Sunday, February 9, 2020

ரோசக்காறி




விமானம் தரையிறங்கியபோது அதிகாலையாகியிருந்தது. எனது கைக்கடிகாரத்தை சென்னை நேரத்திற்கு மாற்றிக் கொண்டேன். சின்னப் புன்னகையோடு இயற்கையான பதட்டமும் எழ விமானநிலையத்தை விட்டு வெளியேறிய போது தடித்த குளர்காற்று முகத்தில் பரவிச் சென்றது. இன்னும் சில மணிநேரத்தில் கடும் வெப்பம் வந்துவிடும். நீண்ட காற்றை உள்ளே இழுத்துவிட்டுத் தோளில் தொங்கும் பை, இரு சில்லுப்பூட்டிய  லக்கேட்ஜ்களுடன் விமானநிலையத்தின் வெளியில் வந்தேன். தமது வரவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் ஆவலுடன் ஏந்திநிற்கும் பெயர் மட்டைகளில் எனது பெயரைத் தேடினேன். விஜயா வாகனம் அனுப்பி வைத்திருந்தாள். வரிசையின் இறுதியில் ஒரு முதியவர் எனது பெயர் பலகையுடன், என்னைக் கடந்து பார்வையை ஓடவிட்டுக்கொண்டிருந்தார். நான் புன்னகைத்தபடி அவரின் அருகில் சென்று, அவரை எப்படி அழைப்பதென்று தடுமாறி ”சேர் இது நான் தான்” என்று அவர் பெயர் மட்டையைக் காட்டினேன். ”ஆ ஆச்சா, நான் மதிக்கேலை” என்று சிரித்தார். வாய் நிறைந்த வெத்திலை மணம் குப்பென்று என் முகத்தில் அறைந்தது. என் பற்றிய அவருடைய மதிப்பு எப்படியிருந்திருக்கும் என்ற ஆவல் எழுந்தது. இலங்கைத் தமிழ் பெண், கனடாவிலிருந்து சென்னை வருகின்றாள். திருமணமானவள், இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவ்வளவு தகவல்கள் வனஜாவிற்கே தெரிந்திருக்காது, கனடாவிலிருந்து ஒரு பெண் வருகின்றார் என்ற தகவல் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும், ஒரு அழகிய, உடல் மெலிந்த இளம் பெண்ணை எதிர்பார்த்திருக்கலாம்.
அவர் அவசரமாக எனது லக்கேட்ஜ்களை வாங்கியபடி ”ஒரு சொட்டு துாரம்தான் கார் நிக்கிது” என்ற படியே நடக்க, கிடைக்கும் சில நிமிடங்களில் அனைத்தையும் என் கண்களுக்குள் உள்ளடக்கும் ஆர்வத்துடன் பார்வையை சுழலவிட்டு அவரைத் தொடர்ந்தேன், ”ஊரு புச்சா” என்றார் சிரித்தபடியே வாயிலிருந்து வெத்திலை வழிய, அவரின் கலவைத் தமிழ் புரிந்தும், புரியாமலும் தலையை நடுநிலையாக ஆட்டி வைத்தேன்.
சென்னையில் நான் தங்கப் போகும் இடத்தை நோக்கி வாகனம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. மூன்று கிழமைகள்  சென்னையில். திடீரென்று எடுத்த முடிவு. ரொறொன்டோவில் விமானம் ஏறிய பின்னர்தான் எடுத்த முடிவு சரியானதா என்ற தடுமாற்றம் எனக்குள் எழுந்தது. பயணம் முழுவதும் அந்தக் குழப்பத்தோடே வந்து சென்னை இறங்கியாகிவிட்டது. இனிமேல் மூன்று கிழமைகள் சென்னையில் கடத்தியே ஆக வேண்டும்.
ஓடையாய் நீளும் வீதிக்குள் வாகனம் நுழைந்து, சிறிய இரு மாடி வீட்டின் முன்னர் நின்றது. வாசலில் அதிக உயரமற்ற, சதுரவடிவ உடலமைப்பும், மாறுகண் பார்வையும், கருஞ்சுருள் தலைமயிர் உயர்த்திப் போட்ட கொண்டையும், எண்ணெய் தடவிய கரும் கைகள் சூரிய ஒளிபட்டு செம்மஞ்சளாய் மின்ன முகத்தில் புன்னகையுடன் நின்ற அந்த நடுத்தர வயதுப் பெண்ணைக் கண்டதும் ”விஜயா?” என்றேன். அவள் சிரித்த படியே ”பயணம் எப்பிடியக்கா இருந்திச்சு?” என்றாள். நான் கனேடிய முறையில் கட்டி அணைப்பதா?, கை கொடுப்பதா? என்று தெரியாமல் தடுமாற அவள் எனது தோள் பையை வாங்கிய படியே முதியவரைப் பார்த்து பைகளை மாடிக்குக் கொண்டு போகும் படி கட்டளையிட்டாள். ”இல்லைப் பரவாயில்லை பாரமாயிருக்கும் நானே கொண்டு போறன்”, என்ற என்னைத் தடுத்து ”ஆ விடுங்கக்கா அதுக்கும் சேத்துத்தான் துட்டு வாங்கிச்சு” என்றவள், மீண்டும் முதியவரைப் பார்த்து ”என்ன பாத்துக்கொண்டு நிக்கிறாய் மாடியில வைச்சிடு” என்றாள். முதியவர் முகம் கடுப்பாக, இரு லக்கேட்ஜ்களையும் இரு கைகளில் துாக்கிக் கொண்டு தடுமாறிய படியே மாடியால் ஏறினார். கீழ்வீடு பூட்டியிருந்தது, உள்ளிருந்து தொலைக்காட்சி செய்தியின் சத்தம் கேட்டது. அழகான சிறிய வீடு பூமரங்களால் நிறைந்திருந்தது. தண்ணீர் பாய்ச்சப்பட்ட  நிலம் இன்னும் ஈரம் காயாமல் குளிர்மையாயிருந்தது. பக்கவாட்டில் ஒரு தென்னை, மா, பலா, குருவிகளின் இடைவிடாத ஓசை. அதை மேவிய வாகனங்களின் ஒலிகள்.  மனதுக்குத் திருப்தியாயிருந்தது. ”வாங்கக்கா மேல போகலாம்”, சொன்ன படியே கண்களைச் சுருக்கி கீழ்வீட்டினுள் பார்த்தவள், ”வீட்டுக்காறம்மா கண்டால் சும்மா ஏதாவது கேக்கும்” என்றாள். வாசல்பக்கமிருந்த சீமெந்துப் படிகளின் மேலிருந்து முதியவர் கீழிறங்கி வந்தார், நான் கைப்பையைத் திறந்து காசெடுக்கப் போக, என்னைத் தடுத்த விஜயா, ”அதெல்லாம் குடுத்தாச்சு, நீங்க வாங்கக்கா” என்றாள், முதியவர் என் முகம் பார்க்காமல் கடந்து போனது மனதுக்கு நெருடலாயிருந்தது. நான் விஜயாவைத் தொடர்ந்தேன்.

சிறிய அழகிய வீடு, முன் கதவைத் திறந்ததும், ஒடையாய் ஒரு ஹாலால் நுழைந்து உள்ளே போக சிறிய இருக்கையறை, இரண்டு பெரிய இருக்கைகள், ஒரு ஸ்டூல், பூந்தொட்டிகள், ரீவி ஓடிக்கொண்டிருந்தது. வலப்பக்கம் குசினி தெரிந்தது, இடப்பக்கத்திலிருந்தில் மீண்டும் ஒரு சிறிய ஓடையின் கடைசியில்  விஜயா எனது அறையைக் காட்டினாள். வெளியிலிருந்து பார்ப்பதற்கு சிறிய வீடு போலிருந்தாலும் உள்ளே விலாசமாக இருந்தது. அறை சுத்தமாக இருந்தது. சிறிய பூப்போட்ட அழகிய விரிப்போடான கட்டில், தொலைக்காட்சி, ஏர்கெண்டிஷன், கண்ணாடி மேசை. எனது இரு லக்கேட்ஜ்களும் கட்டிலின் அருகில் இருந்தன. ”ரீ போடுறன், நீங்கள் குளிச்சிட்டு வாங்க, தோசை ஊத்தவா?, இட்லி போடவா? என்றாள். நான் சிரித்தேன். ”என்னக்கா சிரிக்கிறீங்க?, அக்கா போன் போட்டுச் சொல்லீச்சு, விஜயா வாறது எனக்கு முக்கியமான ஆள் நல்லாக் கவனியெண்டு” என்றாள் தானும் சிரித்த படியே. பின்னர், ”சரி பயணக் களைப்பாயிருக்கும், குளிச்சிட்டு வாங்க நான் ரீ போடுறன்” போனவள், நான் பெட்டியைத் திறந்து மாற்று உடுப்புத் தேடும் போது திரும்ப வந்து ” தோசை ஊத்தட்டா, இட்லி போடட்டா?” என்றாள். ”தோசை” என்றேன். ”சட்னியும், சாம்பாரும் போதுமா?” என்றாள். ”ஆ.. போதும், போதும்” என்றேன். அவள் நகர எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. இருபது வருடங்களுக்கு மேலாக எல்லாருக்கும் சமைச்சுக் கொட்டிய அனுபவம், இப்போது எனக்காக பை துாக்க ஒருவர், சமைக்க ஒருவர் என்பது விசித்திரமான உணர்வாக இருந்தது.
கடும் சாயம் போட்ட பால்ரீ, நெய்த் தோசை, சம்பல், சாம்பார், இன்னும் தொட்டுக்கொள்ள எண்ணெய் விட்ட பொடியொன்று. நான் சாப்பிடச் சாப்பிட விஜயா தோசையைச் சுட்டுக்கொண்டு வந்து பிளேட்டில் போட்டாள். சங்கடம் கலந்த சந்தோசத்துடன் திருப்தியாகச் சாப்பிட்டேன். தொலைக்காட்சி பெரிய சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. விஜயா தன்பாட்டிற்கு தமிழ்ப் பாட்டொன்றை முணு,முணுத்தபடி சுறு,சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள். ”நீங்கள் சாப்பிடேலையா? என்றேன் விஜயாவைப் பார்த்து, ”இல்லை இண்டைக்கு விரதம், மதியம் சாப்பிட்டாப் போதும்” என்றாள். ”அய்யோ, அப்ப நானே தோசையைச் சுட்டிருப்பேனே” என்றேன். உடலை முழுதாக என்னைப் பார்த்துத் திருப்பி, ”அக்கா சொல்லீச்சு, நீங்கள் ரொம்ம நல்ல மாதிரியெண்டு, ரொம்ப பாசமாயிருக்கீங்க” என்றாள். எனக்கு அவளைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போல இருந்தது. துக்கம் தொண்டையை அடைக்க, ”நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறன்” என்ற படியே கதிரையைவிட்டு எழும்பினேன். ”எவ்வளவு நேரமக்கா பயணம்? என்றாள். ”கனடாவில இருந்து இஞ்ச வந்து சேர இருபத்தினாலு மணித்தியாலத்துக்கு மேல” என்றேன். அவள் மாறுகண்கள் விரிய, ”அய்யோ, அவளவு நேரமும் துாங்கேலையா? என்றாள். ”துாங்கினதுதான், ஆனால் இருந்தபடி ஒழுங்காத் துாங்கேலாது” என்றேன். ”சரி, சரி நீங்க போய்த் துாங்குங்க” என்றவள், நான் அறைவாசலை அடையும் போது ஓடிவந்து ”மதியதுக்கு என்னக்கா சமைக்க, கறியா? மீனா?” என்றாள். ”இல்லை உங்களுக்கு என்ன சமைக்கிறீங்களோ அதுவோ போதும் ஒண்டும் ஸ்பெசல் வேண்டாம்” என்றேன். ”இல்லை நீங்கள் குளிக்கேக்க அக்கா போண் போட்டுக் கதைச்சுது, நீங்கள் சுகமா வந்து சேந்திட்டீங்களா எண்டு கேட்டீச்சு, உங்களுக்கு மீன், கறிக்குழம்பு எல்லாம் ரொம்பப் பிடிக்கும் எண்டீச்சு அதுதான்” என்றாள். ”அதெல்லாம் ஒண்டும் வேண்டாம், உங்களுக்கு என்ன சமைக்கிறீங்களோ அதுவே போதும்” என்றேன் சிரித்தபடியே. அவளும் சிரித்தாள், பின்னர் ”சரியக்கா” என்று விட்டுப் போனாள்.
நான் நித்திரைவிட்டு எழுந்த போது இருண்டிருந்தது. சிறிது நேரம் எங்கேயிருக்கின்றேன் என்று தெரியாத தடுமாற்றம் போய், மனம் நிலைகொண்டது. எழுந்து வெளியில் வந்தேன், விஜயா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள், என்னைக் கண்டதும் அவசரமாக எழுந்து ”அக்கா இரவாயிடிச்சு, நல்லாத் துாங்கிட்டீங்க, மதியம் சாப்பிடக் கூட இல்லை” என்றாள் பதட்டத்தோடு. நான் சிரித்தேன். ”என்னக்கா என்ன கேட்டாலும் சிரிக்கிறீங்கள்” என்றாள் தானும் சிரித்த படியே. பின்னர், ”சாப்பாடு சூடாக்கவா?” என்றாள். எனக்கு ஒரு கோப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. கேட்க கூச்சமாயிருந்தது. நான் தயங்குவதைக் கண்டு, ”என்னக்கா?” என்றாள். ”நான் ஒரு கோப்பி போடட்டா?” என்றேன் எழுந்த படியே. அவள் என்னைச் சிறிது நேரம் பார்த்தபடியிருந்து விட்டுச் சிரித்தாள், ”அக்கா நீங்கள் கோப்பி எண்டு சொன்னதும் எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டுது” என்றாள். அவளது சிரித்த முகம் ஒருமுறை இருண்டு, மீண்டும் சிரித்தது. ”என்ன பில்டர் காப்பியா, சுக்கு காப்பியா?” என்றாள். அவளிடம் எப்போதும் இரண்டு சொய்செஸ் இருந்தன, எனக்கு அது தடுமாற்றமாக இருந்தது.  ”எதெண்டாலும் பரவாயில்லை, எது சுகமோ அது போதும், நான் முகம் வோஷ் பண்ணீட்டு வாறன்” என்றேன். அவள் எழுந்து குசினிக்குள் போனாள். நான் சென்னைக்கு சுகமாக வந்து சேர்ந்ததை கனடாவில் யாருக்கும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பதை உணர, இனி நான் அடுத்த என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்ட படி எழுந்து முகம் கழுவச் சென்றேன்.

கோப்பியைக் வாயில் வைத்து விட்டு நிமிர்ந்து விஜயாவைப் பார்த்தேன் அவள் தொலைக்காட்சியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு ருசியாகச் சமைக்கின்றாள், கோப்பி, ரீ போடுகின்றாள். விஜயாவின் போன் அடித்தது, ஒரு தமிழ்ப்பாட்டை ரிங்கரில் வைத்திருந்தாள். போனை எடுத்தவள் ”சரியக்கா, சரியக்கா” என்றுவிட்டுப் பதட்டத்துடன் என்னிடம் நீட்டி ”அக்கா போனில உங்க கூட பேசணுமாம்” என்றாள். நான் போனை வாங்கி ”ஹலோ” என்றேன், மறுமுனையில் ஷாலினி பொய்க் கோவத்தோடு  ”என்னடி போய்ச் சேந்திட்டாய் எண்டு ஒரு போன் பண்ணக்கூடாதா? என்றாள். விஜயா ஆவலோடு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். ”போன் இன்னும் எடுக்கேலை, நெட்டும் இன்னும் செட் பண்ணேலை, நல்லாப் படுத்து இப்பதான் எழும்பியிருக்கிறன்” என்றேன்.
”ஏன் நெட் வேலை செய்யேலையா?, அவள் பில் கட்டியிருக்க மாட்டாள், சாப்பிட்டியா?, வெக்கப்படாமல் எல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடு, மூண்டு மாதமா ரூமுக்கு ஆக்களே வரேலை, நல்லா ரீவி பாத்துக் கொண்டிருந்திருப்பாள்” என்றாள் மூச்சு விடாமல். நான் விஜயாவைப் பார்த்தேன் அவள் முகம் சுருங்கியிருந்தது. என் பார்வையைத் தவிர்த்து ரீவியைப் பார்த்தாள், பின்னர் எழுந்து வெளியில் சென்றாள். போனில் ஷாலினி கதைத்தது கேட்டிருக்குமோ?
”இல்லை இங்க எல்லாம் நல்ல வசதியா இருக்கு விஜயா நல்லா உருசியாச்  சமைக்கிறாள், நல்ல ஒரு கோப்பி இப்பதான் குடிச்சன்” என்றேன். ”என்னவோ அவள் சரியான பஞ்சிப் பட்டவள், நீதான் எல்லாம் கேட்டு வாங்க வேணும் வெக்கப்படாதை” என்றாள். ”நான் பாக்கிறன், தாங்ஸ்எடி, நல்ல வசதியா சந்தோஷமா இருக்கு, தாங்க்ஸ், அப்ப பிறகு கதைக்கிறன்” என்று விட்டுத் தொடர்பைத் துண்டித்தேன். மனம் கனத்தது. எழுந்து வெளியில் சென்றேன். விஜயா பூஞ்செடியொன்றிற்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நின்றாள். அவளிடம் போனைக் கொடுத்துவிட்டு, ”கோப்பி நல்லா இருந்தது தாங்க்ஸ்“ என்றேன் குற்ற உணர்வோடு. அவள் என் முகம் பார்க்காமல் போனை வாங்கிய படியே ”சாப்பாடு சூடாக்கட்டா லேட்டாகுது” என்றாள். நான் சரி என்று தலையாட்ட, அவள் உள்ளே போனாள். நான் படியிறங்கி வெளியில் வந்தேன். வீட்டு நாய் குரைத்தது பயத்தில் மீண்டும் படியேறினேன்.

வெள்ளையரிசிச் சோறு, முருங்கக்காய்க் குழம்பு, மரக்கறிகள் பலவிதமாய், ரசம், பொரியல், வறை இரண்டு, தயிர், ஊறுகாய் என்று மேசையில் பரவி வைத்திருந்தாள் விஜயா. ”அய்யோ என்ன இது, எதுக்கு இந்தளவு” என்றேன் பதட்டத்தோடு. விஜயாவின் முகம் மீண்டும் பழையபடி சிரித்தது. ”அக்கா உங்களுக்கெண்டு ஸ்பெசலாச் செய்யேலை, இது எனக்குச் சமைச்சதுதான்” என்றாள் சிரிப்புத் தாங்காமல். ”உனக்கா இவ்வளவு கறியா? விருந்துச் சாப்பாடு போல இருக்கு” என்றேன் எங்கள் பழைய நெருக்கத்தை உருவாக்க முனைந்து. அவள் சந்தோஷமாகச் சிரித்தாள். குசினிக்குள் மைக்குரோவேவைப் பார்த்த ஞாபகமில்லை, ஒவ்வொரு கறியாகத் திரும்பவும் சூடு பண்ணியிருக்கின்றாள். சோறு மட்டும் குளிர்ந்து போயிருந்தது. நான் சோற்றைப் போட்டுக் கறியை அள்ள, ”அப்பிடியில்லையாக்கா கொஞ்சமா சோறு போட்டு ஒவ்வொரு கறியா தனித் தனியா சாப்பிடுங்க” என்றாள். நான் ”ஏன்” என்றேன். ”அப்பிடித்தான், இது யாழ்ப்பாணம் இல்லையக்கா சென்னை” என்றாள். பின்னர் ”கனடாவில எப்பிடிச் சாப்பிடுறது?, யாழ்ப்பாணம் மாதிரியா?” என்றாள்.  கடந்த மூன்று மாதங்களாக வேலையால் வீடு வந்தால் பாண் துண்டு ஒன்றைச் சூடாக்கி ஜாம் தடவிச் சாப்பிடுவது, அதிகம் என்றால் ஒரு முட்டை போட்டுச் சாப்பிக்கொண்டிருந்தேன். வேலைத்தளத்தில் மதியம் கடையில் ஏதாவது வாங்கிக் சாப்பிடுவது என்றுதான் போய்க்கொண்டிருந்தது என் வாழ்வு. இது நான் எனக்கு வழங்கிக்கொண்டிருந்த தண்டனை.
”கனடாவில எல்லாக் கறியையும் ஒண்டாப் போட்டுக் குழைச்சுச் சாப்பிடுவன்” என்றேன். சிரித்தாள்.
”எனக்கும் ஞாபகமிருக்கு, நாங்களும் வீட்டில அப்பிடித்தான் சாப்பிட்டனாங்கள்” என்றாள். மீண்டும் அவள் முகம் இருண்டது.
”அப்ப நான் முதல்ல என்ன கறியோட சாப்பிடுறது” என்றேன் அவளைக் குஷிப்படுத்த. அவள் எனது பிளேட்டிலிருந்த சோற்றைக் குறைத்து விட்டு ஒரு கறியை சிறிது அள்ளிப் போட்டாள், நான் சாப்பிட்டேன், பின்னர் சிறிது சோற்றை அள்ளிப் போட்டு விட்டு இன்னொன்றைப் போட்டாள். பொரியலை எடுத்து வைத்தாள். விஜயாவின் உபசரிப்பில் திருப்தியாகச் சாப்பிட்டேன். கடைசியா ரசத்துடன் சாப்பிட்டு முடித்த போது பெரிதாக ஒரு ஏவறை என்னிடமிருந்து எழுந்தது நான் வெட்கத்தோடு
 ”ஸொறி” என்றேன்.
அவள் சிறுமி போல் கைதட்டடிச் சிரித்தாள்.
”அக்கா சாப்பாடு திருப்தியாக இருந்தாத்தான் ஏப்பம் வரும்” என்றாள். எனக்கு அவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது.
திரும்பவும் உரிமையோடு அவளிடம் ஒரு கோப்பி கேட்டு வாங்கிக் குடித்தேன். அவள் ரீவியில் ஒரு நாடகத்தில் மூழ்கியிருந்தாள். நான் ரெஸ்ட் எடுக்கப் போவதாய் அவளிடம் கூறிக்கொண்டு எனது அறைக்குள் வந்து எனது லப்டொப்பை எடுத்து இன்டநெட் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
மகனிடமிருந்து மூன்று ஈமெயில்கள், மகளிடமிருந்து எட்டு ஈமெயில்கள் வந்திருந்தன. வழமை போல் ஆர் யூ ஓக்கே மாம், டிட் யு எரைஃப் சேர்ப்ளீ? அவர்களுக்குப் பதிலைப் போட்டு விட்டு நான் அடிக்கடி மெயில் பார்க்க மாட்டேன், எனவே பதட்டப் படவேண்டாம், ஏதாவது அவசரமென்றால் மட்டும் தொடர்பு கொள்ளுவேன் என்று பதில் போட்டேன். யாருக்கு என்னைப் பற்றி என்ன அக்கறை சும்மா கடமைக்குக் கேட்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் எனது இயலாமை அவர்களை நான் கோவிக்கிறேன் என்பதை என்னால் உணரமுடிந்தது. கலியாணம் கட்டிவிட்டார்கள் அவர்களுக்கென்று குடும்பம் வந்தாயிட்டு, நான் மனஉளச்சல் படுவது அவர்கள் வாழ்க்கையையும் பாதிக்கும்.
நான் இந்தியா வந்தது என்னை ரிலாக்ஸ் பண்ண, சந்தோஷமாக இருக்க, அதில் மட்டும் எனது கவனம் இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொன்ன படியே, முகப் புத்தகத்திற்குச் சென்று, ”நான் சென்னையில்” என்று பதிவு போட்டு ஏர்போட்டில் எடுத்த படம் ஒன்றையும் போட்டு விட்டேன். லைக்குகளும், கொமெண்களும் குவிந்தன. வீடு அமைதியாக இருந்தது விஜயா படுத்துவிட்டாள். எனக்கு நித்திரை வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் முகப்புத்தகத்தை மேலும் கீழும் ஓடவிட்டு பார்வையால் மேய்ந்தேன். உள்பெட்டியில் மெசேஜ்கள் வரத் தொடங்கின. சாட் பண்டினை அழுத்தி செயலிழக்கச் செய்தேன். நட்புப் பட்டியலில் இருந்தால் நண்பர்கள் என்ற உரிமையோடு உரையாட நினைக்கும் ஆண்களை நினைக்கச் சினம் வந்தது. இந்த மூன்று மாதங்களில் நட்புக்கு ரிக்குவெஸ்ட் அனுப்பிய அனைத்து ஆண்களையும் இணைத்துக்கொண்டிருக்கின்றேன். இது கூட ஒருவித பழிவாங்கல் போல்த்தான் பட்டது. யாரைப் பழிவாங்குகின்றேன் என்பதுதான் புரியவில்லை. கொம்பியூட்டரை மூடி வைத்துவிட்டு, லக்கேட்ஜைத் திறந்து ஒரு சிறிய பேர்பியூம் போத்தல், இரண்டு சொக்லெட் பெட்டிகளை வெளியில் எடுத்து நாளை காலை விஜயாவிற்கு கொடுக்கவென  வைத்துக்கொண்டேன்.
நாளை என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே படுத்திருந்தேன். துக்கம் தொண்டையை அடைத்தது. போனை எடுத்து சுகந்தனை அழைத்துத் தாறு மாறாகப் பேச வேண்டும் போலிந்தது. என் தனிமை, என் ஏக்கம், இப்படித் தனியாக ஒரு விடுமுறைக்கு நான் போக வேண்டிய நிலை எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்ற கோவம் என்னை மீண்டும் தாக்கியது, சிறிது நேரம் வாய்விட்டு அழுது விட்டு அழுத படியே நித்திரையாகிப் போனேன்.

"மதியத்துக்கு என்ன சமைக்கட்டும் அக்கா?" நான் காலை எழும் போதே பத்து மணியை தாண்டியிருந்தது. வனஜாவின் கை வண்ணத்தில் திருப்தியாக காலைச் சாப்பாட்டை முடித்த போது கேள்வியோடு வந்து நின்றாள். "இங்க போட்டுத் திரிய கொஞ்சம் கொட்டிண் உடுப்பு வாங்க வேணும் என்னோட வாங்கோவன் அப்பிடியே வெளீலை சாப்பிட்டிட்டு வரலாம்" என்றேன். வனஜாவின் முகம் மிளிர்ந்து, பின் இருண்டது. தயங்கினாள். நான் ஷாலினியின் மிக நெருங்கிய நண்பியாக இருப்பது வனஜாவிற்கு "கவனம்" மணியை அடிக்கின்றது. “எனக்கு இஞ்ச ஒரு இடமும் தெரியாது “என்றேன்." அவள் மௌனமாக நின்றாள். என்னிடமிருந்து உறுதி மொழியை எதிர்பார்க்கின்றாள். பிடிவாதக்காறி. நான் ஷாலினிக்கு சொல்கின்றேன் என்றேன், அவசரமாக வேண்டாம் என்றாள்.
தலைக்கு முழுகியிருக்கின்றாள். எண்ணெய் அகன்று கரு, கருவென்றிருந்த சுருண்டை தலைமயிரை லூசாகப் பின்னிவிட்டு, இரண்டு சுற்று மல்லிகைச் சரத்தைச் சுற்றிவிட்டிருந்தாள். நெற்றியில் சிறியவிபூதிக் கீற்று. மிக எளிமையாக, அழகாகத் தோன்றினாள். அக்கா "இது உங்களுக்கு" என்று மல்லிகைப் பூச்சரத்தை என்னிடம் நீட்டினாள். "இந்த மொட்டைத் தலையில் நான் எங்கே வைப்பது" என்றேன். சிரித்தாள். என் கையைப் பிடித்திழுத்து பூச்சரத்தை என் கையில் சுற்றிவிட்டாள். "அக்கா இந்த போனை வைச்சிருங்கோ, பாவிச்சிட்டுப் போகேக்க தாங்கோ" என்று ஒரு சிறுதுண்டில் போன் நம்பரை எழுதித் தந்தாள். பின் என் கண்களை நேராகப் பார்த்து, "நான் உங்களோட கடைக்கு வாறன் ஆனால் ஒரு கண்டிஷன், ஷாலினி அக்கா போன் பண்ணினால் நான் உங்களோட நிக்கிறதை நீங்கள் சொல்லக் கூடாது" என்றாள். நான் புன்னகையோடு தலையாட்டினேன். இருவரும் கள்ளம் செய்யப்போகும் கல்லுாரிப்பெண்கள் போல் கை குலுக்கி, கட்டி அணைத்துக் கொண்டோம்.
நான் முற்றுமுழுதான வனஜாவிடம் சரண்டர் ஆகி விட்டேன். எனது சுற்றுலாப்பயணத்தின் வழிகாட்டியாக அவளை நம்பிக்கையோடு ஏற்றுகொண்டேன். எனக்கு ஒன்றுமே தெரியாதது போல் அப்பாவியாக நடிப்பதும், அது தெரிந்தும் தெரியாதது போல் வனஜா எனக்கு வகுப்பெடுப்பதும் இருவருக்குமே  பிடித்திருந்தது.
இந்தக் கதையை நான் சொல்ல ஆரம்பித்த போது, கதையின் நாயகி நான்தான் என்று நம்பியிருந்தேன். என்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதை மெல்ல வனஜா பக்கம் நகரத் தொடங்கியது.
மகாபலிபுரத்தைச் சுற்றிக் காட்டிய எங்கள் கார் ஓட்டுணர் மணிகண்டன்”மாம் இதுதான் ”அர்ஜனன் தவம்”, இது தொன்னுாறு அடி நீளமும், முப்பது அடி உயரம், இதில நுாற்று ஐம்பது சிற்பங்கள் கிடக்கு” என்றான் ஒரு ”கைட்” ஐப் போல. வனஜா அவனைப் பெருமையோடு பார்த்து விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள். மணிகண்டனை ஒழுங்கு செய்தவள் வனஜாதான். அவன் காலை வீட்டிற்கு வரும் போது அரைத்த தோசை மாவும், துருவிய தேங்காய்ப் பூவையும் கொண்டுவந்து ப்ரிஜ்ஜைத் திறந்து வைத்தான்.  வனஜா அவனுக்குத் தேனீர் போட்டுக் கொடுத்தாள். மகாபலிபுரம் போகும் வழியெங்கும் வனஜாவும், அவனும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் கதைத்தபடியே வந்தார்கள். மணிகண்டன் திருமணமானவன், இரண்டு பெண்குழந்தைகள் இருப்பதாகவும் சொன்னான். அவன் தனது குடும்பம் பற்றி எனக்குச் சொன்ன போது வனஜா கார் கண்ணாடியால் வெளியில் மிக ஆவலோடு நகரும் மரங்களையும், வானில் பறக்கும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மகாபலிபுரம், மரீனாக் கடற்கரை, பாண்டிச்சேரி, தி நகர், சிட்டி சென்டர் ஷொப்பிங், இடையில் மூன்று திரைப்படங்கள், வனஜாவும், மணிகண்டனும் தமக்குப் பிடித்த, தெரிந்த இடங்களைத் தெரிவு செய்து என்னை அழைத்துச் சென்றார்கள், நான் அவர்கள் முடிவு எதிலும் தலையிடாமல் அவர்கள் விருப்பத்திற்கு இழுபட்டுக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் பெரிய ஒரு முடிவை எடுக்கும் தருணத்தில்  இருந்துகொண்டிருக்கும் எனக்கு இவை மிகச் சாதாரண விடையங்கள்.
பாண்டிச்சேரியில் ஒரு இரவு தங்கினோம். நானும் விஜயாவும் இரு கட்டில்கள் கொண்ட ஒரு அறையைத் தங்குவதற்கு எடுத்துக் கொண்டோம். இரவிரவாக நெருங்கிய தோழிகள் போல் நித்திரையின்றி உரையாடிக்கொண்டிருந்தோம். கனடாவில் எனக்கு எத்தனையோ நண்பிகள் இருக்கின்றார்கள், இருந்தும் அவர்களிடமில்லாத ஒரு நெருக்கத்தை வனஜாவிடம் நான் உணரத்தொடங்கினேன். வாழ்க்கை பற்றிய தெளிவு, அவளிடமிருக்கும் நேர்மை, எளிமை என்னை சுருங்கச் செய்தது. நாங்கள் எல்லோருமே நடித்துக்கொண்டிருக்கின்றோம், வனஜா போல் உண்மையானவர்களைக் காணும் போது எம் போலித்தன்மை எம்மை எட்டி உதைக்கின்றது. வனஜாவிற்கு ஷாலினியின் மேட்டிமைத் தன்மையை அழகாகக் கையாளத் தெரிந்திருக்கின்றது.
நான் கேட்காமலே திடீரென்று சொன்னாள்,”எனக்கு மணிகண்டனைப் பிடிக்கும், அவருக்கும் என்னைப் பிடிக்கும், அவர் அதை எனக்குச் சொல்லியிருக்கிறார், ஆனால் அக்கா எனக்கு மணிகண்டனின்ர மனுசி வளர்மதியையும் பிடிக்கும். என்னால அவளை நோகடிக்க ஏலாது, அதால நாங்கள் ஆளுக்காள் உதவியா நல்ல நண்பர்களா இருக்கிறம். இது பிழையே அக்கா? என்றாள். சரி, பிழை என்பதற்கு இப்போதெல்லாம் என்னிடம் பதில் இல்லை.
எனது நண்பியொருத்தி சுகந்தன் தன்னிடம் தவறாக நடக்க முனைந்தான் என்று சொன்ன போது, எனக்கு சுகந்தனை விட அவள் மேல் தான் கோவம் ஏற்பட்டது. உண்மை எதுவாக இருக்கும் என்று தெரிந்திருந்தும், அவள் பொய் சொல்கின்றாள் என்று அவள் மேல் கீழ்த்தரமாகக் கோபப்பட்டேன். அழகாக நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று நான் நம்பியிருந்த வாழ்க்கையை ஒரு நொடியில் பொய் என்று அவள் கூறிவிட்ட கோவம். என் கல்வி, முற்போக்குப் பெண்ணியச் சிந்தனை எல்லாம் ஒரு நொடியில் சுக்கு நுாறாக உடைந்து விட்டன. சுகந்தன் ஒரே பிடியாக மறுக்கின்றான். பேச்சில் அவனது தடுமாற்றம் அவனது பொய்யை எனக்கு உரித்துக் காட்டியது, உலகத்திற்காக என்னால் என்னை ஏமாற்ற முடியவில்லை. இதற்கான முடிவு என்ன என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் ஒரு கோழைபோல் நான் மறுத்துக்கொண்டேயிருக்கின்றேன்.
வனஜா தொடர்ந்தாள், ”நானும் ஷாலினி அக்கான்ர ஊர்தான், உரும்பிராய், எங்கட குடும்பம் சரியான வறுமையக்கா, எனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. ஷாலினியக்கான்ர குடும்பத்துக்கு உதவிக்கெண்டு அம்மா என்னை அங்கை கொண்டுபோய் விட்டா, ஊர் பிரச்சனை உச்சத்துக்கு வர அவையள் சென்னைக்கு வரேக்க என்னையும் கூட்டிக்கொண்டு வந்தீச்சினம். இந்த வீடு அப்ப வாடைக்கு எடுத்ததுதான், இப்ப வாங்கீட்டினம் எண்டு கேள்வி, ஆனால் எனக்குத் தெரியாது. பிறகு அக்கா குடும்பம் வெளிநாட்டுக்குப் போக முடிவெடுக்கேக்க என்னை ஊருக்குப் போகச் சொல்லிக் கேட்டீச்சினம். நான் ஒரேயடியா மறுத்திட்டன். படிப்பில்லையக்கா, நான் வடிவாயுமில்லை, என்ர அக்கா, தங்கச்சி எல்லாம் நல்ல நிறமும், வடிவுமக்கா. அவையள் எல்லாம் கலியாணம் கட்டீரினம் எண்டு கேள்வி, அண்ணரும்தான். நான் என்னை அகதி முகாமில கொண்டு போய் விடச்சொல்லி கேட்டன், அப்பதான் ஐயா, ஷாலினி அக்கான்ர அப்பா, நல்ல மனுசன் அக்கா அவர், ஒரு குடும்பத்தை இந்த வீட்டில வாடைக்கு இருத்தி எனக்கு ஒரு அறையையும் தந்தார். அப்ப இருந்து இந்த வீட்டில நான் இருக்கிறன்” என்றாள். அவள்
”நீ ஏன் கலியாணம் கட்டேலை” என்றேன்
வனஜா விழுந்து, விழுந்து சிரிச்சாள். பின்னர் ”ஆ அதுதான் இப்ப இல்லாத குறை, நான் பாக்கிறன் தானேக்கா, கலியாணம் கட்டினாக்கள் குடும்பம் நடத்திற லச்சணத்தை, எல்லாம் பொய்யும், புரட்டும் அக்கா” நான் மீண்டும் சுருங்கிப் போனேன். சுகந்தனை போனில் அழைத்துக் கத்த வேண்டும் போல் ஆவேசம் எழுந்தது.
வனஜா தொடர்ந்தாள்,
”விட்டுக் குடுக்கோணும், விட்டுக் குடுக்கோணும் எண்டுறாங்களக்கா எனக்கு ஒண்டுமா விளங்கேலை, ஏனக்கா விட்டுக் குடுக்கோணும், இன்னொருத்தன்ர விருப்பத்துக்காக என்ர விருப்பமெல்லாம் விட்டுக் குடுக்கிறது ஒரு வாழ்கையாக்கா? அதுக்கு நாண்டுகிட்டு சாகலாம், ஏதோ வாழ்க்கையெண்டா தியாகம் எண்டு இவங்க போடுற நாடகம் தாங்கேலையக்கா, அதால தீர்க்கமா வேண்டாம் எண்ட முடிவெடுத்திட்டன். என்னை யாரும் கேள்வி கேக்கிறது, உருட்டுறது, மிரட்டுறது, அதுக்கெல்லாம் நான் ஆளில்லை. ஊரில இருந்து என்ர சகோதரங்கள் போன் அடிக்குங்கள், ஏன் தெரியுமே அக்கா, பிள்ளை வளக்கவும், வீட்டு உதவிக்குமாம். அவையளுக்கு நான் ஒரு வேலைக்காறியெண்ட நினைப்பு, நான் இப்ப சந்தோஷமா ஒரு மகாராணிபோல இருக்கிறனக்கா, ஐயா சொல்லிப் போட்டார், வனஜா சாகிற மட்டுக்கும் இந்த வீட்டில இருந்து அவளை எழுப்பக் கூடாது எண்டு, பிறகு எனக்கு என்னக்கா கவலை, வீட்டுக்கு மாறிமாறி யாராவது வெளிநாட்டில இருந்து தங்க வருவீனம், அந்த வாடகையில எனக்கு ஒரு பங்கு செலவுக்கு, போதுமக்கா” என்றாள்.
நான் வனஜாவையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கதைத்த படியே வாய் திறந்திருக்க நித்திரையாகிப் போய்விட்டாள். ஷாலினியிடமிருந்து போன் வந்தது. வனஜா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவளுக்குப் பொய் சொல்லிவிட்டுப் போனை துண்டித்தேன். தொடக்கத்தில் நண்பிக்கு பொய் சொல்கின்றேன் என்று எழுந்த குற்ற உணர்வு இப்போது அகன்றிருந்தது.
மூன்று கிழமையின் முடிவில் வனஜாவும், மணிகண்டனும், அவனது மனைவியும் என்னை வழியனுப்ப விமானநிலையத்திற்கு வந்திருந்தார்கள். வனஜா கண்கலங்குவாள் என்று எதிர்பார்த்தேன், அவள் புன்னகையோடு என்னைக் கட்டி அணைந்து”அடிக்கடி வாங்கக்கா” என்றாள். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. ரொறொண்டோவில் மனஉளைச்சல் தாங்காது மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்திருக்கின்றேன். யோகா, தியானம் என்று எனது மனஉளைச்சலைக் குறைப்பதற்கு எதையெல்லாமோ செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு மாறுதலுக்காக சென்னை ஓடி வந்தேன். எங்கும், எதற்கும் கிடைக்காத விடையை, தெளிவை எனக்கு வனஜா வழங்கிவிட்டிருந்தாள். நான் பொங்கிவந்த கண்ணீரை அவளுக்காகக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

 




No comments: