Friday, May 5, 2017

மிதக்கின்றது உன் முகம் -



அவர்கள் சொன்னார்கள் பயணம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாகுமென்று. இதுவரை பயணம் என்றால் சைக்கிள், கார், பஸ், அதையும் மிஞ்சினால் இரயில் என்றுதான் எனக்கான அனுபவங்களிருந்தன. ஆகாயத்தில் விமானம் செல்லும் போது ஒருநாளைக்கு நானும் விமானத்தில் பயணிக்க வேணும் என்ற ஆசை எனக்குள் எழுவதுண்டு. நான் தனியாக இல்லை உன்னோடுதான். இந்தியாவுக்கு, இல்லாவிட்டால் சிங்கப்பூருக்குப் போய் இடமெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை எனக்குள் இருந்ததை நான் வெட்கத்தோடு ஒத்துக்கொண்டேயாகவேணும். ஆனால் இதை நான் ஒரு போதும் உன்னிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நீ என்ன பதில் சொல்லுவாய் என்பதும் எனக்குத் தெரியும். 
கண்விழித்துப் பார்த்த போது மேகங்களும், அமைதியான கடலுமே எங்கும் பரந்திருந்தன. கப்பல் பயணம் என்பது விசித்திரமான ஒன்று. நீ இந்தியாவிற்குப் பலதடவைகள் போய் வந்திருக்கின்றாய். ஆனால் எனக்கு இந்த அனுபவம் தீராத விசித்திரமாயிருக்கின்றது. நான் இருக்கும் மனநிலையில் எனக்கு அப்படித் தோன்றுகின்றதோ தெரியவில்லை, நான் பயப்படவில்லை, கவலைப்படவில்லை, கோவப்படவில்லை, மௌனமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இன்றைய நாளை ரசித்துக்கொண்டிருக்கின்றேன். உன்னைப் பற்றி யோசிக்காது கடந்து போக வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன், ஆனால் நான் விரும்பாவிட்டாலும் உன் நினைவு அலைபோல எனக்குள் வந்து மோதி மோதி உன்னை நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றது. கப்பலில் பயணிப்பதனால்தான் அலை என்ற உதாரணம் உடனேயே எனக்குள் வந்துவிட்டது. நான் இப்போது சிரிக்கின்றேன். உனக்கு நினைவிருக்கா? ஒருநாள் நான் தனியாக வீட்டிலிருந்த நேரம் நீ ரமணனைத் தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்திருந்தாய், உனக்குத் தெரியும் ரமணன் வீட்டிலிக்க மாட்டானெற்று, ஆனால் வீட்டில் ஒருவருமே இருக்க மாட்டார்கள் என்று நீ நினைத்திருக்க மாட்டாய். திடீரென்று நீ வந்து கதவைத் தட்டியதும் நான் கொஞ்சம் தடுமாறிப் போனேன். ஒருத்தரும் வீட்டிலில்லை என்று சொன்னால் நீ உடனேயே போய் விடுவாய் என்ற பதட்டம் எனக்குள். ரமணன் இல்லையென்றால் அம்மா உன்னை வீட்டிற்குள் அழைத்து ரமணன் வரும்வரை உன்னோடு கதைத்துக் கொண்டிருப்பாள். என்னை உனக்குத் தேத்தண்ணி போட்டுக் கொண்டுவரச் சொல்லுவாள். நான் வேண்டா வெறுப்பாய் உனக்குத் தேத்தண்ணி போட்டுத் தந்துவிட்டு உன் பார்வையில் படும்படி எங்காவது இருந்து கொள்வேன். நீ அம்மாவோடு கதைத்தபடியே எனக்குக் கடலை போடுவாய். நானும் நீயும் காதலிக்கத் தொடங்கிய பின்பும் எனக்குள் மௌனமாக ஒளிந்திருந்து என்னை அலைக்கழிப்பது அப்போது நீ வாயிற்குள் ஒருவித சிரிப்போடு என்னை கடைக் கண்ணால் பார்த்த அந்த நாட்கள் தான். 
நீ போய்விடக் கூடாது என்ற பதட்டத்தில் ஒருவரும் வீட்டிலில்லை என்பதை உனக்குக் சொல்லாமல் ரமணன் வீட்டிலில்லை அவன் வரும்வரை உன்னை இருக்கச் சொல்லிவிட்டு வழமைபோல் உனக்குத் தேத்தண்ணி போடப் போய்விட்டேன். வீட்டில் ஒருவருமில்லாமல் நடு ஹோலில் நீ கதிரை நுனியில் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தாய், நான் தேத்தண்ணியை உன்னிடம் தந்துவிட்டு உனது பார்வையில் படும்படியாக இருந்து உன்னைக் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ சுற்றுமுற்றும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு ஒரு கள்ளனைப் போல் தேத்தண்ணியை படக்படக்கென்று குடித்துவிட்டு எழுந்து போய்விட்டாய். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்போது நிசப்தமான இந்தக் கடலின் மேற்பரப்பில் நான் உன்முகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
இந்தக் கடலுக்குக் கரையிருக்கிறதா? எல்லா இடமும் தண்ணீர் மட்டும்தான் தெரிகின்றது. வேறு கப்பல்களையும் காணவில்லை. எனது நாட்டிலிருந்து கப்பல் எவ்வளவு தூரம் போயிருக்கின்றது. எத்தனை நாட்கள் கடந்து விட்டன? இந்தக் கப்பலில் முன்னூறிற்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கின்றார்கள். கப்பலுக்குள் எங்களை ஏற்றுமுன்னர் கரையில் வைத்துப் பல பாடங்கள் எடுத்தார்கள், நான் எதிலும் அக்கறையெடுக்கவில்லை. எனக்கு என் நாட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை, வேறு எங்கேயும் போகவும் பிடிக்கவில்லை. முடிந்தால் உன்னோடு நீயிருக்கும் சித்திரைவதை முகாமிலேயே என்னையும் போட்டு உனக்கு கொடுக்கும் அத்தனை சித்திரைவதைகளையும் எனக்கும் தரமாட்டார்களா என்றுதான் மனம் ஏங்குகின்றது. நான் உணர்சிவசப்பட்டு சென்டிமென்டாக எண்ணுவதாக நீ நினைக்கலாம், உண்மையில் அப்படிதான் இந்த நிமிடத்தில் எனக்குத் தோன்றுகின்றது. என்னுடைய அப்பாவிற்கு உன்னைப் பிடிக்காது என்று நீ அடிக்கடி சொல்லுவாய், அப்பாவிற்கு உன்னை நிறம்பவே பிடிக்கும், அம்மா உன்னில் ரமணனைக் காணத் தொடங்கிவிட்டார். நீ வந்து தன்னோடு கதைத்துக் கொண்டிருந்தால் ரமணன் வருவான் என்று அவர் நம்பத் தொடங்கிவிட்டார். ஆனால் அப்பாவின் மனநிலை வேறுமாதிரியுள்ளது, உன்னையும் அவர் ஒரு மகன் போல் எண்ணியதால்தான் ரமணன் போல் நீயும் தனது பேச்சைக் கேட்கவில்லையென்ற கோவம் அவருக்கு. அப்பாவை நான் மதிக்கின்றேன் அவரது ஆதங்கம் எனக்குப் புரிகின்றது, ஒரு அப்பாவாக அவரால் இப்படித்தான் உணரமுடியும் என்பதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை மிஸ் பண்ணுவது போல் அப்பாவையும் மிகமிக மிஸ் பண்ணுகின்றேன், நீ எப்படியாவது தப்பித்து உயிரோடு வெளியேவந்தால் ரமணனின் இடத்திலிருந்து அவர்களுக்கு ஆறுதல் கொடு. 
கப்பலின் குட்டி என்ற சின்னப்பெடியன் ஒருவன் இருக்கின்றான். நீ சின்னவயதில் அப்படித்தான் இருந்திருப்பாய். வெய்யிலில் மின்னும் தார்போன்ற தலைமயிர், எப்பவும் சந்தோஷத்தோடு மின்னும் கண்கள், ஒல்லியாய் காத்திரமாக கால்களோடு ஏனோ என்னோடு அவன் ஒட்டிக்கொண்டுவிட்டான். சூரியன் எழுவதும் மறைவதுமாக இருக்கின்றான். நாட்கள் பல ஓடிவிட்டன என்று தெரிகின்றது. குட்டி இப்போது சோர்ந்து விட்டான். கடல் காற்று அவனுக்கு ஒத்துவருகுதில்லையென்று அவன் அம்மா சொன்னாள். சாப்பிடுவதையெல்லாம் சத்தியாய் வெளியே கொட்டிக்கொண்டிருக்கின்றான். சாப்பாடு என்று பெரிதாகச் சொல்லுமளவிற்கு இங்கு ஒன்றுமில்லை, ஆனால் இதுநாள் வரை வயிறு வற்றாமல் ஏதோ போட்டுக்கொண்டிருக்கின்றோம். நீ சாப்பிட்டாயா? சாப்பிடுவதற்கு ஏதாவது தருகின்றார்களா, உன்னை சரியா அடித்துச் சித்திரவதை செய்கின்றார்களா? சித்திரவதை என்றால் என்ன உக்கிரமமாக அடிப்பதா? எனக்கு கனக்க யோசிக்க விருப்பமில்லாமலிருக்கிறது. ஏதாவது யோசனை வந்து மூளை குழம்புவது போலிந்தால் கப்பலின் மேல்தளத்தில் வந்து கடலைப் பார்த்துக்கொண்டிருப்பேன். கப்பல் கப்பல் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன், நான் படங்களில் பார்த்த கப்பல் போலில்லை இந்தக் கப்பல். எங்காவது கொஞ்சம் சாய்ந்து கொண்டலும் துருப்பிடித்த இரும்பு குத்தி ஏறப்;பு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. புகையும், தோட்டக் கிணறிறைக்கும் மோட்டர் சத்தமுமாய் தலையை சுத்துகிறது.
எழுபது வயது மதிக்கத்தக்க கிழவன் ஒருத்தரும் இருக்கின்றார், உயிர்வாழும் ஆசைக்கு வயதில்லை, பிள்ளைகள் கனடாவிலிருக்கிறார்களாம், காசு அனுப்பி அப்பாவை அழைத்திருக்கின்றார்கள். எதற்காக இப்படிக் கப்பலில் அழைக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் கனடாவிற்குப் பிள்ளைகள் கூப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொன்ன பிறகுதான் நானும் கனடாவிற்குத்தான் போகின்றேன் என்று விளங்கியது. ஆனால் இடையில் வேறுவேறு நாடுகளிலும் நிற்க வேண்டிவரலாமென்று சொல்லுகின்றார்கள். அங்கு மாட்டிக்கொண்டல் சிலவேளை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களாம். மாட்டிக்கொண்டு திரும்பி உன்னிடமே வந்துவிட மாட்டேனா என்றிருக்கிறது. நான் ஒருத்தி திரும்பி வரவேணும் என்பதற்காக எல்லோருமே மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற என் நினைப்பை நினைக்க எனக்கே வெட்கமாக உள்ளது. அம்மா அழுத அழுகை என்னால் மறுக்க முடியவில்லை. உன்னை விட்டுத் தூரப் போகச் சம்மதித்துவிட்டேன். 
ரமணன் காணாமல் போய்விட்டான் என்ற போது எங்கோ உயிரோடு இருப்பான் என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால் அவனைச் சுட்டுக்கொண்டுவிட்டார்கள் என்று அறிந்த போது எல்லமே மரத்துப் போய்விட்டது. உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று தெரிந்த போது நீயும் உயிரோடு இல்லை என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் உன்னைத் துரோகியென்று சித்திரவதை முகாமில் வைத்திருக்கின்றார்கள் என்று அறிந்த போது உன்னைச் சுட்டுக் கொண்டிருக்கலாம் என்று ஒருதருணம் மனதில் பட்டது. என்னையும் தேடிக்கொண்டு வீட்டிற்கு வந்து அம்மாவையும் அப்பாவையும் அடித்துப் போட்டுவிட்டு போயிருந்தார்கள் அதன் பிறகு என்னிடம் வார்த்தைகளில்லை உன்னை ஏமாற்றிவிட்டுக் கைவிட்டு விட்டு நானும் கப்பலேறிவிட்டேன். என்னை நீ மன்னிப்பாயா? நீ கெட்டிக்காறன் எப்படியாவது தப்பி வெளியில் வந்துவிடுவாய், வந்த உடன் சாமி மாமாவின் நண்பன் முகமத்தின் வீட்டிற்குப் போய்விடு, அவர்கள் உடனே உன்னை பாதுகாப்பாக எங்காவது அனுப்பி வைப்பார்கள். உன்னிடம் சாமி மாமாவின் விலாசமிருக்கிறதா? எங்கள் வீட்டிற்குப் போய்விடாதே. முதலில் அவர்கள் உன்னை எங்கள் வீட்டில்தான் தேடுவார்கள்.
பல இரவுகளும் பகல்களும் கடந்து விட்டன, இன்னும் நாங்கள் எந்தக் கரையையும் அடையவில்லை. எனக்கு வாய் வரண்டு சொண்டு வெடித்துவிட்டது. கனபேர் சத்தியெடுத்துச் சுருண்டு படுத்துவிட்டார்கள். பலர் அழுகின்றார்கள். உன்னைப் போல பெரிய பெடியன்கள் கூட மூலையிலிருந்து விக்கி விக்கி அழுகின்றார்கள். நீ அழுகின்றாயா? நீ அழுது நான் பார்த்தில்லை, ஆனால் நீ விக்கி, விக்கி அழுதிருப்பதாக ரமணன் எனக்குச் சொல்லியிருக்கின்றான். நீ அழுது நான் பார்க்கவில்லையென்று எனக்கு இப்போது ஏக்கமாயுள்ளது. எத்தனையோ விடையங்கள் நீ செய்து நான் பார்க்க விரும்பியிருக்கின்றேன், தமிழ் படங்களில் வருவது போல எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி வரும் வழியில் அது உருகி விழுந்து, நீ என்னைப் பார்த்;து அசடு வழிவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட எனக்கிருந்தது. இப்போது நிரந்தரமாக கப்பலில் ஒரு மணம் பரவத் தொடங்கிவிட்டது. என் உடம்பிலிருந்து கூட ஊத்தையும் மீன் மணமும் கலந்து ஒரு விசித்திரமான மணம் எழத்தொடங்கிவிட்டது. நாங்கள் தண்ணீரில் மிதந்தாலும் இங்கே தண்ணிக்குத் தட்டுப் பாடாக உள்ளது. கக்கூஸ் போக முடியவில்லை எல்லா இடங்களும் எல்லாமும் சிதறிக் கிடக்கிறன. பெடியன்கள் கள்ளமாக வெளியில் கூட இருக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் மூச்சை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டு வருகின்றேன். சாப்பாடும், தண்ணீரும் அதிகமில்லாததால் அடிக்கடி போகத் தேவையில்லை. எனக்கு இரண்டு தடவைகள் சுகமில்லாமல் கூட வந்துவிட்டது. பேபி அன்ரியின் உதவியால் நான் மூன்று பெட்டி நப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். அதோட தாத்தாவின் பழைய வேட்டி ஒன்றையும் பேபி அன்ரி தந்திருந்தார். அதை நான் சின்னதாகக் கிழித்து சொட்டுத் தண்ணீரில் நனைத்துத் இரத்தக்கறை காய்ந்து உடம்போடு ஒட்டிக்கொள்ளாமல் துடைத்துக் கொள்ளுகின்றான். பேபி அன்ரி அனுப்பும் போதே சொல்லி அனுப்பியிருந்தார் உடம்பில் எங்கே ஊத்தை பிடித்தாலும் பரவாயில்லை பெண் உறுப்பை மட்டும் துப்பரவாக வைத்திரென்று. நானும் அதில் கவனமாகத்தானிருக்கின்றேன். இருந்தாலும் தீராத எரிச்சலும் அரிப்புமாக இருக்கிறது. யாரும் பார்க்காத வேளைகளில் மெதுவாகச் சொறிந்து கொள்கின்றேன். என்னைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கின்றேன், நீ எப்படியிருக்கின்றாய்? கேட்பதற்கு மனம் கனக்கின்றது. நீ எப்படியிருப்பாய் என்பது எனக்குத் தெரியும், இருந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்கின்றேன். நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் போது கதைப்பதற்கு நிறம்பவே இருக்கிறது, ஆனால் கதைக்க முடியுமா என்றுதான் தெரியவில்லை.
நேற்று ஒரு இளைஞன் செத்துப் போய்விட்டான். வாந்தி பேதியென்று எல்லோரும் பயந்து உடனேயே அவனது உடலை கடலில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். போடும் போது யாரோ ஒருவர் உரத்த குரலில் தேவாரம் பாடினார். பலர் உரத்த குரலில் அழுதார்கள். எனக்கு அழுகை வரவில்லை. நான் சும்மா பார்த்துக்கொண்டு நின்றேன். எனக்கு அவனை யாரென்றே தெரியாது நான் எதற்காக அழவேண்டும். நீ இங்கிருந்திருந்தால் முன்னுக்கு நின்று எல்லாம் செய்திருப்பாய். நீ இங்கிருந்திருந்தால் ஒருவேளை அவன் செத்திருக்க மாட்டான். நீ எல்லாருடைய தேவைகளையும் ஓடியோடுக் கவனித்திருப்பாய். ஏதாவது செய்து அவனைக் காப்பாற்றியிருப்பாய். 
இரவில் சிலநேரங்களில் உன் நினைவு என்னைத் தாக்கும் போது நான் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள், கடற்கரையில் நாங்கள் பொறுக்கும் நட்சத்திர மீன்களில் அளவில் பெரிதாக மின்னும். கடலும் வானமும் ஒன்றாகிப் போனது போலிக்கும். காலநிலை சுமூகமாத்தாகிருக்கிறது. ஆனால் இனிமேல் நாங்கள் மழை, பனி என்று பலதையும் சந்திக்க வேண்டிவருமென்று கதைத்துக் கொள்கின்றார்கள். ஒருநாளிரவு நிலவை நான் அண்மையில் பார்த்தேன். எனக்கு ஏனோ உன்னைப் பார்ப்பதுபோலிருந்தது. நான் அதனோடு கதைக்கத் தொடங்கிவிட்டேன். நினைவிருக்கிறதா நிலவு வெளிச்சத்தில் தோட்டக்கிணற்றடியில் நானும் நீயும் இரவிரவாகக் கதைத்துக்கொண்டிருந்தது. நீ கையில்லாத பெனியன் போட்டிருந்தாய். உன் கமக்கட்டு மணத்தை முகர்ந்து பார்த்து அதற்குள்ளேயே என் முகத்தை புதைத்துக் கொண்டேன். அப்போது எல்லாமும் நிறைந்தது போலிக்கிறது என்றேன். நீ சொன்னாய் நான் சரியான சென்ரிமென்டானவளென்று நீயும் நானும் ஒன்றாக இருக்கும் போது நான் மிகவும் சுயநலமாக யோசிப்பதுண்டு. நாடு நாட்டுப் பிரச்சனை எதுவும் என் மனதில் எழாது. எங்காவது ஓடிச் சென்று நானும் நீயும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்றே படும். ஆனால் நான் உனக்கு அதை ஒருநாளும் சொன்னதில்லை. நீ என்னை புரிந்து கொள்ள மாட்டாயோ என்ற பயம். காற்று ஜில்லென்றிருக்கின்றது. எமது கப்பல் வெப்பநிலை மாற்றத்தைக் காணத் தொடங்கிவிட்டது. பலர் குளிர் நாட்டில் போட்டுக்கொள்ளும் உடையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது. குட்டியை இரண்டு நாட்களாகக் காணவில்லை. அவனின் அம்மாவும் கண்ணில் படவில்லை. நான் மிகவும் சோர்ந்து போயிருக்கின்றேன். அவனைத் தேடிக்கொண்டு போக எனக்குத் திராணியில்லை விருப்பமுமில்லை. என் கைகளில் ஒருவித சருமநோய் பிடித்திருக்கின்றதென்று நினைக்கின்றேன். தாங்கமுடியாமல் சொறிகின்றது. எனக்கு உன்னைப் பார்க்க வேணும்போலுள்ளது. நீ என்கேயிருக்கின்றாய்? நான் அகண்ட இருளைத் தன்னகத்தே விழுங்கிவிட்ட சமுத்திரத்தின் நடுவில் தத்தளித்துக்கொண்டிருக்கும், கப்பல் என்று சொல்லப்படும் ஏதோ ஒன்றின,; இரண்டாவது தளத்தின் ஒருமூலையில் சோர்வோடு உன்னை நினைத்தபடி சாய்ந்திருக்கின்றேன். நான் கடலில் உன் முகத்தைத் தேடுவதை நிறத்திக்கொண்டுவிட்டேன். என்னை உனக்குத் தெரிகின்றதா?
நன்றி அம்ருதா