Wednesday, June 13, 2012

ஆதங்கம்



Hair cut $8.00 அறிவிப்பைக் கண்டு உள்ளே சென்றேன்.
சைனீஸ் பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன்
இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.

எட்டோடு இரண்டைச் சேர்த்து
பத்தாகக் கொடுக்கலாம் என்று
மனம் கணக்குப் போட்டது.

விரல்களால் தலையை அளைந்தவள்
”டை” அடிக்கவா எனக்கேட்டாள்,
கண்ணாடியில் தெரியும் நரையினுாடே
அவசரமாக மறுத்துக்கொண்டேன்.

நுாறில் பத்துப் போனால் தொன்னுாறு
இந்தக் கிழமை சாப்பாட்டுக்கு.
பத்துக்கு பருப்பும், அரிசியும் வாங்கியிருக்கலாம்.

”ஷம்பூ’ என்றாள், எட்டுக்குள் அடக்கமா என்றேன்
சம்மதித்தாள், சந்தோஷமாக ஒத்துக் கொண்டேன்.

”ப்ளோ ரை” என்றாள், கேள்வி கேட்கச் சங்கடமாயிருந்தது
ஓம், இல்லை என்பதாய்
அரைகுறையாய் ஆட்டி வைத்தேன்.

பத்தை விடக் கூடிவிடுமோவென
மனம் அல்லாடத் தொடங்கியது.
கூடினால் பாலை வெட்டலாம்
சமாதானமும் செய்து கொண்டேன்.

”ஐயோ”வென சிலவேளைகளில்
கத்தத் தோன்றும்.
எத்தனை வருடங்கள்,
எத்தனையெத்தனை வருடங்கள்
அஞ்சியக் காசு பெறா
இலக்கியமும், அரசியலும்
செய்துகொண்டிருக்கிறேன்.

விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் பலர்
கணிசமாக தொகையோடு
”செட்டில்” ஆகிவிட்டார்கள்.
வேலை வெட்டியின்றி
முழுநேரம் இலக்கியமும், அரசியலும்
செய்கின்றார்கள்.

சிலவேளைகளில்
மனம் அங்கலாய்க்கும்
நானும் ”செட்டில்” ஆகியிருக்கலாமோ என்று.

No comments: