பழ இனிப்பு வாங்க மூலைக்கடைக்கு ஓடினேன். 


வாசகசாலையில் அப்பாவும், கிரிக்கெட் மைதானத்தில் அண்ணன்களும், பகல் நித்திரையில் அம்மாவும், பின்வீட்டுக் கிணற்றடியில் அக்காக்களும் அப்போது இருந்தார்கள். 

ஒற்றைக்காகமும், ரெக்ஸியும் மட்டும் 

என்னோடு இருந்தன.

01-03-2021

கார்டினல்

 மீண்டும் என்னை

எதற்குள்ளாவது

செருகிவிட முனைகின்றார்கள். 


விரிந்த கைகளோடு

காற்றில் கலந்து 

புயல், மழை, வெயில் 

கடந்து 

பனிக்குள் கிடக்கின்றேன்.


வெய்யில் பொசுக்கி 

சாம்பலாகவில்லை

புயலில் சிக்குண்டு

முறிந்தும் விழவில்லை.

பனியிலும் புதைந்திடேன்.


புதருக்குள் மறையா கார்ட்டினல் நான். 

அவதானம்!

கண்களை மறைத்து

கண்காணித்து வருகிறேன்

பட்டென்றொருநாள்

கொத்திவிட்டுப் பறப்பேன்.


04-03-2021

<அவையள்>

 செத்தாலும் 

<அவையளை>

வீட்டுக்க அடுக்கன்,

<மசிர> என்னை

யாரெண்டு தெரியுமோ?


பக்கத்து வீட்டிற்கும் 

வந்திட்டாங்களாம் ஊரில, 

வெளிநாட்டிலையும் 

<அவைக்கு>

சொந்தங்களிருக்காம்.


பாழாய்போன லண்டன்காறர்

விசாரிக்காமல் வித்ததால

நம்மூரினி

நாறத்தான் போகுது.


போருக்குப்பிறகு

யாரெண்டும் தெரியேல்லை

புதுசு, புதுசா

ஊருக்க அலையினம்.


மேல் வீடும் கட்டி,

கழுசானும் போட்டு

புறியத்தோட ஊரெல்லாம்

சுத்தி திரியினம்.

கையிலும் மின்னுது, 

கழுத்திலும் மின்னுது

பெட்டைகளும் பத்தாததுக்கு

<ரூவீலர்>  ஓடுது.


உண்டியல் குலுக்கி,

சுத்துமதில் கட்டி

கோயிலையேனும்

காப்பாத்திட வேணும்.


செத்தாலும் 

<அவையளை>

வீட்டுக்க அடுக்கன்

கனடாவில

கக்கூசை

நான்தான் கழுவுறன்.


06-03-2021