Saturday, March 6, 2021

நீலச்சட்டைச் சிறுமியின் நடனம்


கருமேகங்களை விலத்தி

மென்நீல மேகத்தை இழுத்தெடுத்து

முகில்களை

கழுத்திலும், கை நுனியிலும் சுருக்கு வைத்து அம்மா எனக்கொரு சட்டை தைத்துத் தந்தாள்.  

வெட்கம் தின்ன நீலச்சட்டையணிந்து நான் சுழன்று, சுழன்று நடனமாடியபோது, மஞ்சள் சட்டையில் என் தங்கை துள்ளிக் குதித்தாள்.


கடலின் அடியிருந்து கடைந்தெடுத்துவந்த

கருநீல அலைகளில், முத்துக்களை பரவவிட்டு அம்மா எனக்கொரு “மாக்ஸி” தைத்துத் தந்தாள். 

பெருமை பொங்க நான் மாக்ஸியில் வளைந்து, நெளிந்து நடனமாடியபோது,

பச்சைப்பாவாடையில் தங்கை துள்ளிக் குதித்தாள். 


மயிலிறகைப் பறித்துவந்து நீலத்தைப் பிரித்தெடுத்து, பொன்வண்டைக் கரைக்கு வைத்து அம்மா எனக்கொரு "பெல்பொட்டம்" தைத்துத் தந்தாள். 

அதிசயத்தில் நான் ஒற்றைக்கால் தூக்கி "பலே" நடனமாடியபோது, சிவப்புச் சட்டையில் தங்கை துள்ளிக்குதித்தாள்.


அம்மா சிவப்பில் எனக்கொரு சட்டை வேண்டுமென்றேன்.

"நியோன்" நீலத்திலெனக்கொரு முழுப்பாவாடை தைப்பதாக அம்மா சொன்னாள்.

அம்மா மஞ்சளில் எனக்கொரு சட்டை வேண்டுமென்றேன்.

அரச நீலத்திலெனக்கொரு அரைப்பாவாடை தைக்கிறேனென்றாள் அம்மா.  

பச்சை சட்டை வேண்டுமென்று அடம்பிடித்த எனைப்பார்த்து அம்மா சொன்னாள், "கறுப்பி உனக்கு நீலம்தான் பொருந்தும்" என்று. 

அன்றிலிருந்து நான் அம்மணமானேன்.


Caroline Lejeune - Contemporary French Painter

No comments: