Tuesday, June 12, 2012

மரணத்தின் வாசனை




த.அகிலனின் போர் தின்ற சனங்களின் கதைளினூடே..


அண்மையில் நான் பார்த்து வியந்த அற்புமான திரைப்படம் Terrence Malick இன் . “The Tree of life”. ஒரு அன்பான குடும்பதில், குடும்ப அங்கத்தவர் ஒருவனின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கின்றது என்பதுதான் கருத்தளம். இயக்குனர் Terrence Malick ஓர் அற்புதமான இயக்குனர் பல விருதுகளைத் தனது திரைப்படங்களுக்காகப் பெற்றவர். “The Tree of life”
மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய். செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப் போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டேம் என்று தோன்றுகின்றது”. என்ற அகிலனின் கூற்று என்னுள் உழன்று கொண்டிருந்த வேளை “The Tree of life”  திரைப்படத்தின் கரு என் மனதில் பதிய மறுத்தது. வளரும் சூழ்நிலைக்கேற்ப மனித மனங்களின் வலியும் வேறுபட்டுப் போகுமோ?

நாம் வாழும் சூழல், எமது நாளாந்த வாழ்க்கைத் தளமென்பன எப்படி எமக்குள் பதிந்து எமை இயக்கிக் கொண்டிருக்கின்ற என்பதனை அண்மையில் ஊரிலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த நண்பியொருத்தி கூற்றிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ”நான் தற்போது போரற்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். துப்பாக்கி வேட்டு, குண்டு வெடிச் சத்தங்கள் இல்லாத என் தற்போதைய வாழ்க்கை முறையை நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. இதுநாள் வரையும் எனக்கு இவையெல்லாம் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பதும், இன்னும் பலருக்கு வாழ்நாள் முழுவதுமே இவை நிராகரிக்கப்படுகின்றன என்பதை நினைக்கும் போது துக்கமும், கோவமும் எழுகின்றது என்றாள்.
பிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவரைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.


வாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.
வரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும்  மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.

தனது மாறுபட்ட பல சிறுகதை வடிவங்கள் மூலம் படைப்புகளில் பன்முகச் சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றார் கதைசொல்லி. இங்கு முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டியது என்னவெனில், கதைசொல்லி முற்று முழுதான போர்சூழலில் பிறந்து வளர்ந்து தமது தனிப்பட்ட விருப்பினால் போராட்ட இயக்கத்தில் இணைந்துக்கொண்டு பின்னர் தமது தனிப்பட்ட விசனத்தினால் போராட்ட இயக்கத்திலிருந்து விடுபட்டவர்;. விடுபடலின் பின்னர் தன்னை வேறு எந்த இயக்கத்துடனோ இல்லாவிட்டால் அரசுடனோ இணைத்துக்கொள்ளாது தனித்து மிகச்சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்னும் பல இளைஞர்களும், யுவதிகளுமிருந்தாலும் அவர்கள் தம்மை ஒதுக்கிக்கொண்ட நிலையிலிருக்கும் பட்சத்தில் த.அகிலன் தன்னை விடுவித்துக்கொண்டு தமது அனைத்து அனுவங்களையும் படைப்பாக்கி வாசகர்கள் முன் கொண்டு வந்துள்ளார். இக்கதைசொல்லி எமது அரசியல் சூழலில் உண்மை கூறல் எப்படிப் பார்க்கப்படும் எத்தகைய முத்திரைக் குத்தல்களுக்குத் தாம் ஆளாக நேரிடும் என்பதனைய அறிந்திருந்த போதும் பின்வாங்கலற்று தமது அனுபவப்பகி;ர்வை முன்வைத்து ஈழஇலக்கியத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
போரற்ற வாழ்வை அறியாதவர் அகிலன். மரணத்தைத் தினம்தினம் கண்டு அழுது களைத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர்;. இன்னுமொருநாள் எனக்கு இருக்கின்றதா என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மரணித்தவர்களை எண்ணி அழவுதற்குத்தான் நினைவு வருமா?

சிறுகதையென்றால் என்ன? அதன் வடிவமென்ன? அதுவொரு வரைவிலக்கணக்கத்திற்குள் அடங்கிக்கொள்கின்றதா? என்றெல்லாம் பல கேள்விகளும், அதற்கான ஆய்வுகளும் எழுத்துலகில் இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் த.அகிலனின் “மரணத்தின் வாசனை” சிறுகதைத் தொகுதியில் உள்ளடங்கியிருக்கும் சிறுகதைகள், அதன் வடிவங்கள் பற்றிய என் எண்ணக்கருத்தோடு ஒத்துப் போவதாய் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் சிறுகதை பற்றிய இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.


“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.
அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம் -
தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரையிலிருந்து - சுந்தரராமசாமி 25.03.95

அகிலன் தட்சணாமூர்த்தியின் “மரணத்தின் வாசைன”  --- சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சிறுகதைகள் அனைத்துமே தமக்கேயான தளத்திலிருந்து மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரக்கொடுத்திருக்கின்றன. மரணம் என்பது யாருக்கு எவ்வடிவில் வந்தாலும் அது சுகித்தலுக்குகந்த சுகந்தமாக வாசனையன்று. மரணத்தின் வாசனையென்று தலைப்பையேன் கதை சொல்லி தேர்ந்தெடுத்தார்? சம்பிரதாயங்களோடான மரணவீடொன்றில் அதற்கான பிரத்தியேகமான வாசனையென்று ஒன்றுள்ளது. பூஜைப்பொருட்கள் கிருமிநாசினி, வியர்வை, கண்ணீர் என்பன ஒன்றிணைந்து மரணரவீட்டின் வாசனையாய் வீசிக்கொண்டிருக்கும். இவ்வாசனையை மீண்டும் மீட்டிப்பார்க்கும் பொது மனதில் பயம் அப்பிக்கொள்ளும். மீண்டும் மீண்டும் நுகர்விற்காய் ஆவலையெழுப்பும் வாசனையன்று இது. மரணத்திற்கான வாசனை அனைவராலும் வெறுக்கப்படும் ஒன்று. ஆனால் நகரமே பற்றியெரிந்துகொண்டிருக்க கருகி, சிதறி, நிராதரவாய் ஈமொய்க்க வீதியோரம் விடப்பட்ட உடல்களடங்கிய நகரத்தின் மரணவாசனையென்பது நிராகரிக்க முடியாதது. இந்த வாசனையிலிருந்து ஓடிஒழிதல் சாத்தியமற்றது. இது நாற்றம். இது போரின் அவலம். இது வாசனையன்று. நாற்றத்தைத் தவிர்க்க மூச்சைப்பிடித்து சுத்தக்காற்றிற்காய் ஓடிச்சென்று மூச்சை இழுத்து இதமாகவிடுவதற்கு சுத்தக்காற்றுள்ள கூ+ழலை எங்குதான் தேடிஓடுவார் கதைசொல்லி.
இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்” கதைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அகிலன் “பையன்” என்ற ஈழத்தமிழர்களின் பாவனையிலற்ற பதத்தை உபயோகப்படுத்தக் காரணம் என்ன? ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு மொழியையே அனைத்து சிறுகதைகளிலும் தனது கதை மொழியூடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் அகிலன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் புரிதலுக்கென தொகுப்பின் ஆரம்பத்தில் சொல் விளக்கக் குறிப்புக்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டு மொழிப்பாதிப்பென்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானதொன்றுதான்.
“அழுதேன் கடைசியாக அப்பாவைச் சுடலையில் கொளுத்தியபோது பட்டுவேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மஞ்சள் தீ நடமாடியபோது, அப்பா இனிமேல் வரமாட்டார் என்று எனக்குப் புரிந்து போது வீரிட்டுக் கத்தினேன்.”
அப்பா நித்திரை, அப்பா முழிப்பு அப்பா எழும்புவார் என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவனுக்கு கொழுந்து விட்டெரியும் தீயில் அப்பாவின் உடல் பற்றிக்கொள்ளும் போது மரணம் புரியாவிட்டாலும் அப்பாவின் நிரந்தரப் பிரிவு புரிந்து போகின்றது. அவன் அகவயமனது காயம் கொள்கின்றது. இது நிரந்தரக்காயம். களிம்பு பூசி மூடப்பட்ட காயாத ஆழமாக காயம். அதனால்தான் கதைசொல்லி இச்சிறுகதையை இப்படி முடிக்கின்றார். “அப்பனில்லாப் பிள்ளைகள் என்ற இலவசஇணைப்பு என்னோடு எப்பவும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவையும் தந்துகொண்டிருக்கின்றுத”
“நரைத்த கண்ணீர்” எனும் சிறுகதையில் “எப்போதும் எனது புன்னகையில் ஆயுள் குறைவாயிருக்கின்றது” என்று ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலையை கண்முன்னே கொண்டுவருகின்றார் அகிலன். துப்பாக்கி வேட்டுச் சத்தத்திற்குள்ளும், ஒப்பாரிக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதவாழ்வில் பிச்சுப் போட்ட பாண் துண்டுபோல் கிடைக்கும் ஒருசில நிமிட அல்ப சந்தோஷ கணங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடியாது, புன்னகைக்கத்தான் முடியும். அதுவும் இடையில் முறிந்து போகும் நிழல்போல் பின்தொடரும் இன்னுமொரு அவலச்செய்தி கேட்டு.
“நான் பிறக்கும் போது என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவை மீட்டுவாள்.”  இந்தப் போர்சூழல் காலங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் என்ன? பிறந்தவர்கள் எத்தனைபேர் தமது வாலிபத்தைக் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் அவயங்களை இழந்தோர் எத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டோர் எத்தினை, வன்புணர்வை எதிர்கொண்டோர் எத்தனை இவற்றிற்கெல்லாம் கணக்கு இருக்கின்றதா?
“போர்பற்றி அலைந்து கொண்டிருக்கின்ற விடுதலை வீரதீரக் கதைகளுக்குமப்பால் கீறப்பட்ட மனங்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் துயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கின்றது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளுள் தள்ளுகின்றது”  என்று தன் உள்ளக்கிடக்கைகளை பதிவாகக் கொட்டுகின்றார்

மரணத்தின் அவலங்களும் வடுக்களும் மட்டுமே கதைசொல்லியின் அவதானத்திற்குட்டவையன்று, சமுதாயவிழுமியங்களுக்குட்பட்ட பல தேக்கங்களையும் தனது சிறுகதைகள் மூலம் கூறிச்செல்ல அவர் மறக்கவில்லை, “ஒரு ஊரில் ஒரு கிழவி” எனும் சிறுகதையில் “தனியொருபெண்ணாகத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கினா. அவ தானே தன் கதையெழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்தது, அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது, ஒருகட்டத்தில் பைத்தியக்காரியாகவும் கூட ஆகவேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தா.” என்று பகுத்தறிந்துகாட்டி, பெண் என்பவள் எந்தக் காலகட்டத்திலும் தனித்தியங்குபவளாகவிருக்குமிடத்து அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பலவகை “காரி”யாக மாறவேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்படுகின்றாள் என்றும், “மந்திரக்காரன்டி அம்மான்டி” எனும் சிறுகதையில் “ச்சீ ஆம்பிளப்பிள்ளைகள் அழக்கூடாது வெக்கக்கேடு.” என்று முதல்நாள் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதன் மூலம் சிறுவன் ஒருவன் ஆண் என்ற கட்டமைப்பிற்குள் எப்படித்தள்ளப்படுகின்றான் என்பதையும்;, “ஒருத்தீ” எனும் சிறுகதையில் பெண்களினாலான குடும்பமொன்றில் ஒற்றை ஆணின் கோபத்தைத் தாண்ட முடியாதவர்களாய் அப்பெண்கள் மௌனித்து அல்லல் படுவதையும் கதைசொல்லி கூறிநிற்கின்றார்.
இந்த முற்பது ஆண்டுப் போர்சூழலில் “காணாமல் போனோர்” பட்டியல் என்றொரு நேர்மையான ஆதரங்களோடான பட்டியலொன்றைத் தயாரிக்க முடியாத நிலையில், காணாமல் போன தமது சொந்தங்களை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என்று தெரியாத நிலையில்தான் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்குவியலுக்குள் அவர்களுக்கான தடையங்கள் மூலமே தம் சொந்தங்களை அடையாளம் காணுதல் சாத்தியமாகின்றது. அதில் கூடத் தவறுகள் இருக்கலாம். தடையங்களற்ற எலும்புக்கூடுகளைத் தமது சொந்தமாக்கத் தயங்கும் இதயங்கள். இறப்பு நேர்ந்துவிட்டதாய் முற்றுப்புள்ளி வைக்கத் தயங்கும் மனம். எங்கோ உயிரோடிப்பதாய் ஆறுதல் கொண்டிருக்கின்றது இன்றும்.
“இது அவற்ர சேட்டு”
‘இது அவற்ர வெள்ளிமோதிரம்”
“இது அவன்ர சங்கிலி”
“நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கபட்டிருந்த இடத்திற்குப் போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கக் கூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள். “அண்ணா...” அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14வயதுப் பெடியனின் எலும்புக்கூடு, அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு” இவ்வரிகள் கதைசொல்லியின் கற்பனைகளல்ல. எமது நாட்டில் நாம் பிறந்து வளர்ந்த நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வனுபவங்களை தாம் கடந்துவந்த வாழ்நாட்களின் அன்றாட அனுவங்களாகக் கொண்டவர்கள்தாம் எத்தனை. குடும்பத்திலொருவர் விபத்தில் மரணித்துவிட்டால், குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் அம்மரணவலியைத் தாங்கவென்று மனஆலோசனை வழங்க எத்தனை நிறுவனங்கள் மேலை நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மரணவலி, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, ஆதரவின்மை எம்மக்களின் புறஅக உளச்சல்களுக்கான விடை எங்கேயென்றறியாது திகைக்கின்றார் கதைசொல்லி.
“ஒருத்தீ” சிறுகதையில் மரணம் எப்படி அறிவிக்கப்படுகின்றது, என்று சிறுகதையை ஆரம்பிக்கும் அகிலன். மின்அஞ்சல் மூலம், தொலைபேசியில் கிரிக்கெட் ஸ்கோர் அறிவிப்பது போல், கடையில் பொருட்கள் வாங்கும் போது சுத்தப்பட்டிருந்த பேப்பர் துண்டில், (புலம்பெயர் மக்கள் பலர் வானொலிச் செய்திகளில் இறந்தவர்கள் பெயர்ப்பட்டியல்கள் வாசிக்கப்படும் போது, தவறாகத் தகவல்கள் கிடைத்து மரணவீடு முடித்துக்கொண்டு பின்னர் தமது சொந்தங்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்).
“எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்அஞ்சல் வழியாக ஏதோவொரு இணையத்தளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்ட மின்னஞ்சலின் மீந்திருந்த கேள்வி இது அவளா?... என்று தொடங்கி அந்த “ஒருத்தீ” யுடனான தனது சொந்த அனுவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து சென்று முடிவில், “காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான்நகர் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி.. நான் பதிலெழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரியை எழுதத் தொடங்கினேன்” என்று கதையை முடிக்கின்றார் அகிலன். மரணத்தின் வாசனையில் அனைத்துச் சிறுகதைகளுமே போர்சூழல் மரணங்களால் புனையப்பட்டவை என்பதால் வேறுபட்ட கதைசொல்லும் யுக்திகளைக்  கையாண்டு வாசகர்களைத் தன்வசம் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை அவர் என்பதும் பாராட்டுக்குரியது.
மனிதமனமென்பது தன்னார்வபூர்த்திக்கான தெரிவொன்றில் தொலைந்து போகும் தன்மையைக் கொண்டது. பொழுதுபோக்கு எனும் சொற்பதத்திற்குள் தமக்கான நேரக்க(ளி)ழிப்பை மனநிறைவாய் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வில் இவற்றிற்கு அடிமையாகிப்போவதுமுண்டு. நிர்ப்பந்தத்தால் இதனிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் உளவியல் தாக்கங்களும் உள்ளாகிப் போகின்றார்கள், கடைசியல் அதுவே அவர்களது வாழ்வில் அழிவையும் கொண்டு சேர்க்கும் என்பதைத் தனது “குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்”, “தோற்ற மயக்கங்களோ” போன்ற சிறுகதைகளின் மூலம் ஆராய்ந்துள்ளார் கதைசொல்லி. தாம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றைப் போரின் நிமித்தம் இழந்தபோது ஏற்பட்ட வலியை இச்சிறுகதைகள் கூறுகின்றன.
படைப்பாளியின் அனைத்து சிறுகதைகளும் மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரச்செய்து மரணத்தின் எல்லைவரை அவர்களையும் இழுத்துச் சென்றிருக்கின்றது. தவிர மற்றைய சிறுகதைகளின் தளத்திலிருந்து வேறுபட்டு “கரைகளிற்கிடையே..” சிறுகதை, போரின் நிமித்தம் நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் ஒரு தமிழ் குடும்பம் எப்படி இன்னுமொரு தமிழனால் ஏமாற்றப்பட்டு அழிந்து போகின்றது என்பதையும் காட்டி நிற்கின்றது.
“துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கிகள், கெட்ட துப்பாக்கிகள் எனப்பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிகளுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான்” என்று போரின் பால் தான்கொண்ட மனவிசனத்தையும் சொல்லிக்கொள்கின்றார் த.அகிலன்.
மரணத்தின் வாசனையை சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்த எழுத்தாளர் இமையம் அவர்கள் இப்படி முடிக்கின்றார்கள்
“போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
 ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.”
போர் என்னை அழித்தது, என் உடன் பிறப்புக்களை அழித்தது, எனது குடும்பத்தை அழித்தது, எனது சொந்தங்களை, ஊரை, மண்ணை அழித்தது. என்னை இருக்கவிடாமல், உண்ணவிடாமல், உறங்கவிடாமல், கலைத்துக் கலைத்து அடித்தது அழித்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றோம் நாம். பணம் கிடைத்தால் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மனிதர்களை மனிதத்தை அழித்தொழிக்கும் இப்போரில் வீரம் எங்கே வந்தது? வெற்றி தோல்வி எங்கே வந்தது? அனைத்தையும் அழித்தொழித்துக் கிடைக்கும் நஞ்சூரிய நிலத்தைப் பிடிப்பதுதான் போரின் வெற்றியெனில் அது எமக்குத் தேவைதானா? என்ற கேள்வியை மரணத்தின் வாசனை எனும் சிறுகதை மூலம் விட்டுச்சென்றிருக்கின்றார் த. அகிலன். சிறுகதைத் தொகுப்பை மூடியபோது எனக்குள்ளும் இக்கேள்வியே எஞ்சி நிற்கின்றது.

வெயில் காயும் பெருவெளி - கூர் 2012



No comments: